அதிகமாக சாப்பிட்டதில்லை. ஆனால் சாப்பிட்டிருக்கிறேன்.

நகர வாழ்வு தினம் தினம் இரவில் சட்டியை சுரண்டி கழுவ பழகி இருக்கிறது. அன்றைய தினத்தை அன்றே தீர்த்துக் கொள்ள நவீன நகரம் கற்று கொடுத்த அகப்பை அவிழும் பாடம் அது. மாறாக... ஊரில் ஒரு வாழ்வு இருந்தது. எந்த திட்டமும் இல்லாமல் விடியலும் இரவும் அழகழாய் வந்து போன காலம். அதில் பழைய சோறு என்ற வாழ்வியல் முறை... எப்போதும் ஒரு ஆளுக்கான உணவாக சட்டியில் நீரோடு பூத்திருக்கும். எப்போதும் எந்த வயிறுக்கும் பசி போக்க அது காத்திருக்கும்.

பழைய சோறு எந்த நேரத்துக்கும் ஏற்ற உணவாக இருந்திருக்கிறது.

விறகுக்கு போய் விட்டு வந்த பாட்டி அக்கடான்னு உக்காரும் போது பழைய கஞ்சியை கரைத்து ஒரு டம்ளர் தாத்தா கொடுப்பார். வாங்கி மடக் மடக்கென குடித்த பிறகு உடம்பில் ஆசுவாசமும் மூச்சில் அமைதியும் முகத்தில் புத்துணர்ச்சியும் கொள்ளும் பாட்டி. பார்த்திருக்கிறேன்.

நான் கூட அவ்வப்போது அப்படி குடித்ததுண்டு. அந்த புளிப்பும்.. கூட முழுசு முழுசாய் கிடக்கும் சின்ன வெங்காயமும் சப்புக் கொட்டி குடிக்க.... அடியில் கிடக்கும் சோற்றை ஆட்டி ஆட்டியே அரித்து டம்ளரோடே வாய்க்குள் கவிழ்க்க... முன் பசிக்கு மூச்சு கொடுக்கும். அதுவும் அந்த வெங்காயம் கடிக்கையில் வரும் கறக் கறக் சத்தம்... மூச்சில் காரமேற்றி முழியில் நீரூற்றி... சோறு தின்பதில் இருக்கும் கவன குவிப்பை அப்படியே நமக்குள் கடத்தும். டிவி பார்த்துக் கொண்டோ.... மொபைலில் செத்துக் கொண்டோ.... என்ன தின்கிறோம் என்று தெரியாமல் தின்னு தொலையும் இன்றைய வாழ்வு முறையில் இருந்து அது வெகு தூரத்தில் நல்லபடியாக இருந்த முறையான காலம்.

பழைய சோற்றில் பெரும்பாலும்... தயிர் ஊற்றி அல்லது மோர் ஊற்றி வைத்து... பிசைந்து குடிக்கையில்... ருசி அபாரமாக ஆகும். புளிப்பும் பழைய சோற்றின் வாசமும் சேர்ந்து ஒரு வகை தீவிரத்தை தின்பதில் காட்ட செய்யும். மெல்ல மெல்ல வயிறு நிறைவதை நெஞ்சம் உணரும். தயிர் சேர்ந்த அல்லது மோர் சேர்ந்த பழைய சோறு... நீர் சொட்ட உள்ளே இறங்குகையிலேயே குளிச்சி குடல் வழியே உடல் பரவுவதை உணரலாம். பித்தம் தெளிந்த ஒரு புது முகம்... அப்படியே... தேஜஸ் ஆவதை ரசிக்கும் எதிர் முகம் அறியும்.

அப்போதெல்லாம்.. காலையில் அது மட்டுமே உணவாக இருந்த வீடுகளும் அறிவேன். பழைய சோற்றில் மோர் ஊற்றி ரெண்டு க்ளாஸ் அடிச்சிட்டு வந்தேன் மாப்ள என்ற பேச்சு... வழக்கத்தில் இருந்தது. நாலு பேர் கொண்ட கூட்டணியில் மூன்று பேர் இதை சொல்வார்கள். ஊறுகாய் தொட்டுக்கொண்டு.... அக்காக்கள் பழைய சோற்றை கரைத்து குடிப்பதை பார்க்கவே... அது ஒரு வெண்மை புரட்சி பொங்கும் காட்சியாக இருக்கும். இன்னும் கண்களில் அது சொட்டும் குளிர்ச்சி... சொற்களுக்கு தாவவில்லை. பச்சைமிளகாய் கடித்துக் கொண்டு தாத்தா மதிய நேரத்தில் குடிக்கும் பழைய சோற்று கஞ்சியின் வாசம் பச்சை மிளகாய் நெடியோடு இன்றும் என் நெஞ்சில் கரகரக்கிறது.

ஏப்பத்தில் வரும் நிம்மதியில் அமர்ந்தபடியே கண்களை சொருகும் பின் மதியம்.

மோர் மிளகாய் கடித்துக் கொண்டே குண்டாவில் இருக்கும் பழைய கஞ்சியை அள்ளி அள்ளி... நீர் சொட்ட தின்னும் கிராமத்து பெண்கள்... போகிற போக்கில் மதிய உணவை முடித்துக் கொண்டு கடலை பிடுங்கும் வேலையைத் தொடர்வதை நினைத்தாலே வேர்வரை படரும் குளிர்ச்சி. அது ஒரு கிராமத்து அத்தியாய பாத்திர நிறைவு.

பழைய சோற்றில் உடல் சூடு தணிக்கும் குணம் கூடி இருக்க... கூடவே நார்ச்சத்தும் நலமுடன் இருக்கிறது. பெண்களின் உடலுக்கு பக்குவம் சேர்ப்பதையும் அறிகையில்... அதில் இருக்கும் ஸ்டார்ச் உள்பட பல வகை சக்திகள் பிரமிக்க வைக்கின்றன. வெங்காயமும் பழைய சோறும் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் வல்லமை வாய்ந்தவை என்று அறிந்த பின்னும் நூடுல்ஸ் மயக்கத்தில் காலை உணவை கண்றாவி ஆக்கும் நவீனத்தில்.... நம்மை நாமே சிதைக்கும் சுய நாகரீக கோமாளித்தனத்தை செய்ய நாம் தயங்குவதில்லை.

சில போது பழைய சோற்றை கரைத்து வெறும் தண்ணியாக குடிப்பதும் உண்டு. மேலாப்பில் தண்ணியை மட்டும் டம்ளரில் ஊற்றி வெயிலில் வருவோருக்கு நீத்தண்ணியாக தருவதும் உண்டு. களைப்பு நீங்க ஒரு டம்ளர் நீத்தண்ணி போதுமானதாக இருந்தது. தொண்டை அமைதி ஆகும் தருணத்தை சொல்ல சொற்கள் கரையவில்லை. மாறாக உள்ளத்தில் எப்போதோ குடித்த நினைப்பை கரைக்கிறேன். குளிர்ச்சி நிரம்ப குளு குளுவென குழைந்தபடி செல்லும் நீராகாரம் நினைத்தாலே... நிம்மதி பெருமூச்சு தான்.

கடலை துவையல் தொட்டுக் கொண்டு பழைய சோறு குடித்த நினைவு.... குண்டாவுக்குள் அசையும் பழைய கஞ்சியை போல... அற்புதமாக மனதுக்குள் அசைகிறது.

மற்ற சட்டிகளில் வைப்பதை விட மண் சட்டியில் வைக்கையில் இன்னும் குளிர்ச்சி கூடி... அதன் குணத்தில் சுவையும் கூடுகிறது. நல்ல பாக்டீரியாக்களின் நடனத்தை நா அறியும். கார்போஹைட்ரேட்டின் கவனத்தை உடலும் புரியும். பித்தம் குறைக்கும் யுத்தம் பழைய சோற்றில் உண்டென்றால்.... உண்டு தான் பார்ப்போமே. எத்தனை நல்ல உணவை நகர்த்தி விட்டு நவீனம் தன் வயிறில் தானே குப்பைகளை கொட்டிக் கொள்கிறது. இல்லையா...!

நேரடி அனுபவம் ....இல்லையென்றாலும்.... தோழியுடன் பேசுகையில்... பழைய சோற்றை அரைத்து அதனோடு மிளகாய் தூள் உப்பு... என இணைக்க வேண்டிய இணைப்புகளை சரியான அளவில் இணைத்து சிறு சிறு பிடியாய் உதிர்த்து நல்ல வெயிலில் மூன்று நாள் காய வைத்து.... பிறகு எடுத்து எண்ணையில் போட்டு வடகம் பொரிக்கலாம் என்று தெரிய வந்தது.

வடகத்தில் இருக்கும் சுவையை நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. நாவுக்கு நா சுவை மாறும் சுதந்திரம் வடகத்துக்கு உண்டு. காகம் அறிந்த அறிவுகளில் வடகத்தின் பரிணாமத்துக்கும் பங்குண்டு.

அப்படி பல வழிகளில் இந்த பழைய சோறு பவுசு காட்டுகிறது. சுறுசுறுப்புக்கு பஞ்சமில்லை. கிறுகிறுப்புக்கு வாய்ப்பு இல்லை. வாரம் ஒரு நாளாவது பழைய சோற்றை மேற்சொன்ன வகைகளில் பக்குவமாய் பருகி வயிறையும் மனதையும் குளிர்விப்போம். பொங்கி கிடக்கும் நுரையோடு பளபளவென வெள்ளை பூத்திருக்கும் பண்பாட்டை பழைய சோறு சட்டி நிறைந்து சொல்கிறது. பருகி பார்த்து பற்கள் நிறைப்போம்.

(மாலினி...குண்டாவோடு தயிரும் பழைய சோறும் கரைத்து கொல்லாக்கா வீட்டு திண்ணையில் அமர்ந்து குடித்துக் கொண்டிருக்கும் போது அந்த வழியே நான் சென்று விட்டால் ஒரு வாய் ரெண்டு வாய் எனக்கு ஊட்டி விடாமல் விட்டதே இல்லை. அதற்காகவே அந்த வழியாக சரியான நேரத்துக்கு சென்ற நாட்களும் உண்டு.)

"பழைய சோறு.... பச்சை மிளகா..." பாடல் ஏனோ மனதில்...!

- கவிஜி

Pin It