E20 எனப்படும் ஒரு வகைப் பெட்ரோலை 2025க்குள் நாடு முழுவதும் விநியோகிக்கும் திட்ட இலக்கினை கடந்த ஜூன் 2021ல் வெளியிட்டிருக்கிறது ஒன்றிய அரசின் திட்டக் குழுவான நிதி ஆயோக். “இந்த வகை பெட்ரோலைப் பயன்படுத்தும் போது வாகனங்களில் இருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வின் (Carbon Emission) அளவு குறைவதோடு, வாகன எரிவாயு தேவைக்காக முழுக்க இறக்குமதியை சார்ந்திருப்பதையும் சற்று குறைக்கலாம்; மேலும் விவசாய மூலப்பொருளில் இருந்து எத்தனால் தயாரிப்பதால் விவசாயிகள் பலன் பெறுவர்” என்று நிதி ஆயோக் வெளியிட்ட தனது செயல்திட்ட அறிக்கையில் கூறுகிறது. உண்மையில் மக்களுக்கு நன்மை செய்யத்தான் இந்த திட்டமா?

E20 பெட்ரோல் என்பது 20% எத்தனால் (Ethanol) கலந்த பெட்ரோல் (பெட்ரோல் 80%, எத்தனால் 20%). எத்தனால் அல்லது ஆல்கஹால் பெரும்பாலும் கரும்பு சர்க்கரை ஆலைகளில், மொலாசஸ் (Molasses) எனப்படும் சர்க்கரைப் பாகில் இருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. மட்டுமல்லாமல் சோளம், அரிசி போன்ற தானியங்களை மூலப்பொருளாக (Feed stock) கொண்டும், உயிரி மற்றும் விவசாயக் கழிவுகள் மூலமும் எத்தனால் தயாரிக்க முடியும்.

மது, பெயிண்ட் போன்ற பொருட்களில் கலக்கும் கரைப்பான் (Solvent), பல்வேறு மருந்துகள், சானிடைசர், அழகு சாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கவும் எத்தனால் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இதனை வாகனங்களில் எரிபொருளாக பெட்ரோலுடன் கலந்தும் பயன்படுத்த முடியும். இந்த எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலுக்காகத்தான் ஏழை எளிய மக்களை வஞ்சிக்க நினைக்கிறது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு.modi in e20 meeting

(பிரதமர் மோடி E20 பெட்ரோல் விநியோகத்தைத் தொடங்கி வைக்கிறார்.)

கடந்த பிப்ரவரி 06, 2023 அன்று பிரதமர் மோடி பெங்களூருவில் நடந்த நிகழ்வொன்றில் E20 பெட்ரோல் விநியோகத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய மோடி, “2013-14ல் 1.5% ஆக இருந்த இருந்த பெட்ரோல்- எத்தனால் கலப்பு விகிதத்தை தற்போது 10% ஆக சாத்தியப்படுத்தி இருக்கிறோம். தற்போது 20% விகித இலக்க்கினை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

இந்திய ஒன்றியத்தின் பெட்ரோல் எரிபொருள் நுகர்வு சென்ற நிதியாண்டில் (2022-2023) 3.5 கோடி டன் ஆகும். இது பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியம் மூலத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த பெட்ரோலில் 10% எத்தனால் (E10) கலந்து விநியோகிக்கும் முறை 2019 தொடங்கி படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு 2022 ஜூன் முதல் எல்லா பெட்ரோல் நிலையங்களிலும் கிடைக்கும்வகையில் செயல்படுத்தப்பட்டுவிட்டது.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலின் அளவைக் குறைத்து உள்நாட்டில் உற்பத்தியாகும் எத்தனாலைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்காகவே ஒன்றிய அரசு இதைச் செய்வதாக சொல்கிறது. இதற்குத் தேவையான எத்தனாலை தயாரிக்க வடிப்பாலைகளின் (Distilleries) உற்பத்தி திறனை 1016 கோடி லிட்டராக அதிகரிக்க பாஜக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இங்கு தான் அரிசிக்கான பிரச்சனை ஆரம்பிக்கிறது.

எத்தனால் உற்பத்தி

2021இல் எத்தனால் வடிப்பாலைகளின் உற்பத்தி திறன், சர்க்கரைப் பாகு மூலம் 426 கோடி லிட்டரும், உணவு தானியங்கள் மூலம் 258 கோடி லிட்டரும் என்கிற அளவில் இருந்தது. இதனை, 2025க்குள், சர்க்கரைப் பாகு மூலம் 760 கோடி லிட்டராகவும், உணவு தானியங்கள் மூலமுமாக 740 கோடி லிட்டராகவும் அதிகப்படுத்த ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் E20 பெட்ரோலுக்கான 1016 கோடி லிட்டர் மற்றும் இதர எத்தனால் பயன்பாட்டுக்கான 334 கோடி லிட்டர் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்கிறது. இதற்காக ஆண்டுக்கு 60 லட்சம் மெட்ரிக் டன் சர்க்கரைப் பாகும், 165 லட்சம் மெட்ரிக் டன் தானியங்களும் தேவையாக இருக்கும். தானியங்கள் எனும் போது சோளம் மற்றும் அரிசியைத்தான் இதற்காக பயன்படுத்த முடியும். சோளத்தை மூலப்பொருளாக கொண்டு எத்தனால் தயாரிக்க போதுமான தொழில்நுட்பம் இந்தியாவில் இல்லை. மாறாக சர்க்கரைப் பாகை மூலப்பொருளாக கொண்டு இயங்கும் எத்தனால் வடிப்பாலைகளை அரிசியையும் மூலப்பொருளாக கொண்டு செயல்படும் வகையில் மாற்ற முடியும்.

இந்தப் பின்னணியில்தான் எத்தனால் தயாரிக்க மூலப்பொருளாக அரிசியைப் பயன்படுத்த மோடி அரசு 2018 முதல் அனுமதியளித்து ஊக்குவித்து வருகிறது. இதற்காக உணவு கழகத்தில் (Food Corporation of India- FCI) மக்களின் உணவு தேவைக்கு விநியோகிப்பதற்காக பாதுகாக்கப்படும் அரிசியை எத்தனால் வடிப்பாலைகளுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது, அயோக்கிய மோடி அரசு. பொது விநியோகத்திற்கான அரிசியை குவிண்டாலுக்கு ரூ. 2000 என்ற மிக மலிவான விலையில் எத்தனால் வடிப்பாலைகளுக்கு கொடுக்கிறது. இதுவே உணவுக் கழகம் (FCI) வெளிச்சந்தைக்கு விற்கும் விலை குவிண்டாலுக்கு ரூ. 3100. அரிசியைக் கொள்முதல் செய்து, இருப்பு வைத்து பாதுகாப்பதற்கே குவிண்டாலுக்கு ரூ‌. 3900 செலவாகிறது.

அதுபோக, எத்தனால் வடிப்பாலைகளுக்கு மானிய வட்டியில் கடன் கொடுத்து ஊக்குவிக்கிறது பாஜக அரசு. இந்த செலவு தனி. இந்த வடிப்பாலைகள் அனைத்தும் தனியார் முதலாளிகளுடையது என்பதும், உத்தர பிரதேசம்தான் அதிகளவில் இந்த ஆலைகளைக் கொண்டிருக்கிறது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தனியார் எத்தனால் வடிப்பாலைகளுக்காக 2025 ஆம் ஆண்டுவரையிலான செயல்திட்டத்தினை உறுவாக்கியிருக்கும் ஒன்றிய அரசு பொதுவிநியோகத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியை நம்பியிருக்கும் மக்களை நேரடியாக வஞ்சித்துக் கொண்டிருக்கிறது.

பாஜகவின் இரட்டை வேடம்

கடந்த ஜூன் மாதம் 23ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை, கர்நாடக உணவு விநியோகத் துறை அமைச்சர் K H முனியப்பா, ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஸ் கோயலை டெல்லியில் அவரது இல்லத்தில் சந்திக்கிறார். புதிதாக ஆட்சி அமைத்த காங்கிரஸ் அமைச்சரான அவர் ‘அன்னபாக்யா’ என்கிற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி விநியோகிக்க ஒன்றிய உணவுக் கழகத்தில் (FCI) இருக்கும் உபரியிலிருந்து தன் மாநிலத்துக்கு கூடுதல் அரிசி வழங்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார். ஆனால், ‘ஒன்றிய அரசிடம் உபரி அரிசி இருப்பில் இல்லை’ எனக் கூறி மறுத்து விட்டார், பியூஸ் கோயல். அவர் மோடியின் அமைச்சரல்லவா? ஏழை எளிய மக்களுக்கு உதவ எப்படி மனம் இரங்கும்? குஜராத் மார்வாடி வியாபாரி யாராவது ஏதேனும் உதவி கேட்டிருந்தால் வீட்டு வாசலுக்கே சென்று நிறைவேற்றியிருப்பார்.

இதற்கு மூன்று நாட்கள் முன் ஜூன் 20, 2023 அன்று டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பியூஸ் கோயல், “கர்நாடக அரசு வேண்டுமானால் வெளிச்சந்தையில் அரிசியை விலைக்கு வாங்கி தன் மக்களுக்கு தாராளமாக விநியோகிக்கட்டும்” என்று திமிர்த்தனமாக கூறினார். “இதே போல தான் தமிழ்நாடு, ஆந்திரா, உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களும் அரிசியைக் கேட்கிறார்கள். அவர்களுக்கும் நாங்கள் தர மறுத்திருக்கிறோம். உணவுக் கழகத்தின் கையிருப்பு அரிசி என்பது இந்திய அரசுக்கு சொந்தமானது. அது 140 கோடி மக்களுக்குமானது. அரிசி விலை என்பது உயரவில்லை. நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் மலிவான விலைக்குத்தான் தற்போது அரிசி கிடைக்கிறது.” என்று பாஜககாரனுக்குரிய ஏளனத்தோடு பத்திரிக்கையாளரிடம் கூறினார்.

அதே நாள் பெங்களூருவின் ஃப்ரீடம் பார்க்கில் பாஜகவைச் சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மாய், ‘கர்நாடக காங்கிரஸ் அரசு இலவச அரிசி கொடுக்காமல், சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றவில்லை’ எனக் கூறி போராட்டம் நடத்தினார். பாஜகவினர் எப்பேர்ப்பட்ட நயவஞ்சக அயோக்கியர்கள் என்பதையும், உழைக்கும் மக்களைப் பற்றி சிறிதும் அக்கறையற்றவர்கள் என்பதையும் இதிலிருந்து நாம் தெள்ளத்தெளிவாக அறியலாம்.

காவிரி விடயத்திலும் கூட பாஜகவின் இதே போன்ற இரட்டை வேடம் நாம் அனைவரும் அறிந்ததே.

இது ஒருபுறம் இருக்க, அரிசி விலை உயரவேவில்லை என்று கூறிய ஒரே மாதத்தில் (ஜூலை 20, 2023 அன்று) பியூஸ் கோயல் அமைச்சகத்தின் கீழ் வரும் அயல்நாட்டு வர்த்தக இயக்குநரகம், உள்நாட்டில் அரிசித் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதை தடை செய்தது. இந்த முடிவால் வெளிநாட்டில் வாழும் பல லட்சக்கணக்கான தென்னிந்திய மக்கள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.rice for oil(2020-21 தொடங்கி FCI எத்தனால் வடிப்பாலைகளுக்கு கொடுத்திருக்கும் அரிசி)

இவ்வாறு ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்ட அரிசி, ஏழை மக்களுக்குக் கூட கொடுக்கப்படாத அரிசி பிறகு எங்கே செல்கிறது? எத்தனால் தயாரிப்பதற்காக… ஆம். உணவுக் கழகத்திலிருந்து 2020-21ல் முதல் முறையாக 0.49 லட்சம் மெட்ரிக் டன் அரிசியையும், 2021-22ல் 10.68 லட்சம் மெட்ரிக் டன் அரிசியையும் 2022 டிசம்பர் முதல் 2023 ஜூலை 10 வரை 13.05 லட்சம் மெட்ரிக் டன் அரிசியையும் எத்தனால் உற்பத்தி செய்ய வடிப்பாலைகளுக்கு வாரி வழங்கியுள்ளது, பாஜக அரசு. மேலும் நவம்பர் மாதத்திற்குள் 19 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை வழங்க திட்டமிட்டுள்ளது. இது சென்ற ஆண்டைவிட 3 மடங்கு அதிகம்.

ஏழை எளிய மக்களுக்கு உணவு தானியங்கள் கொடுப்பதே உணவுக் கழகத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் மோடி அரசு உபரி அரிசியை தனியார் வடிப்பாலைகளுக்கு வழங்குவதற்கு இலக்கு வைத்து செயல்படுகிறது. வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் கீழ் தனியார் வணிகர்களுக்கு கிலோ ரூ‌.35.40க்கு விற்கிறது. ஆனால் அதே திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு அரிசியை விற்க மோடி அரசு மறுக்கிறது. இதனால் அரிசி விலை வெளிச்சந்தையில் அதிகரிக்கவே செய்யும்.

மாநிலங்களில் உணவு நெருக்கடி

வேறு வழியின்றி, உணவுக் கழகம் உபரி அரிசியை வழக்கமாக அளிக்கும் சந்தை விலைக்கே கர்நாடக அரசு வாங்க தயாராக இருப்பதாகவும், ஒன்றிய அரசிடம் உள்ள 262 லட்சம் மெட்ரிக் டன் உபரி அரிசியிலிருந்து மாதம் 2.29 லட்சம் மெட்ரிக் டன் அரிசியைக் கர்நாடகத்துக்கு ஒதுக்குமாறும் கேட்டுக் கொண்டதாக முனியப்பா கூறினார். ஆனால், ‘ஜூன் 12,2023 முதல் மத்திய தொகுப்புக்குரிய உபரி அரிசியை வெளிச்சந்தை திட்டத்தில் (Open Market Sale Scheme) மாநிலங்களுக்கு விற்பதில்லை’ என ஒன்றிய அரசு அறிவித்துவிட்டது. அரிசியை அண்டை மாநிலங்களில் இருந்தும் கொள்முதல் செய்ய முடியாததால் 1.28 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு தேர்தல் வாக்குறுதியில் சொன்ன 5 கிலோ இலவச அரிசிக்கு பதில் ஒரு கிலோ அரிசிக்கு ரூ. 34 எனும் விலையில் 170 ரூபாயை மாதாமாதம் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தும்விதமாக ‘அன்னபாக்யா’ திட்டத்தை மாற்றி தற்போது செயல்படுத்தி வருகிறது, கர்நாடக அரசு.

பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாலும், நெல் உற்பத்தியும் அரசின் கொள்முதலும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்திருத்து வந்திருப்பதாலும் தமிழ்நாடு அரசு, ரேசன் கடைகளில் அரிசி விநியோகத்தை தற்சமயம் சமாளித்துக் கொண்டிருக்கிறது. கர்நாடகா அரசு, உரிய நேரத்தில் போதிய காவிரி நீரை தராமல் வஞ்சிக்கும் நிலையிலும் தமிழ்நாடு நெல் உற்பத்தியை கணிசமாக அதிகரித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (TNCSC) மூலமாக நெல் கொள்முதல் செய்யும் ஒன்றிய உணவுக் கழகம் அதனை பொது விநியோகத் திட்டத்திற்கும் மதிய உணவுத் திட்டங்களுக்கும் பயன்படுத்துவதை அனுமதிக்கிறது. இதில் ஏற்படும் பற்றாக்குறையை மத்திய தொகுப்பில் இருந்து உணவுக் கழகம் கொடுக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை, பொது விநியோகத் திட்டத்துக்காக தமிழ்நாட்டுக்கு ஒதுக்கீடு செய்வதை ஆண்டுக்கு ஆண்டு குறைத்துக் கொண்டு வருகிறது. எதிர்காலத்தில் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்தின் நிலை வரலாம். ஒன்றிய அரசின் இந்த செயல்பாடுகள், சாமானிய மக்களை பொது விநியோகத் திட்டத்திலிருந்து வெளியேற்றி சந்தை விலைக்கே அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் நிலைக்குக் கொண்டு வந்து விடும் அபாயம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மோடி அரசு, உலக வர்த்தக கழகத்தின் வணிக வசதி ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் தான் இது நடக்கிறது. இதனை மே பதினேழு இயக்கம் தொடர்ந்து கூறி வருகிறது.

ஆங்கிலேயன் ஆட்சியில், உணவுப் பஞ்சம் (எ.கா.: மெட்ராஸ் தாது வருடப் பஞ்சம், 1876-1878) தலைவிரித்தாடி, வாழ வழியின்றி லட்சக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருந்தபோது, மூட்டை மூட்டையாக அரிசி உள்ளிட்ட தானியங்களை ஐரோப்பாவுக்கு கப்பல்களில் ஏற்றுமதி செய்து சுரண்டினர். அதே போல, தற்போது மோடி ஆட்சியில் எத்தனால் தயாரிக்க அரிசியைத் திருப்பிவிட்டு மக்களை உணவுப் பஞ்சத்தினை நோக்கி தள்ளுகின்றனர் என்பதே உண்மை.

பிரேசில் மாடல்

எத்தனாலைப் பற்றி பேசும் போது லத்தீன் அமெரிக்க நாடான பிரேசிலை தவிர்க்க முடியாது. எத்தனாலை மாற்று எரிபொருளாக வாகனங்களில் பயன்படுத்துவதை பிரேசில் 1975 முதல் செயல்படுத்தி, உயிரி எரிபொருள் (Bio Fuel) பயன்பாட்டில் ஒரு முன்னோடி நாடாக திகழ்கிறது. 100% எத்தனாலில் ஓடும் வாகனங்கள் கூட அங்கு பயன்பாட்டில் உள்ளன. அங்கே தற்போது E27 பெட்ரோல் (எத்தனால் 27%, பெட்ரோல் 73%) என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பிரேசிலின் மிக அதிகமான கரும்பு சாகுபடிதான் இந்த இலக்கை அடைவதற்கு காரணம்.

பிரேசிலின் ‘எத்தனால் மாடல்’ என்பது அந்நாட்டின் அதிக விளைநிலத்தாலும், விவசாய-தொழில்துறை கூட்டுத் தொழில்நுட்பம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டிருப்பதாலும்தான் சாத்தியமாகியிருக்கிறது என்று துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். 40 ஆண்டுகால சீரிய முயற்சியால் உண்டான பிரேசிலின் இந்த ‘எத்தனால் சாம்ராஜ்யம்’, வேறு எந்த நாட்டிலும் சாத்தியமாகாது என்கின்றனர். “பொருளாதார நிபுனர்கள்” தரப்பிலிருந்து வரும் இக்கருத்து ஒருபுறம் இருக்க, பிரேசில் அமேசான் காடுகளை மிக வேகமாக அழித்து சோயா மற்றும் கரும்பு பயிரிட்டு வருகிறது. இதனால் வனம் அழிக்கப்படுவதோடு, பூர்வகுடி அமேசானிய பழங்குடி மக்கள் நிலமற்ற அகதிகளாக ஆக்கப்படுகின்றனர் என்கின்றனர் சமூக செயல்பாட்டாளர்கள். பிரேசில், உள்நாட்டில் இத்தகைய கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி நிற்கும் நிலையில்தான், மோடி அரசு, பிரேசிலை முன்னுதாரணமாகக் கொண்டு தனது எத்தனால் மாடலை செயல்படுத்த முனைகிறது. பல லட்சம் மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தியாவில், உணவு தானியங்களின் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், மிக முக்கியமான உணவு தானியமான அரிசியை வாகன எரிபொருள் தயாரிக்க மடைமாற்றுவது என்பது பாஜக மோடி அரசின் கோமாளித்தனம்.

E20 பெட்ரோல் யாருக்கு பலன்?

எத்தனால் கலப்பு பெட்ரோலால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய மூலப்பொருளின் அந்நிய செலாவணியை ஆண்டுக்கு 30000 கோடி ரூபாய் மிச்சப்படுத்தலாம் என்று ஒன்றிய அரசு கூறுகிறது. அப்படியென்றால் அந்த பலன் மக்களை சென்றடைய பெட்ரோலின் விலையைக் குறைக்க வேண்டும். ஏற்கனவே உக்ரைன் போர் சூழலில் ரசியாவிடமிருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்கிறபோதும், உள்நாட்டு பெட்ரோல், டீசல் விற்பனை விலையை மோடி குறைக்கவில்லை.

ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டுச் செல்லும் வாகன எரிபொருள் பயன்பாட்டாலும், கச்சா மூலப்பொருள் விலை சரி்வாலும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு லாபம் குவித்து கொழுப்பது அம்பானி போன்ற மோடியின் கையாட்கள்தான். எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) ஏற்கனவே சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட சூழலிலும் நுகர்வோர் விற்பனை விலை குறைக்கப்படவில்லை. இதனால் நாட்டில் உள்ள விவசாயிகள் பெருமளவு பலன் பெறுவர் என மோடி அரசு வழக்கம் போல ஆசை வார்த்தைகள் கூறுகிறது. உண்மையில் இந்த திட்டத்தால் பலன் பெறப் போவது தனியார் எத்தனால் வடிப்பாலைகளும், எண்ணெய் நிறுவனங்களும் தான்.

E20 பெட்ரோலை 2025க்குள் அனைத்தும் முழுமையாக விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும் என்பது ஒன்றிய அரசின் இலக்கு. ஏற்கனவே எண்ணெய் நிறுவனங்கள் (Oil Marketing Companies) E20 பெட்ரோலை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்துவதற்கான இலக்கை 2030ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆண்டுக்கு மோடி அரசு குறைத்திருக்கிறது. இந்த இலக்கை குறுகிய காலத்திற்குள் அடைவதற்காக அளவுக்கதிகமான அரிசியை மக்களை ஏமாற்றி வடிப்பாலைகளுக்கு கொடுத்துக் கொண்டிருக்கிறது, ஒன்றிய பாஜக அரசு. உலக நாடுகளின் மத்தியில் “இந்தியா உயிரி எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது’ என்று தம்பட்டம் அடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இத்தனை அவசரமாக குறுகிய இலக்கை வைத்து செயல்படுகிறது, ஒன்றிய அரசு.

ஏழைகளின் பசிக்குக் கொடுக்கப்படாத அரிசி, எத்தனால் வடிப்பாலைகளுக்கு சென்று நம் வாகனங்களுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தப்படுவது அபத்தம். மாநிலங்கள் உற்பத்தி செய்யும் அரிசியை கொள்முதல் செய்து வைத்துக் கொண்டு மக்களுக்கு கொடுக்காமல் தனியார் ஆலைகளுக்கு எத்தனால் எரிபொருள் தயாரிக்க கொடுத்துவிட்டு பாஜக அமைச்சர் திமிராகப் பேசுவது என்ன வகை நியாயம்?

சாமானிய மக்களின் உணவு பாதுகாப்பு முக்கியமா? உயிரி எரிபொருள் பயன்பாட்டில் இந்தியா வேகமாக முன்னேறுவது முக்கியமா? என்று கேட்டால் மோடி அரசு வழக்கம் போல மக்களுக்கு எதிரானதையே தேர்ந்தெடுத்திருக்கிறது.

- மே பதினேழு இயக்கம்

Pin It