விஞ்ஞான வளர்ச்சியில் சந்திர மண்டலத்தில் வாழ தயாரான மனிதனுக்கு "கொரோனா" பெரும் பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. உயர்ந்தவன் - தாழ்ந்தவன், பணக்காரன் - ஏழை, முதலாளி - தொழிலாளி, ஆண் - பெண், கருப்பு - வெள்ளை எனப் பாகுபாடுகள் நிறைந்து புரையோடிக் கிடக்கும் நம் சமூகத்தில் கண்ணுக்குத் தெரியாத கொரோனா (கோவிட்-19) என்றொரு கிருமி நமது சமூகத்தினை தலைகீழாகப் புரட்டிப் போட்டுள்ளது.

கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் ஒட்டுமொத்த உலகமும் போராடி வரும் நிலையில் நம் சமுகத்தில் நிலவி வரும் சாதி மட்டும் கொரோனா என்ற கொள்ளை நோயைக் கடந்து சக மனிதர்களை வன்கொடுமையால் கொன்று புதைக்கின்றது. கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்க தனி மனித சமூக விலகல் நடைமுறையில் இருக்கும் காலகட்டத்தில் தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மட்டும் தினம், தினம் நடந்தேறிக் கொண்டே உள்ளது.

சம்பவம்-1

25.03.2020 அன்று சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் தூய்மைப் பணியாளரை அப்பகுதியைச் சார்ந்த ஆதிக்க சாதியினர் சிலர் அதிக நேரம் பணி செய்யக் கூறி வற்புறுத்தியுள்ளனர். பணி செய்ய மறுத்ததால் பெண் தூய்மைப் பணியாளரை ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிலர் சாதியை இழிவுபடுத்திப் பேசி, தாக்கியுள்ளார்கள். இச்செய்தி பல்வேறு தொலைக்காட்சிகளில் வெளிவந்த நிலையிலும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை.

சம்பவம்-2

25.03.2020 அன்று திருவண்ணாமலை மாவட்டம், சூரியந்தாங்கல் கிராமத்தில் அரசு பொது இடத்தில் வசித்து வந்த தலித் மக்களுக்குச் சொந்தமான 10 வீடுகளை ஆதிக்க சாதியைச் சார்ந்தவர்கள் JCP எந்திரம் மூலம் இடித்துத் தள்ளி உள்ளனர். மேலும் சாதி ரீதியாக இழிவுபடுத்திப் பேசியும், தலித்துகளுக்கு சொந்தமான இரு சக்கர வாகனங்களைத் திருடியும் சென்றுள்ளனர். இதுகுறித்து கீழ் வெட்டவலம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம்-3

26.3.2020 அன்று விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நெல்லூர் கிராமத்தில் உள்ள பொதுக் குளத்தில் தலித்துகள் மீன் பிடித்ததால் ஆதிக்க சாதியினர் சாதி ரீதியாக இழிவுபடுத்தி, தலித்துகளை அடித்து விரட்டி உள்ளார்கள்.

சம்பவம்-4

28.03.2020 அன்று தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகாவில் அமைந்துள்ள தோப்பு துறை பகுதியில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ராஜதுரை என்பவர் படுகொலை செய்யப் பட்டார்.

சம்பவம்-5

29.03.2020 அன்று திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா மொரப்பதாங்கல் கிராமத்தில் ஒட்டர் சமூகத்தைச் சார்ந்த சுதாகர் என்ற இளைஞர் ஆதிக்க சாதியினரால் மிகக் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சுதாகரும் மாற்று சமூகத்தைச் சார்ந்த பரிமளா என்கிற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த பரிமளாவின் அப்பா மூர்த்தியும், உறவினர் ஜெயக்குமாரும் கீழ் சாதியைச் சேர்ந்த பையன் எப்படி என் மகளைக் காதலிக்கலாம் என ஆத்திரப்பட்டு, சுதாகரைக் கொலை செய்துள்ளார்கள். கொலையில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகள் காவல் துறையால் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் ரிமாண்ட் செய்யப்பட்டு உள்ளார்கள்.

சம்பவம்-6

30.03.2020 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலூகா ஏ.அத்திப்பாக்கம் கிராமத்தில் தலித் இளைஞரான பாண்டியனை ஆதிக்க சாதியைச் சார்ந்த வெங்கடாசலபதி என்பவர் மின்சாரம் வைத்து கொலை செய்துள்ளார். அதன் பின் முயல் வேட்டையின் போது மின்சாரம் தாக்கி இறந்ததாக கிராமப் பஞ்சாயத்தில் பேசி முடிக்கப் பட்டு, தலித் இளைஞர் பாண்டியன் உடல் எரிக்கப்பட்டது.

சம்பவம்-7

31.03.2020 அன்று திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோக்கவாடி கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் கவுதம பிரியன். தன் சகோதரியின் தோழியான மாற்று சமூகப் பெண்ணிடம் குப்பநத்தம் பேருந்து நிறுத்தம் அருகில் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது பணி முடித்து அவ்வழியாக வந்த ஆதிக்க சாதியைச் சார்ந்த சீருடை அணியாத காவலர் ஈஸ்வரன் அம்பேத்கர் பனியன் அணிந்திருந்த கவுதம பிரியனைப் பார்த்ததும், சாதி ரீதியாக இழிவுபடுத்திப் பேசியும் கடுமையாக அடித்தும் சித்ரவதை செய்துள்ளார். இதன் பின் பல்வேறு இயக்கங்களின் போராட்டத்திற்குப் பின்பு வன்கொடுமையில் ஈடுபட்ட காவலர் ஈஸ்வரன் மீது எஸ்.சி/ எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2015 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

சம்பவம்-8

5.04.2020 அன்று கடலூர் மாவட்டம் கொரக்கவாடி ஊராட்சி மன்றத் தலைவர் நடராஜன் மற்றும் அவரது தம்பி சக்திவேல் ஆகிய இருவரும் தலித் மக்களை இழிவு படுத்தும் நோக்கத்தில் சமூக வலைத்தளங்களில் பரப்புரை மேற்கொண்டனர். சமூக ஊடக வன்கொடுமை குறித்து பிரகாஸ் கொடுத்த புகாரின் பெயரில் வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2015 ன்,கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம்-9

06.04.2020 அன்ற புதுக்கோட்டை மாவட்டம், வேப்பன்பட்டி கிராமம் தலித் சமூகத்தைச் சேர்ந்த பாரதிராஜா என்பவர் மாற்று சாதியைச் சேர்ந்த பெண் வீரலட்சுமி என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த வீரலட்சுமியின் பெற்றோர்கள் பாரதிராஜாவையும், அவரது மனைவி வீரலட்சுமியையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டி உள்ளார்கள். இது குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம்-10

11.04.2020 அன்று இரவு 11.00 மணியளவில் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையர் சசிகலா என்பவர் சொரியங் கிணத்துப்பாளையம் தலித் குடியிருப்புக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். மேலும் மாட்டுக்கறி சமைத்தீர்களா? என தலித்துகளின் மாண்புரிமையைப் பறித்து சாதி ரீதியாக இழிவுபடுத்திப் பேசி வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். அதன்பின் தலித்துகள் சமைத்த உணவில் பினாயிலை ஊற்றி உள்ளார். நகராட்சி ஆணையர் சசிகலாவின் இக்கொடூர வன்கொடுமை நடவடிக்கைக்கு எதிராக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

சம்பவம்-11

14.04.2020 அன்று நாமக்கல் மாவட்டம் பிலிப்பாக்குட்டை சமத்துவபுரத்தில் குடியிருந்து வரும் தலித் சமூகத்தைச் சார்ந்த முத்துச்சாமி மகள் அனிதா பொதுப் பைப்பில் தண்ணீர் பிடிக்கச் சென்றுள்ளார் அப்போது எதிர் வீட்டில் வாழும் ஆதிக்க சாதியைச் சார்ந்த சரசுவும் அவரது கணவரும் அனிதாவை சாதி ரீதியாக இழிவுபடுத்திப் பேசி தாக்கி உள்ளனர். வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட அனிதா அயில்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரைப் பெற்ற காவல் துறை தாமதமாக வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படவில்லை.

சம்பவம்-12

14.04.2020 அன்று திருப்பூர் மாநகராட்சியில் துப்புரவுப் பணி செய்து கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு வேண்டுமென்றே குப்பை ஏற்றும் வண்டியில் உணவு எடுத்துக் கொண்டு சென்று கொடுத்துள்ளார்கள். இதனால் தூய்மைப் பணியாளர்கள் சுகாதாரமற்ற உணவை சாப்பிட்டுள்ளனர். நோய்த் தொற்று ஏற்பட்டு மரணத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்ட மாநாகராட்சி ஊழியரகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சம்பவம்-13

20.04.2020 அன்று செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் வடபட்டிணம் கிராமத்தைச் சார்ந்த தலித் இளைஞர் மணிகண்டன்(20) தனது அம்மாவிற்கு மருந்து வாங்கச் சென்றுள்ளார். அப்போது ஊரடங்கு காவல் பணியில் இருந்த காவலர்கள் பிவிசி பைப் வைத்து தாக்கி உள்ளனர். இதனால் மயக்கமடைந்த மணிகண்டனை கூவத்தூர் காவல் நிலையம் தூக்கிச் சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்த மணிகண்டனிடம் துணை ஆய்வாளர் சரவணன் நீ என்ன சாதி என்று கேட்டுள்ளார். இதற்கு மணிகண்டன் தலித் என்று கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த துணை ஆய்வாளர் மீண்டும் தாக்கி உள்ளார். இதனால் மணிகண்டனுக்கு வலிப்பு ஏற்டுள்ளது. உடனே காவலர்கள் மணிகண்டனை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு வடபட்டிணம் கிராமத்தின் அருகே வீசி விட்டுச் சென்றுள்ளனர். தகவல் அறிந்த கிராமத்தினர் மணிகண்டனை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதன் பின் மணிகண்டனின் அம்மா மாவட்ட SPயிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

சம்பவம்-14

20.04.2020 அன்று திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பாச்சர் தண்டா கிராமத்தில் வாழும் தலித் மக்கள் மீது ஆதிக்க சாதியைச் சார்ந்த சுமார் 15 பேர் கொண்ட கும்பல் கொலை வெறித் தாக்குதல் நடத்தி உள்ளது. இச்சம்பவத்தில் 7 தலித்துகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். வன்கொடுமையில் ஈடுபட்டவர்களில் 12 நபர்கள் மட்டும் ரிமாண்ட் செய்யப்பட்டு உள்ளனர். தலித் மக்களின் பயன்பாட்டில் இருந்த நிலத்தை தங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று ஆதிக்க சாதியினர் மிரட்டி வருகின்றார்கள். தலித் மக்களும் உயிருக்குப் பயந்து கொரோனா பாதிப்பு முடிந்த பிறகு எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி உள்ளார்கள்.

சம்பவம்-15

21.04.2020 அன்று, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த முருகானந்தம் மற்றும் மாற்று சமூகத்தைச் சார்ந்த பானுப்பிரியா என்பவரும் கடந்த நான்காண்டுகளாக காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொண்டார்கள். இதனால் ஆத்திரமடைந்த பானுப்பிரியாவின் உறவினர்களான ஆதிக்க சாதியைச் சேர்ந்த15 பேர் கொண்ட கும்பல் தலித் இளைஞர் முருகானந்தத்தை கடுமையாகத் தாக்கி பானுப்பிரியாவை கடத்திச் சென்றனர். காவல் துறையின் தலையீட்டிற்குப் பின்பு கவிதா மீட்கப்பட்டார்.

சம்பவம்-16

22.04.2020 அன்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் உள்ள கோட்டைபட்டி கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் தமிழ்ச் செல்வன் சாதி மறுப்புத் திருமணம் செய்து ஓராண்டு கடந்த நிலையில் சொந்த கிராமத்திற்குத் திரும்பியுள்ளார். இதனை அறிந்த ஆதிக்க சாதியினர் கோட்டைப்பட்டி கிராமம் தலித் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து தலித்துக்களை வெட்டி படுகாயப் படுத்தினர்.

சம்பவம்-17

22.04.2020 அன்று சேலம் மாவட்டம், கோனகபாடி ஊராட்சி மன்றத் தலைவரான தலித் சமூகத்தைச் சேர்ந்த அம்சவள்ளி என்பவரை ஆதிக்க சாதியைச் சார்ந்த மோகன் என்பவர் பணி செய்ய விடாமல் தடுத்து சாதி ரீதியாக இழிவுபடுத்திப் பேசியுள்ளார். இதுகுறித்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம்-18

23.04.2020 அன்று விருதுநகர் மாவட்டம் கன்னிசேரி ஊராட்சி R.C தெரு பகுதியில் குடியிருந்து வரும் தலித் மக்களில் 28 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று பொய்யான தகவலை ஊராட்சி மன்றத் தலைவி ஜெயந்தி பரப்பி உள்ளார். இதனால் தலித் மக்கள் பொதுக் குழாயில் தண்ணீர் எடுக்கக் கூடாது எனத் தடுத்து வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். வன்கொடுமையில் ஈடுபட்ட கன்னிசேரி புதூர் ஊராட்சி மன்றத் தலைவி ஜெயந்தி மீது புகார் கொடுத்ததும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சம்பவம்-19

23.04.2020 அன்று வெளிச்சம் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சார்ந்த நிருபர் ஆதி சுரேஷ் அம்பேத்கர் உருவப் படத்திற்கு சாணி பூசிய ஆதிக்க சாதிவெறிக் கும்பலின் வன்கொடுமை சம்பவத்தை படம் பிடித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்ததிற்காக கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது

சம்பவம்-20

24.04.2020 அன்று திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள அய்யாபட்டி கிராமத்தில் வசிக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த தேவராஜ் (20) மற்றும் ஹரிஹரன் (21)ஆகியோர் ஶ்ரீரங்கம்பட்டி கிராமம் அருகே சென்ற போது, ஆதிக்க சாதியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் (20) உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலால் சாதி ரீதியாக இழிவாகப் பேசி தாக்கப்பட்டுள்ளனர். வன்கொடுமை குறித்து நத்தம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம்-21

25.04.2020 அன்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா கடவச்சேரி கிராமத்தில் வாழ்ந்த தலித் சமூகத்தைச் சார்ந்த நடராஜன் (55) என்பவர் இரவு காவல் பணி செய்து வந்த நிலையில் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டு அம்மாபேட்டை கான்சாகிப் ஓடையோரம் கிடந்தார்.

சம்பவம்-22

27.04.2020 அன்று திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள வேப்பன்காடு கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் வேலைக்குச் சென்றுள்ளனர். முன்பகை காரணமாக ஆதிக்க சாதியைச் சார்ந்த சுபாஷ் தலைமையிலான கும்பல் தலித் இளைஞர்களை மின்கம்பத்தில் கட்டி வைத்து சாதி ரீதியாக இழிவுபடுத்தித் தாக்கியுள்ளது. இதுகுறித்து கூடங்குளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம்-23

28.04.2020 அன்று திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள லிங்கவடி கிராமம் தலித் சமூகத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான மாந்தோப்பில் ஆதிக்க சாதியைச் சார்ந்த சுப்பையா மற்றும் அவருடன் 4 பேர் சேர்ந்து மாங்காயைத் திருடியுள்ளனர். இதுகுறித்து நியாயம் கேட்ட பாலகிருஷ்ணனை சாதி ரீதியாக இழிவுபடுத்திப் பேசி, தாக்கியுள்ளார்கள். வன்கொடுமை குறித்து நத்தம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சம்பவம்-24

2.05.2020 அன்று கன்னியாகுமரி மாவட்டம் ஆனந்தா நகர் காந்தி காலனியில் வசித்த தலித் சமூகத்தைச் சேர்ந்த வினோத் என்பவரை ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஜெனிஸ்டன் என்பவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம்-25

4.05.2020 அன்று திருப்பூர் மாவட்டம் கவுண்டச்சி புதூர் ஊராட்சி மன்ற தலைவரான தலித் சமூகத்தைச் சேர்ந்த செல்வி என்பவர் கொரோனா நோய் தடுப்பது சம்பந்தமாக ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உள்ளார். அப்போது திடீரென உள்ளே வந்த வார்டு உறுப்பினர் ஆதிக்க சாதியைச் சார்ந்த குப்புசாமி என்பவர் என் அனுமதி இல்லாமல் எப்படி கூட்டம் நடத்தலாம் எனக் கேட்டு சாதி ரீதியாக இழிவுபடுத்தி வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தாராபுரம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம்-26

6.05.2020 அன்று ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலூகா நெறிஞ்சிப்பேட்டை பேரூராட்சியில் துப்புரவுப் பணி செய்து கொண்டிருந்த தூய்மைப் பணியாளர் பாலன் (எ) பாலசுப்பிரமணியன் என்பவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்துள்ளார். இறந்து போன தூய்மைப் பணியாளரின் உடலை குப்பை வண்டியில் ஏற்றிச் சென்று அடக்கம் செய்துள்ளார்கள்.

சம்பவம்-27

7.05.2020 அன்று கோவை மாவட்டம் பாரதியார் பல்கலைக்கழகம் இரண்டாவது நுழைவு வாயிலில் குடியிருந்து வரும் தலித் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஈஸ்வரன் தனது வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த வடவள்ளி காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன் என்பவர் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசி லத்தியால் வழக்கறிஞர் ஈஸ்வரனைத் தாக்கி இடது முழங்கையை உடைத்துள்ளார்.

சம்பவம்-28

7.05.2020 அன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் ஆதனூர் பகுதியில் தமிழக அரசால் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. கடையில் மது குடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் தலித் மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் வேகமாக வந்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிலரை மெதுமாக போக சொல்லி உள்ளனர். இதனால் தலித் மக்கள் தாக்கப்பட்டனர். இதில் 4 நபர்கள் காயமடைந்துள்ளனர்.

சம்பவம்-29

7.05.2020 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் தாலூகா தியாகரசனப் பள்ளி கிராமத்தை சார்ந்த தலித் பெண் இராஜேஸ்வரி இரவு சுமார் 7 மணியளவில் இயற்கை உபாதை கழிக்க அருகாமையில் உள்ள தோட்டத்திற்குச் சென்றுள்ளார். அப்போது ஆதிக்க சாதியைச் சார்ந்த மது, இராஜா, ரமேஸ் ஆகியோர் கூட்டாக சேர்ந்து பாலியல் வல்லுறவு செய்துள்ளார்கள்.

சம்பவம்-30

7.05.2020 அன்று புதுக்கோட்டை மாவட்டம் கரம்ப விடுதி கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த மனோகரன் உட்பட மூன்று நபர்களை ஆதிக்க சாதியை சார்ந்த பால்ராஜ் உள்ளிட்ட 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளது. இச் சம்பவம் குறித்து கரம்பக்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம்-31

7.05.2020 அன்று மதுரை மாவட்டம், கீழமாதரை கிராமத்தில் வாழும் தலித் சமூகத்தைச் சார்ந்த வினோத் குமாருடன் சேர்ந்து மேலும் மூன்று நபர்களை ஆதிக்க சாதியைச் சார்ந்த நல்ல மாயன் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் சாதி ரீதியாக இழிவுபடுத்தி பேசித் தாக்கி உள்ளது. இதுகுறித்து உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம்-32

08.05.2020 அன்று தூத்துக்குடி மாவட்டம், உடைகுளம் கிராமத்தில் வசிக்கும் தலித் சமூகத்தைச் சேர்ந்த பலவேசம் என்பவர் ஆதிக்க சாதியைச் சேர்ந்த முத்துராஜ் என்பவரிடம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுப் பத்திரத்தை வைத்து ரூபாய் 40,000 கடன் பெற்றுள்ளார். அதன் பின் பணத்தை திரும்பக் கொடுத்து விட்டு தனது நிலப் பத்திரத்தைக் கேட்டபோது பலவேசம், அவரது மருமகன் தங்கராஜ் ஆகியோரை முத்துராஜ் வெட்டி படுகொலை செய்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம்-33

8.05.2020 அன்று சேலம் மாவட்டம், ஓமலூர் புதுக்கடை காலனியைச் சேர்ந்த தலித் இளைஞர் விஷ்ணுப்பிரியன் என்பவர் வீட்டில் இருந்துள்ளார். தமிழக அரசு டாஸ்மாக் கடையைத் திறந்ததால் குடித்துவிட்டு வந்த ஆதிக்க சாதியைச் சார்ந்த கும்பல் திடீரென புதுக்கடை காலனிக்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்தி உள்ளார்கள். இதில் விஷ்ணுபிரியன் தனது வீட்டின் முன்பே படுகொலை செய்யப்பட்டார். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர். இது குறித்து ஓமலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம்-34

8.05.2020 அன்று கடலூர் மாவட்டம், மே.மாத்தூர் கிராமத்தில் வாழ்ந்த இந்திரா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தலித் மக்களை என்.புதூர் பஞ்சாயத்துத் தலைவரும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த அண்ணாதுரை தலைமையிலான வன்கொடுமைக் கும்பல் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இது குறித்து வேப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம்-35

08.05.2020 அன்று விழுப்புரம் மாவட்டம் அரசூர் பகுதியில் வாழும் தலித் இளைஞர் பாக்கியராஜ் தனது நண்பர் சத்தியராஜ் உடன் காரில் சென்றுள்ளார். இவர்கள் சென்ற காரில் கட்டியிருந்த விடுலைச் சிறுத்தைகள் கட்சி கொடியைப் பார்த்து ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியைச் சார்ந்த அருள் கணேஸ் என்பவர் ஏம்பலம் என்ற இடத்தில் வழிமறித்து காரில் இருந்த கொடியை உடைத்து இருவரையும் சாதி ரீதியாக இழிவுபடுத்திப் பேசி திட்டியுள்ளார்.

சம்பவம்-36

9.05.2020, அன்று விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரில் உள்ள ஒரு பழக்கடையில் தலித் இளைஞர்கள் பழம் வாங்கி உள்ளனர். அப்போது தொட்டிக்குடிசை என்ற ஊரைச் சார்ந்த ஆதிக்க சாதி இளைஞர்கள் சிலர் எங்களுக்குத்தான் முதலில் பழம் தர வேண்டும் எனத் தகராறு செய்துள்ளர்.

சம்பவம்-37

9.05.2020 அன்று விழுப்பும் மாவட்டம் மேல மங்களம் கிராமத்தில் தலித் குடியிருப்புப் பகுதியில் கொரானா தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. இதனால் உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு வழியின்றி தலித் மக்கள் தவித்துள்ளனர். இது குறித்து கேட்டதற்காக ஆதிக்க சாதியினரால் தலித் மக்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம்-38

9.05.2020 அன்று நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டி தலித் சமூகத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் சசிகுமார் என்பவர் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த ஆதிக்க சாதியைச் சார்ந்த கோபிநாத் தலைமையிலான கும்பல் சாதி ரீதியாக இழிவுபடுத்திப் பேசி கொடூரமாகத் தாக்கி உள்ளது. இச்சம்பவம் குறித்து நாமக்கல் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம்-39

10.05.2020 அன்று விழுப்புரம் மாவட்டம் சங்காரபுரம் தாலூகா கலிப்பட்டு கிராமத்தைச் சார்ந்த கண்ணன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலாளராக உள்ளார். வயலுக்குச் சென்று வரும் போது இவரை ஆதிக்க சாதியைச் சார்ந்த சிலர் வெட்ட முயன்றுள்ளனர்.

சம்பவம்-40

12.05.2020, கோயம்புத்தூர் மாவட்டம் சோமனூரில் கே.சி.ஆர் மில் செயல்பட்டு வருகின்றது. இதில் ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த பழங்குடி சமூகப் பெண்கள் சுமார் 200 பேர் மில் உள்ளேயே தங்கி வேலை செய்து வருகின்றார்கள். கொரோனா தனி மனித சமூக இடைவெளிக் காலங்களிலும் பழங்குடி சமூகப் பெண்களை அதிக நேரம் வேலை செய்ய நிர்பந்தம் செய்துள்ளார்கள் . மேலும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்ப மறுக்கின்றது மில் நிர்வாகம் .பெண்களுக்கு எதிராக நடந்து வரும் வன்கொடுமை குறித்து ஏ.ஐ.டி.யு.சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

சம்பவம்-41

14.05.2020 அன்று திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலூகா பழங்கரை ஊராட்சி தேவம்பாளையம் பகுதியில் வாழ்ந்து வரும் தலித் சமூகத்தைச் சார்ந்த லோகநாதன் (25) என்பவருக்குச் சொந்தமான ஆடு, அருகில் உள்ள ஆதிக்க சாதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் தோட்டத்திற்குள் நுழைந்துள்ளது. இதனால் ஆட்டை தேடிச் சென்ற லோகநாதனை (25) மூர்த்தி என்பவரின் மகன் சாதி ரீதியாக இழிவுபடுத்திப் பேசி தாக்க முயன்றுள்ளார். மேலும் ஊர்ப் பஞ்சாயத்தில் வலுக்கட்டாயமாக மன்னிப்பும் கேட்க வைத்துள்ளார். தனக்கு நடந்த வன்கொடுமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி அவினாசி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். காவல் நிலையத்தார் நடவடிக்கை எடுக்காததால், மாவட்ட SPயிடம் புகார் கொடுத்த பின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம்-42

19.5.2020 அன்று கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியில் தலித் சமூக சிறுவர்கள் பொதுக் குழாயில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது முத்தரையர் சங்கத்தைச் சார்ந்த வேல்முருகன் சிறுவர்களைத் தாக்கி உள்ளார். குழந்தைகள் மீது நடந்த வன்கொடுமை குறித்து கேட்டததற்காக தலித் மக்களையும் தாக்கி உள்ளனர். மேலும் பொதுப் பயன்பாட்டினை பயன்படுத்தக் கூடாது என சமூகத் தடையும் செய்துள்ளனர்.

சம்பவம் -43

21.05.2020 அன்று கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியில் அமைந்திருந்த, தலித் மக்களால் போற்றுதற்குரிய தலைவரான டாக்டர் அம்பேத்கர் சிலை அவமானப் படுத்தப்பட்டது.

சம்பவம்-44

24.05.2020 அன்று கரூர் மாவட்டம் பூலாம் பாளையம் ஏழு கன்னிமார் கோவிலில் நடைபெறும் திருமணத்தில் தமிழக அமைச்சர் MR.பாஸ்கர் பங்கேற்பு செய்தால் அதிகமான மக்கள் திரள்வார்கள், இதனால் கொரோனா தொற்று பரவும் என வெளிச்சம் டிவி செய்தியாளர் S. கண்ணன் என்பவர் கரூர் S.P பாண்டியராஜன் அவர்களுக்கு புகார் கொடுத்துள்ளார். இதனால் திருமண நிகழ்வில் பங்கேற்க முடியாமல் போன அமைச்சர் MR. பாஸ்கரன் ஆத்திரமடைந்து, தனது அடியாட்களோடு சென்று செய்தியாளர் S. கண்ணன் வீட்டினை உடைத்து சாதி ரீதியாக இழிவுபடுத்தியும் பேசி உள்ளார். நடந்த வன்கொடுமை குறித்து புகார் கொடுத்தும் காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சம்பவம்-45 

27.05.20220 அன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலூகாவில் அமைந்துள்ள வடகம்பட்டி கிராமத்தைச் சார்ந்த தலித் சமூக இளைஞர் சிவன் ராஜா (35) என்பவர் வடகம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் உட்கார்ந்து செல்போனில் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அவ்விடத்திற்கு வந்த ஆதிக்க சாதியைச் சார்ந்த குத்துப்புலி (எ) வினோத்குமார் மற்றும் நான்கு பேர் சேர்ந்த கும்பல் எங்களுக்கு முன்பாக நீ உட்காந்து பேசலாமா? என்று கேட்டு கல்லால் அடித்து மண்டையை உடைத்துள்ளனர்.

கொரோனா தொற்று சக மனிதனுக்கு பரவாமல் தடுக்கும் நோக்கத்தில் அறிவிக்கப்பட்ட தனிமனித சமுக இடைவெளி காலத்திலும் தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறைந்தபாடில்லை. மேலும் பலரும் அறியாத வன்கொடுமைகள் நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடத்திலும் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. இதற்கு குறிப்பிட்ட வர்க்கத்தைச் சார்ந்தவர்களின் சமூக மூலதனமும் வலைப்பின்னல்களும் உள்ளது. இதனால் நாம் வாழும் சமூகத்தில் நாகரிகத்தின் நாற்றங்கால்களைத் தேட வேண்டி உள்ளது.

நமது சமூகத்தில் வன்கொடுமைகள் மேலோங்கி வரும் தருணத்தில் நமது அரசின் நிலையோ சமயத்தின் பெயரில் சாதியக் கட்டமைப்புகளை ஊக்குவித்தும் பாதுகாப்பதுமாக உள்ளது. தமிழகத்தில் தலித் மக்களின் வாழ்வுரிமைக்கு பாதுகாப்பற்ற நிலைதான் நீடிக்கின்றது. குறிப்பாக வன்கொடுமைகளை தடுப்பதற்கான நோக்கத்தில் வருடத்திற்கு இரண்டு முறை முதல்வர் தலைமையில் நடைபெற வேண்டிய 'விழிகண்' கூட்டம் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறவில்லை.

தலித் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக செயல்பட வேண்டிய மாநிலப் பட்டியல் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தமிழகத்தில் இதுவரை அமைக்கப்படவில்லை. மேலும் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக தேசியக் குற்ற ஆவண மையம் அறிவித்துள்ளது. ஆதிக்க சாதியினரால் நிகழத்தப்படும் ஆணவக் கொலைகளும் அதிகரித்துள்ளன. இதைத் தடுப்பதற்காக சிறப்பு சட்டங்களை உருவாக்க அரசு முன் வரவில்லை என்பதும், வழக்கு பதிவு செய்வதற்கே தலித் மக்கள் பெரும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதுதான் வேதனையிலும் வேதனை.

- இ.ஆசிர், மக்கள் கண்காணிப்பகம்

Pin It