தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சற்றேறக்குறைய 85% வாக்குப்பதிவு என்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை. ஆளுங்கட்சிக்கு எதிரான அலை வீசாதபோது எப்படி இவ்வளவு வாக்குப் பதிவு ?
SIR-ன் மிக முக்கியத் தாக்கம், நீண்ட காலமாகப் பட்டியலில் இருந்த 'போலியான' அல்லது 'இறந்த' வாக்காளர்களை நீக்கியதாகும். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 74 லட்சம் தகுதியற்ற பெயர்கள் (இறந்தவர்கள், இடம் மாறியவர்கள் மற்றும் இரட்டைப் பதிவுகள்) கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன. இதனால் 2021 இல் 6.41 கோடியாக இருந்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2026 இல் 5.67 கோடியாகக் குறைந்துள்ளது. எண்ணிக்கை குறைந்தாலும், வாக்குப்பதிவு சதவீதம் (Turnout Percentage) இயல்பாகவே கணிசமாக உயர்ந்தது.
ஏதோ விஜயின் வருகையால் மாற்றத்திற்காக வாக்குப்பதிவு அதிகரித்தது போல் பரப்பப்படும் செய்திகளில் உண்மை இல்லை.
2021 தேர்தலை விட சுமார் 20,00,000 வாக்குகள் கூடுதலாக பதிவாகி இருக்கிறது! இதில் 14 லட்சம் முதல் முறை வாக்காளர்கள், சராசரியாக தொகுதிக்கு சுமார்8,000 வாக்குகள் கூடுதலாகப் பதிவாகியிருக்கிறது அவ்வளவே.
ஆனால், இவையெல்லாவற்றையும் விட, தற்போதைய அரசின் செயல்பாடுகள், வேலைவாய்ப்பு, கல்வி மேம்பாடு, விளிம்பு நிலை மக்கள் முன்னேற்றம், தொழில் வளர்ச்சி, வீட்டுக்கு ஒரு பயனாளி, உள்கட்டமைப்பு மற்றும் எதிர்காலப் பொருளாதாரம் குறித்த திட்டங்கள் வாக்காளர்களிடையே ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்கத் தூண்டியதும் அதிகப்படியான வாக்குப்பதிவிற்கு ஒரு பெரிய காரணியாக அமைந்துள்ளது.
தமிழக தேர்தல் களம் பலமுனைப் போட்டியில் இருந்தாலும் , திமுகவின் கட்டமைப்பு, பலமான கூட்டணி மற்றும் திராவிட மாடல் அரசின் மக்கள் நலத்திட்டங்கள், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மக்களிடம் ஏற்பட்டுள்ள நம்பிக்கை, திமுகவினரின் களப்பணி ஆகியன திமுக கூட்டணி 50 சதவீதத்தை எட்டுவதற்கு ஒரு வலுவான அடித்தளமாக உள்ளன.
வழக்கமாக திமுகவிற்கு எதிராக விழும் 'Anti-incumbency' வாக்குகள் சிதறாமல் ஒரு எதிர்க்கட்சிக்கு மட்டுமே செல்லும், அது ஆளுங்கட்சிக்கு ஆபத்தாக முடியும். ஆனால் தற்போது அந்த வாக்குகள் அதிமுக, தவெக மற்றும் நாம் தமிழர் என பலமுனைப் போட்டியில் பிரிவது திமுகவிற்குச் சாதகமாகிறது.
விஜயின் வருகையால் திமுக எதிர்ப்பு மற்றும் அதிமுக ஆதரவு வாக்குகளில் ஒரு பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் கோட்டைகளாகக் கருதப்படும் பல இடங்களில், குறிப்பாக இளைஞர்கள், நடுத்தரப் பிரிவினர் மற்றும் நடுநிலை வாக்காளர்கள் மத்தியில் விஜய் ஒரு மாற்றாகப் பார்க்கப்படுகிறார். இது அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியில் ஒரு பகுதியை சிதைத்துள்ளது கண்கூடாகத் தெரிகிறது. மேலும், திமுக எதிர்ப்பு வாக்காளர்கள் , எடப்பாடியை விட ஒரு வலுவான எதிர்க்கட்சியைத் தேடும் நிலையில், விஜய் களத்தில் இருப்பதால், அந்த வாக்குகள் முழுமையாக அதிமுகவிற்குச் செல்லாமல் தவெக-விற்குப் பிரிகிறது. இது திமுகவின் வெற்றி வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்கிறது.
இது மட்டுமல்லாமல், ஒன்றிய பாஜகவின் மிரட்டல்களுக்கு அடிபணியாமல், மாநில உரிமைகளை அடகு வைக்காமல் , மக்கள்நலத் திட்டங்களை மிகச் சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக முதலவர் ஸ்டாலினின் ஆளுமைத்திறனும் பெருவாரியான அரசியல் புரிந்த வாக்காளர்களைத் திமுகவிற்கு ஆதரவாக வாக்களிக்க வைத்துள்ளது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது 50 சதவீத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மீண்டும் திமுக அபார வெற்றி பெறும் என்பது தெளிவாகப் புரிகிறது.
- முனைவர் காந்தி பாபு