EWS இட ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு இட ஒதுக்கீட்டுக் கொள்கை தொடர்பான நீதித்துறையின் நுட்பமான, ஒருமித்த கருத்து முடிவுக்கு வருவதைக் குறிக்கிறது.

இதுவரை, உயர்சாதி இந்துக்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் நீதித்துறை சமூகம் குறித்த தமது சொந்த தப்பெண்ணங்களை எதிர்த்து, சாதி அடிப்படையிலான சமூக ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கான ஒரு வழிமுறையாக இட ஒதுக்கீட்டு முறையை நிலைநிறுத்தியது.

சமீபத்திய EWS இட ஒதுக்கீட்டு வழக்கின் பெரும்பான்மைத் தீர்ப்பு, மேற்கண்ட நிலைப்பாட்டில் இருந்து விலகி, பிற்போக்குத்தனமான மாற்றத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது. வருங்காலத்தில் நடக்கவிருக்கும் விஷயங்களுக்கு ஒரு முன்னோடியாக அமையும் எனத் தெரிகிறது. இது அரசியலமைப்புச் சட்டக் கோட்பாடுகளில் பிண்ணிப்பிணைக்கப்பட்டுள்ள நீதித்துறை நியாயங்களைப் புறக்கணிக்கத் தேவையான தப்பெண்ணங்களை உயர்சாதி நீதிபதிகளுக்கு அனுமதிக்கிறது. சிறுபான்மையினரின் உரிமைகள் மீதான சமீபத்திய மோசமான தீர்ப்புகளைப் போலவே, ஆளும் கட்சியின் சித்தாந்தத்திற்கு ஏற்ப, நீதிபதிகள் உயர்சாதிச் சமூகச் சூழலில் இருந்து பெற்ற கருத்துக்களை வெளிப்படுத்துவதன் மூலம் தங்கள் மோசமான நிலையை வெளிப்படுத்துகிறார்கள். முரண்பாடாக, நீதிமன்றம் யாருடைய நலன்களைப் பாதுகாக்க வேண்டுமோ, அந்த பொதுமக்களின் திரிபுபடுத்தப்பட்ட புரிதலுக்காக இந்தத் தீர்ப்பு நினைவு கூரப்படும்.Supreme Court 424EWS இட ஒதுக்கீடு வழக்கை விசாரித்த, 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, பொருளாதார அளவுகோல் அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை ஆதரிப்பதில் ஒருமித்த கருத்தோட்டம் கொண்டுள்ளது. SC, ST, OBC வகுப்பைச் சார்ந்த ஏழைகளை EWS இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்க முடியுமா என்பதுதான் அவர்களுக்கு இடையே இருந்த முக்கிய வேறுபாடு. மாறுபட்ட தீர்ப்பளித்த சிறுபான்மை (யு. யு. லலித், ரவிந்திர் பட்) நீதிபதிகள், SC, ST, OBC வகுப்பைச் சார்ந்த ஏழைகளை விலக்கும் பாரபட்சமான இட ஒதுக்கீட்டும் கொள்கையை நிராகரித்தாலும், பெரும்பான்மை நீதிபதிகள் SC, ST, OBC இட ஒதுக்கீடு பெறுபவர்களை EWS இட ஒதுக்கீட்டில் இருந்து விலக்கலாம் என்று வாதிட நியாயமான வகைப்பாடு (Reasonable Classification) கோட்பாட்டை பின்பற்றுகிறார்கள். இது வெறும் நீதித்துறை சார்ந்த தொழில்நுட்ப நுணுக்கம் அல்ல. அரசியலமைப்புச் சட்டத்தில் பிண்ணிப் பிணைந்துள்ள சமூக நீதிக்கொள்கையின் விளக்கத்தில் உள்ள இந்த வேறுபாடு, இட ஒதுக்கீடு குறித்து நீதித்துறையினால் நீண்டகாலமாக நிறுவப்பட்ட ஆதாரக் கொள்கையை சீரழித்துவிடும்.

துல்லியமின்மை அநீதிக்குச் சமம்

என்.எம். தாமஸ் (1976), இந்திரா சஹானி (1992) உள்ளிட்ட பல வழக்குகளில் பல ஆண்டுகளாக இந்திய நீதிமன்றங்கள், அரசியலமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள சமத்துவக் கோட்பாட்டிற்கு இணங்க, வரலாற்று சமூக அநீதியை ஈடுசெய்யும் இழப்பீடு என்ற அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் உறுதியாக நின்றுள்ளன. ஆனால் இட ஒதுக்கீடு எனும் இழப்பீட்டுக் கொள்கையை கடைசி முயற்சியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் பல கடுமையான நிபந்தனைகளை கடந்த காலத்தில் விதித்துள்ளன. ஒன்று, இட ஒதுக்கீடு பெறப்போகும் குழுவை தர்க்கரீதியாகவும், தெளிவாகவும் வரையறுக்க வேண்டும். இரண்டு, அவ்வாறு அடையாளம் காணப்பட்ட குழு பாகுபாட்டாலும், குறைவான பிரதிநிதித்துவத்தாலும் பாதிக்கப்படுகிறது என்பதற்கான உறுதியான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். இந்தப் பாதிப்பு இட ஒதுக்கீடு தேவைப்படும் அளவுக்கு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கிறது என தரவுகளுடன் நிறுவ வேண்டும். மூன்று, இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் செய்யப்படும் எந்த மாற்றமும் நீதிமன்றங்கள் வரையறுத்த ஒட்டுமொத்த இட ஒதுக்கீட்டு உச்சவரம்பை மீறக்கூடாது. இறுதியாக, தகுதியையும் திறமையையும் இட ஒதுக்கீடு பாதிக்கக்கூடாது.

EWS இட ஒதுக்கீடு வழக்குத் தீர்ப்பின் அசாதாரணமான விஷயம் என்னவென்றால், உயர்சாதிக்கான EWS இட ஒதுக்கீடு என்று வரும்போது இந்த நான்கு கொள்கைகளையும் உச்ச நீதிமன்றம் கைவிடத் தயாராக உள்ளது. இதன் மூலம், உயர்சாதி இட ஒதுக்கீட்டிற்கு ஒருவிதமான அளவுகோல்களையும், நம்மைப் போன்றவர்களின் (SC, ST, OBC) இட ஒதுக்கீட்டிற்கு முற்றிலும் மாறுபட்ட அளவுகோலை ஏற்றுக்கொள்வதில் உச்ச நீதிமன்றம் மகிழ்ச்சி அடைகிறது என்ற எண்ணம் ஏற்பட்டால், அதில் தவறில்லை.

சாதிய அடிப்படையிலான பிற்படுத்தப்பட்ட நிலையைத் தாண்டி, வேறு காரணங்களுக்கு இட ஒதுக்கீடு தர இயலும் என்பதை ஐந்து நீதிபதிகளும் ஒப்புக்கொள்கிறார்கள். விவாதத்திற்காக கொள்கையளவில் இது சரி என்றே வைத்துக்கொள்வோம். நல்ல கல்வி அளிக்கும் சிறந்த பள்ளியில் அவர்களது குழந்தையை பெற்றோரால் சேர்க்க முடியவில்லை என்றால், உயர்கல்வி, வேலைக்கான போட்டியில் அக்குழந்தை சந்திக்கும் கடுமையான பாகுபாட்டை, குறைபாட்டை ஈடு செய்ய வேண்டும். உண்மையான கேள்வி என்னவென்றால், இந்த குறைபாட்டை எப்படி வரையறுத்து செயல்படுத்துவது. மேலும் அக்குறைபாட்டை ஈடுசெய்யும் செயல்முறையின் வடிவம் என்னவாக இருக்க வேண்டும் என்பது இன்னொரு கேள்வி.

பெரும்பான்மை நீதிபதிகள் இந்தக் கேள்விகள் எழுப்பும் முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. பொருளாதாரப் பின் தங்கிய நிலையையும் சமூகப் பின் தங்கிய நிலையையும் பெரும்பான்மை நீதிபதிகள் சமமாகக் கருதுகிறார்கள் என்பது தெளிவு. அதே வேளையில், EWS இட ஒதுக்கீடு வழங்கினால், சமூகத்தில் உருவாகும் அடிப்படை முரண்பாடுகளைப் பெரும்பான்மை நீதிபதிகள் பார்க்கத் தவறிவிட்டனர். அடிக்கடி மாறக்கூடிய பொருளாதார நெருக்கடிகளை நிவர்த்தி செய்வதற்கு, சாதி போன்ற அடிக்கடி மாறாத, இறுக்கமான கட்டமைப்பு உருவாக்கும் நீடித்த தீமைகளை சரிசெய்யப் பயன்படுத்தப் படும் வழிமுறைகள் தேவை என்று நீதிமன்றம் சொல்வதில் எவ்வித தர்க்கமும் நியாமும் இல்லை.

ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை நீதிமன்றங்கள் தீவிர விழிப்புணர்வோடு இருக்கும். கூடுதல் நிபந்தனைகள் விதிக்கும். ஆனால் EWS இட ஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் தீவிரத்தன்மையோடு இருக்கவில்லை. எவ்வித நிபந்தனைகளையும் வலியுறுத்தவில்லை, அதாவது இட ஒதுக்கீட்டின் பயனாளிகள் அனைவரும் ஒரே மாதிரியான, கடுமையான பொருளாதாரக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற சோதனையை உச்சநீதிமன்றம் கைவிட்டதாகத் தெரிகிறது. அப்படிப்பட்ட ஒருபடித்தான சோதனைகளைச் செய்யாமல், பொத்தாம் பொதுவாக EWS இட ஒதுக்கீட்டின் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இது குறித்து நீதிமன்றம் எவ்வித அக்கறையும் கொள்ளவில்லை. EWS இட ஒதுக்கீட்டின் பயனாளிகளைத் தீர்மானிப்பதில் இருக்கும் துல்லியமின்மையின் விளைவாக, இட ஒதுக்கிட்டிற்கு தகுதியற்ற நபர்களும் EWS இட ஒதுக்கீடு பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடுமையான அநீதி விளையும். இதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை.

துல்லியமாக வரையறுக்கப்படாத தனிநபர் பொருளாதாரக் குறைபாட்டைத் தீர்க்க, அரிதாகி வரும் பொதுத் துறை நிறுவன பணி நியமனங்களில் முன்னுரிமை அளிப்பதை எப்படி புரிந்து கொள்வது? பொருளாதாரப் பின்னடைவை துல்லியமாக அடையாளம் காணும் அளவுகோல்கள் போன்றவற்றைப் பற்றிய கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பாதது வருத்தமளிக்கிறது. அது மட்டுமின்றி, அப்படிப்பட்ட பிரச்சினைகள் எழும் போது பரிசீலிக்கலாம், முன்கூட்டியே அளவுகோல்களைத் தீர்மானிக்க வேண்டியதில்லை என்கிறார் நீதிபது தினேஷ் மகேஸ்வரி. இது அநீதியானது.

தகுதியைப் புறக்கணித்த உச்சநீதிமன்றம்

EWS இட ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டுள்ள ஆதாரங்கள் என்னவெனப் பார்ப்போம். விசித்திரமாக, 10% EWS இட ஒதுக்கீட்டை பெறப்போகும் மக்கள்தொகையின் பங்கு என்ன என்ற அடிப்படைக் கேள்வியை, எந்த நீதிபதியும் எழுப்பவில்லை. சின்ஹோ அறிக்கையின்படி, பெரும்பான்மைத் தீர்ப்பில் குறிப்பிடப்படாத முக்கிய ஆதாரம் என்னவெனில், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள உயர்சாதியினர் நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 5.4 சதவீதம் எனக் கணக்கிடப்படுகிறது. 5.4% உள்ள உயர்சாதியினருக்கு, அவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியதன் அடிப்படை என்ன?

இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முன், பின்தங்கிய நிலை, குறைவான பிரதிநிதித்துவம், ஒட்டுமொத்த நிர்வாகத் திறனை பாதிக்காமல் இருப்பதற்கான ஆதாரங்களை தொடர்புடைய அரசு காட்ட வேண்டும் என எம். நாகராஜ் வழக்குத் தீர்ப்பில் (2006) உச்சநீதிமன்றம் வலியுறுத்திய நிபந்தனைகள் என்னவாயிற்று? உச்ச நீதிமன்றம் EWS இட ஒதுக்கீடு பெறவிருக்கும் வகுப்பினரின் தற்போதைய பிரதிநிதித்துவத்தின் அளவையோ அல்லது அதன் பொருளாதார நலிவுக்கான அளவையோ ஆராயவில்லை.

தகுதி, சமத்துவத்தின் மீதான இந்த இட ஒதுக்கீடு செலுத்தவிருக்கும் தாக்கத்தை பகுப்பாய்வு செய்யவும் நீதிமன்றம் தவறிவிட்டது. மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால். உண்மையில், EWS இட ஒதுக்கீடு பெறவிருக்கும் வகுப்பினர் ஏற்கனவெ அரசுத் துறைகளில் அதிக அளவில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளனர். 445 உயர் கல்வி நிறுவனங்களில் 28 விழுக்காட்டிற்கும் அதிகமான இடங்களை EWS பிரிவினர் பிடித்துள்ளனர் என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

பெரும்பான்மைத் தீர்ப்பு மகிழ்ச்சியுடன் 50% இட ஒதுக்கீடு உச்சவரம்பை மீறுகிறது. கடந்த காலங்களில், உள்ளாட்சி அமைப்புகளில் OBC இட ஒதுக்கீடு, பட்டியலிடப்பட்ட பகுதிகளில் கல்விச் சமபங்கு நடவடிக்கைகள், விவசாய சாதிகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு, மதச் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடுகள் உட்பட பல இட ஒதுக்கீட்டுக் கொள்கைகள் 50% உச்சவரம்பை மீறியதன் காரணமாக நீதிமன்றங்களால் செல்லாதென் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் EWS இட ஒதுக்கீட்டில் வேறொரு நிலைப்பாட்டை உச்ச நீதிமன்றம் எடுத்துள்ளது. இது உச்ச நீதிமன்றத்தின் இரட்டை நிலைப்பாடு என மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீட்டிற்கு மட்டுமே 50% உச்சவரம்பு பொருந்தும் என்ற உச்ச நீதிமன்றத்தின் போலியான வாதம், அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளோடு சற்றும் பொருந்தவில்லை.

இறுதியாக, எப்போதெல்லாம் இட ஒதுக்கீடு பற்றி விவாதிக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் தகுதி எனும் கருத்தாக்கம் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும். ஆனால், உச்சநீதிமன்றம் தன் வழக்கத்திற்கு மாறாக EWS இட ஒதுக்கீடு குறித்த விஷயத்தில் தகுதி குறித்து பலவீனமான குரலில் கூட பேசவில்லை. UPSC தேர்வுகளில் EWS பிரிவினருகான தகுதி மதிப்பெண் (Cut Off Mark) OBC வகுப்பினரை விடவும் 2019, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளாக குறைவாக இருந்தது எனும் ஆதாரம் EWS இட ஒதுக்கீட்டின் தகுதியைப் பற்றிய உண்மையை அப்பட்டமாக வெளிக்கொண்டு வந்துள்ளது. நமது குழந்தைகளைப் பற்றி விவாதிக்கும்போது மட்டுமே தகுதி முக்கியமானது. அவர்கள் குழந்தைகளைப் பற்றி விவாதிக்கும் போது தகுதி முக்கியமல்ல. ஏனெனில் அவர்கள் குழந்தைகள் தகுதி வாய்ந்தவர்கள், நமது குழந்தைகள் தகுதியற்றவர்கள் என அவர்கள் கருதிகிறார்கள். ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நிறுத்தியாக வேண்டும் என்ற நீதிபதி திரிவேதி, ஜேபிபார்திவாலாவின் கருத்துக்கள் மோசடியானது. அது இட ஒதுக்கீடு குறித்து அவர்களுக்கு உள்ள அப்பட்டமான இரட்டை நிலையை அம்பலப்படுத்துகிறது.

98% விழுக்காடு இந்தியர்களுக்கு பொருந்தக்கூடிய பொருளாதார அளவுகோல் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள உயர்சாதி EWS இட ஒதுக்கீடு இந்தியாவில் இதுவரை பின்பற்றப்பட்டு வருக் சட்டப்பூர்வமான இட ஒதுக்கீட்டை சீரழிக்கும் அபாயத்தை தன்னகத்தே உள்ளடக்கியுள்ளது. பிற்படுத்தப்பட்ட வகுப்பைப் பிரதி நிதித்துவப்படுத்தும் கட்சிகள், ஒடுக்கப்பட்ட சமூகக் குழுக்கள் உள்ளிட்ட அமைப்புகள் EWS இட ஒதுக்கீட்டிற்கு ஆற்றிய எதிர்வினைகளை அறிகுறியாகக் கொண்டால், இந்திய நீதித்துறை இனி கடுமையான சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஜாதிவாரி கணக்கெடுப்பு, 50% இட ஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கம் போன்ற கோரிக்கைகள் வலுப்பெறுவதின் காரணமாக, இந்திரா சஹானி வழக்குத் தீர்ப்பில் பெறப்பட்ட இட ஒதுக்கீடு குறித்த ஒருமித்த கருத்து கிட்டத்தட்ட இறந்து விட்டது. அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய நிறுவனமான இந்திய நீதித்துறை இட ஒதுக்கீடு விஷயத்தில் நியாயமாக செயல்படும் வரை இட ஒதுக்கீட்டில் பெரிய மோதலும் போட்டியும் நடக்கும்.

இட ஒதுக்கீடு குறித்த நீதிபதிகளின் இரட்டை நிலைப்பாடுடைய, ஒருமித்த கருத்து, பெரும்பாலும் நீதிபதிகளின் உள்ளுணர்வுகளுக்கு எதிராக, ஜாதி ஏற்றத்தாழ்வுகளையும், பாகுபாடுகளையும் ஏற்கத் தயங்கும் இந்திய உயர்சாதி மனப்பான்மையை அடிப்படையாகக் கொண்டது. டி தேவதாசன் (1964), என்.எம்.தாமஸ் (1976), பி.கே.பவித்ரா (2019), சவுரவ் யாதவ் (2020), நீல் ஆரேலியோ நூன்ஸ் (2022) போன்ற தீர்ப்புகளில் அது எதிரொலித்தது. உயர் சாதியினரை மையப்படுத்திய அரசியல் ஒருங்கிணைப்பு இந்த மனநிலையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை பிரதிபலிக்கிறது. இட ஒதுக்கீடு முறையினால் பலி வாங்கப்பட்டு வருகிறோம் என்ற ஒரு விசித்திரமான உணர்வை நீண்ட காலமாக இந்து உயர்சாதியினர் அனுபவித்து வருகின்றனர். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டை சிதைக்க வேண்டும் என்பது உயர்சாதியினரின் நீண்ட நாள் எண்ணவோட்டமாக இருந்து வருகிறது.

EWS வழக்கின் சமீபத்திய தீர்ப்பு உயர் சாதி இந்துக்களின் சமூகக் கண்ணோட்டத்தை அங்கீரிக்கப்பட்ட சட்டக் கோட்பாடாக மாற்றுகிறது. உயர் சாதி இந்துக்களின் இந்தக் கிளர்ச்சி, பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம். கொலிஜியம் முறையை முடிவுக்கு கொண்டு வரவும், நீதித்துறையை அதிக பிரதிநிதித்துவம் கொண்டதாக மாற்றவும் வலுப்பெறும் கருத்துக்கள் ஒரு சட்டபூர்வமான நெருக்கடியை உண்டாக்கலாம். நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வில் உள்ள நீதிபதிகளின் சாதியை குறிக்கும் பெயர்களும், அவர்களின் கருத்தியல் சார்பும், பொது விவாதத்திற்கு உட்பட்டு, நியாயமற்ற கருத்துகளாக மாறினால், அதற்கான பொறுப்பு நீதிமன்றத்தையே சாரும்.

அமைதியான, நிலையான சமூக கட்டமைப்பை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பும் பொறுப்பும் உச்ச நீதிமன்றத்திற்கு உள்ளது என நம்புவோம்.

- யோகேந்திர யாதவ் & ப்ரணவ் தவான் (ஜெய் கிசான் அந்தோலன், ஸ்வராஜ் இந்தியாவின் நிறுவனர்களில் யோகேந்திர யாதவும் ஒருவர். பிரன்வ் தவான் புது தில்லியைச் சேர்ந்த சட்ட வல்லுனர்.)

நன்றி: theprint.in இணைய தளம் (2022, நவம்பர் 9 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)
தமிழ் மொழியாக்கம்: விஜயபாஸ்கர்

Pin It