10% EWS இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் அரசியல் தளத்தில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று ஓய்ந்த நிலையில், இந்த இட ஒதுக்கீட்டிற்க்கான தேவை உள்ளதா என்பதை தரவுகளின் வழியே விவாதிக்க வேண்டும். EWS இட ஒதுக்கீட்டிற்கு நியாயப்படுத்த போதுமான தரவுகள் உள்ளனவா என்பதே இந்த விவாதத்தின் அடிப்படையான கேள்வி. இந்தக் கேள்விக்கு விடை காண, 10% EWS இட ஒதுக்கீட்டிற்கான முதன்மை காரணங்களாக சொல்லப்படுவனவற்றையும், நம்மிடையே உள்ள தரவுகளையும் ஆராய்வதின் மூலம் 10% EWS இட ஒதுக்கீட்டை நியாயப்படுத்த முடியுமா என கண்டறிவோம்.

தங்களது ஏழ்மையின் காரணமாக உயர் சாதியினர் உயர் கல்வி நிறுவனங்களில் இருந்து பெரிய அளவில் விலக்கிவைக்கப்பட்டுள்ளனர் என்பதை 103 ஆவது அரசிலமைப்பு சட்டத் திருத்தம் முன்வைக்கிறது. ஆக, உயர்கல்வி நிறுவனங்களில் உயர்சாதி ஏழைகள் குறைவான இடங்களை மட்டுமே பிடித்துள்ளனர் அல்லது ஒதுக்கிவைக்கபட்டுள்ளனர் என்பதே உயர்சாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீட்டிற்கான காரணமாக கூறப்படுகிறது. எனவே, நம்மிடையே உள்ள ஆதாரப் பூர்வமான தரவுகளை ஆராய்ந்து உயர் கல்வி நிறுவனங்களில் EWS பிரிவினர் பெற்றுள்ள பொதுப் பிரிவு இடங்கள் பற்றிய உண்மை நிலவரத்தை கண்டறிவோம்.iit madrasதேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை மாதிரிக்காக (NIRF – National Institutional Ranking Framework) தொகுக்கப்பட்ட உயர் கல்வி நிறுவங்களின் புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, 103 வது அரசிலமைப்பு சட்டத் திருத்தத்துக்கு முந்தைய ஆண்டான 2019-ம் ஆண்டில் 457 உயர் கல்வி நிறுவனங்களில் எடுக்கப்பட்ட தரவுகளை 2022-ம் ஆண்டில் 528 உயர் கல்வி நிறுவனங்களில் எடுக்கப்பட்ட தரவுகளோடு ஒப்பீடு செய்தோம். தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை தரவுகளின் (NIRF Data) படி உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் EWS மாணவர்களின் நேரடி விவரங்கள் இல்லை. எனவே அதற்குப் பதிலாக, ஏற்கனவே இருக்கும் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் உயர்சாதி மாணவர்களின் பிரதிநிதித்துவம் பற்றிய விவரங்களை வேறு வழியில் கண்டறிய முனைந்தோம். தேசிய கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை அமைப்பு (NIRF) உயர் கல்வி நிறுவனங்களிடமிருந்து மாணவர்களின் பொருளாதார விவரங்களை கோருகிறது. இதன்படி, மாணவர்களின் (பெற்றோர்) வருமான வரி விலக்கு உச்ச வரம்புக்கு கீழே இருந்தால் (Below 8 Lakhs), அவர்கள் “பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களாக” வகைப்படுத்தப்படுகிறார்கள். NIRF தரவுகளில் உள்ள குழப்பங்களைத் தவிர்க்க பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களையும் சமூக ரீதியாகவும் சாதி ரீதியாகவும் பின் தங்கிய மாணவர்களையும் தனித் தனி பிரிவுகளாக வகைப் படுத்தினோம்.

பெற்றோரின் ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்குள் இருந்தால் உயர்சாதி ஏழைகள் 10 % EWS இட ஒதுக்கீட்டை பெறத் தகுதியானவர்கள் என தற்போதைய கூறப்பட்டுள்ளது. உயர்சாதி ஏழைகளுக்கான வருமான அளவுகோல்களை நிர்ணயிப்பதற்காக அமைக்கப்பட்ட அஜய் பூஷன் பாண்டே குழு “தற்போதைய நடைமுறை தனி நபர் வருமான வரி விலக்கு (Effective Income Tax Exemption Limit) உச்சவரம்பாக 8 லட்சம் இருப்பதால், EWS பிரிவினருக்கான இட ஓதுக்கீடு அளவுகோலாக 8 லட்சத்தை நிர்ணயிக்கிறோம்” என்றது. எனவே, 8 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள மாணவர்களை 10 % EWS இட ஒதுக்கீடு பெறத் தகுதியுடையவர்களாக எடுத்துக்கொள்ளலாம்.

அந்த அடிப்படையில், 2019-ம் ஆண்டிற்கான NIRF புள்ளி விவரங்களின்படி, தரவரிசைப்படுத்தப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் (NIRF ranked higher education institutions) EWS மாணவர்கள் 19% இடங்களையும், சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மாணவர்கள் (பட்டியலின/பழங்குடியின/பிற்படுத்தப்பட்டவர்கள்) 39% இடங்களையும் பிடித்துள்ளனர். EWS மாணவர்களின் பிரதிநிதித்துவம் கல்லூரிகளில் (Colleges) அதிகமாகவும் (28%), மருத்துவ நிறுவனங்களில் குறைவாகவும் (2%) உள்ளது. இந்த வேறுபாடு சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கும் பொருந்துகிறது. கல்லூரிகளில் (Colleges) அவர்களின் பிரதிநிதித்துவம் 47 விழுக்காடாகவும் மேலாண்மை கல்வி நிறுவனங்களில் (Management Institutions) 3 விழுக்காடாகவும் உள்ளது. ஆச்சரியமாக, 2019-ல் 19% ஆக இருந்த EWS மாணவர்களின் பங்கு 2022-ம் ஆண்டில் 15% ஆக குறைந்துள்ளது. இருப்பினும், அவர்களின் பங்கு 10 விழுக்காட்டை விட அதிகமாகவே உள்ளது.

மேற்கண்ட தரவுகள் தனியார் கல்வி நிறுவனங்களையும் அரசு கல்வி நிறுவனங்களையும் உள்ளடக்கியவை. எனவே அவற்றின் புள்ளி விவரங்களைத் தனித்தனியாக ஆராய்வது மிக அவசியம். 2019-ம் ஆண்டிற்கான தரவுகளின் படி EWS மாணவர்களின் விகிதம் 218 அரசு உயர் கல்வி நிறுவனங்களில் 19 விழுக்காடாகவும், 239 தனியார் கல்வி நிறுவனங்களில் 20 விழுக்காடாகவும் இருந்தது. அதே வேளையில், 2022-ம் ஆண்டிற்கான தரவுகளின்படி பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் விகிதம் அரசு உயர் கல்வி நிறுவனங்களில் 17 விழுக்காடாகவும், தனியார் கல்வி நிறுவனங்களில் 13 விழுக்காடாகவும் குறைந்துள்ளது. இதன் மூலம், EWS இட ஒதுக்கீடு இல்லாமலே உயர்சாதி மாணவர்களின் எண்ணிக்கை எப்பொழுதுமே 10 விழுக்காட்டுக்கும் அதிகமாகவே இருந்துள்ளது என்பது தெளிவாகிறது. ஆனால், சாதி ரீதியில் ஒடுக்கப்பட்ட மாணவர்களின் விகிதம் 2019 மற்றும் 2022 ஆண்டுகளில் மாற்றம் ஏதுமில்லாமல் 36 விழுக்காடாகவே இருந்துள்ளது. ஐஐடி – ஐஐஎம் (IIT/IIM) போன்ற ஒன்றிய அரசின் மதிப்புமிகு கல்வி நிறுவனங்களில் 2019-ம் ஆண்டில் 21 விழுக்காடாக இருந்த உயர்சாதி மாணவர்களின் விகிதம் 2022-ம் ஆண்டில் 16 விழுக்காடாக குறைந்துள்ளது.

மேற்கண்ட புள்ளிவிவரங்கள் அனைத்தும் உயர் கல்வி நிறுவனங்களில் எப்போதுமே EWS மாணவர்களின் பிரதிநிதித்துவம் அதிகமாகவே இருந்துள்ளது என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. இந்த முடிவுகளையே 2019-ம் ஆண்டு வெளியிடப்பட்ட “தொழிலாளர் கணக்கெடுப்பு” (PLFS) தரவுகளும் உறுதி படுத்துகின்றன. பால்மா விகிதம் (Palma ratio) என்றழைக்கப்படும் பொருளாதார வேறுபாட்டுப் புள்ளிவிபர விகிதங்கள் மக்களை மூன்றாக வகைப்படுத்துகின்றன. அந்த தரவுகளின் படி நம் நாட்டில், ஏழைகள் (40%), நடுத்தர வர்க்கம் (50%) மற்றும் பணக்காரர்கள் (10%). இங்கே நாம் 40 % ஏழைப் பிரிவினரின் தரவுகளை மட்டும் எடுத்துக்கொள்வோம். ஏனெனில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு என்பது ஏழைகளுக்கு உரியது. இந்த 40% ஏழைகளில் பொது பிரிவினரின் (பட்டியலின/பழங்குடியின/பிற்படுத்தப்பட்டவர்கள் அல்லாத உயர்சாதியினர்) பங்கு 18%. உயர்கல்வி நிறுவன இடங்களில், 18-25 வயதுக்கு உட்பட்ட உயர்சாதி இளைஞர்கள் 20% இடங்களையும், 22-29 வயதுக்கு உட்பட்ட உயர்சாதி இளைஞர்கள் 20% இடங்களையும் பிடித்துள்ளனர். அதாவது மக்கள் தொகையில் 18% உள்ள உயர்சாதியினர் 24% உயர்கல்வி இடங்களை ஆக்கிரமித்துள்ளனர். எனவே, இம்மாணவர்களின் பிரதிநிதித்துவம் அவர்களுடைய மொத்த மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் அதிகமே.

மேற்கண்ட தரவுகளின் படி, உயர் கல்வி நிறுவனங்களில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்று சொல்லப்படுகிற 8 லட்சம் ஆண்டு வருமானம் பெறக்கூடிய உயர்சாதியினர் விகிதம் 10 விழுக்காட்டிற்கும் மிக அதிகமாகவே இருப்பது தெளிவாகிறது. இந்த தரவுகள் எதுவும் 10% EWS இட ஒதுக்கீட்டை நியாயப் படுத்துவதாக இல்லை.

சன்னி ஜோஸ் & பீமேஸ்வர் ரெட்டி

நன்றி The Hindu ஆங்கில நாளிதழ் (2022, நவம்பர் 30 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: செல்வகுமார்

Pin It