கீற்றில் தேட...

honor killingஇலைகளில்
நழுவும் மழைத்துளிகளாய்
உடல் முழுவதும் வார்த்தைகள்
ஒழுக விட்டு
உன்னை வீட்டிற்கு கூட்டி வரும்போது
எச்சரிக்கவில்லை உன் வாசல்
பால்யம் முதல் பேசிக் கழித்த
உன் வீட்டு மரம் கூட
ஓடி விடு என சைகை காட்டவில்லை
சின்னவயதிலிருந்து வணங்கிய
அலமாரி கடவுள்கள் கூட
அசம்பாவிதம் நடக்கப்போகிறதென
சகுனம் காட்டவில்லை
கமுக்கமாக இருந்து விட்டன
அழைத்து வந்தவர்கள்
காதலைக் கொல்வதற்கு
உன்னை எரித்து விட்டார்கள்
உன் ரத்தம் எரிந்தது
உன் சதைகள் எரிந்தன
உன் எலும்புகள் எரிந்து சாம்பலாகின
உன் கருப்பை எரிந்தது
உன் விரல்கள் எரிந்தன
உன் யோனி எரிந்தது
பெற்றவள் முகத்திலிருந்த மெளனத்தில்
உன் உதட்டு தீயின் சாம்பல்
அப்பன் முகத்தின் பெருமிதத்தில்
உன் ரத்தத்தின் சாம்பல்
சாதிக்காரன் என்று பேசும்
சாதியாளர்களின் முகங்களில்
உன் சதைகளின் சாம்பல்
நீ எரியும் போது
வழக்கத்தை விட
சாதியை அதிகமாகப் பூசிக்கொண்டது
உன் வீடு.

- கோசின்ரா

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.