ஸ்வீடனைத் தொடர்ந்து இத்தாலியிலும் வலதுசாரிக் கட்சி ஆட்சியை பிடிக்கும் என தேர்தல் கணிப்புகள் சொல்கின்றன. பாசிஸ்ட் முசோலினியின் கொள்கைகளை அடியொற்றி வளர்ந்த கட்சிகள் கூட்டணி அமைத்து, "கடவுள், நாடு குடும்பம்" என்ற கோஷத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தன. இன்று ஆட்சி பெறும் அளவுக்கு முன்னேறி விட்டன. 
 
ஸ்வீடனில் வெற்றி பெற்ற கட்சிகள் நாஜி ஆதரவுக் கண்ணோட்டம் கொண்டவை. உக்ரைனில் நாஜி ஆதரவு "அசோவ் படையினர்" உள்ளனர். இங்கிலாந்தின் போரிஸ் ஜான்சன், அவரைத் தொடர்ந்து லீஸ் ட்ரஸ் வலது சாரி, அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் போன்றோர் தீவிர வலதுசாரித் தன்மை கொண்டவர்கள். 
right wing leadersஏன் ஐரோப்பிய/ அமெரிக்க நாடுகளில் வலதுசாரி கட்சிகள் வெற்றி பெறுகின்றன?
 
1. ஐரோப்பிய யூனியனில் உள்ள வளர்ந்த நாடுகளிலும், அமெரிக்காவிலும் வேலைவாய்ப்புக்காக குடியேறும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த நாடுகளில் செல்வச் செழிப்பு, மேம்பட்ட கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வாழ்க்கைத் தரம் ஆகியவை குடியேற்றக் காரணிகளாக அமைகின்றன.
 
2. ஐரோப்பிய, வட அமெரிக்க நாடுகளில் உள்ள பெரு நிறுவனங்கள் தங்களது லாபத்தை அதிகரிக்க வெளிநாட்டவர்களுக்கு வேலை தருகின்றன. ஏனெனில் அவர்கள் உள்நாட்டவர்களை விட குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யத் தர தயாராக உள்ளனர். 
 
3. உலகமயமாக்கலின் பிண்ணனியில் பெரு நிறுவனங்கள் வேலைகளை இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு Outsourcing செய்கின்றன. Outsourcing மூலம் பெருத்த லாபத்தை பெருநிறுவனங்கள் சம்பாதிக்கின்றன.
 
4. இதன் விளைவாக வளர்ந்த நாடுகளில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது. இதோடு சேர்ந்து கொரானா, உக்ரைன் போர் ஆகியவற்றின் காரணமாக பணவீக்கம், விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பிரச்சினைகளும் ஏற்பட்டன.
 
5. வெளிநாட்டவர் குடியேற்றம் காரணமாக, அதனை எதிர்க்கும் கண்ணோட்டம் (Anti Migration) கொண்ட கட்சிகள் வளர்கின்றன. மக்களிடம் செல்வாக்கு பெறுகின்றன.
 
6. ஐரோப்பாவின் ஏழை நாடுகளான உக்ரைன், போலாந்து, ருமேனியா போன்ற நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் பிரிட்டனுக்கு வேலை நிமித்தமாக குடிபெயர்கிறார்கள் என்ற காரணத்திற்காகவே ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டனை வெளியேற்றினார் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
 
7. இந்தியர் உள்ளிட்ட வெளிநாட்டவர்களின் குடியேற்றத்தை குறைக்கவே H1B விசா விதிகளில் மாற்றத்தை கொண்டு வந்தார் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப். 
 
8. இதே காரணங்களுக்காகவே வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கும் வகையில் விதிகளை சிங்கப்பூர் திருத்தியது. நிரந்தர விசா (Permanent Resident) வழங்குவதில் பல கட்டுப்பாட்டுகளை கொண்டு வந்தது சிங்கப்பூர்.
 
9. உலகெங்கும் வளர்ந்த நாடுகளில் உள்ள பொதுவான பிரச்சினை Immigration. இந்தியாவில் வளர்ந்த பகுதியான தமிழ்நாட்டிலும் வெளிநாட்டவர் (வட இந்தியர்) குடியேற்றங்கள் அதிகரிக்கின்றன. பல இனவாதிகள் தமிழ்த் தேசியம் என்ற பெயரில் இனவாதம் பேசி, சோற்றுக்கு வக்கற்று தழிழ்நாட்டிற்கு குடியேறும் வட இந்தியர்களை குறிவைக்கின்றனர்.
 
10. உலகமயமாக்கலும், முதலாளித்துவமும் தனியார் நிறுவனங்களின் லாப வெறியும் உருவாக்கிய பிரச்சினைகள் இவை.
 
11. இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதாகக் கூறி "தன் நாடு, தன் மக்கள்" என வலதுசாரிக் கட்சிகள் பிரச்சாரம் செய்து, செல்வாக்கு பெற்று ஆட்சியை பிடிக்கின்றன.
 
ஆனால் பிரச்சினைகள் தீரப் போவதில்லை. உதாரணம் போரிஸ் ஜான்சன். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்தால் பிரிட்டனின் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என்றே பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றார் போரிஸ் ஜான்சன். மூன்று ஆட்சிகளில் எந்தப் பிரச்சினையும் தீரவில்லை. மாறாக பிரச்சினைகளின் தீவிரம் அதிகரித்தது. விளைவு, பதவிக்காலம் முடியும் முன்னரே போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அவரைப் பின்தொடர்ந்து பிரதமராக பதவியேற்ற லீஸ் ட்ரஸ்ஸீம் ஜான்சனுக்கு சளைத்தவரல்ல. அவருக்குப் பின்னர் பிரதமர் பதவியேற்றுள்ள இந்திய மருமகன் ரிஷி சுனக்கும் சற்றும் சளைத்தவரல்ல.
 
தீர்வு தான் என்ன?
 
1. அனைவரும் சமம் என்ற சமத்துவ கருத்துக்களை வலியுறுத்துகிற கொள்கை கொண்ட அரசாங்கம் அமைய வேண்டும்.
 
2. மதவெறி, இனவெறியை முன்னிறுத்தும் கட்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்.
 
3. லாப வெறியை மட்டும் முன்னிறுத்தும் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
 
4. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வழிவகை செய்யும் கொள்கைகள் வளர வேண்டும்.
 
5. தனியுடைமை தளர்ந்து, உலகெங்கும் பொது உடைமை உருவாக வேண்டும்.
 
6. இவை நிறைவேறுகிற வரை பிரச்சினைகள் தீராது.
 
7. தென் அமெரிக்க நாடுகளில் சமீப காலங்களில் ஏற்பட்ட இடதுசாரிகளின் எழுச்சி நமக்கு ஒரு உத்வேகத்தைத் தருகிறது.
 
நம்புக்கையோடு இருப்போம். புதிய சமத்துவ உலகை சமைப்போம்.
 
- சு.விஜயபாஸ்கர்
Pin It