தொடர்புடைய படைப்புகள்

 

வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்,
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரைபொரு தொடுகடல் குணக்கும்,
குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்,
நிலமிடை ஆளும் அரசு அதிகாரம்
நிலவெனக் குளிரும் பார்ப்பனர் தமக்கே
புதிதாய்ப் புதிதாய்ப் பலவழி களிலும்
கதிராய் எரிக்கும் உழைப்பவர் தம்மையே
குழைவாய்த் தோன்றும் குலமுறை அநீதியே
இன்றும் உள்ள முதன்மை முரணென
என்று உணர்வதோ சிந்தை தெளிவதோ
சாதியைக் கணக்கில் கொள்ளாப் புரட்சி
ஆதியில் அழியும் பின்னரும் தொடரும்
அண்ணலின் பாடம் கண்னெத் தகுமே!
 
(இமயமே வட எல்லையாகவும், குமரிக்கோடே தென் எல்லையாகவும், கீழ்க் கடலே கிழக்கு எல்லையாகவும், மேற்கடலே மேற்கு எல்லையாகவும் அமைந்துள்ள நிலப் பகுதியில் (இந்தியாவில்) நிலவும் அரசதிகாரம் பார்ப்பனர்களுக்கு நிலவைப் போல குளிர்ச்சியைத் (இன்பத்தைத்) தருகிறது. (ஆனால்) உழைக்கும் மக்களைப் புதிது புதிதாகப் பல வழிகளில் வெங்கதிரைப் போல் எரிக்கின்றது. அவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளில் மிகவும் சாது போலத் தோற்றமளிக்கும் குலத்திற்கு ஒரு நீதி எனும் கொடுமை தான் அனைத்துக் கொடுமைகளுக்கும் வேர் என என்றைக்குத் தான் உணர்ந்து கொள்ளப் போகிறோமோ! உணர்ந்து சிந்தை தெளியப் போகிறோமோ! சாதி ரீதியாக உள்ள ஒடுக்கல் முறையை (பார்ப்பன ஆதிக்கத்தை) கணக்கில் கொள்ளாமல் புரட்சியை முன்னெடுத்தால் அது தோன்றும் முன்பே அழிந்துவிடும்; அழிவின் பின்னரும் (சாதிய ஒடுக்கலின்) கொடுமைகள் தொடரும் என்று அண்ணல் அம்பேத்கர் சொன்ன பாடத்தைக் கண்ணெனக் கொண்டு (வர்க்கப் புரட்சியை முன்னெடுப்பதற்காக) சாதிக் கொடுமைகளை முதலில் களைவோம். (உயர் சாதியினர் உயர்நிலை வேலைகளிலும், மற்றவர்கள் கீழ் நிலை வேலைளிலும் குவிந்துள்ள இன்றைய நிலையை மாற்றி அனைத்து சாதியினரும் அனைத்து நிலை வேலைகளிலும் இருந்தே ஆக வேண்டிய அவசியத்தை ஏற்படுததுவோம்.)
 
- இராமியா

Comments

2 comments

2
சொ.பிரபாகரன்
உழைக்கும் அனைத்து மக்களும், இன்பம் அனுபவிக்கும் பார்ப்பனரும் எதிரெதிராய் கொண்டால், அவர்கள் வர்க்கப் பிரிவுக்குள் வருகிறார்கள். ஆனால் ஒவ்வொரு சாதிக்குள்ளும் இன்பம் அனுபவிக்கும் முலதனவாதிகளும், அவரெதிராய் உழைக்கும் மக்களும் உள்ளனர். சாதிதான் இங்கு வர்க்கப்பிரிவு வெளியே தெரியாமல் தடுக்கும் கவசமாய் உள்ளது. சாதியைப் புரிந்து, அதற்குள் உட்புகுந்து சாதிய முகமுடியைக் கிழித்து, வர்க்கப்போரை முன்னெடுத்துச் செல்லவேண்டும். வர்க்கப்போரையே சாதியை முடிவுக்குக் கொண்டு வந்த பின்னர்தான் நடத்த வேண்டும் என்பது, ஏற்றுக்கொள்ள தக்கதல்ல.
பாபு
சாதிக் கொடுமைகள் ஒழிப்புப் போர், வர்க்கப் போர் இரண்டையும் இணையாகவே கொண்டு செல்ல வேண்டும். ஐயமில்லை. ஆனால் வர்க்க ஒழிப்பு சாதிக் கொடுமைகள் ஒழிப்புக்கு முன்னால் முடியாது. சாதிக் கொடுமைகள் ஒழிப்புக்கு முன்னால் வர்க்க ஒழிப்புப் போரை முன்னெடுத்தால் அரசுப் பொறியமைவு மாறாத காரணத்தால் பாரிஸ் கம்யூன் வீழ்ந்தது போல் எளிதாக விழுந்து விடும். வர்க்கப் போராட்டத்திற்கு செலவிடப்பட்ட உழைப்புகள் அனைத்தும் வீணாவது மட்டுமல்லாமல் சமூகத்தின் புரட்சிகர உள்ளாற்றல் வெகுவாகக் காவு கொடுக்கப்பட்டு விடும்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.