பல நேரங்களில் நிகழ்வதைப் போல பர்கினோ ஃபாசோவிலும் வரலாறு முழு வட்டத்தை வந்தடைந்துள்ளது. தாமஸ் சங்கரா உயர்த்திப் பிடித்த ஒளிவிளக்கை ஒரு கொலையாளியின் துப்பாக்கிக் குண்டு அணைத்துவிட்ட பின்னர், ஏறத்தாழ நான்கு தசாப்தங்களுக்குப் பிறகு, புரட்சிகர ஒளிக் கீற்றுடன் ஓர் இளம் இராணுவ அதிகாரி பாசறையிலிருந்து சீறியெழுந்து வந்துள்ளார். அவர் மறைந்த தாமஸ் சங்கராவின் அதே குறிக்கோள்களுடன் வந்துள்ளார் என்பது வியக்கத்தக்க ஒரு விடயமாகும்.

மேற்கு ஆப்பிரிக்க நாட்டின் தற்போதைய தலைவரான கேப்டன் இப்ராஹிம் டிராரே, ஆப்பிரிக்கக் கண்டத்தின் அடையாளமாகிவிட்ட தாமஸ் சங்கராவின் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துகிறார். புகழ்பெற்ற அவருடைய முன்னவரைப் போலவே அவரும் இப்போது ஆப்பிரிக்காவெங்கும் இதயங்களைக் கைப்பற்றி வருகிறார்; அதேநேரத்தில் மேற்கத்திய மேலாதிக்கத்தின் சுவடுகளைத் துடைத்தெறிந்து கொண்டிருக்கிறார்.burkina fasoஅவர்களுக்கிடையிலான ஒற்றுமை ஐயத்திற்கு இடமற்றது, திட்டமிட்டதாகக் கூட இருக்கலாம். பர்கினோ புரட்சியின் தந்தை என்று கருதப்படும் தாமஸ் சங்கரா 1983-இல் புரட்சியின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றினார். 1987 அக்டோபரில் அவர் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு வரை நான்காண்டுகள் ஆட்சியில் இருந்தார். அவரது படுகொலையைத் திட்டமிட்டு அரங்கேற்றியது பிரான்ஸ்தான் என்று அவரது மனைவி குற்றம் சாட்டினார்.

பதவிப் படிநிலையில் உச்சநிலையை எட்டிப்பிடித்த சங்கராவின் தலைமைப் பண்பும் தத்துவமும் டிராரேவுடன் ஒப்பிடப்படுகிறது. இப்போது டிராரே தனது 37-வது வயதில் உலகின் மிகவும் இளைய அரசுத் தலைவராக இருப்பதோடு, சமூக ஊடகங்களிலும் புகழ்பெற்றவராக இருக்கிறார்.

இந்த பாரம்பரியமிக்க இராணுவச் சீருடை, இடுப்பில் அணிந்துள்ள கைத்துப்பாக்கி மற்றும் சிவப்புத் தொப்பி ஆகியவை கவனமாக உருவாக்கப்பட்ட ஆளுமையின் ஒரு பகுதியாக உதவிகரமாக இருக்கின்றன. சர்வதேச அரசுறவு அரங்கில் டிராரேயின் திறன்மிக்க நகர்வுகள், குறிப்பாக பர்கினோ ஃபாசோவை மேற்கத்திய செல்வாக்கிலிருந்து விடுவிக்கும் முயற்சிகள் ஆப்பிரிக்காவில் உள்ள அவரது ஆதரவாளர்களைக் கவர்ச்சிகரமாக ஈர்த்துள்ளன.

ஆப்பிரிக்க இளைஞர்கள் ஆப்பிரிக்காவை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க யாரோ ஒருவரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்; அந்த யாரோ ஒருவரை பர்கினோவின் ஆட்சியாளரிடம் கண்டறிந்துள்ளார்கள்.

“பல ஆண்டுகளுக்கு முன்பு தாமஸ் சங்கரா ஓர் அரசியல் திசைவழியைத் தொடங்கி வைத்தார்; அது இன்றைக்கும் கூடப் பொருந்தக் கூடியதாக இருக்கிறது. இன்றைய புவிசார் அரசியல் சூழமைவைக் கருத்தில் எடுத்துக்கொண்டு அந்த அடித்தளத்தின் மீது டிராரே கட்டமைப்பை எழுப்பிக்கொண்டுள்ளார்” என்று பர்கினோவின் இசைக் கலைஞரும் குடியுரிமைகள் செயல்வீரருமான ஆசிபி ஜோஹன் 'டி ஆர்டி ஆப்பிரிக்கா' (TRT Africa) என்ற செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

சங்கராவின் மரபுவழி

ஆப்பிரிக்கா முழுமைக்குமான எதிர்காலக் கண்ணோட்டத்தைக் கொண்ட சங்கரா, மக்களின் மனநிலை குறித்து வெகு சிலருக்கே இருந்த தொலைநோக்கைக் கொண்டிருந்தார். மேல் வோல்டா என்ற நாட்டின் பெயரை, “நேர்மையான மக்களைக் கொண்ட நாடு” என்று பொருள்தரும் வகையில், புதிதாகப் பிறந்த நாடு என்பது போல, 'பர்கினோ ஃபாசோ' என்று மாற்றியமைத்த பெருமை தாமஸ் சங்கராவையே சேரும்.

அவருடைய நான்கு ஆண்டுகள் ஆட்சியில், கண்டிப்பும் கட்டுப்பாடும் அவருடைய நிர்வாகத்தின் அடையாளங்களாக இருந்தன. அவர் தனது ஆட்சியில் பொதுத் தேவைக்காகச் செலவழிப்பதற்கான பெரிய ஒரு நிதி ஆதாரத்தைத் திரட்டுவதற்காக, வீண் செலவினங்களைக் குறைத்தார். 1983-இல் 13% ஆக இருந்த படிப்பறிவு விகிதம் 1987-இல் 73% ஆக உயர்ந்தது. பல லட்சக்கணக்கான குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டன. வெப்பமண்டலக் காலநிலை கொண்டதாக இருந்தபோதிலும் பர்கினோ ஃபாசோவின் காடுகளின் பரப்பளவு அதிகரித்தது.

ஏழை விவசாயிகளுக்குச் சங்கரா நிலங்களை மறுவிநியோகம் செய்தார்; அதன் விளைவாகப் பருத்தி அறுவடை பெருகியது. அந்நிய உதவிகளை வெறுத்த சங்கராவின் புகழ்பெற்ற வாசகம், “உங்களுக்கு உணவளிப்பவர்களே, உங்களைக் கட்டுப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்” என்பதே. ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஆப்பிரிக்கா முழுவதன் ஒற்றுமைக்காகவும் ஆப்பிரிக்க நாடுகள் சுயசார்பு கொண்டவையாக மாற வேண்டும் என்பதற்காகவும் அவர் மாறாத உறுதியுடன் குரல்கொடுத்தார்.

“கோதுமை, தானியங்கள், சோளம் அல்லது பால் ஆகியவற்றுடன் வந்தவர்கள் நமக்கு உதவி செய்வதற்காக வரவில்லை. நமக்கு உண்மையிலேயே உதவ விரும்புவோர் கலப்பைகள், டிராக்டர்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள், தண்ணீர்ப்பீப்பாய்கள், ஆழ்துளைக் கிணறு தோண்டும் இயந்திரங்கள் மற்றும் அணைக்கட்டுகள் கொண்டுவருவார்கள். இப்படித்தான் உணவு உதவியை நாம் வரையறுக்க வேண்டும்.”

– தாமஸ் சங்கரா

“தாமஸ் சங்கரா தான் ஆட்சி செய்த நான்கே ஆண்டுகளுக்கு உள்ளாக பொருளாதாரம், இராணுவம் மற்றும் புவிசார் அரசியல் வளர்ச்சிக்கு வழிவகுத்தார்” என்று ஜோஹன் கூறுகிறார்.

சங்கராவின் வாரிசு

டிராரேவின் மீதான மதிப்பீடு பகுதியளவுக்கு 2022 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு அவர் போராட வேண்டியிருந்த சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படுகிறது. பர்கினோ ஃபாசோ தொடர்ந்து உலகின் மிக ஏழை நாடுகளின் பட்டியலிலேயே இருந்து வருகிறது. பத்தாண்டு கால எதிர்ப்புக் கிளர்ச்சியால் ஏற்கனவே இருபது லட்சம் மக்கள் இடம்பெயரச் செய்யப்பட்டிருந்தனர். அந்த நேரத்தில் எந்தப் பிரச்சினைகளும் மறைந்திருக்கவில்லை.

அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து, டிராரே தனது நாட்டை மேற்கத்திய வல்லரசுகளிடமிருந்து, குறிப்பாக, முன்னாள் காலனிய ஆட்சியாளரான பிரான்சிடமிருந்து விலக்கி வைத்திருந்தார். மேலும் துருக்கி மற்றும் ரஷ்யாவுடன் பலமான இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளை உருவாக்கினார்.

மே மாதம் இரண்டாம் உலகப் போரின் வெற்றி நாளின்போது ஆப்பிரிக்கத் தலைவர்களுடன் மாஸ்கோவில் ரஷ்யத் தலைவர் விளாதிமிர் புதினைச் சந்தித்து, இருதரப்பு உறவுகளில் விரைவான வளர்ச்சிக்கான தனது ஆர்வத்தைத் தெரிவித்தார். கூட்டணியை அவர் மாற்றியது பயங்கரவாதத்திற்கு எதிரான பர்கினோ ஃபாசோவின் போராட்டத்தில் உதவிகரமாக இருந்தது என்று சில ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். “உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த மக்கள் படிப்படியாகத் தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பு மேம்பட்டுக் கொண்டிருக்கிறது” என்று ஜோஹன் தெரிவிக்கிறார்.

தனது நாட்டின் ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதைத் தனது முன்னுரிமையாகக் கொண்ட தலைவராக டிராரே தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார். அவரது முயற்சிகள் பயனளிப்பதாகப் பொதுமக்கள் கூறுகின்றனர்.

நன்றி: TRT GLOBAL

தமிழில்: நிழல்வண்ணன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.