சூழலியல் பொருளாதாரம்: ஓர் அறிமுகம்

சூழலியல் பார்வையில் பொருளாதாரத்தை அணுகும்போது (Economy with Ecological Perspective) மட்டுமே நிலைத்த வளங்குன்றாத வளர்ச்சி சாத்தியமாகும். இந்த பூவுலகமும் நிலைத்து வாழும். ஆனால், நடப்பதோ நேரெதிரான வளர்ச்சி, இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டு நிலைகொண்டுள்ள உலகமயமாக்கலும் தனியார்மயமாக்கலும் சூழலியல் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள தாக்கங்கள் எண்ணிலடங்காது.

உலகில் பணக்காரர்களை கணக்கெடுக்கும் போர்ப்ஸ் இதழ் இந்தியாவில் 40 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 35100 கோடி டாலர் என்று கூறுகிறது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் ஆண்டொன்றுக்கு 8 முதல் 9 விழுக்காடாக உயர்ந்துள்ளது. அதேநேரம் வேளாண்மை வளர்ச்சி விகிதம் ஆண்டொன்றுக்கு 4.9 விழுக்காடாகக் குறைந்து வருகிறது. இந்தியாவில் 5 விழுக்காடு மக்கள்தொகையைத் தவிர மீதமுள்ள 97.45 கோடி பேர் (97.45 )   போதிய வருமானமின்றி வாழ்வதற்காக போராடுகிறார்கள்.

1997 முதல் 2006 ஆம் ஆண்டு வரை 1,66,304 விவசாயிகள் நவீன வேதியியல் வேளாண்மையால் போதிய விளைச்சலின்றி கடனாளியாகி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதுபோல் வறுமையால் உயிரிழந்தவர்கள் பலர், அது கணக்கிலெடுத்துக் கொள்ளப்படவில்லை. ஓர் இந்தியக் குடிமகன் குறைந்தபட்ச தரமான வாழ்க்கை வாழ மாதமொன்றுக்கு சராசரியாக ரூ. 2,540 தேவைப்படுகிறது. இதுகூட இல்லாதவர்கள் வறுமையில் உழல்கிறார்கள் அல்லது உயிரிழக்கிறார்கள். இந்திய விவசாயிகளின் தற்கொலைக்கு மூலகாரணம் ‘பசுமை புரட்சி’ தொடங்கி வைத்த வேதியியல் வேளாண்மையும் தொடரும் மரபணு மாற்ற பயிர்களும்தான்.

இது மட்டுமல்ல நீர்வள ஆதாரத்தின் சேதாரங்கள், கனிம சுரங்கங்கள், மாறி வரும் நிலப் பயன்பாட்டுமுறை (Changing Landuse Pattern), விளைச்சல் நிலங்களை ஆக்கிரமிக்கும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், பெரு ‘வளர்ச்சி’ திட்டங்கள், பெரிய சாலைகள் மற்றும் வணிக துறைமுகங்கள் மூலம் ஏற்படும் அடிதட்டு மக்களின் இடப்பெயர்ச்சி, பயன்படுத்தப்படாமல் நிலத்தை வாங்கிக் குவித்து வேலி போடப்பட்ட ‘ரியல் எஸ்டேட்’ நிலங்கள் போன்ற பல்வேறு காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஒருபுறம் உலக வரிசையில் 40 பெரிய பணக்காரர்கள், மறுபுறம் 97.45 கோடி இருத்தலுக்கு போராடும் மக்கள் (27.5 விழுக்காடு நடுத்தர மக்கள்தொகையும் இதில் உள்ளடங்கியுள்ளது), இதுதான் 15 ஆண்டுகளுக்கு மேலாக அமல்படுத்தப்பட்டு வரும் உலகமயமாக்கலின் தாக்கம். இதை நாம் சொல்லவில்லை, இந்திய அரசின் புள்ளிவிபரங்களே தெளிவாகச் சொல்கின்றன. "பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாகிறார்கள்" என்பதுதான் பொருளாதார உலகமயமாக்கலின் நியதி.

இந்தியாவை நாம் ஒரு படிப்பினையாக வைத்துப் பார்த்தால், சமூக மற்றும் சுற்றுச்சூழல் தரங்களை பரிசீலனை செய்யும்போது இரண்டு கருத்தாக்கங்கள் புலனாகின்றன. நிலைத்த வளர்ச்சியும் உலகமயமாக்கலும் ஒன்றுக்கொன்று நேரெதிர் தளங்களில் இருக்கின்றன. வர்த்தகத்தையும், பொருளாதார வளர்ச்சியை கட்டுக்குள் வைத்தால் மட்டுமே நிலைத்த வளர்ச்சி சாத்தியமாகும். மேலும் சூழலியல் சார்ந்த பொருளாதாரம் பூவுலகை பல தலைமுறைகளுக்கும், உலகிலுள்ள அனைத்து உயிரினங்களையும் வாழ வைக்கும்.

முதலாளித்துவத்தால் இன்று உலகமயமாக்கல் நகர்த்தப்படுகிறது. நவீன அறிவியல் தொழில்நுட்பம், சமூகத்தை மாற்றியமைக்கும் சந்தைப் பொருளாதாரம் ஆகிய இரண்டும் உலகமயமாக்கலின் முக்கிய கூட்டணி அம்சங்கள். உண்மையில் இவை பொருளாதார உறவுகளை மட்டுமல்லாமல் சூழலியல் அமைப்புகளையும் பாதிக்கின்றன.

எடுத்துக்காட்டாக:- உலகின் மொத்த பொருள் உற்பத்தியின் மதிப்பு 1950ல் 60,000 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. இது 2000 ஆம் ஆண்டு 4,30,000 டிரில்லியன் டாலராக உயர்ந்தது. அதிலும் குறிப்பாக 1991 முதல் 1997 ஆண்டு வரை ஏழு ஆண்டுகளில் மட்டும் செய்யப்பட்ட பொருள் உற்பத்தியின் மதிப்பு, 1950 முதல் 1990 வரை ஏற்பட்ட 40 ஆண்டு உற்பத்தியின் மதிப்புக்கு சமம். 1950ல் உலக ஏற்றுமதி வெறும் 7 விழுக்காடுதான், 2000ல் அது 17 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

இதனால், சுற்றுச்சூழலும் சூழலியல் பொருளாதாரமும் என்ன தாக்கங்களைச் சந்தித்தன என்று பார்த்தால், புதைபடிவ பெட்ரோலிய எரிபொருட்கள் உமிழும் உலக கரியமில வாயுவின் அளவு 1950 ஆம் ஆண்டு சுமார் 110 கோடி டன் கார்பனாக இருந்தது. 2000 ஆம் அண்டு இதுவே 820 கோடி டன் கார்பனாக உயர்ந்துள்ளது. 1850 ஆம் ஆண்டு முதல் 1950 வரையிலான 100 ஆண்டுகளில் 100 கோடி டன்னாக உயர்ந்த கரியமில வாயு உமிழ்வு, வெறும் 50 ஆண்டுகளில் (1950-2000) எட்டு மடங்கு அதிகமாக உயர்ந்துள்ளது. உலக கரியமில வாயு உமிழ்வு 2000 ஆம் ஆண்டிலிருந்து 2006 வரை 20 விழுக்காடு உயர்ந்துள்ளது. கரியமில வாயு உமிழ்வு உலகை வெப்பமடையச் செய்வதோடு மட்டுமல்லாமல், உலகெங்கும் சூழலியல் அமைப்புகளை தகர்த்தும் சிதைத்தும் வருகிறது.

சூழலுக்கு எதிரான இந்த பொருளாதார வளர்ச்சிப் போக்கு காரணமாக 2030ஆம் ஆண்டு புவியின் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்வதை யாராலும் தடுக்க முடியாது. இது மிக மோசமான காலநிலை மாற்றத்திற்கு உலகை உந்தித் தள்ளும். ஐ.நாவின் காலநிலை மாற்றம் குறித்த சட்ட வரையறையை அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்டு, கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தினாலும்கூட புவியின் சராசரி வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் உயர்வதை தடுக்க முடியாமல் போகும். கோமாளி மீன், எம்பெரர் பென்குவின், ஸ்டாகோர்ன் கோரல் (பவள உயிர்), பெலுகுவா திமிங்கலம், தோனி ஆமை, ரிஸ்சீல், சால்மன் மீன் போன்ற கடல்சார்ந்த உயிரினங்களும், ஆர்டிக் நரி, துருவக் கரடி மற்றும் வறட்சி தாங்காத குயுவர் மரம் போன்ற அரிய உயிரினங்கள் புவி வெப்பமடைவதால் அழிந்துவிடும். இந்த அழிவு, சுற்றுச்சூழல் அழிவின், சூழலியல் பொருளாதாரத்தின் வீழ்ச்சியை மட்டுமல்லாமல் உலகின் இறுதி ஊர்வலத்தை அறிவுறுத்தும் சாவுமணிகளாகும்.

சூழலியல் பொருளாதாரத்தின் முன்னோடி சிந்தனையாளர் லெஸ்டர் பிரவுன் "புவி வெப்பமடைவதற்கும் அபரிமித பொருளாதார வளர்ச்சியே காரணம், எனவே சூழலியல் பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்ட புதிய சூழலியல் பொருளாதாரத்தை நாம் உருவாக்க வேண்டும். சூழலியல் பொருளாதாரத்தால் மட்டுமே நிலைத்த வளர்ச்சியை அடைய முடியும்" என்கிறார். அப்போதுதான் உலக வர்த்தகம், சந்தையால் நகர்த்தப்படும் முதலாளித்துவ பொருளதாரத்தை நாம் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என சில ஆண்டுகளுக்கு முன் வாஷிங்டனில் உலக வங்கி கொள்கை வகுப்பாளர்களிடம் ஆதாரபூர்வமாக அவர் விளக்கினார்.

உலகமயமாக்கலை இயக்கும் சர்வதேச நிதி நிறுவனம், உலக வங்கி மட்டுமல்லாமல் அதை நடைமுறைப்படுத்தியும் வளர்த்தும் வரும் உலக வர்த்தக நிறுவனம் மற்றும் உலக பொருளாதார அமைப்பு ஆகிய சக்திவாய்ந்த அமைப்புகள் சூழலியல் பொருளாதாரத்தை புறக்கணித்து வருவதால் ஏற்பட்ட சூழலியல் பேரிடர்கள் ஏராளம். உலகமயமாக்கல் குறித்த இரண்டு கொள்கையளவு பார்வைகள் தற்போது உருவாகி வருகின்றன. உலகமயமாக்கலை முன்னெடுத்து செல்பவர்களின் கூற்று பின்வருமாறு:- கட்டுப்பாடற்ற பொருளாதார வளர்ச்சி ஈட்டித்தரும் அதிக நிதி வளங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் உலகமயமாக்கலை ஒட்டி வரும் அம்சங்கள் உலகை தலைகீழாக மாற்றிவிடும் என்று கூறப்படுகிறது. ஆனால், உலக சுற்றுச்சூழல் இன்று அடைந்துள்ள நிலையை இந்த உலகமயமாக்கல் கொள்கை முக்கிய அம்சமாக கருதவில்லை. இது சூழலியல் அமைப்புகளைத் தகர்க்கும் என நம்பப்படுகிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் நமக்கு நம்பிக்கை தரும் மாற்றுக் கொள்கை:- ஐரோப்பிய யூனியன், வட அமெரிக்கா, ஆசிய பசிபிக் பகுதிகளைச் சேர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஒட்டியே உலகமயமாக்கல் அமைந்துள்ளது. ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்க, ஆசிய நாடுகளின் சிறிய பொருளாதாரங்களுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை. உலகமயமாக்கல் பிராந்திய, தேசிய பொருளாதாரங்களை மாற்றியமைத்து சில துறைகளுக்கும், சில வர்த்தக நடவடிக்கைகளுக்கும் சாதகமாகச் செயல்படுகிறது. உலகமயமாக்கல் ஜனநாயகத்தின் வாய்ப்புகளை நொறுக்குகிறது (எ.கா:சந்தைகளால் தீர்மானிக்கப்படும் தேசிய இன அரசியல்) மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வை அதிகரிக்கச் செய்கிறது. உலகமயமாக்கலை சீரமைக்க வேண்டும். சூழலியலின் தாங்கும் திறனை மனதில் கொண்டு மாற்றத்துக்கான கிரியாஊக்கியாக உலகப் பொருளாதாரத்தை மாற்ற வேண்டும். திறந்தநிலை வணிகம் நியாய வணிகமாக மாற வேண்டும். தாராளமயமான ஜனநாயகம் பங்கேற்புடன் கூடிய ஜனநாயகமாக மாற வேண்டும். அதிக வளர்ச்சி என்பது இனி, நிலைத்த வளர்ச்சியாக மாற வேண்டும். இந்த மூன்று கோரிக்கைகளும் சூழலியல் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.

உலகமயமாக்கல் பூர்வீக குடிகளின் வாழ்வதாரங்களான இயற்கை, சுற்றுச்சூழலின் சீரான பராமரிப்பை குலைப்பதால் அவர்களது வாழ்வாதாரங்கள், பண்பாடு மீது கடுமையான தாக்கம் ஏற்பட்டு, சூழலியல் பொருளாதாரத்தின் மீதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஓரினப் பயிர் முறையும், செயற்கை வேதியியல் வேளாண்மையும், இப்போது அறிமுகமாகும் மரபணு மாற்ற பயிர்களும் சுற்றுச்சூழலை தகர்க்கும்போது இவர்கள் சூழலியல் அகதிகளாக மாறுகிறார்கள்.

உலகமயமாக்கலின் நேரடி விளைவுகளையும் சூழலியல் பொருளாதாரத்தின் அழிவையும் இன்றைய சமூக செயல்பாட்டாளர்களும், பத்திரிகையாளர்களும், சிந்தனையாளர்களும் மிகவும் குறைந்தே மதிப்பீடு செய்து வருகிறார்கள். சூழலியல் பொருளாதாரத்தின் பின்னணில் இவற்றைப் பார்க்காமல் சுற்றுச்சூழல் அழிவுகளை மட்டும் சுட்டிக்காட்டி வருகிறார்கள். ஒவ்வொரு பொருளின் உற்பத்திக்குப் பின்னால் சூழலியல் பொருளாதாரப் பார்வை கொண்டு கூர்ந்து கவனித்து, சூழலியலின் நிலைத்த தன்மைக்கு ஆதரவான உற்பத்தி முறையை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை நாம் அனைவரும் உணர வேண்டும்.

அதிக உற்பத்தி, அதிக லாபம், கட்டுப்பாடற்ற சந்தை மூலம் வளர்ச்சி விகிதத்தை அதிகரித்து காட்டலாம்... இந்தியாவைப் போல். ஆனால், உணவுத் தன்னிறைவு, மக்கள்தொகையின் நுகர்வுக்கு தேவையான வேளாண் வளர்ச்சி மிகவும் அவசியம், அதுவே பட்டினியையும் உயிரிழப்பையும் தடுக்கும்.

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத நிலைத்த வளர்ச்சி தரும் சூழலியல் பொருளாதாரத்தை புறந்தள்ளிவரும் நம் நாட்டில்... ஆயிரக்கணக்கான விவசாயிகளின் உயிரைக் காப்பாற்ற முடியாத நாட்டில், உலகளவில் 40 பெரும் பணக்காரர்கள் இருந்து என்ன பயன்? இவர்களால் 102 கோடிக்கும்  அதிகமான மக்களுக்கு உணவு வழங்க முடியுமா? அல்லது அவர்கள் சம்பாதித்துத் தருவதாகச் சொல்லப்படும் அந்நிய செலவாணி டாலரை கடித்துத்தான் சாப்பிட முடியுமா?

சி.மா.பிரிதிவிராஜ், பூவுலகின் நண்பர்கள்

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Pin It