கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

ராகுல் கெய்க்வாட்: தற்போதைய சூழலில், உயர் சாதியினருக்கு வழங்கப்படும் 10% EWS இடஒதுக்கீட்டின் தாக்கங்களைப் பற்றியும், இந்த வகையான இடஒதுக்கீடுகள் எப்படி அமலுக்கு வருகின்றன என்பதை பற்றியும் அறிய விரும்புகிறேன்.

டாக்டர் மானே: இடஒதுக்கீட்டுக் கொள்கையை புரிந்து கொள்ள, விரிவான புரிதல் வேண்டும். இட ஒதுக்கீட்டின் சமூகவியல் பின்னணி, நீதித்துறை பிண்ணனி, சட்டக் கட்டமைப்பு, நீதிமன்றத் தீர்ப்புகள் மூலம் பரிணமித்த இட ஒதுக்கீடு ஆகியவற்றோடு இடஒதுக்கீட்டுக் கொள்கையின் அரசியலையும் இணைத்து அனைத்தையும் ஒன்றுசேர்த்து புரிந்து கொள்வதைத் தான் நான் இட ஒதுக்கீடு பற்றிய விரிவான புரிதல் என்கிறேன். இந்த பிரச்சினைகள் அனைத்தையும் சரியான கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டும். பின்னர் தான் எல்லா கேள்விகளுக்கும் நம்மால் பதிலளிக்க முடியும்.

உயர் சாதியினருக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள 10% இடஒதுக்கீட்டிற்கு முன்னர் வரை, அரசியலமைப்பு சட்டத்தின்படி பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என மூன்று வகுப்புகளுக்கு மட்டுமே இடஒதுக்கீடு சாத்தியம். மகாராஷ்டிராவில் உள்ளதைப் போன்று, பின்னர் சேர்க்கப்பட்ட வகுப்புகள் ‘விமுக்த ஜாதிகள்’ அல்லது நாடோடி பழங்குடியினர் என்று அழைக்கப்படுகின்றவர்களையும் இதில் (மேற்சொன்ன மூன்றில்) சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் இவர்களைத் தவிர வேறு எந்த வகுப்பினருக்கோ அல்லது சாதியினருக்கோ அல்லது சாதிகளின் குழுவிற்கோ எந்தவித இடஒதுக்கீடும் கூடாது என்பது அரசியலமைப்பில் மிகவும் தெளிவாக உள்ளது.supreme court 600பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இடஒதுக்கீடு என்பது வரலாற்று கொடுமைகளை சரிசெய்யும் அடிப்படையைக் கொண்டது. வரலாற்றில் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் மற்றும் பிற வகையிலும் அவர்கள் சுரண்டப்பட்டதற்கும், துன்புறுத்தப்பட்டதற்கும், அவர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அனைத்து வகையான அநியாங்களுக்கும், இந்த நாடும் அரசியல் அமைப்பும் அளிக்கும் இழப்பீடு தான், இந்த இடஒதுக்கீடு. எனவே அவர்கள் ஒவ்வொரு துறையிலும் முன்னேறுவதற்கு இடஒதுக்கீட்டுக் கொள்கை வடிவத்தில் அரசியலமைப்பு சட்டம் இழப்பீடு தந்துள்ளது. குறைந்த பட்சமாக கல்வியிலும், அரசு வேலை வாய்ப்பிலும், அரசியலிலும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இப்போது, அரசியலமைப்பு இடஒதுக்கீடு கொள்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமீபத்திய மாற்றத்தை பேச வேண்டும். அண்மைக் காலத்தில், மகாராஷ்டிராவில் மராத்தாக்களும், குஜராத்தில் படேல்களும், ராஜஸ்தானில் ஜாட்களும் ஹரியானாவில் குஜ்ஜர்களும் என பல பெரிய ஆதிக்க சாதி குழுக்கள் இடஒதுக்கீடு கோருகின்றனர். அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாமென்றால், எந்தப் பிரிவின்கீழ் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்பதுதான் இன்றைய முக்கிய விவாதமாக உள்ளது. சாதியும் தீண்டாமையும் சமூக ரீதியாகவும் கல்வியிலும் பின்தங்கிய நிலையும் மட்டுமே தான் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அளவுகோலாக அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளதே தவிர, ஒட்டுமொத்த அரசியலமைப்பிலும் இடஒதுக்கீடு வழங்க பொருளாதார அளவுகோல் என்றொன்று எங்கும் குறிப்பிடப்படவேயில்லை.

இதன் அடிப்படையில் தான், உயர் சாதி ஏழைகளுக்கு வழங்கப்படும் 10% இட ஒதுக்கீட்டின் தன்மையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். முதலாவதாக, ராஜஸ்தானில் ஜாட்களுக்கும், குஜராத்தில் படேல்களுக்கும், மகாராஷ்டிராவில் மராத்தாக்களுக்கும் வழங்கப்பட்ட இடஒதுக்கீடு அந்தந்த மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதலாவதாக, அவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் இல்லை என்ற அடிப்படையிலும், அடுத்ததாக அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம், இடஒதுக்கீடு 50 விழுக்காட்டைத் தாண்டி விடுகிறது. மேலும், விதிவிலக்கான சமயங்களில் மட்டுமே இட ஒதுக்கீட்டில் 50 விழுக்காட்டைத் தாண்டலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறி இருந்தாலும், இவை விதிவிலக்கானவை அல்ல என்ற அடிப்படியிலும் இந்த இடஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டன.

சமீபத்திய 10% EWS இட ஒதுக்கீட்டிற்காக, அரசியலமைப்பின் 15 மற்றும் 16 வது பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த திருத்தங்கள் செல்லுபடியாகுமா என்று கேட்டால், அதற்கு நாம் இல்லை என்று தான் பதிலளிக்க முடியும். ஏனெனில் 50% இட ஒதுக்கீடு உச்சவரம்பு என்பது 1992 இல் 9 நீதிபதிகளால் வழங்கப்பட்ட மண்டல் தீர்ப்பின் மூலம் வரையறுக்கப்பட்டது. அந்த வகையில், அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படாவிட்டால், இடஒதுக்கீடு 50 விழுக்காட்டைத் தாண்ட முடியாது. மேலும் சமீபத்திய அரசியலமைப்பு திருத்தங்களில் ஒன்று கூட 50% உச்சவரம்பை மீறவில்லை. எனவே, இங்கு மண்டல் வழக்குத் தீர்ப்பு தான் ஓங்கி நிற்கிறது.

இரண்டாவதாக, அத்தகைய திருத்தம் அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பிற்கு எதிரானது. அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு (Basic Structure) சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை மட்டுமே உள்ளடக்கியதே தவிர பெரும்பான்மையினருக்கான இடஒதுக்கீடு என்ற ஒரு கருத்தாக்கம் அதில் குறிப்பிடப்படவே இல்லை. பாபாசாகேப் அம்பேத்கர் உட்பட அரசியலமைப்பை உருவாக்கியவர்களின் நோக்கமும் இதுவாகத் தான் இருந்தது. எனவே, 60%, 70%, 75% இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. தமிழகம் போன்ற மாநிலங்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்காக உள்ளன. மேலும், தமிழ்நாட்டு இட ஒதுக்கீடு கொள்கையை மற்ற மாநிலங்களில் செயல்படுத்த முடியாது. அதுமட்டுமின்றி, தமிழ் நாட்டின் இடஒதுக்கீடு 50 விழுக்காட்டை தாண்டியது தொடர்பான வழக்கு நீதித்துறையின் மறுஆய்வுக்காக உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இந்த 10% இடஒதுக்கீடு அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புக்கு எதிரானது.

ராகுல்: 50% உச்சவரம்பு என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டதா என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது. இதற்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

டாக்டர் மானே: இந்த 50% உச்சவரம்பு என்பது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் விதிக்கப்பட்டதே தவிர, இதைப் பற்றி அரசியலமைப்பு சட்டத்தில் எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால், அரசியலமைப்பை ஆராய்ந்து பார்த்தால், அது சிறுபான்மை பெரும்பான்மை என்றே மக்களை வகைப்படுத்துக்கிறது. மேலும் இடஒதுக்கீடு என்பது ஒரு சில குழுக்களுக்கு மட்டுமே உரியதாகும் தவிர இடஒதுக்கீடு அனைத்து குழுக்களுக்கும் பொதுவானது கிடையாது என்பது அரசியலமைப்பை பொறுத்தவரையிலான உண்மை. உச்ச நீதிமன்றத்தின் மண்டல் வழக்குத் தீர்ப்பின் 50% இடஒதுக்கீட்டு உச்சவரம்பின் விளைவாக இந்த புதிய 10% EWS இடஒதுக்கீடு செல்லுபடி ஆகாது. எனவே இந்த இடஒதுக்கீட்டை செயல்படுத்த வேண்டுமென்றால், நாடாளுமன்றம் 50% உச்சவரம்பை ரத்து செய்ய வேண்டும்.

ராகுல்: இடஒதுக்கீட்டில் இந்த உச்சவரம்பு மண்டலின் பரிந்துரையா?

டாக்டர் மானே: இல்லை, இது உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் ஏற்பட்ட உச்சவரம்பு. நாடாளுமன்றம் இந்த உச்சவரம்பை மீற வேண்டுமென்றால், முதலில் இந்த உச்சவரம்பை நீக்க வேண்டும், அதற்கென்று நாடாளுமன்றத்தில் தனி சட்டம் இயற்ற வேண்டும். இரண்டாவதாக, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்க முடியுமா என்ற கேள்விக்கு, மண்டல் மீண்டும் இல்லை என்றே பதில் அளிக்கிறார். மண்டல் மட்டுமல்ல, மண்டலுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட அனைத்து தீர்ப்புகளும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அங்கீகரிக்க மறுத்துவிட்டன. மேலும் வறுமை ஒரு பொருளாதார அளவுகோலாகும். வறுமை என்பது ஒரு சமூக அளவுகோலோ, ஒடுக்கப்பட்டதற்கான அளவுகோலோ அல்ல. பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டு பெறும் ஏழைகளுக்கான அளவுகோலாக ஆண்டு வருமானம் 8 லட்சத்தை அரசு அறிவித்து இருக்கிறது. அதாவது மாதம் ரூ.66,000. அதுதான் இந்தியாவில் உள்ள ஏழைகளின் மாதவருமானம் என்றால், உலகின் பணக்கார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருந்திருக்க வேண்டுமே. எனவே அவர்களின் இந்த வாதம் செல்லுபடியே ஆகாது. இது மீண்டும் ஒரு பெரிய தவறாகவே உள்ளது.

ராகுல்: இந்த 10% EWS இடஒதுக்கீடு, SC, ST, BC, MBC மக்களின் நலன்களைப் பாதிக்குமா?

டாக்டர் மானே: SC, ST இடஒதுக்கீட்டை அப்படியே வைத்துக்கொண்டு, EWS பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க அரசு முடிவு செய்தால், நேரடியாக எந்தப் பாதிப்பும் பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஏற்படாது. ஆனால் மறைமுகமாக, இது ஒரு பெரிய பேரழிவுக்கு வழிவகுக்கும். EWS இட ஒதுக்கீடு என்ற போர்வையில், பொருளாதாரத்தில் நிலை இட ஒதுக்கீட்டிற்கு ஒரு அளவுகோலாக அறிமுகப்படுத்தப்பட்டால், எதிர்காலத்தில் இந்த பொருளாதார அளவுகோல் SC, ST பிரிவினருக்கும் பரிந்துரைக்கப்படலாம். அது நிச்சயமாக மிகப்பெரிய ஆபத்தாகவே முடியும். அந்த ஆபத்தை மாயாவதியாலோ, ராம் விலாஸ் பாஸ்வானாலோ புரிந்து கொள்ள முடியவில்லை. ராம்தாஸ் அத்வாலே பற்றி நீங்கள் கேட்கவே வேண்டாம், நிச்சயமாக அவராலும் புரிந்து கொள்ள முடியாது. பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டை ஆதரிப்பதின் மூலம், எதிர்காலத்தில் இட ஒதுக்கீட்டை குழி தோண்டி புதைப்பதற்கு பாதை ஏற்படுத்தி தருகிறோம் என்பதை புரிந்து கொள்ள முடியாத அளவில் தான் நமது தலைவர்களும், அறிவுஜீவிகளும் மக்களில் பலரும் உள்ளனர்.

(டாக்டர் சுரேஷ் மானே, மன்யவர் கன்ஷி ராம் நிறுவிய பகுஜன் இயக்கத்தை சார்ந்த அரசியல் மற்றும் சமூக ஆர்வலர். மும்பை பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்ற அவர் அரசியலமைப்பு சட்டம், நிர்வாக சட்டம் மற்றும் குற்றவியல் சட்டம் ஆகியவற்றில் நிபுணத்துவத்தும் கொண்டவர். நீண்ட காலம் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார், மேலும் பல ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். டாக்டர் மானே இப்போது பகுஜன் குடியரசு சோசலிஸ்ட் கட்சிக்கு தலைமை தாங்குகிறார். ராகுல் கெய்க்வாட் மும்பையைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர்.)

நன்றி Round Table India இணையதளம் (2019, மார்ச் 13 ஆம் தேதி வெளிவந்த கட்டுரை)

தமிழ் மொழியாக்கம்: ஆயிஷா உமர்