அமெரிக்காவின் நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் 24-01-2023 அன்று வெளியிட்ட அறிக்கையால், கவுதம் அதானி குழுமத்தின் ஊழல் உள்ளிட்ட தில்லு முல்லுகள் உலகத்தின் கவனத்தை ஈர்த்தன.

உலகப் பணக்காரர் வரிசையில் மூன்றாம் இடத்தில் இருந்த அவர் 32 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டார். அதானியின் அசுர தொழில் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிப்பவர் மோடி. இது இந்திய ஒன்றியத்தின் பிரச்சனை என்பதால் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் முயன்றன.

நியாயமான, ஜனநாயகப் பூர்வமான இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதை விட்டுவிட்டு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் “இராகுல் காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று குரலை உயர்த்தி விட்டார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், இந்திய வம்சாவளி மாணவர்களிடையே இந்தியாவில் ஜனநாயகம் படும் பாட்டை, அதுவும் லண்டனில் போய் பேசி விட்டாராம். அமெரிக்கா, சீனா, தென் கொரியா போன்ற நாடுகளில் மோடியும் இதே பாணியில் தானே பேசினார்!

பிரச்சனை அதுவல்ல. மோடியின் நண்பர் அதானி குழும ஊழல்கள் பற்றிப் பேசினால் பலப்பல உண்மைகள் மக்கள் மத்தியில் வந்து விடும்.

அதானி குழுமம் குறித்து நாடாளுமன்றத்தில் பேச இடமில்லை என்றும் சொன்னார்கள். அப்படியானால் ஹர்சத் மேத்தா பற்றிப் பேச மட்டும் முன்பு இடம் இருந்ததா?

ரம்மி சூதாட்டம் தடை குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதை ஆளும் தரப்பு எப்படி விரும்பவில்லையோ, அப்படியே அதானி குழும ஊழல் குறித்துப் பேசவும் விரும்பவில்லை. ஏனெனில் இரண்டும் ஒன்று தான்.

ஆளும் தரப்பு எதிர்க் கட்சிகளின் கேள்விகளுக்கு விளக்கம் தர வேண்டும், விவாதங்களை முன்னெடுக்க அனுமதிக்க வேண்டும்.

மாறாகக் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்துவது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல. இதுபோன்ற ஜனநாயகத்தைத் தானே ராகுல் லண்டனில் பேசினார்.

நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் எப்படி இருக்கிறது? மக்கள் பணம் வீணாவதில் போய் நிற்கிறது.

- கருஞ்சட்டைத் தமிழர்