சூழ்ந்து வரும் சூழற்கேடு! காக்குமா இந்தியக் கவசம்?

EIA REJECT ACTவறுமை ஒழிய வேண்டும், வளம் கொழிக்க வேண்டும். வேலைவாய்ப்புகள் உருவாக வேண்டும், மென்மேலும் பெருக வேண்டும் என்றால் விரைவாகத் தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும். தொழிலுக்குரிய மூலப்பொருட்களைச் சுரங்கம் தோண்டுதல் போன்ற வழிகளில் இயற்கையிலிருந்து பிரித்தெடுத்துப் பதனிட வேண்டும். அல்லது பணப்பயிர் செய்வது போன்ற வழிகளில் நிலத்திலிருந்து விளைவிக்க வேண்டும்.

பொருளாக்க ஆற்றல்களுள் தலைமையாற்றலாகிய உழைப்பாளர்களின் தேவைகளை நிறைவு செய்யவும் இந்தப் பொருளாக்கப் பெருக்கம்தான் வழி. ’உற்பத்திப் பெருக்கம்’ என்ற பெயரிலான பொருளாக்கப் பெருக்கம் மற்றும் சேவைப் பெருக்கம்! வளர்ச்சி என்பது பற்றிய மாந்தர்களின் புரிதல் இப்படித்தான் இருந்தது. இப்போதும் பெருமளவுக்கு இப்படித்தான் உள்ளது. ஈட்டத்தில் (ஈட்டம் = இலாபம்) நாட்டம் கொண்ட முதலிய அமைப்பில் மட்டுமல்ல. மக்கள் நலன் பேணும் குமுகிய அமைப்பிலும் கூட வரம்பற்ற பொருளாக்கப் பெருக்கம்தான் வளர்ச்சிக்கு அடிப்படையாகக் கொள்ளப்பட்டது.

பொருளாக்கப் பெருக்கத்தின் தீத்தாக்கம்

கட்டற்ற பொருளாக்கப் பெருக்கம் இயற்கையில் ஏற்படுத்தக் கூடிய தீத்தாக்கம் பற்றிய பரவலான கவலையே ஒப்பளவில் அண்மைக் காலத்தியதுதான். சுரங்கம் தோண்டுவதற்காக மலைகளை வெட்டிப் பிளப்பது, வேதித் தொழில்கள் வெளியிடும் கழிவுகளாலும் வாயுக்களாலும் நிலத்தையும் சுற்றுச் சூழலையும் மாசுபடுத்துவது, வேளாண் விளைச்சலை விரைவுபடுத்துவதற்காக நிலத்தின் உயிர்ச் சத்தைக் கொள்ளையிடுவது, மாந்தத் தேவைகளுக்காக ஏரிகளைத் தூர்ப்பது, ஆறுகளில் நஞ்சோடச் செய்வது, கடல்களில் மாசு கலப்பது, காற்றையும் மூச்சிரைக்கச் செய்வது, புலனாகாத கதிரியக்கக் குப்பைகள் கொட்டுவது… இவ்வாறெல்லாம் இயற்கையைச் சிதைப்பது மாந்த நலனின் பெயராலேயே மாந்தர் வாழும் சுற்றுச் சூழலைப் பாழாக்குவதாகும்.

நாட்டில் வளர்ச்சி வேண்டும் என்பதற்காக இயற்கைச் சூழலைக் கெடுப்பது வீட்டில் வெளிச்சம் வேண்டும் என்பதற்காகக் கூரைக்குத் தீவைப்பது போன்றதாகும்.

நீங்கள் வாழ்வது குடிசையிலானாலும் மாளிகையிலானாலும் அந்தக் குடிசைக்கும் மாளிகைக்கும் அடிமனையாக இருப்பது எது? இயற்கைதானே? நீர், நிலம், காற்று இல்லாத உலகில் நீங்கள் வீடுகட்டி வாழ முடியாதல்லவா? இந்த எளிய ஏரணம் நம் மூளையில் உறைப்பதற்கு இவ்வளவு காலமாயிற்றா? என்று வியப்பாய் உள்ளது.

தொழில் வளர்ச்சியின் முன்கதைச் சுருக்கம்

தமிழகம் உட்பட இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வேறு நாடுகளும் பிரித்தானியப் பேரரசின் (மற்றும் பிற ஐரோப்பியப் பேரரசுகளின்) காலனியாதிக்கத்திற்கு உட்படுமுன் அல்லது இந்தியா என்ற அரசுக் கட்டமைப்பாக ஒன்றிணைக்கப்படுமுன் நேர் நிறையான பொருளில் ஓரளவு தொழில் வளர்ச்சி அடைந்திருந்தன. வேளாண்மை உள்ளிட்ட இந்தத் தொழில் வளர்ச்சி பெருமளவுக்கு இயற்கையோடு இயைந்த ஒன்றாக இருந்தது. சுற்றுச் சூழலுக்கு அதனால் பெருங்கேடு ஏதும் விளைந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும் அக்காலத்திய உலகப் பொருளியலில் ஒன்றுபட்ட இந்தியாவின் பங்கு 23 விழுக்காடாக இருந்தது. பிரிட்டன் வெளியேறிய காலத்தில் இது வெறும் 3 - 4 விழுக்காடாகச் சரிந்து விட்டது.

பிரிட்டனின் தொழிற்புரட்சித் தேவைகளுக்காக இந்தியாவின் தொழில் வளர்ச்சி அந்த அளவுக்குக் கெடுக்கப்பட்டிருந்தது. அயல் பேரரசின் பொருளியல், அரசியல் தேவைகளுக்காக ஏற்பட்ட தொழில் வளர்ச்சியும் அந்த வளர்ச்சியின் நிழலில் துளிர்த்த சுதேசத் தொழில்களும் நாட்டின் சுற்றுச் சூழலுக்குப் பெருங்கேடு செய்யுமளவுக்குச் சென்றிடவில்லை. ஆனால் சர்வோதயம் உள்ளிட்ட காந்தியப் பசுமை இயக்கத்தில் சூழலியல் கவலைகள் மறைந்திருந்தன.

பிரிட்டனிடமிருந்து 1947இல் இந்தியா விடுமை பெற்ற பின் விரைவான தொழில் வளர்ச்சிக்கென ஐந்தாண்டுத் திட்டங்கள் வகுக்கப்பட்டன. நிலக்கரி, எண்ணை, மாழை (உலோகம்) உள்ளிட்ட அடிப்படைத் தொழில்களுக்கு சோவியத்து உள்ளிட்ட அயல் அரசுகளின் உதவி பெறப்பட்டது. ஆயுதம் செய்யவும் நல்ல காகிதம் செய்யவும், இரும்பைக் காய்ச்சி உருக்கவும் இயந்திரங்கள் வகுக்கவும்… பற்பல தொழில்கள் எழுந்தன.

இந்தியப் பொருளியலின் ஓங்குயர் கொடுமுடிகள் பற்றிப் பேசினார் பண்டித நேரு. எரிபொருள் தேவைகளுக்காக அணுவிசை ஆக்க முயற்சிகளும் தொடங்கப் பெற்றன. தொழில் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க வேளாண் துறையில் பொல்லாத பசுமைப் புரட்சியும் பூத்தது. இந்த வளர்ச்சியெல்லாம் சுற்றுச் சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய விழிப்புணர்வு போதிய அளவுக்கு வளரவில்லை.

அரசமைப்புச் சட்டமும் சூழலியலும்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூன்றாம் பகுதியான அடிப்படை உரிமைகளில் ஒன்றாகச் சூழலியல் உரிமை இடம்பெற வில்லை. உயிர்வாழும் உரிமைக்கும் ஆள்வகைத் தன்னுரிமைக்கும் (வாழ்வுரிமைக்கு) உறுதியளிக்கும் 21ஆம் உறுப்பில் சூழல் காப்புரிமையும் அடங்குவதாக விரித்து விளக்கம் தர மட்டுமே வாய்ப்பிருந்தது. நான்காம் பகுதியான அரசுக் கொள்கையின் திசைநெறிக் கொள்கைகளிலும் கூட முதலில் சுற்றுச் சூழல் பற்றிய குறிப்பே இல்லை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூல வரைவில் சூழலியல் சார்ந்த உரிமையோ நலனோ எதுவும் குறிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. முதன் முதலில் நெருக்கடி நிலைக் காலத்திய 42ஆம் திருத்தத்தில்தான் சூழலியல் தொடர்பான உறுப்பு 48A சேர்க்கப்பட்டது. நான்காம் பகுதியில் அரசுக் கொள்கையின் திசைநெறிக் கொள்கைகளில் ஒன்றாக ”சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும், நாட்டின் காடுகளையும் கானுயிரையும் காக்கவும் அரசு பாடுபடும்” என்று சேர்த்துக் கொள்ளப்பட்டது.

இதே 42ஆம் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் ஊடாகப் புதிதாய்ச் சேர்க்கப்பட்ட ‘IV- A. அடிப்படைக் கடமைகள்’ என்ற பகுதியில் “காடுகள், ஏரிகள், ஆறுகள், கானுயிர் உள்ளிட்ட இயற்கைச் சூழலைக் காப்பதும் மேம்படுத்துவதும், உயிர் வாழ்வனவற்றிடம் கருணை கொள்வதும்” இந்தியக் குடிமக்களுக்குரிய கடமைகளாக விதிக்கப்பட்டன (உறுப்பு 51A).

ஆனால் முதலியத்தின் ஈட்ட வெறியும் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்பின்மையும் சேர்ந்து இந்தியாவில் பல வகையிலும் இயற்கையைச் சிதைக்கும் அறிகுறிகள் அப்போதே வெளிப்பட்டன. இந்த அழிவுப் போக்குக்கு எதிரான குரல்கள் ஒலித்தன என்றாலும் வலுப் பெறாதிருந்தன. உலகு தழுவிய அளவில் இடம்பெற்ற இரு போக்குகள்: ஒன்று, விரைவான தொழில்துறைப் பெருக்கத்தினால் காற்று வெளியில் பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வு பெருகியதும், மற்றொன்று இதற்கு எதிராகப் பசுமை இயக்கங்களின் வளர்ச்சியும் ஆகிய இவ்விரு போக்குகளும் இந்தத் துணைக் கண்டத்திலும் ஓரளவு எதிரடித்தன. புவி வெப்பமாதல், காலநிலை மாற்றம் பற்றிய எச்சரிக்கையும் வந்து சேர்ந்தது.

போபால் படுகொலை

இந்தப் பகைப் புலத்தில்தான் 1984 திசம்பர் 2-3 இரவில் மத்தியப் பிரதேசம் போபாலில் அந்தக் கொடிய துயரம் நிகழ்ந்தது. அது விபத்தென்றது அதிகாரம். இல்லை. படுகொலை என்றது சூழலியலின் சீற்றக் குரல். பன்னாட்டுப் பெருங் குழுமத்தின் ஈட்ட நோக்கு இழைத்த படுகொலை!

யூனியன் கார்பைடு தொழிலகத்திலிருந்து மெதில் ஐசோ சயனைடு என்ற நச்சு வாயு வெளியேறியதால் பல்லாயிரம் உயிர்கள் மடிந்தன. இலட்சக் கணக்கானோர் மீளா நோயுற்றனர்.

சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டம்

இவ்வளவு பெரிய துயரத்தின் எதிரொலியாகத் துணைக் கண்டமெங்கும் பரவிய விழிப்புதான் 1986ஆம் ஆண்டு சுற்றுச் சூழல் (பாதுகாப்பு) சட்டம் பிறக்க முதன்மைக் காரணமாயிற்று. இதுதான் இந்தியாவில் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கான முதல் சட்டம் – முன்பே கானுயிர் பாதுகாப்புச் சட்டம் (1972), நீர் நிலைச் சட்டம் (1974), காற்று மாசுத் தடுப்புச் சட்டம் (1981) ஆகியவை இருப்பினும் 1986ஆம் ஆண்டுச் சட்டம்தான் முழுமையான சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டமாக அமைந்தது.

இது ஓட்டைகள் மலிந்த சட்டமாக இருப்பினும் முழுமையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு தேவைப்படுவதன் முதல் குமுக அறிந்தேற்பாக அமைந்தது. இது தவிர 2002ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உயிரியல் பன்மையச் சட்டமும் உள்ளது. இந்திய அரசில் சுற்றுச் சூழல், வனங்கள், காலநிலை மாறுதல் துறை என்ற ஓர் அமைச்சகமே உள்ளது. சுற்றுச்சூழல் சட்ட நெறிகள் செயலாவதற்கான பொறுப்பு நடுவண் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்குள்ளது. சுற்றுச்சூழல் தகவல் மையம் என்ற அமைப்பும் இயங்கி வருகிறது.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு

தனியாட்களோ குழுமங்களோ எந்த ஒரு தொழில் தொடங்குவதாக இருந்தாலும் அதனால் சுற்றுச் சூழலுக்கும் மாந்தர்களுக்கும் ஏற்படக் கூடிய நன்மை தீமைகளை முன் கூட்டியே மதிப்பாய்வு செய்வது, அதனடிப்படையில் மட்டுமே தொழில் தொடங்குவதை ஏற்பது அல்லது மறுப்பதற்கான வழிமுறைக்குத்தான் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பாய்வு என்று பெயர்.

1986ஆம் ஆண்டு செயலுக்கு வந்த சுற்றுச் சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் அடிப்படையில் 1994 சனவரி 27ஆம் நாள் வெளியிடப்பட்ட குறிப்பாணையின்படி, சுற்றுச் சூழல் தாக்க மதிப்பாய்வு அறிவிக்கை சட்டப்படிக் கட்டாயமாக்கப்பட்டது. அடுத்து 2006ஆம் ஆண்டு இதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. 2006ஆம் ஆண்டு அறிவிக்கையில் மேலும் சில திருத்தங்கள் செய்து 2020 மார்ச் 23ஆம் நாள் நடுவணரசு ஒரு வரைவு அறிவிக்கையை அணியமாக்கி ஏப்ரல் 1 ஆம் நாள் அரசிதழில் வெளியிட்டது.

புதிய வரைவு அறிவிக்கை

முதலில் இந்தப் புதிய வரைவு அறிவிக்கை கொரோனா முடக்கக் காலத்தில் சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் இணையதளத்தில் மட்டும் வெளியிடப்பட்டு, 2020 மே 12க்குள் மக்கள் கருத்துக் கூறுமாறு கேட்கப்பட்டது. தொலைக்காட்சிகளிலோ ஏடுகளிலோ இது குறித்துச் செய்திகளோ விவாதங்களோ இடம் பெறவில்லை. கொரோனா நெருக்கடியாலும் முழு முடக்கத்தாலும் வாதாடவோ போராடவோ முடியாத சூழலைப் பயன்படுத்தி மோதி ஆட்சி சுற்றுச்சூழலுக்கு எதிரான தன் வஞ்சக நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியே இது.

அறுபது நாட்களுக்குள் மக்களும் மாநில அரசுகளும் கருத்துத் தெரிவிக்கலாம் என்று நடுவணரசின் சுற்றுச் சூழல் அமைச்சகம் கூறியது. கொரோனா பெருந் தொற்றைப் பயன்படுத்தி அவசர அவசரமாக மோதி அரசு சட்டத் திருத்தம் செய்ய முயல்வதாக சூழலியலர் குற்றஞ்சாட்டிய பின்னர் ஜூன் 30 வரை கால நீட்டிப்பு தரப்பட்டது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு கால அவகாசத்தை ஆகஸ்டு 13 வரை நீட்டியுள்ளனர். ஏன் இத்துணை அவசரம் என்ற வினாவையும் உச்ச நீதிமன்ற நீதியர் கேட்டுள்ளனர். மேலும் கால நீட்டிப்பு பெறும் முயற்சியில் சூழலியலரும் அதைத் தடுக்கும் முயற்சியில் இந்திய அரசும் ஈடுபட்டுள்ளன.

எதிர்ப்பியக்கம்

சூழலியல் இயக்கங்களும் இடது கட்சிகளும் குடியாட்சிய அமைப்புகளும் பிற மக்களியக்கங்களும் விழிப்போடிருந்து சுற்றுச்சூழல் மதிப்பாய்வு-2020 வரைவை எதிர்த்து ஓங்கிக் குரல் கொடுத்து வருகின்றன. குமுக ஊடகங்களில் முனைப்பான பரப்புரை இயக்கம் தொடர்ந்து நடைபெறுகிறது.

கையொப்ப இயக்கங்கள், இணையவழிப் போராட்டங்கள், மின்னஞ்சல் விண்ணப்பங்கள் என்று பல வகையிலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு-2020 (EIA 2020) வரைவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்திய அரசின் எதிர்வினை என்ன தெரியுமா? இந்த வரைவுக்கு எதிராகப் பேசியும் எழுதியும் வந்த வலைத்தளங்களைத் தடை செய்ததுதான்! கருத்துக் கேட்பார்களாம்! கருத்துச் சொன்னால் தடுப்பார்களாம்!

சுற்றுச் சூழல் தாக்க மதிப்பாய்வு என்ற வழிமுறை 1960களிலேயே மேலைநாடுகளுக்கு வந்து விட்டது. சற்றொப்ப இருபதாண்டு கழித்தே இந்தியாவில் இது செயலுக்கு வரலாயிற்று. பொதுவாகச் சொன்னால், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு என்பதைப் பெருங்குழுமங்கள் ஒரு தொல்லையாகவும் இடையூறாகவுமே பார்க்கின்றன. இது அவர்களுக்குத் தேவையற்ற தலையிடிதான்! வரி ஏய்ப்பு போல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நெறிகள் ஏய்ப்பு என்பதே வாடிக்கையாக உள்ளது. அரசும் அதிகாரிகளும் பெரும்பாலும் பெருங்குழுமங்களின் கைக்கருவிகளாகவே செயல்படுவதும் இந்திய ஒட்டுறவு முதலியத்தில் (crony capitalism) எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுதான். மோதியையும் அம்பானியையும் பிரிக்கும் அளவுக்கு சூழலியல் வலிமை கொண்டதா என்ன?

என்ன பயன்?

அப்படியானால் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்ட நெறிகளால் என்ன பயன்? சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வால் என்ன பயன்? இவை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான போராட்டத்தில் மக்கள் கையில் அற வலிமை கொண்ட கோட்பாட்டுக் கருவிகளாகப் பயன்படுகின்றன. இயற்கை சிதைக்கப்படுவதை எதிர்த்துப் போராட மக்களுக்கு விழிப்பூட்டும் சூழலியல் ஆர்வலர்கள் இந்தச் சட்டநெறிகளை, குறிப்பாக சுற்றுச் சூழல் தாக்க மதிப்பாய்வு வழிமுறையைச் சிறப்பாகக் கைக்கொண்டு வருவதற்கு பசுமைத் தீர்ப்பாயங்களிலும் நீதி மன்றங்களிலும் நடந்து வரும் வழக்குகளே சான்று. தமிழ்நாடு இதற்குச் சரியான முற்காட்டாக அமைந்துள்ளது.

தமிழ்நாட்டு மக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான போராட்டத்தில் உயிரீகம் செய்து பெற்ற ஒரு வெற்றி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாகும். கூடங்குளம் அணுவுலைக்கு எதிரான நீண்ட போராட்டம் அதன் நேரடி நோக்கத்தில் வெற்றி பெறாத போதும் இந்தியாவெங்கும் விரைந்து ஏராளமான அணுவுலைகள் அமைக்கும் அரசுத் திட்டத்துக்கு வேகத்தடையாக அமைந்தது. போடிமெட்டில் நியூட்ரினோ, சேலம் எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்களையும் அனைத்து வகையிலும் வலிமை பொருந்திய அரசுகளால் சட்டுபுட்டென்று நிறைவேற்ற முடியவில்லை.

இந்தப் போராட்டங்களில் மக்கள் பங்கேற்புக்குத் துணையாக சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்ட நெறிகளும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வும் அவற்றின் அடிப்படையிலான நீதிமன்ற வழக்குகளும் உதவின. இவ்வகையில் பூவுலகின் நண்பர்கள், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரின் பங்களிப்பை அறிந்தேற்றுப் போற்ற வேண்டும்.

தமிழகத்தை வஞ்சிக்க முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் கேரளத்தின் முயற்சிக்கும், தமிழகத்தின் காவிரியுரிமையை மேலும் பறிக்கும் வகையில் மேக்க தாட்டுவில் புதிய அணைகட்டும் கர்நாடகத்தின் முயற்சிக்கும் அவ்வப்போது தடை போடுவதிலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு வழிமுறை நமக்கு உதவியுள்ளது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்ட நெறிகளை மேலும் கடுமையாக்க வேண்டும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வை மக்கள் நலனும் இயற்கை நலனும் கருதி மேலும் செம்மை செய்ய வேண்டும் என்று சூழலியல் அமைப்புகள் கோரிவந்த நிலையில் இந்திய அரசின் சிந்தனையும் செயலும் நேரெதிர்த் திசையில் சென்றன.

பச்சை வேட்டை

1990களில் தொடங்கிய புதுத் தாராளிய முதலியத்தின் கட்டற்ற சுரண்டல் வேட்டைதான் 2004இல் மன்மோகன் சிங் ஆட்சியில் தண்டகாரண்யப் பழங்குடிகள் மீதான பச்சை வேட்டைக்கு வழிகோலிற்று. இது பழங்குடி மக்கள் மீதும் இயற்கையன்னை மீதும் நடத்தப்பட்ட மூர்க்கத்தனமான கொடுவேட்டை. தங்கள் உயிரையும் வனத்தையும் இயற்கைச் சூழலையும் பாதுகாத்துக் கொள்வதற்கான அம்மக்களின் வீரப் போராட்டம் இன்றளவும் தொடர்கிறது.

இத்துணைக் காலமும் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டமும், சுற்றுச் சூழல் தாக்க மதிப்பாய்வும் சற்றே இடையூறாக இருப்பதை ஆளும் வகுப்பும் அதன் அரசும் வெறுத்தன. இந்த விளையாட்டின் விதிகளைத் திருத்தி அவற்றை ஒன்றுமில்லாமலாக்க ஒரு வாய்ப்புக்காகக் காத்திருந்தன. அப்படியொரு வாய்ப்பாக நரேந்திர மோதி அரசுக்கு கொரோனா பெருந்தொற்று அமைந்து விட்டது.

பாசிசத்தின் வசந்த காலம்

பாசிசத்துக்கு வசந்த காலமாக வாய்த்த கொரோனாவைப் பயன்படுத்தி தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தப்படுவது போல் சூழல்நலச் சட்டங்களும் திருத்தப்படுகின்றன என்பதை எளிதில் விளங்கிக் கொள்ளலாம்.

கேட்டிலும் ஒரு நன்மை என்பது போல் உலக அரங்கில் கொரோனாவின் சூழலியல் தாக்கம் பற்றிப் பேசப்பட்டு வந்தது. கரியமில வாயு உள்ளிட்ட பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வு குறைந்து காற்று மாசு குறைந்து விட்டது, நீலவானத்தில் வானூர்திகளுக்கு மாறாகப் பறவைகள் சிறகடிக்கின்றன, தொலைவிலிருந்து இமயமலையைப் பார்க்க முடிகிறது.

புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்தி உலகம் அழியாமல் காத்து விடலாம் என்ற நம்பிக்கை பிறக்கிறது என்றெல்லாம் சூழலியலர் மகிழ்ந்தனர். அப்போதும் ஓரச்சம் இருந்தது, கொரோனா போன பின் முடக்கம் நீங்கிப் பொருளியல் வாழ்வு திறக்கப்படும் போது, இழப்பைச் சரிக்கட்டி ஈட்டம் பார்க்கும் வெறியுடன் ஆலைச் சக்கரங்களும் ஊர்திச் சக்கரங்களும் சுழலும் போது சூழல் நலன் வன்மத்துடன் பலியிடப்படும் என்பதே அவ்வச்சம்.

ஆனால் இந்திய வலதுசாரிகள் அது வரை காத்திருக்க அணியமாய் இல்லை. அவர்கள் வேட்டையைத் தொடங்கி விட்டார்கள். இந்திய அரசு வெளியிட்டுள்ள “சுற்றுச் சூழல் தாக்க மதிப்பாய்வு அறிவிக்கை நெறிகள், 2020” என்ற புதிய வரைவின் பொருள் இதுவே.

இப்போதுள்ள 2006ஆம் ஆண்டு அறிவிக்கையில் சில பிற்போக்கான திருத்தங்களையும், புதிய நெறிகளையும் சேர்த்து இந்தப் புதிய அறிவிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிக்கை செயலுக்கு வருமானால், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு அறிக்கை கொடுக்காமலும், மக்கள் கருத்துக் கேட்காமலும் புதிய திட்டங்கள் செயல்படலாம். இதே வழியில் பழைய திட்டங்களை விரிவாக்கவும் செய்யலாம்.

இரண்டாவதாக, 70 மீட்டர் வரையிலும் சாலையை அகலப்படுத்தும் விரிவாக்கத் திட்டங்கள், நீராதாரக் கட்டமைப்புகள் போன்ற 14 வகைத் திட்டங்களுக்கு இனி சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு அறிக்கை முன்வைக்கவோ, சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் முன்னிசைவு பெறவோ தேவை இல்லை. நாட்டுப் பாதுகாப்புக்கு இன்றியமையாதவை, தேசிய முகன்மை வாய்ந்தவை என்று இந்திய அரசு அறிவிக்கும் எந்தக் கட்டமைப்புக்கும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு அறிக்கை வைக்கத் தேவை இல்லை. சுற்றுச் சூழல் அமைச்சகத்தின் முன் அனுமதிக்காகக் காத்திருக்கவும் தேவை இல்லை. அவற்றில் மக்கள் கருத்துக் கேட்பும் நடக்காது. 

மேலும், சிறப்புப் பொருளியல் மண்டலங்கள், ஏற்றுமதி மண்டலங்கள், தோல் தொழில் மண்டலங்கள், கடலோரத் தொழில் மண்டலங்கள் ஆகியவற்றில் புதிய கட்டுமானங்களுக்கோ, பழைய கட்டுமானங்களின் விரிவாக்கத்திற்கோ சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லையாம்! ஒரு வினவற்குழு அமைக்கப்பட்டு, அது கேட்டால் மட்டும் கருத்துக் கூறலாமாம்! மக்களோ சூழலியலரோ தாமாகக் கருத்துக் கூற உரிமை இருக்காது,

இந்தப் புதிய அறிவிக்கையைப் பயன்படுத்தி சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை, மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை, போடிமெட்டில் நியூட்ரினோ, கடலோரமெங்கும் அனல் மின் நிலையங்கள், சாகர் மாலா, பாதுகாப்புத் தளவாடத் தொழில் வலையம், காவிரித் தீரத்தில் மீத்தேன், கடலூரில் வேதித் தொழிற்பூங்கா போன்ற பல திட்டங்களைத் தங்கு தடையின்றி நிறைவேற்றிக் கொள்ள இயலும். இது தமிழர் நலனுக்குக் கேடு என்பதற்கு விளக்கம் தேவை இல்லை.

மேற்குத் தொடர்ச்சி மலைக்கு ஆபத்து

ஆனால் இதையும் தாண்டி இந்தியத் துணைக்கண்டமெங்கும் பல பேரழிவுத் திட்டங்களுக்கு வழிதிறப்பதாக இஃதமையும். தென்னிந்தியாவின் அமேசான் என்று சூழலியலர் போற்றிடும் மேற்குத் தொடர்ச்சி மலை ஏற்கெனவே பல்வேறு ஆபத்துகளாலும் சூழப்பட்டுள்ளது. கொரோனா கிருமிகள் நுரையீரலை அழிப்பது போல் இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு-2020 வரைவு சட்டமானால் மேற்குத் தொடர்ச்சிமலையை அரித்தெடுத்து விடும். பிரேசிலின் அதிபர் பொல்சனாரோ அமேசான் திருடன் என்று அழைக்கப்படுவது போல் நரேந்திர மோதி மேற்குத் தொடர்ச்சி மலைக் கள்வனாக அறியப்படுவார்.

சூழற்கேடுகள் யாவும் தனித்து ஒரே ஒரு தேசத்துக்கோ ஒரே ஒரு நாட்டுக்கோ மட்டுமின்றி புவிக் கோளத்துக்கே, மாந்தக் குலத்திற்கே அழிவுண்டாக்கக் கூடியவை. ஆனால் இந்த அழிவைத் தடுக்க ஒவ்வொரு தேசத்தும் இறைமை தேவை. இயற்கை மீதும் சுற்றுச்சூழல் மீதும் இறைமை தேவை. இயற்கையைப் பன்னாட்டுப் பெருங்குழுமங்கள் சூறையாடுவதைத் தடுக்கச் சட்டமியற்றும் இறைமை தேவை.

இயற்கைக்கும் குமுகத்துக்கும் பகையான ஆற்றல்கள் -- சுற்றுச்சூழல் மீது தாக்குதல் தொடுக்கும் அதே ஆற்றல்கள் – தொழிலாளர் உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்கும் அதே ஆற்றல்கள் – மாநில உரிமைகள் என்று மங்கல வழக்கில் சொல்லப்படும் தேசிய இன உரிமைகள் மீதும் தாக்குதல் தொடுக்கின்றன என்பது தற்செயலன்று.

இந்திய இறைமை தமிழகம் காக்குமா?

இப்போது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பாய்வு-2020 வரைவுக்கு எதிர்ப்புக் காட்டுவதில் தமிழ்த்தேசம் முன்னுக்கு நிற்கிறது. ஆனால் இந்திய அரசு இந்த எதிர்ப்புக்கு மதிப்பளித்துத் தன் திட்டத்தைக் கைவிடும் என்று நம்புவதற்கு நாம் ஏமாளிகள் அல்ல. அப்படியானால் இதற்கு என்னதான் தீர்வு?

நம் உரிமைகளுக்கும் உயிருக்கும் கண்ணிய வாழ்வுக்கும், அனைத்துக்கும் அடிப்படையான இயற்கைக்கும் உற்ற காப்பை உறுதி செய்ய முடியாத இந்திய இறைமைக்கு இன்னும் எவ்வளவு காலம் அடங்கிக் கிடக்கப் போகின்றோம்? சிந்திப்போம், செயல்படுவோம்!

- தியாகு

Pin It