பல போராட்டங்களுக்குப் பிறகும் பெண் மீதான வன்முறை கருத்தியல் தளம் உள்பட எல்லா தளங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் காலகட்டத்தில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தமிழகத்தில், இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் குறிப்பாக நாம் வளர்ந்ததாகக் கருதும் மேலை நாடுகளிலும்கூட பெண்களுக்கெதிரான வன்முறை அதிகரித்தே வந்திருக்கிறது.

அமெரிக்காவைவிட ஒரு சிறந்த உதாரணம் இருக்க முடியாது என்று தோன்றுகிறது. சமீபத்தில் The centre for reproductive rights என்கிற அமைப்பு ஐ.நா. சபையின் மனித உரிமை குழுவிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் ஜார்ஜ் புஷின் அரசு பெண்களின் உடல்நிலை மீதும் வாழ்க்கை மீதும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. குழந்தை பிறப்புக்கு பிறகான உடல்நலம், குடும்பக் கட்டுப்பாடு, பாதுகாப்பான முறையான கருக்கலைப்பு போன்ற பிரச்சனைகளில் புஷ் அரசு கடுமையான விதிமுறைகளை விதிப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளது இந்த அமைப்பு. இது தவிர, முறையற்ற செக்ஸ் கல்வியை ஊக்குவிப்பதாகவும் இந்த அமைப்பு சொல்கிறது. ஏற்கனவே கருக்கலைப்புப் பற்றி பல்வேறு சர்ச்சைகள் நிலவிவரும் சூழலில் இந்த அறிக்கை உலக அளவில் பெண்ணியவாதிகளிடையில் கடும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.

உலக அளவில் பெண்களின் நிலை கவலையளிப்பதாகவே இருப்பதற்கு இன்னொரு சாட்சி London school of economicsன் centre for economis performance தாக்கல் செய்துள்ள ஒரு அறிக்கைதான். ஆண்களுக்கு நிகராக வேலை செய்தாலும் அவர்களுக்கு நிகராக சம்பளம் வாங்குவதற்கு இன்னும் 150 வருடங்கள் ஆகும் என்கிறது அந்த அறிக்கை. நிர்வாகக் குளறுபடிகள்தான் இதற்குக் காரணம் என்றும் சொல்கிறது இந்த அறிக்கை. பெரும்பாலும் குழந்தை பிறப்புக்காக எடுக்கப்படும் விடுப்பும் அதன் பிறகு பெண்கள் பகுதி நேர வேலை பார்ப்பதும்கூட இந்த சம்பள பாகுபாட்டிற்குக் காரணங்கள். ‘கடந்த 30 வருடங்களில் ஆண்,பெண்களுக்கு இடையிலான இந்த சம்பள இடைவெளி குறைந்திருந்தாலும் அது முற்றிலுமாக மறைய இன்னும் 150 ஆண்டுகள் தேவைப்படும்' என்கிறது அறிக்கை. ஒரு கட்டத்தில் குடும்பத்துக்காக வேலையை தியாகம் செய்யும் சூழலில் இருக்கும் பெண்களை நமது சமூகம் கடுமையாக தண்டிக்கிறது' என்கிறார் அறிக்கையை தயார் செய்திருக்கும் அலான் மான்னிங்.

அமெரிக்கா, லண்டனிலேயே இப்படி என்றால் நம்மூர் பற்றி கேட்கவே வேண்டாம். சபரிமலை சர்ச்சை நாம் அறிந்ததே. வழிபாட்டுத் தலங்களுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படாத அவல நிலை பல போராட்டங்களுக்குப் பிறகும் இங்கு தொடர்கிறது. பாராளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு தர வேண்டும என்பதை கொள்கை அளவில்கூட ஏற்றுக் கொள்ளாத அரசியல்வாதிகள் ஆட்சி செய்யும் நிலையிலேயே நமது சமூகம் இருக்கிறது.

தனது காதலை ஏற்றுக் கொள்ளாத சக பெண் பணியாளர் தன்யா பானர்ஜியை கால் சென்டர் பணியாளர் ஒருவர் பெங்களுரில் கொலை செய்தது பணியிடங்களில் பெண்களுக்கு இன்னும் பாதுகாப்பான சூழ்நிலை இல்லாததையே காட்டுகிறது. இத்தனை சோதனைகளுக்கு இடையிலும் நாம் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்ள சில விஷயங்கள் இருக்கின்றன. லெபனானில் நடைபெறும் போருக்கு எதிராக சில பெண்கள் ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். போருக்கு எதிரான பெண்கள் என்றழைக்கப்படும் இந்த அமைப்பின் மூலம் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இன்னும் போர் மேகங்கள் விலகாத காஷ்மீரில் இரு பெண்கள் இணைந்து பெண்களுக்கான பத்திரிகை ஒன்றை தொடங்கியிருப்பது இன்னொரு நல்ல செய்தி. சைமா பர்ஹாத் மற்றும் ஷீபா மசூத் என்ற இரு பெண்கள் தொடங்கியுள்ள she என்கிற இந்த பத்திரிகையை காஷ்மீர் பெண்கள் நம்பிக்கையுடன் பார்க்கிறார்கள்.

Pin It