அண்ணல் அம்பேத்கரின் வாழ்வில் மிகவும் முதன்மையாகக் கருதக்கூடிய மூன்று நாட்கள் இருக்கின்றன. அவற்றில் முதலாவது நாள், 1927 டிசம்பர் 21. அன்று, அம்பேத்கர் மநுஸ்மிருதியை தீயிட்டுக் கொளுத்தினார். இரண்டாம் நாள், 1935 அக்டோபர் 13. அன்று, “நான் ஓர் இந்துவாகப் பிறந்து விட்டேன். ஆனால் ஒருபோதும் ஓர் இந்துவாக சாகமாட்டேன்'' என்று அம்பேத்கர் அறிவித்தார். மூன்றாம் நாள், 1956 அக்டோபர் 14. அன்று, அம்பேத்கர் பவுத்தம் தழுவினார்.
அம்பேத்கரின் பிறந்த நாள், மறைந்த நாள் ஆகியவற்றைக் காட்டிலும் இந்த நாட்கள் முதன்மையானவை. ஏனெனில், அவரின் வாழ்க்கைக்கு புதியதும், புரட்சிகரமானதுமான பொருளை இந்த நாட்களில் அவர் செய்த செயல்களே அளித்தன. இந்தியத் துணைக் கண்டத்தில் இருக்கிற தலித் மக்களுக்கு மத மாற்றமும், பவுத்தமும் சாதியின் பிடியிலிருந்து விடுதலை பெறுவதற்கான வழியாக இருக்கின்றன. மதமாற்றம் ஒரு விடுதலைத் தத்துவம்.
சாதியத்தின் அடிப்படையாக இருக்கும் இந்து மதத்தினை விட்டு ஒவ்வொரு தலித்தும் வெளியேற வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். அதற்காக கருத்தியல் அளவில் மக்களையும் தயார் செய்தார். அவர் பவுத்தம் தழுவிய அன்று அவரோடு பத்து லட்சம் தலித் மக்களும் பவுத்தம் தழுவினர். இதற்காக அவர் எடுத்துக் கொண்ட 1935 தொடங்கி 1956 வரையிலான இருபத்தோரு ஆண்டுகள் நெடியவை. விடுதலைச் சிறகினைப் பெறுவதற்கான கூட்டுப்புழு காலம். உருமாற்றத்தின் காலம். இந்தியாவிலிருக்கும் பல்வேறு மதங்களைப் பற்றிய தீவிரமான ஆய்வினை இடைப்பட்ட இக்காலத்தில்தான் அம்பேத்கர் மேற்கொண்டார்.
இந்து மதத்தை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற வெறியும், தலித் மக்களை எப்படியாவது அம்மதத்தின் கொடூரப் பிடியிலிருந்து மீட்டு விட வேண்டும் என்ற தீவிரமும் அவரிடம் இருந்தது. கண்ணெதிரிலே இந்து மதம் என்னும் நச்சுப் பாம்பு தலித்துகளை தாக்கி, அவர்களின் அறிவை சுற்றி நெறித்து, நொறுக்கி, விழுங்கிக் கொண் டிருப்பதை பார்க்கச் சகிக்கவில்லை. அவருள்ளே ஆத்திரமும் கோபமும் எழுந்தது. இந்து மதத்தின் பிடியிலிருந்து வெளியேறி பவுத்தத்தை தழுவுவது தான் விடுதலைக்கான ஒரே வழி என்ற உண்மையை அம்பேத்கர் இறுதியாகக் கண்டடைந்தார். இதற்கே அவருக்கு அத்தனை ஆண்டுகள் பிடித்தன.
இந்து மதத்திலிருந்து வெளியேறு வதாக அவர் அறிவித்தபோது கொலை மிரட்டல்கள் வந்தன. 1935, அக்டோபர் 13 ஆம் நாள் ஒரு ஞாயிற்றுக்கிழமை. அன்றுதான் இயோலா மாநாடு நடைபெற்றது. இரவு பத்து மணிக்குத் தொடங்கிய இம்மாநாட்டில் அம்பேத்கர் பேச வந்தபோது நேரம் பதினொன்றை கடந்திருந்தது. “கெடுவாய்ப்பால் நான் ஓர் இந்துவாகப் பிறந்துவிட்டேன். அதைத் தடுக்கும் ஆற்றல் என்னிடம் இல்லை. அதனால் பல இன்னல்களையும், இழிவுகளையும் நான் சந்தித்தேன். ஆனால் நான் ஓர் இந்துவாக இறக்க மாட்டேன் என்பது மிக உறுதி'' என்று அவர் இடியாய் முழங்கியதை, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தலித் மக்கள் கேட்டுக் கொண்டிருந்தனர். அம்பேத்கர் இவ்வாறு அறிவித்தது இந்துக்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. சாதி இந்து தலைவர்களிடமிருந்து கடும் கண்டனங்கள் வந்தன. சிந்தி இனத்தைச் சேர்ந்த இந்து ஒருவர், இந்து மதத்திலிருந்து அம்பேத்கர் வெளியேறினால் அவரைக் கொலை செய்து விடுவதாக மிரட்டி கடிதம் எழுதினார். அக்கடிதம் ரத்தத்தால் எழுதப்பட்டிருந்தது.
அம்பேத்கரின் இந்து மத எதிர்ப்பு கண்மூடித்தனமான தல்ல. அறிவுப்பூர்வமான அணுகுமுறையோடு அம்மதத்தின் கூறுகளை அவர் ஆய்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் தற்கால நிலைமைக்கு இந்து மதமே அடிப்படை என்று அறிந்து கொண்டார். இந்தியாவில் இன்று நிலவும் சாதி முறைக்கும், அதன் மூலமான நால்வர்ண பாகுபாட்டுக்கும் ஆதாரமே இந்து மதம்தான். பார்ப்பன-சத்திரிய கூட்டம் ஆளவும், வைசியக் கூட்டம் சுரண்டவும், சூத்திரக் கூட்டம் உழைக்க வும் ஏற்படுத்தப்பட்ட தந்திரமானதும், நயவஞ்சகமானது மானதொரு ஏற்பாடே இச்சாதி முறை.
தலித் மக்கள் நாயினும் கீழாக இந்த நாட்டில் மதிக்கப்பட்டனர். தீண்டாமைக் கொடுமைகள் அவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டன. படிக்கக்கூடாது, செருப்பணியக்கூடாது, சுயமரியாதையோடு இருக்கக் கூடாது எனப் பலவகையான சமூகத் தடைகள் விதிக்கப்பட்டன. இந்த சாதிய சட்டங்களை மீறுகிறவர்கள் கொல்லப்பட்டனர். சமூக விலக்கம் செய்யப்பட்டனர். அடித்து உதைக்கப்பட்டனர். இதன் எச்சங்கள் இன்றளவும் கூட தொடர்வதை நாம் அறிவோம்.
இவ்வுண்மைகளை எழுதியதோடு பரப்புரையும் செய்தவர் அம்பேத்கர். "இந்து மதத்தின் புதிர்கள்' உள்ளிட்ட பல நூல்களை எழுதினார். வேதங்களை ஆபாசக் குப்பைகள் என்றும், பகவத் கீதையை ஒரு முட்டாளின் கிறுக்கல்கள் என்றும் கூறியவர் அவர். இந்து மதத்தை தன் வாழ்நாளின் கடைசி கணம் வரை தோலுரித்தார். இயோலா மாநாட்டு அறிவிப்புக்குப் பிறகு அவர் பங்கேற்ற எல்லா மாநாடுகளிலும் மதமாற்றம் குறித்து வலியுறுத்தினார். 1938, ஆகஸ்டில் நடந்த ஒரு கூட்டத்தில் “நான் இந்தக் கூட்டத்திற்கு வருவதாக இல்லை. இந்து மதத்தின் பிடியிலிருந்து தாழ்த்தப்பட்ட மக்கள் வெளியேறுவதற்கு சிலர் தடையாக இருப்பதாக கேள்விப்படுகிறேன். உங்களைத் தடுக்கிறவர்களுக்கு இருக்கும் சந்தேகங்களை நீக்குவதற்கே இக்கூட்டத்திற்கு வந்திருக்கிறேன்'' என்று பேசியிருக்கிறார்.
இந்து மதத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டு அதற்கெதிராக தலித் மக்கள் திரும்ப வேண்டும் என்பதற்கு அவர் எடுத்துக் கொண்ட அளப்பரிய முயற்சிகளை இதுபோன்ற உரைகள் தெரியப்படுத்துகின்றன. அம்பேத்கரின் உரைக்குப் பிறகு அன்று அம்மாநாட்டில், “நமது சகோதரர்களும், சகோதரி களும் இந்து மத விழாக்களைக் கொண்டாடக் கூடாது. இந்து மதச் சடங்குகளை பார்ப்பனர்களை அழைத்து கடைப்பிடிக்கக் கூடாது. மத ஒழுக்கங்களை, உண்ணா நோன்புகளைப் பின்பற்றக்கூடாது'' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அம்பேத்கருக்கும் இந்து மதத்துக்கும் நடைபெற்ற போரின் வரலாற்றுப் பக்கங்களை இப்படிப் பக்கம் பக்கமாக விவரித்துக் கொண்டே போகலாம். அவருடைய மறைவுக்குப் பிறகும்கூட அப்போராட்டம் தொடர்கிறது. அம்பேத்கரும், பெரியாரும் இந்து மதத்தால் வெற்றி கொள்ளப்படாத, வெற்றி கொள்ளப்பட முடியாத ஆளுமைகளாக நிற்கின்றனர்.
"இந்து மதத்தின் புதிர்கள்' நூலை 1987இல் மகாராட்டிர அரசு வெளியிட்டபோது பெரும் கலவரம் வெடித்தது. "இந்தியன் எக்ஸ்பிரசின்' மராத்தி பதிப்பான "லோக்சத்தா' தன் தலையங்கம் மூலம் கலவரத்தை தூண்டியது. அம்பேத்கரின் நூலில் ராமனும், கிருஷ்ணனும் மிகக் கேவலமாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக தலையங்கத்தில் எழுதப்பட்டிருந்தது. சிவசேனாவும், ஆர்.எஸ்.எஸ்.சும், மராத்தா மகா சங்கமும் நடத்திய கலவரத்தில் அம்பேத்கரின் நூல்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. "ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்' என்ற பகுதியை அந்த நூலில் இருந்து நீக்கச் சொல்லி பால்தாக்ரே இரண்டு லட்சம் பேரை திரட்டி, பேரணி நடத்தி மனு கொடுத்தார். அப்பகுதியை நீக்கக் கூடாது என்று தலித் மக்களும், ஆதரவு சக்திகளும் பத்து லட்சம் பேர் திரண்டனர். மராட்டிய அரசு இறுதியாக, “இந்நூலில் கூறப்பட்ட அம்பேத்கரின் கருத்துகள் அரசின் கருத்தல்ல'' என்ற அடிக்குறிப்பினைப் போட்டு தப்பித்துக் கொண்டது.
மார்க்ஸ், லெனின், மாவோ போன்ற தலைவர்களை எல்லாம் ஏற்றுக் கொள்கிற ஆதிக்கச் சாதியினர் அம்பேத்கரை ஏற்க மறுப்பதன் அடிப்படை, அவருடைய இந்து மத எதிர்ப்பில் தான் இருக்கிறது என்று சொல்லும் "தலித் வாய்ஸ்' ஆசிரியர் வி.டி. ராஜ்சேகர் அவர்களின் கருத்தை இங்கு நினைவு கூரலாம். "கடவுளையோ, மகான்களையோ சார்ந்திருக்க வேண்டாம். எளிய மனிதனாகிய என்னைக் கடவுளாக்க முற்படுகிறார்கள். அது தவறு. தலைமை வழிபாட்டு எண்ணத்தை முளையிலேயே கிள்ளியெறிய தவறுவீர்களாயின், அது உங்கள் அழிவுக்கே வழிவகுக்கும்' என்றவர் அம்பேத்கர். ஆனால் அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு, அவரை கடவுளாக்கும் முயற்சிகள் அறியாமை யின் வெளிப்பாடாய், அவரின் விருப்பத்துக்கு மாறாய் நடந்து வருகின்றன. வேறெந்த தலைவருக்கும் இல்லாத அளவுக்கு சிலைகள் அவருக்கு இருக்கின்றன என்று பெருமிதம் கொள்ளும் தலித் மக்கள், மெல்ல சிலை நிறுவுதலை ஒரு வழிபாட்டுச் சடங்காக மாற்ற முயல் கின்றனர். அவரை தலைவராகவும், வழி காட்டியாகவும் கொள்வதெனில் அவருடைய கருத்துக்களைப் பின்பற்றியாக வேண்டுமே! அவரை கடவுளாக்கி விட்டாலோ சிக்கல் இல்லை. அவரை வணங்கி விட்டுப் போய்விடலாம். நம்மிடம் இருக் கின்ற மூடக்குப்பைகளை தொலைக்க வேண்டிய அவசியமும் இல்லை.
தலைமை வழிபாடு இந்திய மக்களின் மரபில் ஊறிக்கிடக்கின்ற ஒன்று. அரசன் கடவுளின் பிரதிநிதி என்று சொல்லி சத்திரிய வகுப்பை உருவாக்கி விட்டதிலிருந்தே இம்மனநிலை தொற்றிக் கொண்டது. இங்கு தலைவன் இல்லையேல் எதுவும் நடக்காது. இந்த நிலைக்கு நேரெதிரான "ஜனநாயக' நிலையை சமூகத்திலும், அரசியலிலும் கொண்டு வந்தவர் அம்பேத்கர். தன்னை வணங்குவதையும், தன் காலில் விழுவதையும் அவர் ஒரு போதும் விரும்பியதில்லை. ஆனால் இன்று அவர் "வழிபாட்டுக்குரிய' தலைவராக்கப்பட்டிருக்கிறார். இதன் நீட்சியாக இன்று வேறொரு அதிர்ச்சியூட்டும் செயலும் நடக்கத் தொடங்கியுள்ளது. அறியாமையின் பிடியில் இன்னமும் சிக்கியிருக்கும் தலித்துகள் அம்பேத்கரை இந்துவாக்கவும் முயன்று வருகின்றனர்!
கடந்த குடியரசு நாளன்று ஒரு பள்ளியில் நடந்த விழாவுக்குப் போக நேர்ந்தது. அது ஒரு கிராமப்பள்ளி. விழாவை முன்னின்று நடத்திய ஊர்ப்பெரியவர்கள், கொடியேற்றுவதற்கு முன்னால் பூசைகளை செய்தனர். காந்தி, நேரு படங்களோடு சேர்த்து அம்பேத்கர் படமும் அங்கு வைக்கப்பட்டது. பிற தலைவர்களின் படத்தோடு அம்பேத்கர் படத்துக்கும் குங்குமப் பொட்டு இடப்பட்டது. கற்பூரம் கொளுத்தப்பட்டது. தேங்காயையும் உடைத்தார்கள். பெரும்பான்மையினரின் ஒப்புதலோடு நடக்கும் இதை என்னால் தடுக்க முடியவில்லை. ஆனால் ஊர்த்தலைவர்களுடனான நேர்ப் பேச்சிலும்,விழா உரையிலும் என் கடும் கண்டனத்தை தெரிவித்தேன்.
கண்ணுக்குத் தெரியாதபடி மூலை முடுக்குகளில் இப்படி நடப்பவை முற் றிலும் அறியாமையின் வெளிப்பாடென் பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஊர் உலகமறிய அம்பேத்கரை இந்துவாக்க நடக்கும் முயற்சிதான் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது. தலித் மக்கள் இருக்கும் பகுதிகளில் மாரியம்மன் திருவிழாக்கள் நடக்கும் காலம் இது. தை மாதம் தொடங்கினாலே தமிழர்களுக்கு திருவிழாக் காலம் தொடங்கி விடுகிறது! மாசி மாதம் வரும் மகா சிவராத்திரி என்ற இந்து பண்டிகையையொட்டி மயானக் கொள்ளைகள் நடக்கின்றன. சித்திரை தொடங்கி ஆனி மாதம் வரைக்கும் மாரியம்மன், கெங்கை யம்மன் உள்ளிட்ட இன்ன பிற அம்மாக்களுக்கும்திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. அண்மைக் காலமாக இவ்விழாக்களுக்கு வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களிலும், சுவரொட்டிகளிலும் அம்பேத்கரின் படங்கள் இடம்பெறத் தொடங்கியிருக்கின்றன.
அம்பேத்கரை பெயரளவிலும், தமது தலைவர் என்ற உணர்வின் அடிப்படையிலும் மட்டுமே அறிந்து வைத்திருக்கிற இளைஞர்களும், ஊர்மக்களும் அவர் படத்தை கடவுளரின் படங்களோடு சேர்த்து விடுகின்றனர். ஆர்வம் கொண்ட தலித் இளைஞர்கள் தமது ரசிக மனோபாவத்தின் வெளிப்பõடாய் விஜய், விக்ரம், நமீதா போன்ற திரைப்பட நாயக, நாயகிகளோடு அம்பேத்கரை சேர்த்து விடுகின்றனர்.
அம்பேத்கரை இந்து பண்டிகைகளோடும், இந்து கடவுளர்களோடும் தொடர்புபடுத்துவது அறியாமையில் நடக்கிறது. ஆனால் இப்படிச் செய்வது அம்பேத்கரை இழிவுபடுத்துகிற செயல் என்பதை அம்மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள்! தன் வாழ்நாளெல்லாம் எந்த மதத்தை விமர்சித்தாரோ, எந்த மதத்தை கண்டனம் செய்தாரோ, எந்த மதத்தை தாக்கினாரோ அந்த மதத்துடனேயே அவரைப் பிணைத்து விடுவது, துரோகச் செயலன்றி வேறென்ன? இந்த செயலை தலித் மக்களே செய்கின்றனர் என்பது தான் கொடுமையானது. அறியாமையில் இருக்கும் தலித் மக்கள்தான் இதை செய்கிறார்கள் என்றால், தலித் அரசியல் கட்சிகளிலும், அமைப்புகளிலும் இருக்கின்ற தொண்டர்களும் இந்த மாபெரும் தவறை செய்கின்றனர்.
தமது கட்சியினுடைய கொள்கை கோட்பாடுகளை மறந்துவிட்டு, வாக்கு வங்கி அரசியலை மட்டுமே கவனத்தில் வைத்து செயல்படும் பெரிய கட்சிகள் மதப் பண்டிகைகள் எல்லாவற்றுக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கின்றன. அக்கட்சிகளின் தலைவர்கள் சிலுவை அணிந்து ஜெபம் செய்கிறார்கள். குல்லாய் அணிந்து தொழுகிறார்கள். இந்து மத பூசைகளையும் செய்கிறார்கள். அவர்கள் இப்படிப் பல்வேறு மதச் சடங்குகளை செய்யும் படங்களும் பெருமிதமாக வெளியிடப்படுகின்றன. இந்தத் தொற்று நோய் தலித் தலைவர்களையும் பீடித்திருக்கிறது. சில தலித் தலைவர்கள் மாரியம்மன் பண்டிகையில் கூழ் ஊற்றும் விழாக்களுக்கு கூட கலந்து கொள்வதாக செய்திகள் வருகின்றன.
அம்பேத்கரின் கருத்தியலை அறிந்திராத, கொள்கை கோட்பாடுகளைப் பின்பற்றாதவர்கள் தலித்துகளுக்கு தலைவர்களாக இருக்கத் தகுதியில்லாதவர்கள். ஓர் அடிமைக்கு இன்னொரு அடிமை ஒருபோதும் தலைவனாக முடியாது. அடிமைத் தளையை உடைத்தெறி கிறவனே தலைவனாக இருக்க முடியும். இந்து மதம்ஓர் அடிமைத்தளை. அம்மதம்தான் தலித்துகளை மிக இழிவான நிலையிலே இந்நாட்டில் வைத்திருக்கிறது. “இந்த நாட்டில் அரசும், அமைப்புகளும் முதலில் செய்ய வேண்டியது, நாட்டு மக்களை அறிவாளிகளாக்குவதுதான்'' என்றார் பெரியார். ஆனால் கருத்தியல் தெளிவை தொண்டர்களிடையே உருவாக்குவதில் தலித் அமைப்புகள் பலவும் பின் தங்கியே இருக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் இந்து விழாக்களுக்கு அம்பேத்கர் படத்தைப் போட்டு போஸ்டரையும் பேனர்களையும் அடிப்பது, அவ்விழாக்களைக் கொண்டாடுவது, அவ்விழாக்களிலே பங்கேற்பது.
இந்து பண்டிகைகளுக்கு பேனர்வைக்கும் போக்கு தலித் அமைப்புகளுக் கிடையே மோதலைத் தூண்டும் அளவு போயிருப்பது மேலும் கவலையளிப்பதாக உள்ளது. அண்மையில் (7.6.09) அரக்கோணம் பனப்பாக்கத்தில் நடந்த மயூரநாதர் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு புரட்சி பாரதம் கட்சியினர் பேனர்களை வைத்துள்ளனர். அதில் ஒன்றை சிறுவர்கள் சிலர் விளையாட்டாய் கிழித் திருக்கின்றனர். அப்பழி விடுதலைச் சிறுத்தைகள் மீது விழ, இரு கட்சியினருக்கும் இடையிலே மோதல் உருவாகி வழக்கு மன்றம் வரை சென்றிருக்கிறது.
இந்து மத விழாக்களுக்கு பேனர் வைக்கச் சொல்லி நாங்கள் கேட்பதில்லை என்று இரு கட்சிகளின் மாவட்டத் தலைவர்களும் சொல்லியிருக்கிறார்கள். உறுப்பினர்கள் ஆர்வமிகுதியால் இப்படி வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள் அவர்கள். இந்து மத எதிர்ப்புக் கருத்தியலை உறுப்பினர்களிடையே கட்சி வளர்த்திருந்தால், இம்மோதலுக்கான அவசியமே ஏற்பட்டிருக்காது. தமது கட்சி உறுப்பினர்களின் இத்தகைய இழி செயல்களைத் தடுக்க, தலித் தலைவர்கள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அம்பேத்கரை உள்வாங்கிச் செறித்து விடுவதற்கு இந்து மத அமைப்புகள் பல காலமாக முயன்று வருகின்றன. ஆர்.எஸ்.எஸ். தனது தொண்டர்களுக்கு, வணங்கக்கூடிய தலைவர்களின் பட்டியலில் அம்பேத்கரையும் சேர்த்து கொடுத்திருக்கிறது. ஜெயேந்திரன் தன் காலில் விழும் அடிமைகள் சிலரைக் கொண்டு அம்பேத்கர் மன்றங்களைத் தொடங்குகிறார். இம்மாதிரியான ஏமாற்று வேலை கள், அயோக்கியத் தனங்களை விடவும் மோசமானது-தலித் மக்கள் அம்பேத்கரை இந்து பண்டிகைகளோடு இணைப்பது. இப்போக்கை உடனடியாக தடுத்து நிறுத்த தலித்துகள் முன்வர வேண்டும்.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அன்பர்களே! அம்பேத்கர் இந்து அல்லர்
- விவரங்கள்
- அழகிய பெரியவன்
- பிரிவு: தலித் முரசு - ஜூன் 2009