சில நாட்களுக்கு முன்னால் “தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், எந்த சூழலிலும் எந்த மாநிலத்திலும் முதலமைச்சராக வர முடியாது. மாயாவதி உத்தரப் பிரதேச முதல்வரானது ஒரு விதிவிலக்கு. மாநில அரசில் தலித் ஒருவர் முதலமைச்சராக வரக்கூடிய சூழல் இங்கே இல்லை" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியது தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியது.
அவர் பேசியதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் தலித்துகள் மட்டுமே இந்தியாவில் அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்கும் தீர்மானகரமான சக்திகளாக இருக்கின்றார்களா என்பதையும், தலித் என்ற ஒரே வார்த்தையால் பட்டியல் சமூகத்தைக் குறித்தாலும் அவர்களுக்குள் ஓர் அரசியல் சக்தியாக ஒன்றுபடும் ஒற்றுமை இருக்கின்றதா என்பதையும் சீர்தூக்கிப் பார்க்காமல் அவர் பேசி இருக்கின்றார்.
2011 ஆண்டு கணக்கெடிப்பின்படி நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்களின் எண்ணிக்கை 20 கோடியாகும். அதாவது மொத்த மக்கள் தொகையில் 16.6%.
மொத்தமுள்ள தலித் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உத்தரப் பிரதேசம் (20.5%), மேற்கு வங்கம் (10.7%), பிகார் (8.2%), மற்றும் தமிழகத்தில் (7.2%) தான் வசிக்கின்றனர்
மாநில அளவிலான மக்கள் தொகையில் பஞ்சாபில் மொத்த மக்கள் தொகையில் 31.9 சதவீதத்தினர் தலித் மக்களாவர். மேற்கு வங்கத்தில் 23.5 சதவீதமும் ஹிமாச்சலப் பிரதேசத்தில் 25.2 சதவீதத்தினரும், தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதத்தினரும் தலித் மக்களாவர்.
ஆனால் இவர்கள் அனைவரும் ஒரே சாதியையோ, ஒரே பண்பாட்டையோ கடைபிடிக்கும் மக்கள் கிடையாது.
இந்திய அளவில் 1,108 பட்டியல் சாதிகளும் தமிழ்நாட்டில் மட்டும் 76 பட்டியல் சாதிகளும் உள்ளன. அதில் ஒரு சாதிதான் பறையர் சாதி.
நிலைமை இப்படி இருக்கும் போது திருமா மாநில முதலமைச்சராக ஒரு தலித் வர முடியாது என பேசுவது என்ன அர்த்தத்தில்?
இன்று ஸ்டாலின் மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கின்றார். அவர் என்ன எண்ணிக்கை பெரும்பான்மை சாதியில் இருந்து வந்தவரா?
இன்னும் ஒரு வார்டு நெம்பராகக் கூட வர முடியாத எத்தனையோ சாதிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. சமூக அரசியல் பொருளாதார நிலையில் இன்னும் கீழ்மட்டத்தில் உள்ள எத்தனையோ சாதிகள் இருக்கின்றன.
நிலைமை இப்படி பட்டவர்த்தனமாக இருக்கும் போது திருமா எந்த நோக்கத்தில் இப்படி பேசுகின்றார்?. அதையும் எங்கே நின்று கொண்டு பேசுகின்றார்?
பட்டியலினப் பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளதாக, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதன்மூலம், தமிழ்நாட்டில் அருந்ததியின சமூகத்துக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கும் 2009-ஆம் ஆண்டு சட்டத்துக்கு அங்கீகாரம் கிடைத்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில்தான் திருமா இப்படி பேசியிருக்கின்றார்.
மேலும் உச்சநீதி மன்ற தீர்ப்பு "பட்டியலின சமூகத்தினரின் இடஒதுக்கீட்டு உரிமையை நசுக்குவதாகவும்", "பட்டியல் சமூகத்தினரின் இடஒதுக்கீட்டு அளவை அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்க வேண்டும்" என்றும் பேசி இருக்கின்றார்.
தமிழ்நாட்டைப் பொருத்த அளவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30% இட ஒதுக்கீடும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20% இட ஒதுக்கீடும், பட்டியல் சாதியினருக்கு 18%, பட்டியல் பழங்குடியினர்களுக்கு 1% என மொத்தம் 69% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதம் தலித்துகள் உள்ளபோது 18 இட ஒதுக்கீடு சரியானதே என்பது திருமாவளவனுக்குத் தெரியாதது அல்ல.
ஆனால் அவரின் பிரச்சினை அந்த 18 சதவீதத்தில் 3 சதவீதம் அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதுதான். ஆனால் பட்டியல் சமூகத்தினரின் இடஒதுக்கீட்டு அளவை அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒதுக்க வேண்டும் என்ற திருமா அவர்களின் கோரிக்கை படியே பார்த்தால் கூட, அருந்ததிய மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப 5.5 சதவீதம் வழங்க வேண்டி இருக்கும். ஆனால் வழங்கப்படுவதோ வெறும் 3.0 சதவீதம்தான்.
திருமா தன்னை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்குமான கட்சித் தலைவராகவும் உணரவில்லை, குறைந்த பட்சம் தமிழ்நாட்டில் உள்ள தலித்துகளின் தலைவராகக் கூட உணர முடியவில்லை என்பதைத்தான் அவரது எதிர்ப்பு காட்டுகின்றது.
திருமா நடத்திய ஆர்ப்பாட்டம் அவரை பறையர்சாதி கட்சித் தலைவர் என்பதாக மட்டுமே கட்டமைக்க உதவும். அவரும் அதைத்தான் ஓட்டுவங்கி அரசியலுக்காக தற்போது செய்து கொண்டு இருக்கின்றார்.
தமிழ்நாட்டில் பள்ளர், பறையர், சக்கிலியர் போன்றோர் பெரும்பான்மை தலித்துகளாக இருந்தாலும் பள்ளரையும், பறையரையும் ஒப்பிடும் போது மிக மோசமான தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சமூகமாக சக்கிலியர்கள் இருந்து வருகின்றார்கள்.
இவர்கள் சூத்திர சாதி மக்களால் எந்தளவிற்கு தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றார்களோ அதற்கு எந்த வகையிலும் சளைத்தது அல்ல பள்ளர், பறையர் போன்ற தலித் சாதிகளால் உள்ளாக்கப்படுவது.
சக்கிலியர் வீட்டில் பறையரோ, பள்ளரோ பெண்கொடுத்து பெண் எடுப்பதில்லை. இவர்கள் வாழும் பகுதியில் உள்ள கோயிலில் நுழைவதற்கு அனுமதிப்பதில்லை. சக்கிலியர் வீட்டு நாய் கூட பறையர் தெருவில் வருவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
அந்தளவிற்கு சாதிவெறி இவர்களுக்குள்ளாகவே இருக்கின்றது. அதனால்தான் தலித் ஒற்றுமை, தலித் அரசியல் எல்லாம் தோல்வியுற்ற வெற்று முழக்கமாகவே இருக்கின்றது.
தலித்துகளுக்கு மத்தியிலேயே ஒற்றுமையை ஏற்படுத்த முடியாத திருமா, மாநில முதலமைச்சராக ஒரு தலித் வரமுடியாது என்று சொல்வது எவ்வளவு பெரிய கேலிக்கூத்து.
திருமா பேசுவது அப்பட்டமான அடையாள அரசியல். ரவிக்குமார் போன்ற பின்நவீனத்துவ அடையாள அரசியல் நபர்களின் செல்வாக்கு திருமாவிடம் அதிகமாக தற்போது வெளிப்பட்டு வருகின்றது.
மாநில முதலமைச்சராக ஒரு தலித் வர முடியாது என்று சொல்லும் திருமா, இத்தனை ஆண்டுகளாக எம்பியாக இருந்து தலித் மக்களுக்கு என்ன செய்தார் என்று நாம் கேள்வி எழுப்பினால் என்ன பதில் சொல்வார்?
மேலும் 18 சதவீதம் போக மீதமுள்ள 82 சதவீத மக்களிடம் திருமா இதுவரை என்ன அரசியலைப் பேசி அவர்களை வென்றெடுக்க முயற்சி செய்திருக்கின்றார்?.
ஒரு தலித் முதலமைச்சர் ஆனால் தலித் மக்களின் பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிடும் என்பதே அப்பட்டமான அடையாள அரசியல் ஆகும். உத்திரப் பிரதேச மக்கள் மாயாவதியைத் தூக்கி எறிந்த்தற்கு என்ன காரணம் என்று திருமா வெளிப்படையாகப் பேசுவாரா?.
சுயசாதி அடையாள அரசியலை முன்னெடுப்பதை விட்டுவிட்டு இன்றும் மிக மோசமான சமூக சூழலில் வாழும் சக்கிலியர் சாதி மக்களுக்கு எதாவது உருப்படியாக செய்ய முடிந்தால் அதை திருமா செய்ய வேண்டும்.
எதுவுமே செய்ய மனமில்லை என்றால் ஏற்கெனவே அந்த மக்களுக்கு அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இல்லாமல் மிகக் குறைவாக கொடுக்கப்படும் இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டும் வேலையை செய்யாமலாவது இருக்க வேண்டும்.
- செ.கார்கி