ஒரு மனிதனின் இயல்பை எதை வைத்துத் தீர்மானிப்பீர்கள்? அவனது நேர்மை, உண்மை, ஒழுக்கமான பழக்கவழக்கங்கள் போன்ற மதிப்பீடுகள்….. என எத்தனையோ கூறப்படுகையில் ‘மதம் மற்றும் அரசியல் சார்ந்த நம்பிக்கைகள்’ என்பதையும் அப்பட்டியலில் சேர்க்கச் சொல்லி காலம் பல காலமாக என்னைப் பணித்தாலும் அதற்கான அவசரமும் அவசியமும் இப்போது ஏற்பட்டுள்ளது. “இதென்ன அவ்வளவு முக்கியமா?” என்றால் எல்லாவற்றையும் விட முக்கியம் என்பதே என் உயர்வான கருத்து. ஏனெனில் பெரும்பாலான குற்றவாளிகளுக்கு இந்த இரண்டும்தான் பாதுகாப்புக் கவசம்.
அரசியல் கட்சி சார்பு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம்தான். ஆனால் அச்சார்பு சமூகத்தின் போக்கையே மாற்றியமைக்கவல்லது ஆகையால் தனிநபர் விருப்பத்திற்கு மதிப்பளித்து நேரடி மற்றும் மறைமுக வலப்புறத்தார் அனைவரையும் அரவணைத்துச் செல்வதெல்லாம் என்னத்துக்கு? வலதுசாரிகளிடம் நான் கூறுவது - I respect your right to have an opinion but I don’t respect your opinion. சில காலத்திற்கு முன் மக்கள் தமது மடமையை அவமானமாக எண்ணி வெட்கித் தலைகுனிந்தனர். Now people wear ignorance with arrogance, as if it is a badge of honor!
‘அரசியல் நிலைப்பாட்டைத் தாண்டி ஒருவரது நற்குணங்களைக் காண வேண்டும்’ – அது எப்படிங்க முடியும்? முதலில் எதை நற்குணம் என்று கூறுகிறீர்கள்? ஒருவனுள் உறைந்திருக்க வேண்டிய மனிதத்தை எடுத்துரைப்பது - சக உயிர் மீதான அவனது பச்சாதாபம். இடச்சாய்வு அல்லது வலச்சாய்வு நம்பிக்கைகளின் அடிப்படையில் (மட்டுமே) அவை முறையே வெளிப்படும் அல்லது வெளிப்படாமல் போகும்.
பசித்திருக்கும் ஒருவரைப் பார்த்தால் உணவு வாங்கிக் கொடுப்பது, இயலாத ஒருவருக்குச் சாலையைக் கடக்க உதவுவது, விபத்தில் சிக்கிய ஒருவருக்காக ஆம்புலன்ஸ் அழைப்பது, அருகிலேயே இருந்து அடிபட்டவரை ஆசுவாசப்படுத்திக் கரிசனத்தோடு நடந்துகொள்வது, கால்வாயில் கிடக்கும் நாய்க்குட்டியைக் காப்பாற்றுவது,…. இந்த மாதிரியான இயற்கையான உள்ளுணர்வுகளைப் பச்சாதாபம் எனக் குறிக்கவில்லை. இவை போன்ற உதவிகள்… முதலில் இவை உதவிகளே அல்ல; இச்செய்கைகள் எல்லாம்தான் ஆறறிவுடன் கூடிய ஓர் உயிராகப் பிறந்ததற்கான அடிப்படைப் பண்பு.
ஆனால் அதே ஒருவன் ‘கடைநிலை ஊழியர்களிடம் எவ்வாறு நடந்துகொள்கிறான்?, ‘வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்குமான சம வாய்ப்புகளுக்காகக் குரல் கொடுக்கிறானா?’ என்பதே உண்மையான பச்சாதாபம். இந்த மனித மாண்பினின்று விலகி நின்று ஏற்றத்தாழ்வைப் போதிக்கும் சர்வாதிகாரம் என்னும் ‘பாயாச’த்தைக் கிண்டுவதையே அடிப்படையாகக் கொண்ட மதம் மற்றும் அரசியல் கட்சிகளை ஆதரித்து நிற்கும் ஒருவனை ஆறறிவு படைத்த உயிரினம் என்று மதிக்க முடியாதல்லவா?
இதுவரை நான் கூறியவற்றோடு உடன்படுகிறீர்கள் எனில் தொடர்ந்து வாசிக்கவும். இல்லையெனில் இங்கேயே நிறுத்திக்கொள்வது நலம்.
***
இடி அமீன் 1951-இல் இருந்து 1960 வரை அதிபாரப் பிரிவு குத்துச்சண்டையின் சாம்பியன் (heavyweight boxing champion) பட்டத்தைத் தன்வசம் வைத்திருந்தாராம்…. வைத்திருந்தானாம். எனவே குத்துச்சண்டையில் அவனை முன்உதாரணமாகக் காட்டினால் அது ஏற்புடையதா? Francisco Franco-வின் ஓவியங்கள் நுணுக்கமானவைதாம். ஆனால் அவற்றைக் கண்டு ரசிக்கவும் பிரமிக்கவும் அவனது சர்வாதிகாரம் குறுக்கே நிற்கிறது. ஹிட்லரின் ஓவியங்களை ‘ஹிட்லர்’ என்ற பெயரை நீக்கிவிட்டுப் பார்த்தால் அவ்வளவு அழகாகத் தெரியும். ஆனால் அவ்வழகை அவன் கொன்று அழித்த பத்திரிகையாளர்களும் பொதுவுடைமைவாதிகளும் தங்களுடன் எடுத்துச் சென்றுவிட்டனர்.
எந்த மனிதனும் தன்னையும் மீறி ஏதேனும் ஒரு பொழுதில் நல்லது ஏதாவது செய்திருப்பான்/சொல்லியிருப்பான். நின்றுபோன கடிகாரம்கூட ஒரு நாளைக்கு இருமுறை சரியான நேரத்தைக் காட்டும்! அதற்காக ஒருவனது மொத்த பாதகச் செயல்களையும் அவ்வரிய நற்செயல்களையோ கலைப்படைப்புகளையோ கொண்டு சலவை செய்து பாவமன்னிப்பு வழங்க முடியாதில்லையா? ‘எல்லோரிடமும் நல்லது/ கற்றுக்கொள்ள ஒன்று இருக்கும்.’ – இவ்வாக்கியம் எதேச்சதிகாரிகளுக்குப் பொருந்தாது என்றே நினைக்கிறேன். ‘How not to be?’ என்றுதான் கற்றுக் கொள்ளலாம்.
வலுக்கட்டாயமாகப் பொருத்திப் பார்ப்பதானால் ஹிட்லரிடம் எனக்குப் பிடித்த விஷயம் ஒன்றைச் சொல்கிறேன். தற்கொலை செய்துகொள்ளும் முன்பாக அவன் கூறிய கடைசி வாசகம் எனக்கு ரொம்பப் பிடிக்கும் – A man must summon up the courage enough to face the consequences and therefore I’m ending it now. அக்கொடுங்கோலனிடம் இருந்து எப்பேர்ப்பட்ட கவித்துவம் வெளிப்பட்டிருக்கிறது என்று என்னால் இதை வேண்டுமானால் ரசித்து வியக்க முடியும். Also, What a poetic justice!
***
காஸாவிற்கு (Gaza) மருந்துகள், அடிப்படை அறுவைசிகிச்சை கருவிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (antibiotics) போன்ற மருத்துவ உபகரணங்கள் அனுப்பத் தடை விதிக்கப்பட்டிருந்ததால், கடும் தட்டுப்பாட்டின் விளைவாகச் சிறுகுழந்தைகளுக்கு மயக்கமருந்து, வலி நிவாரணி போன்ற எதுவும் அளிக்கப்படாமல் கை/கால் உறுப்புகளை அகற்ற நேர்ந்த அவலத்தைப் பல மருத்துவர்களும் பதிவுசெய்துள்ளனர். வலியில் துடித்த குழந்தைகளுக்கு Ms.Rachel-இன் யூடியூப் காணொளிகளைக் காண்பித்து அவர்களது கவனத்தைத் திசைதிருப்ப முயன்றதாகச் செவிலியர்களும் தாய்மார்களும் கூறியிருக்கின்றனர். உலகில் யாருக்கும் நடக்கக்கூடாத அவலம் இது. இதை நிகழ்த்திக் கொண்டிருக்கும் யூத இனத்தவருக்கு ஒரு துளி வருத்தம்கூட இல்லாதது அரக்கத்தனமாகத் தெரிகிறது எனில் அவ்வினத்தவரை எவ்வித நாணமுமின்றி ஆதரிப்பவர்களிடத்தும் அதே அரக்கத்தனம் உள்ளிருப்பதாகத்தானே பொருள்?
கொஞ்சம் பரந்துபட்ட பார்வையுடன் பேசுவதாய் இருந்தால் உலகெங்கிலும் வலப்பக்கத்தைத் தூக்கிப் பிடிக்கும் கொடுங்கோலன்களை வெறுப்பதைப் போல் அவர்கள் புகழ்பாடும் அடிமைகளையும் வெறுத்து ஒதுக்குவதுதானே சரியாக இருக்க முடியும்? அதை விடுத்து அந்த வெறுப்பை ஒருபுறம் டப்பாவிற்குள் அடைத்து அடைகாத்துக்கொண்டே மறுபுறம் அவரது கலையை எங்ஙனம் சிலாகிக்க முடியும்?
***
தூத்துக்குடித் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து திமிராகப் பேசிய பிறகும் திருவாளர். கெய்க்வாட் படங்கள் நன்றாகவே ஓடின. “‘கலை வேறு; கொலை வேறு’ என்று நம் மக்கள் பிரித்தறியும் உயரிய(!) பண்பைப் பெற்றவர்கள்” என்ற மானங்கெட்ட உண்மையை ஏற்கெனவே வெளிச்சம் போட்டுக் காண்பித்திருக்கிறார். எவ்வளவு விஷத்தை வேண்டுமானாலும் உமிழலாம்; கோரத்தாண்டவம் ஆடி எத்தனை கொலைகள் வேண்டுமானாலும் நிகழ்த்தலாம்; பொதுவெளியில் எவ்வளவு ஒழுங்கீனத்தையும் பறைசாற்றலாம்….. மக்கள் சீக்கிரமே மறந்துவிட்டு கொண்டாட்ட மனநிலையுடன் கூத்து பார்க்கக் கிளம்பிவிடுவார்கள் என்ற மெய்ம்மையை மீண்டும் மீண்டும் பரிசோதித்துப் பார்த்து அதில் வெற்றியும் அடைந்துகொண்டிருக்கின்றனர் பலர்.
தற்போது நாட்டைப் பிடித்தாட்டும் தரித்திரத்தைப் பற்றிப் போற்றிப் புகழ்ந்தும், இப்படி ஒரு நல்லாட்சி(!) தந்துகொண்டிருப்பதற்காக 56 அங்குல அங்குராசை அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிட்டுப் பேசியும் புளகாங்கிதம் அடைய ஒரு தடித்தனம் வாய்க்கப்பெற்றிருக்க வேண்டும். அவ்வாறான தடித்தனம் வாய்க்கப்பெற்ற சிங்கிமேள வல்லுநரை இவ்வளவிற்குப் பிறகும் ‘இசைச்சாமீஈஈஈ’ என்றழைத்துக் கதறி உருகுபவர்களை எந்த வகையினத்தில் சேர்க்க வேண்டும்? இசையுலகின் ராஜாவாக மக்களே தூக்கி வைத்துக் கொண்டாடத்தான் செய்கின்றனர். ஆனாலும் தான்தான் ராஜா என்ற அவரது அகங்காரத்தைப் பார்த்து அருவருக்காமல், அத்திமிரை அவருக்கு வாய்த்திருக்கும் இசையறிவுக்கான உரிமமாகப் பாவித்துச் சாதாரணப்படுத்துவது இன்னும் அருவருக்க வைக்கிறது.
எனக்குத் தெரிந்தவரை, நான் பார்த்த சான்றோர்பெருமக்கள் தமது இயல்பின் மூலம் எனக்கு உணர்த்தியது - உண்மையான சால்பு பணிவைக் கற்றுத்தரவல்லது.
அவ்வளவு அழுக்கையும் மீறி எப்படி அம்மனிதரை ரசிக்க முடிகிறது மக்களால்? ‘அரசியல் சார்பு வேறு; திறமை வேறு’ என்று வக்கணையாக வாதம் வைப்பவர்களுக்காகவே அளவெடுத்துத் தொடுக்கப்பட்ட கேள்வி: 24 ஆண்டுகளுக்கு முன் சபர்மதி எக்ஸ்பிரஸில் உங்களுக்கு உயிரானவர் செல்ல நேர்ந்திருந்தால் கூட அவர் பாடும் அரசியல் துதிகளையும் மீறி அவரது இசையை ரசிப்பீர்களா?
நம் மாநிலம் இருக்கும் இருப்புக்கு ஸ்பெயின் நாட்டு ஆர்வலர்களை நோக்கி இதையும் கேட்க முடியாது. ஆளை முந்திக்கொண்டு உறவினர்களே பலியானவர்களின் புகைப்படங்களுக்கு முன்பாக நின்று விசிலை ஊதித் தள்ளுகிறார்கள். இசையரசராவது கலைக்குக் குந்தகம் செய்யாமல் தனது இயல்பின் மூலம்தான் வெறுப்பை உண்டாக்குவார். பிணநாயகனோ கலை என்னும் பெயரில் கருமாந்திரமாக எதையாவது கிண்டித் தந்து கலைச்சேவை(!?) புரிபவர்.
“இரவல் வெளிச்சம் நீ; இரவின் கண்ணீர் நீ; எனது வானம் நீ; இழந்த சிறகும் நீ; நான் தூக்கி வளர்த்த துயரம் நீ…” – ஒவ்வொரு தடவையும் கேட்கும்போதெல்லாம் சிலிர்த்துப்போய் சில்லறையை விட்டெறிந்திருக்கிறேன். “நாங்கள் மீன்களை உண்பதுமில்லை கொல்வதுமில்லை” – தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கும்போது இவ்வாறாக வலைபாய்ந்து சக உயிரை மயிராக மதித்துத் தனது சின்னத்தனத்தை வெளிப்படுத்திய அந்தப் பாடகியின் எந்தப் பாடலையும் அதன் பிறகு ரசிக்க முடியவில்லை. தனது மீனவத் தந்தையை அவ்வாறாகப் பலிகொடுத்த ஒரு குழந்தைக்கு இக்குரல் ரசிக்காததுதானே? ஆண்டுகள் பல உருண்டோடி விட்டாலும் இப்போதும் தனது selective பாப்கார்ன் feminism மூலம் தனது குரலை மொத்தமாக வெறுக்க வைக்கிறார். அப்பாடலாசிரியர் மீதான பாலியல் குற்றங்கள் வேறு. மொத்தமாக ஒரு நல்ல பாட்டைக் குழிதோண்டிப் புதைத்த பெருமை இவ்விருவரையும் சாரும்.
நடன சிகாமணி(!) ஒருவர்…. ஒருவன் போக்சோ சட்டத்தில் கைதுசெய்யப்பட்டான். அவன் நடனம் அமைத்த பாடல்களையும் கலைநயத்தையும் அவனது குற்றத்தைத் தாண்டி ரசிக்கும் பக்குவம் பெற்ற பாக்கியசாலிகள்(!) அக்குழந்தைக்குத் துரோகம் இழைப்பவர்கள் அல்லவோ? அந்தப் பொறுக்கியின் கலையை ரசித்தல் அக்குழந்தையின் உணர்வுகளைப் பரிகசிப்பதற்குச் சமம். இங்கு தவறு இழைத்தவனும் ரசிகர்களும் என்றிருக்கும் நேரடிச் சமன்பாடு இசையரசரின் விஷயத்தில் குற்றவாளியை ஆதரிப்பவரும் அவரது ரசிகர்களும் என்றிருக்கிறது. அவ்வளவே! நேரடியாகக் குற்றம் செய்தவனாக இருந்தால் என்ன? குற்றம் செய்தவனை ஆதரிப்பவனாக இருந்தால் என்ன? குற்றச்செயல்கள் பெரிதாக உறுத்தவில்லை என்ற அளவில் இரண்டும் ஒன்றுதானே?
***
இப்போது மிக இயல்பாக அனைவருள்ளும் தோன்றும் ஒரு விஷயம் : “அவன் ஒரு குற்றவாளிதான் / அவன் குற்றவாளியை ஆதரிக்கிறான்தான். ஆனால்….. ‘ஆனால்…..’ அந்த அற்புதப்(!) படைப்புகள் அவனிடம் இருந்துதானே வெளிப்பட்டன? அதற்கென்ன செய்ய முடியும்? கலையைக் கலையாகப் பார்க்க வேண்டும்! கொலையாக அல்ல!” என்கிற ரீதியில் மூளை ஏதேனும் பொருத்தமற்ற சமாதானம் ஒன்றைத் தூக்கிக்கொண்டு வரும். தீயவர்களின்/தீயவர்களை ஆதரிப்பவர்களின் கலைப்படைப்புகள் ரத்தத்திலும் வலியிலும் தோய்த்தெடுக்கப்பட்டவை என்பதை நம் அகக்கண்ணால் இனங்காண முடியவில்லை எனில் அக்கொடியவர்களின் வக்கிரம்/வன்மம் நம்மையும் முழுமையாக ஆட்கொண்டு விட்டது.
“இப்படியெல்லாம் மனிதர்களைக் கழித்துக் கட்டிக் கொண்டே சென்றால் யார்தான் மிஞ்சுவார்கள்?” எனக் கேட்டால் “சுற்றிலும் குப்பைகூளமாக இருக்கிறது. ஆனால் பசிக்கிறது. வேறு வழியில்லை என குப்பையையா அள்ளித் தின்ன முடியும்?” என்ற என் எதிர்க்கேள்வியே பதில்.
எண்ணிக்கையை விடத் தரம் முக்கியம்! ‘ஆனால்…’ என்ற பதம் தேவையே படாத (எனக்கு ஏற்கெனவே பிடித்த) நஸ்ருதீன் ஷா, பிரகாஷ் ராஜ், ஜாவேத் அக்தர், ஷபானா ஆஸ்மி போன்ற உறுதியான முதுகெலும்பு வாய்க்கப்பெற்றவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்? இவ்வாறாக எஞ்சி மிஞ்சுபவர்கள் போதும்.
***
இந்த ‘ஆனால்…’ இவ்வளவு அபாயகரமான இளிவரலான வார்த்தையாக இருக்க முடியும் என்று நினைத்துக்கூடப் பார்த்ததில்லை. ‘அருமை!’, ‘அற்புதம்!’ போன்ற வார்த்தைகளைக் கொள்கைப் பிறழ்வுடன் திரிபவர்களுக்குச் சாற்ற முனையும்போது தடுக்கும் இடைவெளியை நிரப்பும் சொல்லாக ‘ஆனால்…’ பயன்படுத்தப்படுகிறது. நேரடியாகப் பாதிக்கப்பட்டால்தான் இந்நுண்ணுணர்வு புரிய வேண்டும் என்பதில்லை. பாதிக்கப்பட்டவர்களின் இடத்தில் இருந்து குறைந்தபட்ச பச்சாதாபத்தோடு பார்த்தல் கூட இச்சொல்லைத் தூக்கி எறிய உதவும்.
இவ்வார்த்தையின் சரியான பயன்பாட்டை நான் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன்.
“அவன் கலையுலகில் எப்பேர்ப்பட்டவனாகவும் இருக்கட்டும். ஆனால் அறமற்றவன்!”
- சோம.அழகு