பணப்பயிரான புகையிலையை பயிரிடுவதால் 1 கோடி முதல் 2 கோடி மக்களுக்குத் தேவையான உணவுப் பயிர் பயிரிடும் நிலம் அபகரிக்கப்படுகிறது. இந்த உலகில் பணம்தான் எல்லாம் என்று நம்பப்படுகிறது. ஆனால் 40 வயதைக் கடந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள். உடல்நலம்தான் நமது மிகப் பெரிய செல்வம் என்பார்கள். அது பாதிக்கப்பட்டால் நாம் அனைத்தையும் இழந்துவிட்டோம் என்பதை அறிவோம். ஆனால் அதைவிட முக்கியமாக வளமான சுற்றுச்சூழலை இழந்துவிட்டால், நமது வாழ்வின் அடிப்படையை இழந்துவிடுவோம். மாசுபட்ட சுற்றுச்சூழல் நம் உடலையும் பாதிக்கும் என்ற உண்மையை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம்.

உலகம் அதிவேகமாக மாறி வரும் சூழ்நிலையில் தொழில்மயமாதல், நகரமயமாதல், வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு, மக்கள்தொகை பெருக்கம் போன்ற ஒவ்வொரு காரணமும் தன் பங்குக்கு சுற்றுச்சூழலை சீரழித்து வருகின்றன. காடுகள் அழிக்கப்படுவதை அனைவரும் அறிவோம். இது ஒரு முக்கிய சூழல் பேரழிவு. அதேநேரம் இந்தக் காடுகளை அழித்த பின் நடக்கும் மாற்றமும் சுற்றுச்சூழலை இரண்டு மடங்கு பாதிக்கலாம். இப்படிப்பட்ட ஒன்றுதான் புகையிலை பயிரிடுதல். அந்தப் புகையிலையில் இருந்து உருவாக்கப்படும் பொருட்கள் மூலம் வெளிவரும் நச்சுப் பொருட்கள் காற்றில் கலந்து மூன்று மடங்கு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. எனவே, காடு அழிப்பு என்ற சுற்றுச்சூழல் சீரழிவு அத்துடன் முடிந்து போய்விடுவதில்லை.

1960களில் போதை ஏற்படுத்தும் புகையிலையை மக்களிடையே பழக்கப்படுத்துவதற்காக பன்னாட்டு நிறுவனங்கள்-உலக முதலாளிகள் மேற்கொண்ட தந்திரங்கள் முக்கியமானவை. உலக மக்கள்தொகையை ஒரு பொருளுக்கு அடிமையாக்குவதன் மூலம், எப்படி தங்கள் வருமானத்தை தொடர்ச்சியாகப் பெருக்குவது என்ற தந்திரத்தை அவர்கள் அப்போது கற்றுக் கொண்டார்கள். புகையிலை பரவலாகி பழக்கமாகும் வரை, புகையிலையால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பொய் என்பது போன்ற ஒரு தோற்றத்தை, தங்களுக்குச் சார்பான விஞ்ஞானிகள் குழு மூலம் தொடர்ச்சியாக பிரசாரம் செய்து உருவாக்கினர். இந்தியாவில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்துள்ள ஐ.டி.சி. என்ற இந்தியன் டுபாகோ கம்பெனி அடிப்படையில் ஒரு புகையிலை நிறுவனமே.

உலக புகையிலை உற்பத்தியில் சீனா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. புகையிலையை பயன்படுத்துவதில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் புகையிலை பயிரிடுவதற்காக இரண்டு லட்சம் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்படுகின்றன. இதில் இந்தியாவில் 42 ஆயிரம் எக்டேர் பரப்பில் புகையிலை பயிரிடப்படுகிறது. புகையிலை பயிரிடுதல், எரிபொருள், புதிய வகை பயிர்கள் பயிரிடுதல், "பேக்" செய்வது ஆகிய காரணங்களுக்காக புகையிலை சார்ந்த காடழிப்பு நடைபெறுகிறது. இதற்காக பெரும்பாலான வளரும் நாடுகளில் காடுகள் அழிக்கப்படுவதால், உலக அளவில் 1.7 சதவீத காடுகளின் பரப்பு இதற்கு மட்டுமே அழிந்து வருகிறது. மொத்த காடுகளின் பரப்பளவில் 4.6 சதவீதம் புகையிலை பயிரிடப்படும் நாடுகளில் மட்டும் அழிக்கப்படுகிறது.

சிகரெட், பீடி, மெல்லும் புகையிலை போன்றவற்றை தயாரிப்பதற்கு புகையிலை  பயன்படுத்தப்படுகிறது. உலக பீடி உற்பத்தில் 85 சதவீதம், அதாவது 19 கோடி கிலோ பீடி  இந்தியாவில் உற்பத்தியாகிறது. உலக புகையிலை பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 33 சதவீதம் (ஏழை பீடி தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம், குழந்தை உழைப்பு போன்ற வேறு சமூகப் பிரச்சினைகளும் இதில் அடங்கியுள்ளன).

புகையிலை பண்ணைகளில் 20 ஆயிரம் குழந்தைகளும், பீடி-சிகரெட் பாக்கெட் தயாரிப்பு பணியில் 27 ஆயிரம் குழந்தைகளும் ஈடுபட்டுள்ளதாக புதுதில்லியில் உள்ள குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலகப் பேரணி தெரிவிக்கிறது.

தமிழகத்தில் மெல்லும் வகை புகையிலை தென்மாவட்டங்களில் அதிகம் பயிரிடப்படுகிறது. தவிர, தஞ்சாவூரிலும் கடற்பாங்கான மண் உள்ள பகுதிகளிலும் இவை பயிரிடப்படுகின்றன. மதுரையின் சில இடங்களில் குறைவான எரியும் தன்மை கொண்ட சுருட்டு தயாரிக்கப் பயன்படும் புகையிலை பயிரிடப்படுகிறது.

காட்டு வளம் பாதிப்பு:

ஒரு டன் புகையிலையை பதப்படுத்துவதற்கு ஒரு எக்டேர் மரங்கள் தேவைப்படுகின்றன. ஒரு கிலோ புகையிலையை பதப்படுத்துவதற்கு 7.8 கிலோ மரக்கட்டை எரிக்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவன ஆய்வின்படி ஒரு ஏக்கர் புகையிலை பயிரிடுவது 150 மரங்களை அழிப்பதற்குச் சமமாகும். 600 கிலோ புகையிலையை பதப்படுத்த உதவும் எரிபொருளைக் கொண்டு 20 வீடுகளுக்கான எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யலாம்.

போபாலில் உள்ள இந்திய காட்டு மேலாண்மை நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின்படி, 1962 முதல் 2002 வரையிலான 40 ஆண்டு காலத்தில் புகையிலை பதப்படுத்துதல், சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் தயாரிப்புக்காக 680 சதுர கிலோ மீட்டர் காடுகள் அல்லது 86.8 கோடி டன் மரக்கட்டைகள் அல்லது 22 கோடி டன் கட்டுமானத் தரம் வாய்ந்த மரக்கட்டைகள் அல்லது 66.8 கோடி டன் எரிபொருள் சுரண்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அழிக்கப்பட்ட எரிபொருளின் அளவைக் கணக்கிட்டால் அதைக் கொண்டு அனல் மின்நிலையம் ஒன்றை இயக்கி, தலைநகர் தில்லி, நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களுக்கு ஓர் ஆண்டுக்குத் தேவையான மின்தேவையை முழுமையாக பூர்த்தி செய்திருக்கலாம். இன்னும் எளிமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், இந்தியாவில் மட்டும் சிகரெட்டை சுருட்டவும் பேக் செய்யவும் 4 மைல் தாள்கள் பயன்படுத்தப்படுகின்றன. 300 சிகரெட்டுகள் தயாரிக்க ஒரு மரம் வெட்டப்படுகிறது.

புகையிலையை பதப்படுத்த எரிபொருள் பற்றாக்குறை நிலவும் இடங்களில் புகையிலை பயிரின் தண்டுகளையே பயன்படுத்துவதால், அது தீவிரமான உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்குகிறது. ஆந்திராவில் கோதாவரி பாசனப் பகுதியில் உள்ள வடிசலேறு கிராமத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இங்கு வாழ்பவர்கள் காசநோய், கண்புரை போன்ற நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். புகையிலை பயிரிடப்படாத ஒரு கிராமத்துடன் ஒப்பிட்டால் இது பல மடங்கு அதிகம்.

மண்ணரிப்பு:

புகையிலை பொதுவாக வறண்ட, ஓரளவு வறண்ட நிலங்களில் பயிரிடப்படுகிறது. தனியாகப் பயிரிடப்படுவதால் புகையிலை பயிர் உயரமாக வளர்கிறது. இது மண்ணரிப்புக்குக் காரணமாக இருக்கும் காற்று, மழை இவற்றிலிருந்து வளமான மேல்மண்ணை பிடித்து வைத்துக் கொள்ளும் திறனற்றது. மற்ற பயிர்களோடு ஒப்பிட்டால், மண்ணின் ஊட்டச்சத்துகளை புகையிலை பயிர் பாதிக்கிறது. மண்ணில் உள்ள நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் சத்துகளை இப்பயிர் அதிக அளவில் உறிஞ்சுகிறது. பொட்டாசியத்தை 6 மடங்கு அதிகமாக உறிஞ்சுகிறது. இதனால் அடிக்கடி உரம் இடுவது அவசியமாகிறது. இதனாலும் சுற்றுச்சூழல் சீரழிகிறது.

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் வறண்ட நிலத்தில் பயிரிடப்படும் பயிர்களால் ஏற்படும் மண்ணரிப்பின் அளவைக் கணக்கிட்டது. புகையிலை பயிரால் ஒரு ஏக்கருக்கு 45 கிலோ மேல்மண் அரிக்கப்படுகிறது. இதனால் ஊட்டச்சத்து, மண்ணின் நீர்தேக்கும் திறன், நீர் உறிஞ்சும் திறன் போன்றவை குறைவதுடன், மண்ணரிப்பும் அதிகரிக்கிறது.

பல்லுயிரியம் பாதிக்கப்படுதல்:

ஒரு பகுதியில் புகையிலையை மட்டுமே பயிரிடுவதால் அப்பகுதியின் பல்லுயிரியம் பாதிக்கப்படுகிறது. அந்தந்த பகுதிக்கே உரிய தாவர, உயிரினங்கள் கொண்ட தனித்தன்மை வாய்ந்த சூழலில் இது மாற்றத்தை ஏற்படுத்தி தொந்தரவு செய்கிறது. இயற்கை சமநிலையைக் குலைத்து, உணவுச் சங்கிலியையும் பாதிக்கிறது.

ஆந்திராவில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், புகையிலை பயிரிடப்படாத இடங்களோடு ஒப்பிடுகையில், பன்னிரெண்டு பூஞ்சை வைரஸ் நோய்கள், 29 பூச்சிகள் தாக்குதல் போன்றவை புகையிலை பயிரிடப்பட்ட இடங்களில் மட்டும் இருப்பது கண்டறியப்பட்டது. இது மற்ற உணவுப் பயிர்களிலும் நோய்களை உண்டாக்குவதற்குக் காரணமாக இருக்கிறது.

பூச்சிக்கொல்லி மற்றும் உரங்கள்:

புகையிலை பயிர் எளிதில் பல நோய்களுக்கு ஆளாகக் கூடியது. அதனால் பயிரிடப்பட்ட முதல் மூன்று மாதங்களில் அதிக அளவில் பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்தப்படுகின்றன. மண் வகையைப் பொருத்து ஓர் ஏக்கருக்கு 80 முதல் 200 கிலோ வரை வேதி உரங்கள் புகையிலை பயிரில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உரங்கள் நிலத்தடி நீர், நில மேற்பரப்பு நீரில் கலந்து குடிக்கும் நீரை நச்சுத்தன்மை கொண்டதாக்கும்.

இப்பயிரில் அடிக்க பயன்படுத்தப்படும் டி.டி.டி, பூச்சிக்கொல்லி மருந்துகள் மலேரியா போன்ற நோய்களை உருவாக்கும் காரணிகளுக்கு ஊக்கமளிக்கின்றன. மேலும் இந்த வேதிப் பொருட்களால் குழந்தைகள், பெண்களை தோல் அரிப்பு, சுவாசக் கோளாறுகள், ஒவ்வாமை, பசியின்மை, தலைவலி போன்ற நோய்கள் தாக்கலாம்.

புகையிலை சுற்றுச்சூழல் பாதிப்புகள்

புகையிலை பொருட்களில் அடங்கியுள்ள 4,000 வகை நச்சுப்பொருட்கள் அதை பயன்படுத்துவோரை மட்டுமின்றி, சுற்றுச்சூழலையும், ஒட்டுமொத்த சமூகத்தையும் மறைமுகமாக பாதிக்கின்றன. அதிலுள்ள முக்கிய வேதிப் பொருளான நிக்கோடின், உலக அளவில் புகையிலை தொழிற்சாலைகளில் இருந்து ஓர் ஆண்டுக்கு 30 கோடி கிலோ கழிவாக வெளியிடப்படுகிறது. இது மனிதனை அடிமைப்படுத்தக் கூடிய போதைப்பொருள்.

புகையிலுள்ள மீதைல் புரோமைடு, மணமற்ற நச்சுத்தன்மை கொண்ட வாயு, பயிர்களில் பூச்சிகளை அழிக்க சாதாரணமாக பயன்படுத்தப்படுகிறது. இதை சுவாசித்தால் நரம்பு பிரச்சினைகள், மகப்பேறின்மை பாதிப்பு ஏற்படும். இப்படியாக புகையிலையில் உள்ள ஒவ்வொரு நச்சுப்பொருளும் சமூகத்தை மட்டுமின்றி நாம் ஆரோக்கியமாக உயிர்வாழத் தேவையான சுற்றுச்சூழல் சமநிலையை குலைத்து, உலகை மறைமுகமாக அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கின்றன. இந்த பகாசுரன் நமக்குத் தேவைதானா?

பாரதி பழனிச்சாமி (புகையிலை தடுப்பு மையத்தில் பணிபுரியும் மானிடவியல் ஆய்வாளர்)

 

Pin It