2007 ஆம் ஆண்டு சட்டீஸ்கர் மாநிலத்தின் ஹஸ்தேவ் பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்க அதானி குழுமம் அனுமதி பெற்றது. இப்பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டால், அந்த வனப்பகுதியில் உள்ள மரங்களும் எண்ணற்ற வன உயிரினங்களும் பாதிக்கப்படும் என பல்வேறு அரசுத் துறை நிறுவனங்கள் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தன. இருப்பினும் ஒன்றிய அரசிடம் அனுமதி வாங்கி விட்டார் அதானி.
2013-இல் நிலக்கரி சுரங்கம் தோண்ட ஆரம்பிக்கிறார் அதானி. தங்கள் வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் நிலக்கரி சுரங்கம் பாதிக்கும் என அச்சம் அடைந்த கிராம மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுக்கு துணையாக LIFE (Legal Initiative for Forest and Environment) என்ற சட்ட அமைப்பு உதவ அவர்களுக்கு முன் வருகிறது. சுரங்கம் தோண்டும் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்கின்றனர்.
அதே பகுதியைச் சார்ந்த அலோக் சுற்றுலா எனும் சமூக செயல்பாட்டாளர் மக்களை நிலக்கரிச் சுரங்கத் திட்டத்திற்கு எதிராக ஒருங்கிணைக்க முயல்கிறார். அவர் ஒரு முன்னாள் அரசு அதிகாரி. அதே காலகட்டத்தில் ஸ்ரீதர் எனும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் Environics Trust எனும் லாபநோக்கற்ற NGO நடத்தி வருகிறார். அவர் ஆஸ்திரேலியா இங்கிலாந்தில் உள்ள சூழலியல் சூழலியல் நாடுகளுக்கு இக்கிராம மக்களின் நிலையை விவரித்து மின்னஞ்சல் அனுப்புகின்றார். ஜூன் 2019 இல் அதானி நிறுவனத்தின் சார்பாக புரோக்கர் ஒருவர் ஸ்ரீதரை தொடர்பு கொள்கிறார். ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா பகுதியில் அதானியின் நிலக்கரிச் சுரங்கத்தை எதிர்த்து ஸ்ரீதர் வழக்கு தொடுத்திருந்தார். அவ்வழக்கை சுமூகமாக முடித்துக் கொள்வதற்காக அதானி குழுமம் சார்பில் இடைத்தரகர் ஸ்ரீதரோடு பேச முனைகிறார்.எவ்வித சமரசத்திற்கும் சம்மதிக்க மாட்டேன் என ஸ்ரீதர் தெரிவித்து விடுகிறார். இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் வருமான வரித்துறையினர் ஸ்ரீதரை விசாரிக்கின்றனர். அதானிக்கு எதிராக ஸ்ரீதர் தொடங்கிய வழக்கு பின்னர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்படுகிறது. 2020 ஜூனில் சுக்லாவின் போனை பெகாசஸ் மென்பொருளின் உதவி கொண்டு உளவு பார்க்கிறது மோடி அரசு. வாஷிங்டன் போஸ்ட்(Washington Post), பர்பிட்டன் ஸ்டோரிஸ் ஜர்னலிஸம் (Forbidden Stories Journalism) இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரிய வருகிறது. இந்நாள் வரை பெகாசஸ் பயன்பாட்டை மோடி அரசு ஒத்துக் கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை. பெகாசஸ் பயன்பாட்டை விசாரிக்க உச்சநீதிமன்றமே ஒரு குழு அமைத்தது.
2022 செப்டம்பர் 7-ஆம் தேதி, CPR (Center for Policy Research), IPSMF (Independent and Public Spirited Media Foundation), LIFE (Legal Initiative for Forest and Environment), Environics Trust, Oxfam India ஆகிய நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்கின்றனர்.
ஆக்ஸ்பாம் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணம் பெற்று நிலக்கரி சுரங்கங்களுக்கு எதிராகப் போராட தொழிலாளர்களைத் தூண்டியதாக ஒன்றிய அரசு Environics Trust மீது குற்றம் சாட்டியது. வெளிநாட்டு செயற்பாட்டாளர்களுக்கு நிலக்கரி சுரங்கம் பற்றிய தகவல்களைத் தந்தார் என்று Environics Trust நிறுவனர் ஸ்ரீதர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்திய நிறுவனங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ததாகவும், அதானியின் கோட்டா நிலக்கரிச் சுரங்கத்திற்கு எதிராக சதி வேலைகளில் ஈடுபட்டதாகவும் ஸ்ரீதர் மீது ஒன்றிய அரசு குற்றஞ்சாட்டி நோட்டீஸ் அனுப்பியது.
அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்று இந்தியாவின் நிலக்கரி சுரங்கத் திட்டங்களை முடக்க சதி செய்ததாக LIFE நிறுவனத்தின் இணை நிறுவனர் ரித்திக் தத்தா மீது ஒன்றிய அரசு குற்றம் சாட்டியது. அவருடைய மின்னஞ்சல்களை மேற்கோள் காட்டி அமெரிக்காவைச் சார்ந்த சுற்றுச்சூழல் வழக்கறிஞர்களுக்கு இந்தியாவின் 20க்கும் மேற்பட்ட நிலக்கரி திட்டங்களின் தகவல்களை வழங்கியதாக இந்திய அரசு அவர் மீது குற்றம் சாட்டியது. அந்த 20 திட்டங்களில் இரண்டு திட்டங்களில் மட்டுமே அதானி குழுமம் முதலீடு செய்துள்ளது. இருப்பினும் அதானி குழுமத்தின் நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கம் ரித்திக் தாத்தாவுக்கு இருப்பதாக ஒன்றிய அரசு அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். நாட்டு நலனுக்கு எதிரான சதி வேலைகளில் ஈடுபட்டதாகவும் ஒன்றிய அரசு அவர் மீது குற்றம் சாட்டியுள்ளது.
போராட்டக்காரர்களை தூண்டிவிட்டு, ஹஸ்தேவ் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை தடுத்ததாக CPR நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சட்டத்திற்குப் புறம்பாக அமெரிக்க நிதியைப் பயன்படுத்தியதாக CPR நிறுவனத்தின் மீது ஒன்றிய அரசு குற்றம் சாட்டியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் சட்டத்திற்குப் புறம்பாக செயல்படவில்லை என தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
வருமான வரி சோதனை நடைபெற்ற சில வாரங்களில் ஹஸ்தேவ் நிலக்கரிச் சுரங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுவிழந்து விட்டன. செப்டம்பர் 26-ஆம் தேதி ஹஸ்தேவ் நிலக்கரி சுரங்கத்தை எதிர்த்து தொடரப்பட்டிருந்த வழக்கில் ஈடுபட்டிருந்த LIFE நிறுவன வழக்கறிஞர்கள் வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தனர். வழக்கிலிருந்து LIFE நிறுவன வழக்கறிஞர்கள் பின்வாங்கிய அதேநாளில், ஹஸ்தேவ் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை (Phase 2) தொடங்கும் வகையில் மரங்களை வெட்டும் வேலையை வனத்துறையினர் ஆரம்பித்தனர். அதை எதிர்த்த கிராம மக்களை கைது செய்தனர். விசாரணையில் உள்ள உச்சநீதிமன்ற வழக்கை காரணம் காட்டி ஹஸ்தேவ் நிலக்கரிச் சுரங்கத்தின் (Phase 2) திட்டப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப் படுமானால், 2,700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள காடுகள் நிலக்கரிச் சுரங்கத்திற்கு அழிக்கப்படும். 2023இல் LIFE, CPR, Environics Trust நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை இந்திய அரசு முடக்கியது. அதன் விளைவாக இந்நிறுவனங்கள் இழுத்து மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டபடி அதானி குழுமம் ஹஸ்தே காடுகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் பணியை மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.
(வாஷிங்டன் போஸ்ட் (Washington Post) இதழில் ஜுன் 5, 2023 இல் வெளிவந்த கட்டுரையின் அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.)
- சு.விஜயபாஸ்கர்