பிபிசி ஆவணப்படத்தின் முதல் பகுதியைப் பார்த்தேன். குஜராத் கலவரம் குறித்து நமக்கு ஏற்கெனவே நன்கு பரிச்சயமான தகவல்களைச் சீரான முறையில் தக்க சான்றுகளுடன் விவரிக்கிறது. இசுலாமியப் படுகொலைகள் நிகழ்ந்து இருபதாண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்த ஆவணப்படத்தின் பயன் அதிலுள்ள பதற்றமான உண்மையின் குரலே. காலம் கடந்தும் அது நம்மை உலுக்கத் தவறுவதில்லை.

குற்றங்களின் கல்லறைகளிலிருந்து எப்போது வேண்டுமானாலும் பூதங்கள் எழும், அவை நிரந்தரமாக உறங்குவ தில்லை என்பதற்கான சான்று இப்படம். இவ்வழக்கின் நான்கு முக்கியமான சாட்சிகளைக் குறித்துப் படத்தில் காட்டுகிறார்கள். முதலாமவர், இம்தியாஸ். கலவரத்தின்போது காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஷான் ஜாப்ரி வீட்டில் உயிருக்கு அஞ்சித் தஞ்சமடைந்தவர். இம்தியாஸைப் போலவே நூறு பேர் ஜாப்ரி வீட்டில் ஒடுங்கியிருக்கிறார்கள். கலவரக்காரர்கள் எந்நேரமும் தன் வீட்டைச் சூழ்ந்து தாக்கலாம் எனும் பயத்தில் தன் அரசியல் அதிகாரத் தொடர்புகளைத் தொலைபேசி வாயிலாக ஜாப்ரி உதவிக்கு அழைக்கிறார், மன்றாடுகிறார். இதில் காங்கிரஸ்காரர்களும் பிஜேபி ஆள்களும் அடக்கம்.

யாருமே காப்பாற்ற முன்வருவதில்லை. கடைசியில், வேறு வழியின்றி நரேந்திர மோதியையே நேரடியாகத் தொடர்பு கொள்கிறார். அவர் ஜாப்ரியைக் கடுமையாகத் தூற்றியும் சாபமிட்டும் அழைப்பைத் துண்டிக்கிறார். இவர்கள் இடையேயான தொலைபேசி உரையாடலுக்குச் சாட்சியாக இருந்தவர் இம்தியாஸ். ஆனால், வழக்காடு மன்றத்தில் இம்தியாஸின் வாக்குமூலம் நிராகரிக்கப்படுகிறது. அப்படியொரு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளப் பட்டதற்கான போதிய ஆதாரம் இல்லை எனக் கைவிரித்துவிடுகிறார்கள். முதலில் ஜாப்ரிதான் தன் துப்பாக்கியைக் காட்டி இந்துக்களை மிரட்டியதாகவும் அவர்களைத் தூண்டிவிட்டு கலவரத்துக்குக் காரணமான தாகவும் வழக்கு திரிக்கப்படுகிறது. இரண்டாமவர், குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா.bbcகலவரம் மூண்ட நாளன்று ஓர் அவசரச் சந்திப்பை மோதி ஏற்பாடு செய்ததாகவும் அதில் இசுலாமிய வீடுகள் சூறையாடப் படும்போதோ இசுலாமியர்கள் கொல்லப் படும்போதோ பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகும்போதோ காவல் துறையினர் தலையிடக்கூடாது என மோதி உத்தர விட்டதாகவும் பாண்டியா தெரிவிக்கிறார். மூன்று நாட்களுக்குப் பிறகு அக்கலவரத்தைக் காவல்துறையினர் கட்டுப்படுத்தினால் போதும் என்கிற வாய்மொழி ஆணையும் இடப்படுகிறது. இதனைக் குற்ற விசாரணைக்கான தீர்ப்பாயத்தின் முன் சாட்சியளிப்பதற்குப் பாண்டியா தயாராகிறார். ஆனால், மோதி ஏற்பாடு செய்த சந்திப்பில் பாண்டியா கலந்து கொள்ளவே இல்லை என்று பிற அமைச்சர்களும் காவல்துறை உயரதிகாரிகளும் பாண்டியாவுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்கின்றனர்.

சில நாட்களுக்குப் பிறகு மர்மமான முறையில் ஹரேன் பாண்டியா கொல்லப்படுகிறார். கூலிப்படையை ஏவி பாண்டியாவைக் கொன்ற வழக்கில் பன்னிரண்டு பேர் கைதாகின்றனர். கீழ் நீதிமன்றத்தில் அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. மேல்முறையீட்டில் அத்தீர்ப்பு ரத்தாகிறது. மூன்றாவது சாட்சி காவல்துறை அதிகாரி சஞ்சய் பட். இவரும் பாண்டியாவின் கூற்றை உறுதிசெய்கிறார். ஆனால், வழக்கம்போல, எதிர்தரப்பைப் பொறுத்தவரை அந்தச் சந்திப்பில் சஞ்சய் கலந்து கொள்ளவில்லை. பொய்ச் சான்றுகளைச் சமர்ப்பித்ததற்காகச் சஞ்சய் மீதே வழக்கு போடப்படுகிறது. முப்பதாண்டுகளுக்கு முன் ஒரு கைதியை விசாரிக்கும்போது வன்முறையைப் பிரயோகித்து அவனைக் காவற்கூடத்தில் கொன்றதாகப் புதிய வழக்கு பதியப்பட்டு சஞ்சய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. இத்தீர்ப்பை எதிர்த்து 'சஞ்சய் நிரபராதி' என அவரது மகள் இன்னமும் போராடி வருகிறார்.

நான்காமவர், குஜராத் காவல்துறை தலைமைப் பொறுப்பிலிருந்த ஆர்.பி.ஸ்ரீகுமார். ஜாப்ரியின் விதவை மனைவிக்கு உறுதுணையாக நின்று மோதிக்கு எதிராகச் சாட்சி சொன்னவர். அவரது வாக்குமூலமும் ஏற்றுக கொள்ளப் படவில்லை. சஞ்சையுடன் சிறையில் தள்ளப்படுகிறார். இவை போக, துணிச்சலான பத்திரிகையாளர் ஒருவர் ஸ்டிங் ஆபரேஷன் நிகழ்த்தித் துப்பறிந்த விஷயங்களும் காணொளி ஆதாரங்களாக நீதிமன்றத்தில் சமர்பிக்கப் படுகின்றன. ரகசியமாகப் படம் பிடிக்கப்பட்ட காணொளிகளில் உள்ளூர் பிஜேபி நிர்வாகிகளான பாபு பஜ்ரங்கியும் ஹரேஷ் பட்டும் குஜராத் கலவரங்களில் மோதியின் பங்கு குறித்து தெளிவாகவே எடுத்துரைக்கின்றனர்.

தனக்கு உதவி செய்வதற்காக கறாரான நீதிபதியை மோதி இடம் மாற்றினார் எனப் பாபு ஒப்புக்கொள்கிறார். 'மூன்று நாட்களுக்குள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்' என்று தன்னிடம் மோதி தெரிவித்ததாக ஹரேஷ் பட் கூறுகிறார். ஆனால், நீதிமன்ற விசாரணையின் போது இவ்விருவரும் பிறழ் சாட்சிகள் ஆகி விடுகின்றனர். பத்திரிகை யாளரால் காகிதத்தில் எழுதிக் கொடுக்கப்பட்டதை அப்படியே வாசித்ததாகப் பாபு சொல்கிறார். மோதி தன்னிடம் பேசியதாகக் கற்பனை செய்தேன் என ஹரேஷ் பட் கதை விடுகிறார்.

பிபிசிக்கு மோதி அளிக்கும் பேட்டியில் தனக்கும் கலவரத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை எனக் கண்களை உருட்டி உருட்டி பதில் அளிப்பவர், 'இன்னும் சிறப்பாக இந்தச் சூழலைக் கையாண்டிருக்கலாம் என நினைக்கிறீர்களா?' எனும் கேள்விக்கு, 'ஆமாம், மீடியாவை மட்டும் இன்னும் சிறப்பாகக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்' எனச் சர்வாதிகாரி போலப் பேசுகிறார், ஆத்திரப்படுகிறார். 'மனித உரிமை மீறல்கள் நிகழவே இல்லையா?' என்ற கேள்விக்கு மோடியின் பதில்.'மனித உரிமை குறித்துப் பாடமெடுக்க ஆங்கிலேயர்களுக்கு அருகதை இல்லை.' அந்த ஆங்கிலேயச் செய்தி நிறுவனம்தான் தற்போது மோதியின் உண்மையான முகத்தைப் பல்லாயிரம் பேருக்குக் கொண்டு சேர்த்திருக்கிறது.

- கோகுல் பிரசாத்

Pin It