நிகோஸ் பௌலந்த்சாஸ் (1936-1979)

இளமையும் ஆற்றலும் கொண்ட கிரேக்க பிரெஞ்சு மார்க்சிய சிந்தனையாளர் நிக்கோஸ் பவுலன்ந்சாஸ் 1970களில் தெற்கு ஐரோப்பிய நாடுகளில் அறியப்பட்ட அல்த்தூசரிய அமைப்பியல் மார்க்சியராக இருந்தவர். பின்னாட்களில் சனநாயக சோசலிசவாதியாகப் பாராட்டப்பட்டார். சட்டவியல் ஆய்வாளராகப் பயின்று, அரசு குறித்த சிந்தனையில் புதிய எல்லைகளை எட்டினார். குறிப்பாக, பாசிச அரசுகுறித்த அவரது ஆய்வுகள் பாசிச சமூக அமைப்பினுள் வர்க்கங்களின் தொழில்பாடு, தெற்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல், கிரீஸ் ஆகிய நாடுகளில் பாசிசம் பற்றிய ஆய்வு ஆகியவற்றில் கவனம் கொண்டவை.

“ஜெர்மனியில் இயற்கைச் சட்டத்தின் மீள்வருகை” என்ற தலைப்பில் பௌலன்ந்த்சாஸ் தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை முடித்தார். அரசுபற்றிய நமது ஆய்வுகளில் இன்னும் போதாமைகள் உள்ளன என்று அவர் கருதினார். அரசுபற்றிய எளிய புரிதல்களை நாம் கடந்து செல்ல வேண்டும் என்று அவர் கருதினார். பாப் ஜெஸ்ஸோப் என்ற அரசுகுறித்த மார்க்சிய ஆய்வாளரோடு விவாதித்தும் கலந்துரையாடியும் அவர் மார்க்சிய அரசு குறித்த கருத்தாக்கத்தை வளர்த்தெடுத்தார். தேசியம் என்ற கோட்பாட்டை முதலாளிய வர்க்கம் அதன் ஒற்றுமையைச் சாதிப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளுகிறது என்பதனை எடுத்துக்காட்டினார். அந்தோனியோ கிராம்சியின் பண்பாட்டு மேலாண்மை என்ற கருத்தை முதலாளிய ஒன்றுபடுத்தலுக்குப் பயன்படுத்தினர் என்று சுட்டிக்காட்டினார்.

nicos poulantzas“புதிய குட்டி பூர்ஷ்வா” என்ற கருத்தாக்கத்தை பௌலந்த்சாஸ் உருவாக்கினார். பாசிச செயல்பாடுகளில் புதிய குட்டி பூர்ஷ்வாவின் பாத்திரத்தை அவர் சுட்டிக்காட்டினார். புதிய குட்டி பூர்ஷ்வா முதலாளிய ஆதரவினைத் திரட்டிக்கொடுக்கிறது. மறுபுறம் பாட்டாளி வர்க்கத்தைச் சிதறடிக்கிறது.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் கார்ப்பரேட் அமைப்புகள் உருவாக்கும் New Deal எனப்படும், தொழிலாளர் வர்க்கம், அரசு, மூலதனம் ஆகியவற்றின் புதிய சமரசங்களைப் புதிய குட்டி பூர்ஷ்வாக்கள் உருவாக்க முனைகிறார்கள் என்பதை புலண்ட்ஸாஸ் எடுத்துக் காட்டுகிறார். இவற்றுக்கும் உலகமயமாக்கம் என்ற வேலைத் திட்டத்திற்கும் இடையில் பல ஒற்றுமைகள் உண்டு என்றும் காணமுடிகிறது.

பாசிச அரசு

அரசு பற்றிய பாசிசக் கொள்கையை நிக்கலோய் பௌலந்த்சாஸ் மிக விரிவான ஆய்வுக்கு உட்படுத்துகிறார். “ஃபாசிசமும் சர்வாதிகாரமும்” எனும் அவரது நூல் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இப்போது தமிழில் என்சிபிஎச் சிறப்புப் பதிப்பாக வெளியாகிறது. தோழர் எஸ். வேட்டைக்கண்ணன் மொழிபெயர்ப்பினைச் செய்துள்ளார். பாசிசம் குறித்த மார்க்சியக் கோட்பாட்டுப் பகுப்பாய்வை வழங்கியவர் என்ற ஏகோபித்த பாராட்டினை பௌலந்த்சாஸ் பெறுகிறார். பாசிசம் பற்றிய இன்றைய புரிதலுக்கு அவரது ஆய்வு மிக அவசியமாகிறது.

ஏகாதிபத்தியம் குறித்த லெனினது கருத்தாக்கத்தின் ஒரு குறிப்பிட்ட புள்ளியிலிருந்து பாசிசம் துவங்குகிறது. ஏகாதிபத்தியம் என்பது முதலாளியத்தின் உச்சக்கட்ட வளர்ச்சி என்று லெனின் மதிப்பிடுகிறார். ஆயின் ‘இவ்வளர்ச்சி நிலை’யை லெனின் அழுகிய ‘ஒட்டுண்ணி நிலை’ அல்லது ‘சிதைந்த நிலை’ (Moribund) என்று சித்திரிக்கிறார். மேலும் அது ஒரு நிலையற்ற, தெளிவற்ற சமூகப் பொருளாதார அமைப்பு என்கிறார். அது ஒரு நெருக்கடி நிலையைச் சுட்டுகிறது என்று பௌலந்த்சாஸ் வரையறுக்கிறார்.

முதலாளித்துவ ‘வளர்ச்சி’ என்ற கருத்தாக்கத்தை அதன் அடிப்படையான முரண்பட்ட தன்மை (நெருக்கடி) என்ற இயங்கியல் கருத்தாக்கத்தைக் கொண்டு விளக்குவது பௌலந்த்சாஸின் சிறப்பான பண்பு. பாசிசம் ஒரே நேரத்தில் முதலாளித்துவ பலவீனத்தின் அளவுகோலாகவும் முதலாளித்துவ நெருக்கடியின் வளர்ச்சியை எடுத்துக் காட்டுவதாகவும் அமைகிறது என்று குறிப்பிடுகிறார். பலவீனமும் வளர்ச்சியும் சந்தித்துக்கொள்ளும் தருணம் அது என்பார். பாசிச சர்வாதிகாரத்தின் கடைசி துருப்புச்சீட்டு அது என்று பௌலந்த்சாஸ் கூறுகிறார். அது பாசிசத்தின் முதிர்ந்த வேர்களையும் சோசலிசத்தின் விதைகளையும் தன்னில் கொண்டுள்ளது என்று அவர் விவரிப்பார்.

பாசிசம் உற்பத்தி சக்திகளுக்கு முன்னுரிமை வழங்குகிறது. அது உற்பத்தி உறவுகளின் மீதான அக்கறையின்மை மற்றும் உற்பத்தி உறவுகளின் செலவீனத்தின்மீது உற்பத்தி சக்திகளைக் கட்டி எழுப்புகிறது. பாசிசம் ஏகபோக முதலாளியத்தின் ஆதிக்கத்தை நோக்கிய வரலாற்றுக் கட்டம் என்கிறார் புலண்ட்ஸாஸ். (முதலாளித்துவப்) பொருளாதாரத்தில் தீர்மானகரமான பாத்திரத்தை அரசியல் வகிக்கும் சூழலை பாசிசத்தில் நாம் சந்திக்கிறோம்.

பாசிசத்தின் அரச வடிவங்கள்

பாசிச எழுச்சியின் துவக்கம் என்பதே பாசிசத்தின் விதிவிலக்கான அரசின் வடிவங்கள் நோக்கிய திசை குறித்ததே என்கிறார் புலண்ட்ஸாஸ். விதி விலக்கான வடிவங்களை உருவாக்குவது பாசிச அரசாங்கத்தின் முக்கியப் பணியாக முன்வைக்கப்படுகிறது. கோலின் பார்க்கர் எனும் அறிஞர் மேற்குறித்த பிரச்சினையைக் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்.

1.            நீதித்துறையின் ஒழுங்கமைப்பை பாசிசம் தலைகீழாகத் திருப்புகிறது.

2.            உண்மை அதிகாரத்தைக் சனநாயக நிறுவனங்களிலிருந்து நீக்குகிறது.

3.            அரசு எந்திரத்தை செயல்பாடற்ற வெறும் குழுக்களாக மாற்றுகிறது.

4.            பெயரளவில் அதிகாரம் - உண்மையதிகாரம் எனும் இரண்டுக்கும் இடையிலான விலகல் எனும் அரசியல் நெருக்கடியை உருவாக்குகிறது.

5.            தாராளவாத அரசு தலையீட்டு அரசாக மாற்றமடைகிறது.

6.            பொருளாதாரத்துக்கும் அரசியலுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்துகிறது.

7.            அனார்க்கிய (அரசிலி) நிறுவனங்கள் அதிக அளவு அரசியல்மயமாகின்றன.

குட்டி முதலாளியத்தின் கருத்தியல்

1.            முதலாளித்துவம், பெரிய அளவு பணம் மற்றும் செல்வவளம் ஆகியவற்றுக்கு குட்டி முதலாளியம் பெயரளவில் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கிறது.

2.            (தணிந்துவிடுவோம் அல்லது) முதலாளிகளுக்கு எதிரான போட்டியில் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தோடு வாழ்வது குட்டி பூர்ஷ்வாக்களின் முக்கியப் பண்பு. மேல்மட்டச் செல்வச் செழிப்பில் வியந்து கவர்ச்சி அடைவது குட்டி பூர்ஷ்வாவின் பிறிதொரு முக்கியப் பண்பு.

3.            தனிநபர் வாதம், சட்ட நடவடிக்கைகளை அதீதமாக நம்புதல், நடுநிலை அரசு (வர்க்கம்) மீது நம்பிக்கை கொள்ளுதல் ஆகியனவும் குட்டி பூர்ஷ்வாவின் குணாதிசயங்கள்.

4.            நடுவர் அரசின் மறு பகிர்வு நடவடிக்கைகள் மூலம் சமூகநீதி சாத்தியப்படும் எனவும் அது நம்பிக்கைக் கொள்ளுகிறது.

5.            வேளாண் கலகங்கள் மூலம் சமூக நகர்வுகளை நம்புதல், நுண்மையான கலக வழிபாடு போன்றவையும் பாசிச ஆதரவு குட்டி பூர்ஷ்வாவின் பண்புகள் ஆகும்.

6.            ரத்தத்திற்கும் மண்ணிற்கும் இடையிலான பிரிக்க முடியாத உறவை விவசாயிகள் நம்புவார்கள்.

7.            கடனுக்கு எதிரான குட்டி முதலாளியக் கலகங்கள், யூத வணிகர்கள், வட்டி முதலாளிகளுக்கு எதிரான கலகங்கள் ஆகியன பாசிசக் காலகட்டத்தில் பெருகுகின்றன.

8.            கம்யூனிஸ்ட் அறிக்கையில் பேசப்படும் நிலவுடைமையாளர் சோசலிசம் பெருகுகிறது

9.            நாட்டுப்புற வர்க்கங்கள் பாசிசம் உருவாவதில் முக்கியப் பங்கேற்கின்றன.

தேசியம் பற்றி பாசிசம்

1.            பாசிசத்தின் வரலாறு தேசியத்திலிருந்து தொடங்குகிறது என்று கூறுவதில் தவறில்லை. 16-18 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் தேசியச் சிந்தனை பிறப்பெடுத்துப் பரவிய காலங்களில் பாசிசம் அதன் வேர்களைக் கண்டு கொண்டது. ஐரோப்பிய நாடுகளில் பல சிறு இனக்குழுகளின் சேர்க்கையிலிருந்து ஒன்றுபட்ட தேசியங்கள் உருவாகின.

2.            இனம், மொழி, மதம், நிலப்பரப்பு ஆகியவற்றில் ஏதாவது ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அடையாளங்கள் தேசியத்தின் பூர்வீகமாக அமைய முடியும். குறிப்பாக, ஒரு நாடு காயம்பட்ட வரலாறு அல்லது அது குறித்த கற்பிதம் தேசிய உருவாக்கத்தில் முக்கியமான பங்கேற்க முடியும். ஓர் உலகப் போரின் தோல்விகள் அல்லது அவமதிப்புகள் மற்றொரு உலகப் போரின் தூண்டுதலாக அமைய முடியும். அதுவே புதிய தேசியங்களின் எழுச்சியாக அமைய முடியும்.

3.            ‘நாம் பேரினமாக’ அல்லது ‘பெருந்தேசியமாக’ இருந்தோம் என்ற கற்பிதம் பாசிசத்தை உருவாக்க முடியும். எனது இனம் தனித் தன்மைகளைக் கொண்டது என்ற பெருமிதம் அதிகம் பேசப்படுகிறது.

4.            வரலாற்றில் நிலம், எந்திரங்கள் ஆகியன பேரரசு உருவாக்கத்தில் சிறப்பான பங்காற்றியுள்ளன. இன்றும் அவற்றைச் சார்ந்து அரசியல் நடத்த முடியும்.

பாசிசத்தின் சனநாயக எதிர்ப்பு

1.            பாசிசத்தின் முதல் எதிரி சனநாயகம். நவீன யுகத்தின் மிகப்பெரும் சாதனையான தனிமனிதன், மனித உரிமை, சுதந்திரம் ஆகியனவற்றைப் பாசிசம் மறுதலிக்கிறது. அச்சு எந்திரம், புத்தகங்கள், பத்திரிகைகள், ஊடகங்கள் ஆகியன சர்வாதிகார நிறுவனங்களால் மறுதலிக்கப்படுகின்றன.

2.            புத்தகங்கள் கேள்வி கேட்கப் பயிற்சியளிக்கின்றன. ஒரே நூலைமாறாத உண்மைகளைச் சுமக்கும் நூல்களாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அந்நூலை மீண்டும் மீண்டும் வாசிக்கும் வழக்கம் நமது புனித நூல்களுக்கு உண்டு. உண்மை என்பதே மாறாதது என்று நாம் கருதுவதுண்டு. ஆயின் அடுத்தடுத்து புதிய விடயங்களை நோக்கி நூல்கள் நம்மை இட்டுச் செல்கின்றன.

1922-1933 இக்காலம் இரண்டாம் உலகப் போரின் துவக்கக் காலம். ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் நெருக்கடியினுள் சிக்கிக் கொண்ட காலம். இத்தாலி வடக்கு, தெற்கு எனப் பெரிதாகப் பிளவுபட்ட காலம். வடக்கு, தொழில் நகரங்களைக் கொண்டது.தெற்கு விவசாய நிலப்பரப்பைக் கொண்டது. முன்பே குறிப்பிட்டது போல முரண்பாட்டின் இரண்டு பக்கங்களும் வெளிப்படையாகத் திரண்டெழுந்தன. ஏகபோக முதலாளியம் தனக்குள் ஒருபுறம் பாசிசத்தின் விதைகளையும் இன்னொரு புறம் புரட்சியின் விதைகளையும் இக்காலத்தில் எடுத்து வந்தது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற சொல்லாக்கமும் முன்னுக்குவந்தது.

பாசிசமும் சமூக சனநாயகமும் மோதிக் !கொண்டன. கம்யூனிஸ்டுகளும் சோசலிஸ்ட்டுகளும் “மக்கள் திரளின் அரசியல்” என்ற ரோசா லக்சம்பர்கின் சொற்களை நினைவுக்குக் கொண்டு வந்தனர். ரஷ்ய மண்ணில் சோசலிசப் புரட்சி எனும் வெகுமக்கள் கூட்டணி அரசியலும் முன்னுக்கு வந்தது. டிமிட்ரோவும் பிற ஐரோப்பிய கம்யூனிஸ்ட்டுகளும் தொழிலாளர்கள், விவசாயிகள், தேசிய இனப் போராளிகள் எனப் பல தரப்பட்டவர்களை இணைத்த ஐக்கிய முன்னணி (United Front) வேலைத் திட்டத்திற்கு வந்து சேர்ந்தனர். குட்டி பூர்ஷ்வாக்கள் நகர்ப்புறங்களில் பூர்ஷ்வா எதிர்ப்புடனும் கிராமப்புறங்களில் நில உடமை கொண்டவர்களாகவும் ஒன்றுபட்டனர்.

இத்தாலியில் வடக்கே தொழிலாளர் வர்க்கமும் தெற்கே விவசாயிகளும் ஒன்றுபட்டனர். பாசிசம் தனது கருத்தியல் ஆற்றலைச் செழுமைப்படுத்தியது. கம்யூனிஸ்ட்டுகள் உழைக்கும் மக்களைப் போராளிகளாக மாற்றினர். இரண்டு அணிகளும் மோதிக் கொண்டன. பாசிச அரசு போலிஸ் அரசு என்ற வடிவத்தை ஏற்றது. சமூக சனநாயக சக்திகள் புரட்சியின் சக்திகளாக ஒன்றுதிரண்டன.

- ந.முத்துமோகன், இந்திய மார்க்சிய சிந்தனையாளர்களில் மிக முக்கியமானவர், தமிழர் சமூக வரலாற்று ஆய்வாளர்.

Pin It