இரண்டாம் உலகப் போர் (1939-1945) முடிவுற்றது. இனி உலகில் போரே நடக்காது என்று பலராலும் நம்பப்பட்டது. ஆனால் சிறிதும் பெரிதுமாகப் போர்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. இப்போர்களால் இரண்டாம் உலகப் போரில் இறந்தவர்களைவிட அதிக அளவில் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதைவிட பன்மடங்கு ஆயுதங்களும் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவேதான் லெனின், “போர்கள் முதலாளித்துவத்தின் மூச்சுக்காற்று” என்று சொன்னார்.
இரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாகப் போர் நடந்து கொண்டிருக் கிறது. இப்போரினால் உலக அளவில் வணிகமும் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த அக்டோபர் 7 முதல் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசாவை ஆட்சி செய்யும் ஹமாசுக்கும் இசுரேலுக்கும் இடையில் போர் நடந்து கொண்டிருக்கிறது. இது உலகின் முதன் மையான பேசுபொருளாகியுள்ளது.
பாலஸ்தீனியர்களுக்கும் இசுரேல் நாட்டுக்கும் இடையே கடந்த 75 ஆண்டுகளாக மோதல்கள்-போர்கள் நடந்து வருகின்றன. பாலஸ்தீனியர்கள் தாங்கள் இழந்த தாயக நிலப்பரப்பையும் உரிமைகளையும் விடுதலை பெற்றதான நாட்டையும் மீட்கப் போரிட்டு வருகின்றனர். ஆனால் இசுரேல், அமெரிக்கா மற்றும் மேற்கு அய்ரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் துணையுடன் பாலஸ்தீன நிலப் பரப்பை முற்றிலுமாகக் கைப்பற்றி பாலஸ்தீனியர்களை அழிப்பதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த வரலாற்றுப் பின்னணியைப் புரிந்து கொண்டால்தான் கடந்த அக்டோபர் 7 முதல் ஹமாசு-இசுரேல் இடையே நடை பெற்றுவரும் தாக்குதல்களைப் புரிந்துகொள்ள முடியும்.
2023 அக்டோபர் 7 அன்று காலை 6.30 மணியி லிருந்து இருபது மணித்துளிகளுக்குள் காசா பகுதியிலிருந்து ஹமாசு போராளிகள் ஒரே சமயத்தில் 6,000 இராக்கெட்டுகளை இசுரேல் மீது செலுத்தினர். அதே சமயத்தில் இசுரேல் காசாவுக்கு இடையே இருபது அடி உயரத்திற்குக் கட்டியெழுப்பியுள்ள கான்கிரீட் தடுப்புச் சுவரை புல்டோசர்களைக் கொண்டு தகர்த்து இசுரேலுக்குள் நுழைந்து தாக்கினர். மேலும் பாரா கிளைடர் களைக் கொண்டு தடுப்புச் சுவருக்கு உயரே பறந்து சென்று தாக்கினர்.உலகிலேயே மிகச்சிறந்த உளவுப் பிரிவையும், உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தற்காப்புக் கருவி களையும் கொண்டிருப்பதாக இசுரேல் பெருமிதம் கொண்டிருந்தது. இசுரேலிடம் உள்ள ‘அயன் ட்ரோம்’ (Aine Drome) என்பது ஒரு கொசு பறந்தால்கூட அதன் இராணுவத் தொழில்நுட்பக் கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது என்று கூறப்பட்டது. ஆனால் அரைமணி நேரத்திற்குள் ஆறாயிரம் இராக்கெட்டுகளை வீசி, புக முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட இசுரேல் நிலப் பகுதிக்குள் சென்று, 1,200 பேரைக் கொன்றதுடன் 240 பேரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வந்தனர் ஹமாசு போராளிகள். இதனால் இசுரேலின் இறுமாப்பு தவிடு பொடியானது. கூனிக்குறுகி அவமானத்தால் துடித்தது. இத்தாக்குதலை மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு ஹமாசு இயக்கத்தினர் நடத்தினர்.
2022ஆம் ஆண்டு ஆறாவது தடவையாகப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, ஹமாசு மீது போர்ப் பிரகடனம் செய்தார். ஹமாசு அமைப்பை அடியோடு அழிப்பதே குறிக்கோள் என்று ஆர்ப்பரித்தார். கடந்த 75 ஆண்டுகளில் பாலஸ்தீனிய அமைப்பு எதுவும் இவ்வளவு பெரிய தாக்குதலையும் பேரழிவையும் நிகழ்த்தியதில்லை, அதனால் தீவிர வலதுசாரிக் கொள்கை கொண்ட நெதன்யாகு ஆட்சி காசா மீது கொடிய தாக்குதலைத் தொடுத்தது.
இன்று பாலஸ்தீனம் என்று அழைக்கப்படுவது காசா. மேற்குகரை. கோலன் குன்றுகள் ஆகியவை அடங்கிய நிலப்பரப்பே ஆகும். ஆசியக் கண்டத்தில் தென்மேற்கு பகுதியில் உள்ள லெபனான், ஜோர்டான், சிரியா, சவூதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளின் நடுவில் அமைந்துள்ள சிறிய நாடு பாலஸ்தீனம். பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காசா 40 கிலோ மீட்டர் நீளமும் 6 முதல் 10 கிலோ மீட்டர் அகலமும் என 363 சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பு கொண்ட பகுதியாகும். காசாவில் 23 இலட்சம் மக்கள் வாழ் கின்றனர். உலகிலேயே மக்கள் தொகை அடர்ந்த பகுதி இது.
பாலஸ்தீனத்தின் தன்னிகரற்ற தலைவராக விளங்கிய யாசர் அராபத் ஆயுதப் போராட்டத்தைத் தள்ளி வைத்து விட்டு இசுரேலுடன் சமரசப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதை ஏற்காமல் காசாவில் தொடங்கப்பட்டது தான் ஹமாசு இயக்கம். இதற்கு இசுலாமியப் போராளி இயக்கம் என்று பொருள். இது 1987இல் ஷேக் அகமது யாசின் என்பவரால் தொடங்கப்பட்டது. ஹமாசு ஓர் அரசியல் கட்சியாகவும் ஆயுதப் போராளி இயக்கமாகவும் செயல்படுகிறது. 2006 தேர்தலில் வெற்றி பெற்று அதுமுதல் காசாவை ஆட்சி செய்து வருகிறது.
அக்டோபர் 7 அன்று தாக்கப்பட்டதால் சினந்தெழுந்து போர் முழக்கமிட்ட இசுரேல், காசா மீது வான்வழியாக தொடர்ந்து குண்டுகளை ஏவித் தாக்கியது. வடக்கு காசாவின் நிலப்பகுதியிலிருந்தும் தாக்கியது. இத்தாக்கு தலில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், பள்ளிகள், மசூதிகள் முதலானவை தகர்க்கப்பட்டன. நாள்தோறும் நூற்றுக் கணக்கில் மக்கள் கொல்லப்பட்டனர். குடியிருப்புகளின் இடிபாடுகளுக்குள் சிக்கி மீட்க முடியாமல் மடிந்தோர் பலர். எண்ணற்றோர் படுகாயமடைந்தனர். அடிப்படைத் தேவைகளான தண்ணீர், மின்சாரம், உணவுப் பொருட்கள், மருந்துகள், எரிபொருள் காசாவுக்குக் கிடைப்பதை இசுரேல் படையினர் தடுத்து நிறுத்தினர். மருத்துவ மனைகளில் மின்சாரம் இல்லாமல் கைப்பேசி ஒளியில் அறுவை செய்தனர். எரிபொருள் கிடைக்கா ததால் ஜெனரேட்டர்களை இயக்க முடியவில்லை. மயக்க மருந்து கொடுக்க முடியாமலே அறுவை செய்யும் கொடுமை நேரிட்டது.
அக்டோபர் 17 அன்று காசாவில் அல்-அஹ்லி அரப் மருத்துவமனை மீது இசுரேல் குண்டு வீசித் தகர்த்தது. இதில் 500க்கும் மேற்பட்ட நோயாளிகளும் மருத்துவப் பணியாளர்களும் மாண்டனர். போரின் போது மருத்துவ மனைகளைத் தாக்கக் கூடாது என்பது பன்னாட்டுச் சட்டம். அதனால் அல்-அஹ்லி அரப் மருத்துவமனைத் தாக்கப்பட்டதில் 500 பேர் மடிந்ததைக் கண்டித்து உலகெங்கிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. எனவே இசுரேல், ஹமாசு வீசிய குண்டு குறி தவறி மருத்துவ மனை மீது விழுந்துவிட்டது என்று கூறியது. விரைவில் இது பொய் என்பது அம்பலமானது. வல்லாதிக்க அரசுகள் தங்கள் கொடுஞ் செயல்களை நியாயப்படுத்த இதுபோன்ற பொய்களைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். ஈராக்கில் சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களைப் பதுக்கி வைத் துள்ளார் என்கிற பொய்யைக் கூறி அமெரிக்கா போர் தொடுத்து சதாம் உசேனைக் கொன்றது; ஈராக்கை அழித்தது.
காசாவில் பயிரிடும் பரப்பு மிகவும் குறைவு; தொழிற்சாலைகள் இல்லை; வாழ்வதற்கான பிற ஏந்துகள் இல்லை. அதனால் காசா மக்களில் 60 விழுக் காட்டினர் அய்க்கிய நாடுகள் மன்றம், ஈரான் அளிக்கும் உதவிகளையே நம்பி உயிர் வாழ்ந்து கொண்டிருக் கின்றனர். அதேசமயம் இசுரேல் மக்கள் வளமாக வாழ்கின்றனர். போர் தொடங்கியதும் காசாவுக்கு எகிப்து நாட்டின் எல்லை வழியாக உதவிகள் வரும் வழியை இசுரேல் மூடியது. காசாவில் செஞ்சிலுவைச் சங்கம் செயல்பட முடியாமல் தடைகளை எழுப்பியது. பன்னாட்டு அளவில் இசுரேலின் மனிதத் தன்மையற்ற இச்செயல் களுக்கு எதிர்ப்பு எழுந்த பிறகே காசாவுக்குள் உதவிப் பொருட்கள் வர அனுமதித்தது.
காசாவில் மக்கள் நாள்தோறும் எப்போது குண்டு விழும்; சாவு நேரிடும் என்ற அச்சத்தில் உறைந்துள் ளனர். அடையாளம் அறியப்படாத பிணமாகப் புதைக் கப்படுவதைத் தவிர்க்க பெற்றோர்கள் தங்கள் குழந் தைகளின் கைகளில் அவர்களின் பெயர்களைப் பச்சை குத்துகின்றனர். இளைஞர்களும் இதுபோல் செய்து கொள்கின்றனர். பெண்கள் தங்கள் பெயர் பொறித்த வளையல்களை அணிந்து கொள்கின்றனர்.
வான்வழி. நில வழித் தாக்குதல் தவிர, காசாவில் இசுரேல் நாட்டால் குடியமர்த்தப்பட்டுள்ள இசுரேலியர் களுக்கு ஆயுதப் பயிற்சியும் ஆயுதமும் வழங்கப்பட்டுள்ளன. குடியமர்த்தப்பட்ட இசுரேலியர்கள் இசுரேல் படையின் துணையுடன் பாலஸ்தீனியர்களைத் தாக்கி வருகின்றனர்.
பாலஸ்தீனியர்களின் வீடுகளைப் புல்டோசர்கள் கொண்டு இடிக்கின்றனர். இசுரேலின் ஒருங்கிணைந்த தாக்குதல்களால் காசாவில் இதுவரை (நவம்பர் 26) 13,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப் பட்டுள்ளனர். இவர்களில் குழந்தைகள் மட்டும் 5,500 பேர் இதுபோல் பன்மடங்கினர் படுகாயமடைந்து போதிய மருத்துவம் பெறமுடியாமல் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர். காசாவின் வடக்குப் பகுதியில் வாழும் 11 இலட்சம் பாலஸ்தீனியர்களை 24 மணி நேரத்திற்குள் காசாவின் தெற்கு பகுதிக்குச் செல்லுமாறு இசுரேல் ஆணையிட்டது. நவீன கால வரலாற்றில் இதுபோன்ற கொடிய கட்டளை வேறெங்கும் பிறப்பிக் கப்பட்டதில்லை. இதனால் மேலும் இன்னல்களுக்கு ஆளாயினர்.
இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளின் எதிர்வினை
அக்டோபர் 7 அன்று ஹமாசு -இசுரேல் மீது நடத்திய தாக்குதலைப் பெரும்பாலான நாளேடுகளும் தொலைக்காட்சி ஊடகங்களும், ‘ஹமாசு தீவிரவாதி களின் பயங்கரத் தாக்குதல்’ என்று கூறின. ஆனால் அய்க்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் செயலாளர். ஹமாசின் தாக்குதல் நடவடிக்கை ஒரு எதிர்வினை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்; அதேசமயம் பாலஸ்தீன மக்களின் கொடுந்துயரம் ஹமாசின் தாக்கு தலை நியாயப்படுத்தாது என்று கருத்துரைத்தார்.
வரலாற்றில் வலியோர் எளியோரைத் தொடர்ந்து தாக்குவதை எப்போதும் தாங்கிக் கொண்டேயிருந்த தில்லை. சில சமயங்களில் எளியோர் திருப்பித் தாக்கி வந்துள்ளனர். ரோமப் பேரரசுக்கு எதிராக அடிமைகளின் தலைவன் ஸ்பார்ட்டகஸ் முதல் ஹமாசு வரை இதுவே உண்மையாகும். அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாக கொடிய அடக்குமுறைகளை ஏவிவரும் இசுரேலிய அரசுக்கு எதிராக யாசர் அராபத் உள்ளிட்ட பாலஸ் தீனர்கள் ஆயுதமேந்திப் போராடி வருவது தங்கள் நிலத்தின், மக்களின் சுதந்தரத்தையும், உரிமைகளையும் மீட்டெடுப்பதற்கேயாகும்.
ஆனால் வல்லாதிக்க ஆற்றல்களும், அரசுகளும் இதற்கு பயங்கரவாதம் என்று முத்திரை குத்துகின்றன. ஹமாசு தாக்குதல் தொடுத்த அன்றே அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஜோபைடன் இசுரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்கா எல்லா வகையிலும் துணை நிற்கும் என்று சொன்னார். உடனடியாக இரண்டு போர்க் கப்பல்களை மத்திய தரைக்கடல் பகுதிக்கு அனுப்பினார். பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபேசி வாயிலாக பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா துணை நிற்கும் என்று கூறினார். அமெரிக்காவின் ஜோபைடன், இங்கிலாந்தின் ரிஷி சுனக், பிரான்சின் இம்மானுவேல் மேக்ரான், இத்தாலியின் அதிபர் உள்ளிட் டோர் அடுத்தடுத்து இசுரேலுக்குச் சென்று நெதன்யா குவிடம் தங்கள் முழு ஒத்துழைப்பைத் தெரிவித்தனர். செருமனியும் முழு ஆதரவு தெரிவித்தது.
இந்த நாடுகள் வலிய ஓடோடிச் சென்று இசுரேலைத் தாங்கிப் பிடிப்பது ஏன்? எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகளைத் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருப்பதற்கு இசுரேல் வலிமையான களமாக இருப்பதேயாகும். அதனால் கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவின் துணையுடன் பல அரபு நாடுகளுடன் இசுரேல் நட்புறவு ஒப்பந்தங்கள் செய்து கொண்டது. ஹமாசு தாக்குதலுக்கு முன் சவூதி அரேபிய மன்னருடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. இசுரேல் காசாமீது தொடுத்துள்ள கடுந்தாக்குதலால் அரபு நாடுகள் பாலஸ்தீனர்களை ஆதரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
அய்க்கிய நாடுகளின் பாதுகாப்பு அவையில் இரஷ்யாவும் சீனாவும் இசுரேல்-ஹமாசு போர் நிறுத்தம் செய்வதற்கான தீர்மானத்தைக் கொண்டு வந்தன. ஆனால் அமெரிக்கா தன் ‘வீட்டோ’ அதிகாரம் மூலம் நிறைவேறாமல் செய்துவிட்டது. இசுரேல் காசா பகுதி மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால், இந்தியா வின் அயலுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “சுதந்தர பாலஸ்தீனம் அமைய வேண்டும் என்பதும் பாலஸ்தீனமும் இசுரேலும் அருகமை நாடுகளாக அமைதியாக வாழவேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாகும்” என்று அறிக்கை வெளியிட்டார். காசாவில் அல்-அஹில் அரப் மருத்துவமனை பெருந் தாக்குதலுக்குள்ளான போது நரேந்திர மோடி பாலஸ்தீன அதிபரிடம் தன் வருத்தத்தைத் தெரிவித்தார். இந்தியா விலிருந்து 70 டன் உதவிப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அக்டோபர் 26 அன்று அய்க்கிய நாடுகளின் பொது அவையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேற்கு ஆசிய -தெற்கு ஆசிய -தென் கிழக்கு ஆசிய -ஆப்பிரிக்க தென் அமெரிக்க நாடுகள் உள்ளிட்ட 120 நாடுகள் இத் தீர்மானத்தை ஆதரித்தன. 45 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அய்ரோப்பிய நாடுகளுடன் சேர்ந்து கொண்டு இந்தியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு இடைக்காலப் போர் நிறுத்தத்தைக் கோரியது. நவம்பர் 21 அன்று இணைய வழியில் பிரிக்ஸ் (Brics) மாநாடு நடந்தது. சீன அதிபர் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றார். மோடி இதில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் ஜெய் சங்கர் தான் கலந்து கொண்டார். போர் நிறுத்தம் தேவை என்பதை வழிமொழியவில்லை. மாறாக, இப்போரில் குடிமக்கள் கொல்லப்படுவதற்குக் கண்டனம் தெரிவித்தார். இந்தியா பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன் என்ற போக்கையே கடைப்பிடித்து வருகிறது.
வாஜ்பாய் பிரதமராக வந்ததும் அத்வானி இசுரேலுக்குச் சென்றார். அது முதற்கொண்டு இசுரேலுடனான உறவு வலுப்பட்டது. மோடி ஆட்சிக்கு வந்த பின் இசுரேலிடம் ஆயுதங்கள் வாங்குவது, உயர் தொழில்நுட்பக் கருவிகள் வாங்குவது என்பது பன்மடங்கு அதிகமாயிற்று. இரு நாடுகளின் ஆட்சியாளர்களும் அவர்களின் கட்சிகளும் ஆதிக் மனப்பான்மை கொண்டவை; இசுலாமியரை எதிரிகளாகக் கருதுபவை. அதனால் இந்தியாவின் பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டின் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆயினும் அரபு நாடுகளில் 80 இலட்சம் இந்தியர் வேலை செய்வதால் வெளிப்படையாக இசுரேலை மோடி ஆட்சியால் ஆதரிக்க முடியவில்லை.
பாலஸ்தீனத்தின் தேய்வும் இசுரேலின் தோற்றமும் -ஆதிக்கமும்
இன்று இசுரேல் நாட்டின் பகுதியும் பாலஸ்தீனமும் சேர்ந்த நிலப்பகுதி பண்டைய நாளில் பாலஸ்தீனம் என்றே அறியப்பட்டது. விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் மோசஸ் எகிப்தில் அடிமைகளாக இருந்த யூதர்களைக் காப்பாற்றி பாலஸ்தீனத்திற்கு அழைத்து வந்தார். டேவிட், சாலமன் ஆகிய யூத மன்னர்களின் பேரரசுகள் சிறப்புற்று இருந்தன; ஜெருசலேமில் யூதர்களின் கோயில் இருந்தது என்று கூறப்பட்டுள்ளதை வரலாறு என்று எடுத்துக்காட்டி, இசுரேலியர்கள் பாலஸ்தீனம் தங்கள் தாயகம் என்று உரிமை கோருகின்றனர்.
ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் ரோமானியப் பேரரசு பாலஸ்தீனத்தைக் கைப்பற்றியது. அதனால் யூதர்கள் ரோமானிய அரசிடம் பகை பாராட்டினர். ஏசு கிறிஸ்து ஒரு யூதர். அவர் காலத்திலேயே யூதர்களில் 75 விழுக்காட்டினர் பாலஸ்தீனத்திற்கு வெளியில் பல நாடுகளில் வாழ்ந்திருந்தனர்; பாலஸ்தீனம் பாலை நிலமும் வறண்ட பகுதிகளும் கொண்டது என்பதால் வாழ்வாதாரத்திற்காக வெளிநாடுகளுக்குச் சென்றனர் என்று இசுரேலிய வரலாற்று ஆய்வாளர் எழுதியுள் ளார். ரோமப் பேரரசு கிறித்துவ மதத்தைத் தழுவிய பின், கிறித்துவத்தின் கொள்கைகளை ஏற்க மறுத்தும், தங்கள் மதக் கொள்கையும் பழக்கவழக்கங்களுமே உயர்ந்தவை என்றும் கருதி, யூதர்களில் பெரும் பகுதி யினர் பிற நாடுகளுக்குச் சென்றனர். ஏசுவைக் கொன்றவன் யூதன் என்பதால் கிறித்துவர்கள் யூதர்களை வெறுத்தனர்.
குடியேறிய நாடுகளில் யூதர்களில் பெரும்பகுதியினர் வணிகத்திலும் வட்டித் தொழிலிலும் ஈடுபட்டனர். கிறித்துவர்கள் யூதர்களை வெறுத்தனர் என்பதுடன், யூதர்கள் தாங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவர்கள் என்று கருதி, தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டனர். 14ஆம் நூற்றாண்டில் யூதர்களின் கடும் வட்டியால் வாழ்விழந்த உழவர்கள் அய்ரோப்பாவில் பல நாடுகளில் யூதர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து தாக்கினர். யூதர்களில் பெரும்பான்மையினர் செல்வர்களாக இருந்தனர்.
முதலாளிய உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கில் மொழி அடிப்படையிலான தேச அரசுகள் உருவாயின. அதனால் பல நாடுகளில் பிரிந்து வாழும் தமக்கும் ஒரு தேசம் வேண்டும் என்ற எண்ணம் யூதர்களுக்கிடையே ஏற்பட்டது. ஆயினும் பெரும்பாலோர் தாம் வாழும் நாட்டில் நெடுங்காலமாக வளமாக வாழ்ந்து கொண்டிருப்பதை விட்டுவிட்டு, புதிய இடத்திற்குச் செல்வதற்குத் தயங்கினர். அகவை மூத்தோருள் சிலர் தங்கள் புனித இடமான ஜெருசலேமிற்குச் சென்று தங்கள் இறுதி நாட்களைக் கழித்தனர். 19ஆம் நூற்றாண்டில் பாலஸ்தீனத்தில் இசுலாமியர் 87 விழுக்காடு; கிறித்த வர்கள் 10 விழுக்காடு; யூதர்கள் 3 விழுக்காடு இருந்தனர்.
1897-இல் முதலாவது யூதப் பேரவை (Zionist Congress) “பாலஸ்தீனத்தில் சட்ட ஏற்புடைய ஒரு நாட்டை உருவாக்கிட பாடுபடுவதே ஜியோனிசத்தின் (யூதவியத்தின்) குறிக்கோள்” என்று அறிவித்தது. 1914 முதல் 1918 வரை முதல் உலகப் போர் நடந்தது. 400 ஆண்டுகள் நீடித்திருந்த துருக்கியரின் ஒத்தாமன் பேரரசு இப்போரில் பிரித்தானியப் படைகளிடம் தோற்றது. போர் நடந்து கொண்டிருந்த போதே 1917 நவம்பர் 2 அன்று பிரிட்டனின் அயலுறவு அமைச்சர் ஆதர் பால்ஃபோர், ‘பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு ஒரு தாயகம் அமைப்பதற்கு பிரிட்டன் துணை நிற்கும்’ என்று அறிவித்தார். 1922இல் சர்வதேச மன்றம் பாலஸ்தீனப் பகுதி பிரிட்டனின் நிர்வாகப் பகுதியாக இருக்கும் என்று முடிவு செய்தது. இரண்டாம் உலகப் போர் (1939-1945) முடியும் வரை பாலஸ்தீனம் பிரிட்டனின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.
1918 முதலே அய்ரோப்பிய நாடுகளிலிருந்து யூதர்கள் பாலஸ்தீனப் பகுதியில் குடியேறத் தொடங்கினர். தங்களிடமிருந்த தங்கக் காசுகளைக் கொண்டு பாலஸ்தீனத்தில் நிலங்களை வாங்கினர். 1933இல் செருமனியில் ஆட்சிக்கு வந்த இட்லர் தூய ஆரிய ஜெருமனிய இனத்தைப் பேணுவது என்ற பெயரால் வரலாறு காணாத அளவில் 60 இலட்சம் யூதர்களைக் கொன்றனர். ஆஸ்திரியா, போலந்து போன்ற நாடுகளிலும் யூதர்கள் தாக்கப்பட்டனர். அச்சமயத்தில் இலட்சக்கணக்கில் யூதர்கள் பாலஸ்தீனத்திற்குச் சென்றனர். இட்லர் அறுபது இலட்சம் யூதர்களைக் கொள்ளாமல் இருந்திருந்தால் இஸ்ரேல் என்கிற நாடே உருவாகி இருக்காது என்று இசுரேலிய வரலாற்று ஆய்வாளர் எழுதியுள்ளார். பெரும் எண்ணிக்கையில் யூதர்கள் குடியேறுவதை எதிர்த்து பாலஸ்தீன அராபியர்கள் போராடினர். பிரித் தானியப் படைகள் இப்போராட்டங்களைக் கடுமையாக ஒடுக்கியது.
வரலாறு நெடுகிலும் மாறிவரும் சமூக-அரசியல் சூழலைத் தங்கள் நலனுக்காகப் பயன்படுத்திக் கொள் வதில் வல்லவர்களானப் பார்ப்பனர்களைப் போன்றவர் களே யூதர்களும். இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானியப் பேரரசைவிட வலிமை மிக்கதாக அமெரிக்கா வளர்ந்தது. எனவே 1942-இல் உலக யூத மாநாடு, அமெரிக்காவுடன் உறவை மேம்படுத்தி இனி அமெரிக்காவை மய்யமாகக் கொண்டு இயங்குவது என்று தீர்மானித்தது. அதனால் இன்று அமெரிக்காவின் நிதி, அரசியல், அதிகாரம் முதலானவற்றில் பெரும் ஆதிக்கம் செலுத்துவோராக யூதர்கள் விளங்குகின்றனர்.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட முதலாளித்துவ நாடுகளின் அழுத்தத்தால் அய்க்கிய நாடுகள் அவை பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த பாலஸ்தீனத்தை பாலஸ்தீனம், இசுரேல் என்று இரு நாடுகளாகப் பிரிக்கும் தீர்மானத்தை 1947 நவம்பர் 27 அன்று இயற்றியது. பாலஸ்தீனத்தில் அப்போது 30 விழுக்காட்டினராக இருந்த இசுரேலியர்களுக்கு 55 விழுக்காடு நிலப்பகுதி யையும், 70 விழுக்காட்டினராக இருந்த பாலஸ்தீனியர் களுக்கு 43 விழுக்காடு நிலப்பகுதியையும் ஒதுக்கியது.
1948 மே 14 அன்று பிரிட்டன் பாலஸ்தீனத்தி லிருந்து தன் ஆட்சியை விலக்கிக் கொள்வதாக அறி வித்தது. அதே நாளில் யூதத் தலைவர்கள் இசுரேல் நாடு அமைக்கப்பட்டதாக அறிவித்தனர். அதே நாளில் இசுரேலின் முதல் பிரதமராக டேவிட் பென் குரியன் பதவி ஏற்றார். இதனால் கொதித்தெழுந்த பாலஸ்தீனர்களின் அரபு விடுதலைப் படையினர் இசுரேல் மீது தாக்குதல் தொடுத்தனர். அடுத்த நாள் எகிப்து, ஜோர்டான், சிரியா, லெபனான், ஈராக் உள்ளிட்ட அரபு நாடுகளின் படைகள் இசுரேலைத் தாக்கின. இதற்கு முன்பு பாலஸ்தீனத்திற்குக் குடியேறிய யூதர்கள் நவீன ஆயுதங்களுடன் பிரித்தானியக் கப்பல்களில் வந்தனர்.
இத்தாக்குதலை எதிர்கொள்ள யூதர்கள் முன்பே திட்ட மிட்டிருந்தனர். அமெரிக்கா, சக்தி வாய்ந்த விமானங்களை அளித்தது. பிரிட்டனும் பிரான்சும் அதிநவீன ஆயுதங் களை இசுரேலுக்கு அளித்தன. அதனால் அரபுப் படைகள் இப்போரில் தோற்றன.
வெற்றி பெற்ற இசுரேல் பாலஸ்தீனத்தின் 78 விழுக்காடு நிலத்தைக் கைப்பற்றிக் கொண்டது. பாலஸ்தீனர்களின் 530 கிராமங்களைத் தகர்த்து அவ்விடங்களில் வயல்களையும் காடுகளையும் உருவாக் கியது. இப்போரில் ஏழு இலட்சம் பாலஸ்தீனியர்கள் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து அடித்து விரட்டப் பட்டனர். இவர்கள் பல அயல்நாடுகளில் அகதிகளாக வறுமையில் உழன்று கொண்டிருக்கின்றனர். ஆயினும் இப்போரின் முடிவில் காசா பகுதியை எகிப்தும் மேற்கு கரைப் பகுதியை ஜோர்டனும் கைப்பற்றின. காந்தியார் 1938இல் பாலஸ்தீனத்தில் யூதக் குடியேற்றத்தைக் கண்டித்தார். ‘இங்கிலாந்து எப்படி ஆங்கிலேயர்களுக்கு உரிமையான நாடோ அதேபோல் பாலஸ்தீனம் பாலஸ்தீனியர்களுக்கு உரியது’ என்று கூறினார்.
1965 முதல் யாசர் அராபத் தலைமையிலான பாலஸ்தீன விடுதலை இயக்கம் (PLO) பாலஸ்தீன விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடி வந்தது. 1967ஆம் ஆண்டு அரபு நாடுகளுக்கும் இசுரேலுக்கும் இடையே நடந்த ஆறு நாட்கள் போரில் இசுரேல் வென்றது. எகிப்திடமிருந்து காசாவையும் ஜோர்டனிட மிருந்து மேற்குகரைப் பகுதியையும் கைப்பற்றியது. 1973இல் நடந்த போரில் சிரியாவிடமிருந்து கோலன் குன்றுகள் பகுதியைக் கைப்பற்றியது. மேற்குக் கரைப்பகுதியில் இசுரேல் ஆறு இலட்சம் யூதர்களைக் குடியேற்றி 90 விழுக்காடு நிலங்களைக் கைப்பற்றியது. காசாவிலும் ஆயிரக்கணக்கான யூதர்கள் குடியமர்த்தப் பட்டனர். இசுரேல் 2002இல் மேற்குக்கரையில் பாலஸ்தீனக் குடியிருப்புகளைச் சுற்றி சுவர் எழுப்பியது. 2006இல் காசாவில் ஹமாசு ஆட்சிக்கு வந்தபின் இதேபோல் இருபது அடி உயரத்திற்கு சுவர் எழுப்பி, அதையொட்டி வேலிகளும் அமைத்தது. இவ்விரு பகுதிகளிலும் வாழ்ந்து வரும் பாலஸ்தீனர்களின் உரி மைகள் பறிக்கப்பட்டு, நாள்தோறும் பலவகையான கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
இட்லர் யூதர்களுக்குக் கொடுமைகள் இழைத்தது போலவே இப்போது இசுரேல் அரசு பாலஸ்தீனயர்களை ஒடுக்கி வருகிறது. இது ஓர் இன அழிப்பு நடவடிக் கையே ஆகும்.
1987இல் காசாவில் அகதிகள் முகாமில் இருந்த பாலஸ்தீனர்கள் இசுரேலியப் படைக்கு எதிராக ஆயுதம் ஏதும் இல்லாமல் ‘இன்டிபதா’ என்று அழைக்கப்படும் பேரெழுச்சிப் பேராட்டத்தை நடத்தினர். இதில் 400 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். 1988இல் அல்ஜிரியாவிலிருந்து செயல்பட்ட யாசர் அராபத் பாலஸ்தீன நாடு அமைக்கப்பட்டதாக அறிவித்தார். 1993-95 காலக்கட்டத்தில் இசுரேலுக்கும் அராபத் அமைப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், இசுரேல் கைப்பற்றியுள்ள பகுதியில் சுதந்தர பாலஸ்தீனம் அமைப்பது என்பது ஏற்கப்பட்டது. இது ஆஸ்லோ ஒப்பந்தம் எனப்படுகிறது. இசுரேல் பிரதமர் ராபினும் அராபத்தும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டனர். இந்த ஒப்பந்தப்படி காசா மற்றும் மேற்குக்கரைப் பகுதியிலிருந்து இசுரேலியப் படைகள் படிப்படியாக வெளியேறும். 1995இல் இசுரேலியப் பிரதமர் ராபின் தீவிரவாத இசுரேலியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆஸ்லோ ஒப்பந்தத்தை இசுரேல் மதித்து நடக்கவில்லை. யாசர் அராபத்தின் சமரச ஒப்பந்தத்தை ஏற்க மறுத்த இளைஞர்கள் ஹமாசு இயக்கத்தைத் தொடங்கினர்.
07.10.2023 அன்று ஹமாசு தாக்கியதால் தான் இசுரேல் தற்காப்புக்காகத் திருப்பித் தாக்குகிறது என்று கூறுவது ஒரு ஏமாற்று. கடந்த 75 ஆண்டுகளில் பாலஸ்தீனர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை அறிந்த எவரும் இதை ஒப்பார்.
நவம்பர் 26 முதல் நான்கு நாட்களுக்குப் போர் நிறுத்தமும் பிணைக் கைதிகள் பரிமாற்றமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது நீடித்த போர் நிறுத்தமாக ஆக வேண்டும். காசாவில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியவர்கள் வீடு திரும்ப உடனடியாக அனு மதிக்க வேண்டும். உதவிப் பொருட்கள் தேவையான அளவில் காசாவுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். தகர்க்கப்பட்ட வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மீண்டும் கட்டியெழுப்ப உலக சமூகம் உதவிட வேண்டும்.
தற்போதுள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் இசுரேலியக் குடியேற்றங்களை அகற்றி, சுதந்தர பாலஸ்தீனத்தை அமைப்பது மட்டுமே அரபு மண்ணில் நீடித்த அமை திக்கு வழிகோலும். ஒடுக்கப்படும் மக்களின் பக்கம் நிற்பதே மாந்தநேயத்தையும் மனித உரிமைகளையும் சனநாயகத்தையும் காப்பதாகும்.
- க.முகிலன்