காலம் கடந்து கொண்டிருக்கிறது
உலகம் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்கிறது
பிம்பங்கள்
மோசமாகிக் கொண்டிருக்கின்றன
குரல்கள்
கம்மிக் கொண்டிருக்கின்றன
குழந்தைகள்
குண்டுகளால் தூள் தூளாக்கப்படுகின்றனர்
கேட்பதற்கு யாருமில்லை
மனிதர்கள் உயிரோடு எரிக்கப்படுகிறார்கள்
பிழைப்பதற்கு வாய்ப்பேதுமில்லை
குழந்தைகளின் மூளைகள்
வெடித்துச் சிதறுகின்றன
அன்னைகள் வேதனையில் அலறுகிறார்கள்
கருவறையை விட்டு
வெளிவராத குழந்தை
நேராகக் கல்லறை செல்கிறது
கனவுகள் கொல்லப்படுகின்றன
குறிக்கோள்கள் நிராசைகளாகின்றன
அதிர்ச்சியில் உதிரும் மரணங்கள்
ஒவ்வொரு நொடியும் நிறைகின்றன
இன்னும் அவர்கள்
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்
தொட்டில் குழந்தைகள்
தீவிரவாதிகள் என்று?!
வானிலிருந்து பொழிகிறது
குண்டுமழை
குழந்தைகளின் விழிகளில்
பேரச்சம்
குண்டுகளால் சிதைக்கப்பட்ட தாயை
வீரிட்டழைக்கிறது குழந்தை
நீங்கள் சொல்கிறீர்கள்
நாங்கள் பயங்கரவாதிகள் என்று
வாருங்கள்...
உங்களுடைய வானங்களைப் பாருங்கள்
ஆம், அது துணிச்சல்தான்
எவ்வளவுதான் நீங்கள் தாங்குவீர்கள்
நாங்களும் பார்க்கிறோம்
உங்கள் பெருந்தீனிக்கு அளவில்லை
எங்களில் இறந்தவர்க்கு இடுகாடில்லை
குடிக்க நீரில்லை மின்சாரமில்லை
அநாகரிகமான மனிதப் படுகொலைகள்
உடல்களின் பாகங்களைக்
கோருவார் யாருமில்லை
மூச்சிருக்கும் உடல்களோ
துண்டிக்கப்படுகின்றன
மரணத்தின் அழுகிய கெடு நாற்றம்
மூச்சைப் பற்றிக்
கொள்ளவும் நேரமில்லை
துயரத்தில் அழுவதற்கோ
நினைத்துப் பார்ப்பதற்கோ கூட
நேரமில்லை
கண்சிமிட்டும் நேரத்திற்குள்
அடுத்தடுத்து தாக்குதல்கள்
எங்களை நொறுக்கிவிடும் முயற்சியில்
மருத்துவமனைகளும் தப்பவில்லை
ஆனால் அவர்களுக்குத்
துளியும் தெரியாது
இந்த நிலத்தில் பிறந்த கருவும்கூட
வாழும் உரிமையுடன்
எதிர்த்து நிற்கும்
தாக்குப் பிடிக்கும் என்று.
மீளுந்திறனே எங்கள் உணவு
அதுவே எங்களுக்கு
ரொட்டியும் வெண்ணெய்யும்
எங்கள் நிலத்தைவிட்டு
நாங்கள் நீங்கமாட்டோம்
இதை ஏன் அவர்கள்
புரிந்து கொள்ளவில்லை.
பிஞ்சுக் குழந்தைகளையும்
பெண்களையும்
கண்டு அஞ்சும் கோழைகள்
தூரத்திலிருந்து கொல்கிறார்கள்
உண்மை வெளிப்பட்டு விடும்
என அஞ்சுகின்றனர்
அரசுறவுப் பிணைப்புகள் மூலம்
அவர்களுடைய பொய்களை மறைக்கின்றனர்
ஆனால் உண்மை சுதந்திரமானது
அவர்களுடைய விழிகளில்
இறுதிப் பேரழிவின் காட்சிகளை
நீங்கள் காண்பீர்கள்
இருப்பினும் செய்திகளில்
எங்களைப் பற்றிய பொய்க் கதைகள்
உண்மையில் நாங்கள்
சொல்லியவை அல்ல
ஊடகங்கள் விலங்கிடப்படுகின்றன
அவற்றின் செய்திகள் போலியானவை
அவற்றின் படங்கள் போலியானவை
எங்கள் கண்ணியம் பறிக்கப்படுகிறது
உலகம் விழி திறந்து பார்க்க
நாங்கள் வேண்டுகிறோம்
ஆனாலும் உலகம் மறுக்கிறது
திரை விலகுகிறது
உண்மை வெளிவருகிறது
மனிதம் தோற்றுவிட்டது
அவர்களுக்கு நரகத்தைக் கொடு
செல்வமும் வசதியும் படைத்த
இருக்கையிலிருந்து கொண்டு
அவர்கள் பதிவிடுகிறார்கள்
இதயம் கெட்டித்து விட்டது
குருடாகி, மூளைச் சலவைக்கு
உள்ளாகி முடங்கி விட்டது
யார் முடிவு செய்வது?
யாருடைய கொலைகளை
நியாயப்படுத்துவது?
யார் தெரிவு செய்வது?
இதெல்லாம் என்னைப்
பித்துப் பிடிக்க வைக்கின்றன
நாம் நூறாண்டுகள்
பின்னோக்கிச் சென்றுவிட்டோம்
பெருங் களப் படுகொலை
அடிமைமுறை
வெள்ளையர் மேலாதிக்கம்
விலங்குகள் கூட
இவ்வளவு கொடூரமானவை அல்ல
அவை கிண்டல் செய்யாது
கேலி செய்யாது
நமது வலியை டிக்டாக் செய்யாது
அது மனிதத் தன்மையற்றதுக்கும் கீழானது
ஆனால் மக்கள் விழித்தெழுகிறார்கள்
வெளிப்படையாகப் பேசுகிறார்கள்
அதிர்ச்சியுறுகிறார்கள்
போ, உனது செவிகளை மூடிக்கொள்
எங்கள் பலம் எது என்பது
உனக்குத் தெரியும் என்பது
எங்களுக்குத் தெரியும்
அதனால்தான் நாங்கள்
அச்சுறுத்தலாக இருக்கிறோம்
எளிதாக உனக்கு வியர்க்கச் செய்கிறோம்
'இனப் படுகொலை' என்ற சொல்
தடை செய்யப்பட்டதென்றால்
அதன் பொருள்
உனக்குத் தெரிந்துவிட்டது என்று பொருள்
உனது கரங்களில்
இரத்தக் கறை படிந்திருக்கிறது
போ, அதைக் கண்டுபிடி, அழித்துவிடு
வரலாறு திரும்பட்டும்
அரசியல்வாதிகள்?
வேடதாரிகள்
எங்கள் வாக்குகள்?
எல்லாம் பயனற்றவை
தங்களுடைய நேர்மை பற்றிப் பேசும் அவர்கள்
நரியைப் போன்ற வஞ்சகர்கள்
தீர்ப்பு நாள் ஒன்று
இருக்க வேண்டும்
ஏனென்றால்
செலுத்த வேண்டிய விலை
ஒன்று இருக்கிறது
குழந்தையொன்று வீரிட்டு
அழுவதைக் கேட்கிறேன்
அது கனவாக
இருக்கக் கூடாதா என்று
எண்ணுகிறேன்
இதுதான் உண்மைநிலை
மனித இனம்
வெட்கித் தலைகுனியட்டும்
காலம் கடந்து கொண்டிருக்கிறது
உலகம் வேடிக்கை
பார்த்துக் கொண்டிருக்கிறது
ஆனால் இன்றிலிருந்து
பல பத்தாண்டுகளுக்கு
நாம் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம்
எனது நெஞ்சு
பற்றி எரிவதை உணர்ந்தேன்
நான் இந்தச் சோதனையில்
வென்றுவிட்டேன்
குறைந்தபட்சம்
நாம் சொல்லிக் கொள்ளலாம்
நாங்களும் முயற்சி செய்தோம்
இனப் படுகொலையை
முடிவுக்குக் கொண்டு வர...
(
தமிழில்: நிழல்வண்ணன்