நான் சில வருடங்களுக்கு முன்பு மருத்துவத்திற்காக சென்னையில் தங்கியிருந்தபொழுது, “கருத்தியல் தலைவர் திருமா” என்ற பதாகையைப் பார்த்து இந்த சொல்லாடலுக்கு “எழுச்சித் தமிழர் பொருத்தமானவரா?" என்ற கேள்வியை எழுப்பி, என்னுடைய வாதத்தை வைத்து தமிழ் நாட்டின் கருத்தியல் தலைவராக ஏற்றுக் கொள்வோம் என்று ஒரு கட்டுரையை கீற்று வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தேன்.

கடந்த மூன்று தினங்களாக விடுதலை சிறுத்தைகளின் திருச்சி மாநாட்டினைக் கவனித்த பிறகு, திருமா தமிழ் நாட்டிற்கு மட்டுமல்ல, இன்றைய சூழலில் இந்தியத் துணைக் கண்டத்திற்கே கருத்தியல் தலைமை ஏற்கும் தகுதியையும், பக்குவத்தையும் பெற்றிருக்கிறார் என்பதை உணர முடிகிறது.

குறிப்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இந்தியாவில் தற்போது சரிந்து வரும் சனநாயகம், சமூக நீதி, சமதர்மம், சுதந்திரம் ஆகிய விழுமியங்கள் நொறுங்கி வருவதை மீட்கவும், இன்றைய மய்ய ஆட்சியை நீக்குவது மட்டுமின்றி புதிய ஆட்சி மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் என்ன என்பவை பற்றியும் விவரிப்பதாக அமைந்துள்ளது.thirumavalavan at trichy meetingசுருக்கமாகச் சொல்வதானால் பாரதிய சனதா ஆட்சிக்கு எதிராக களம் இறங்கியுள்ள ‘இந்தியா’ கூட்டணி முன் வைக்க வேண்டிய தேர்தல் அறிக்கை என்ன என்பது மட்டுமின்றி, ஆட்சிக்கு வந்த பிறகு ஆற்ற வேண்டிய முக்கிய கடமைகள் என்ன என்பதையும் பட்டியல் இடுவதாக அமைந்திருக்கிறது.

RSS வழி காட்டுதலில் இயங்கும் பா ஜக அரசாங்கம் ஏழை, எளிய சூத்திர மக்களின் வாக்குகளை கவர்வதற்காக வாக்குறுதிகளை அள்ளி வீசி ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.

இனி வரும் தேர்தலில் இவற்றை அம்பலப்படுத்தி உணரச் செய்ய வேண்டியது மக்கள் நல இயக்கங்களின் கடமை.

விலைவாசி உயர்விலிருந்து, வரிவிதிப்புகளிலிருந்து, மாநில ஒன்றிய அரசுகளுக்கிடயே உள்ள பொருளாதாரப் பகிர்வில் உள்ள ஏற்றத் தாழ்விலிருந்து, நீதிமன்றங்களில் மறுக்கப்படும் மொழி உரிமை, தொடர்ந்து தீர்க்கப்படாத தமிழ் ஈழப் பிரச்சினை, மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளாக பழங்குடிகள் மீது தொடுக்கப்பட்டு வரும் இனப்படுகொலை, உலகப் பிரச்சினையாக எழும்பியுள்ள பாலத்தீன மக்கள் மீது இசுரேல் தொடுத்து வரும் இனப்படுகொலை ஆகிய அனைத்திலும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாட்டினை முன் வைப்பதன் மூலம் விசிக ஒரு சர்வதேசப் பார்வையை முன் வைக்கும் அளவிற்கு தம் பார்வையை விரிவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை இந்த மாநாடு மேலும் உறுதி செய்திருக்கிறது. இதுவே, இந்திய அரசியலுக்கு கருத்தியல் தலைமையை தருவதற்கு முக்கிய தகுதியாகும்.

அவ்வகையில், தற்போதுள்ள் அரசாங்கம் செய்ய வேண்டியவை என்ன, இனி வரவிருக்கும் அரசு ஆற்ற வேண்டியவை என்ன என்றும், தாம் சார்ந்துள்ள கூட்டணிக்கே திட்டங்களை வடிவமைத்துக் கொடுப்பதாக அமைந்துள்ளது.

உள்ளூர் ஆட்சியமைப்பு முதல் உச்ச நீதி மன்ற நீதிபதிகள் அமர்வுவரை மறுக்கப்படும் சமூக நீதியை சுட்டிக் காட்டுகிறது.

இதற்கு, சாதிவாரிக் கணக்கெடுப்பு முதல் தேர்தல் அரசியலில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள் வரை ஒவ்வொன்றாகப் பட்டியலிடுகிறது.

ஓட்டு போடும் EVM எந்திரங்களில் மேற்கொள்ள்படும் மைக்ரோ மோசடிகள் முதல் தேர்தலில் மேற்கொள்ள வேண்டிய மேக்ரோ சீர்திருத்தங்களான விகிதாச்சாரப் பிரதிநிதித்துவம் வரை சனநாயகத்தைக் காப்பாற்ற கள ஆய்வின் அடிப்படையின் மூலம் சீர்திருத்தங்களை முன் மொழிகிறது.

ஆகவே, ‘இந்தியா’ கூட்டணிக்கு வழிகாட்டும் கருத்தியல் தலைமையை திருமா நல்கி இருக்கின்றார் என்றுதான் தோன்றுகிறது! இவற்றை கூட்டணி கட்சிகள் பணிவோடு ஏற்றுக் கொள்வதுதான் அவர்களுக்கு நல்லது.

ஏனென்றால், திருமா முன்மொழிந்துள்ள தீர்மானங்கள் ஒடுக்கப்ப்ட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின், சிறுபான்மையினரின் நலன்களை முன் நிறுத்துவதாகவும் அமைந்துள்ளது. இதனை ஏற்றுக் கொண்டால் மட்டுமே ‘இந்தியா’ கூட்டணி வருகின்ற தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய முடியும்.

இது ஓர் அரசியல் பார்வையாளன் என்ற முறையில் எனது கணிப்பு.

- பொன்.சந்திரன்

Pin It