நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சரோகசி (‘ஒருவருக்குப் பதிலாக’) அல்லது வாடகைத் தாய் முறையின் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொண்டது பெரும் சர்ச்சையாகி இருக்கின்றது.

இதற்கு முன்பும் பல திரைப் பிரபலங்கள் குறிப்பாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா,  நடிகர் ஷாருக்கான், நடிகர் அமீர்கான், நடிகை ஷில்பா ஷெட்டி, நடிகை சன்னி லியோன் ஆகியோர் இப்படி வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டாலும் அப்போதெல்லாம் ஆகாத சர்ச்சை இப்போது ஆகியிருக்கின்றது. இவர்களில் பலர் வாடகைத் தாய் முறையை ஒழுங்குபடுத்துவதற்கான ஒன்றிய அரசின் சட்டங்கள் வருவதற்கு முன்பு குழந்தை பெற்றுக் கொண்டவர்கள்.nayanthara and vignesh sivanஒன்றிய அரசால் 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மகப்பேறு உதவி தொழில்நுட்ப கட்டுப்பாடு சட்டம் 2021 (ART Regulation Act 2021), வாடகைத் தாய்மை கட்டுப்பாடு சட்டம் 2020 என குழந்தைப் பேறு குறித்த இரண்டு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

மக்களவையில் 2019ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதியன்று இதற்கான மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. பிறகு, 2021ஆம் ஆண்டின் இறுதியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் 2022 ஜனவரி மாதம் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

 இந்த சட்டம் வாடகைத் தாய்மை முறையை, சில கட்டுப்பாடுகளோடு வரையறுத்துள்ளது. ஒரு தம்பதிக்காக வாடகைத் தாயாக இருந்து குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண், குழந்தை பிறந்த பிறகு அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். மகப்பேறின்மை பிரச்சினை ஒரு தம்பதிக்கு இருந்தாலோ அல்லது அது தொடர்பான ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ மட்டுமே வாடகைத் தாய் முறை அனுமதிக்கப்படும்.

அப்படி வாடகைத் தாயாக இருக்க முன்வருபவர், 25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராகவும், பெற்றோராக விரும்பும் தம்பதிக்கு நெருக்கமான உறவினராகவும் இருக்க வேண்டும். இதை வணிக நோக்கோடு செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த முறைப்படி குழந்தை பிறந்தவுடன், முற்றிலும் உயிரியல் ரீதியாக தம்பதியின் குழந்தையாகவே அது கருதப்படும்.

 இந்திய மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக வாடகைத் தாய் முறையை 2002 இல் சட்டப்படி செல்லத்தக்கதாக்கியது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள மருத்துவமனைகள் 2014 ஆம் ஆண்டுக்கு முன்பே 15000 முதல் 20000 டாலர் வரை கட்டணம் வசூலித்தன. ஆனால் இவர்கள் அமெரிக்காவில் இப்படி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் 50,000 முதல் 1,00,000 டாலர் வரை செலவாகும்.

இதில் வாடகைத்தாய்க்கு கிடைக்கும் பணம் என்பது 5000 முதல் 6000 டாலர் ஆகும். இரட்டை அல்லது மூன்று குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்தால் இன்னும் கொஞ்சம் கூடுதலாக சம்பாதிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும்

 இந்தியாவைத் தவிர அமெரிக்கா, பெல்ஜியம், கனடா, இஸ்ரேல், ஜார்ஜியா போன்ற நாடுகளும் வாடகைத் தாய் முறையை அனுமதிக்கின்றன.

 இந்தியாவில் நிலவும் கடுமையான வறுமை, குறிப்பாக பொருளாதார சுதந்திரம் பெறாதவர்களாக பெண்கள் இருப்பது வாடகைத்தாய் முறை வளர்வதற்குக் காரணமாக இருக்கின்றது.

 உறவினர்கள்தான் வாடகைத் தாயாக இருக்க வேண்டும் என சட்டம் இருந்தாலும், இந்த விதி பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை. அதற்கு முக்கிய காரணம் மற்றவர்களுக்காக வயிற்றில் குழந்தையை சுமந்து, அதன் மூலம் வரும் பணத்தில் வாழ்வதை பெரும்பாலான இந்தியப் பெண்கள் விரும்புவதில்லை. மிக மோசமான வறுமையில் இருக்கும் பெண்களே இதற்கு ஒப்புக் கொள்கின்றார்கள்.

 அவர்கள் குழந்தை பெறும் காலம்வரை ஒரு கைதியைப் போல மருத்துவமனைகளில் அடைத்து வைக்கப்படுகின்றார்கள். வெளி உலக தொடர்புகளில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்படுகின்றார்கள். அவர்கள் யாருக்காக குழந்தை பெற்றுத் தருகின்றார்களோ அவர்களை பார்ப்பதற்குக்கூட அனுமதிக்கப்படுவதில்லை.

 இந்த வாடகைத்தாய் முறையில் இருப்பது அப்பட்டமான வணிக சிந்தனை மட்டுமே ஆகும். அதைத் தாண்டி எந்த மனித விழுமியங்களும் இதில் கிடையாது. கருவை சுமக்கும் தாய் இறந்து போனால் கூட அதற்கு மருத்துவமனையோ, பணம் கொடுத்து கருவை சுமக்க வைத்தவர்களோ பொறுபேற்றுக் கொள்ளத் தேவையில்லை என்ற நிலைதான் நீடிக்கின்றது. மேலும் குழந்தை பெற்றுக் கொடுத்தவுடன் அந்தத் தாய்க்கும் குழந்தைக்குமான உயிரியல் பிணைப்பு முற்றிலுமாக தடுக்கப்படுகின்றது.

வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பும் பணக்காரர்கள் யாரும் அனாதைக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதை விரும்புவதில்லை. அதற்கு முக்கிய காரணம் தங்களுடைய சொத்தை அனுபவிக்கும் உரிமை தங்களுடைய உயிரியல் வாரிசுகளுக்கு மட்டுமே உள்ளது என்ற பிற்போக்கு சிந்தனைதான்.

 இந்தியாவில் ஏறக்குறைய 30 லட்சம் குழந்தைகள் ஆதரவற்றவர்களாக இருக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபை குழந்தைகள் நிதியம் யுனிசெப் கூறியிருக்கிறது. இதில் 4.70 லட்சம் குழந்தைகள் அரசின் காப்பகங்களில் இருக்கிறார்கள் என்று இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் 2017-ல் உறுதி செய்திருக்கிறது.

 இதுமட்டுமல்லாமல் கோவிட்-19 நோயினால் இந்தியாவில் 1.2 லட்சம் குழந்தைகள் பெற்றோர்களில் ஒருவர் அல்லது இருவரையும் இழந்திருக்கின்றனர் என்று தி லான்செட் ஆராய்ச்சிப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

 குழந்தைகளைத் தத்து எடுக்க வேண்டும் என்றால் ஒன்றிய அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய தத்தெடுப்பு வள ஆதார மையம் - CARA (Central Adoption Resource Authority) எனும் அமைப்பின் மூலம் ’இணையத்தில்’ பதிவு செய்து மட்டுமே குழந்தைகளைத் தத்து எடுக்க முடியும்.

 ஆனால் இதில் பதிவு செய்பவர்களின் ஆவணங்கள் மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை சரி பார்த்து, பதிவு மூப்பின் அடிப்படையில் குழந்தைகளைத் தத்து கொடுக்க எடுத்துக் கொள்ளும் கால அவகாசம் 2 முதல் 4 வருடங்கள் ஆகும். இதுவும் கூட பல பேர் குறிப்பாக குழந்தை பெற்றுக் கொள்ள தகுதி இல்லாதவர்கள் மாற்றுவழிகளை நாடிச் செல்ல காரணமாக அமைந்து விடுகின்றது.

 4.70 லட்சம் குழந்தைகள் ஆதரவற்றவர்களாக அரசின் காப்பகங்களில் இருக்கும் போது தத்தெடுப்பு நிறுவனங்களில் தத்தெடுப்பதற்குத் தயாராக இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஒற்றை இலக்கங்களில் மட்டுமே இருக்கின்றன. நாடு முழுவதும் CARA மூலமாக சட்டப்படி தத்து எடுப்பதற்கு தயாராக இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 2000-திற்கும் குறைவுதான்.

 நயன்தாரா விக்னேஷ் சிவன் பிரச்சினையில் அவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கின்றது. ஆனால் இருவருக்கும் உடல் ரீதியாக குழந்தை பெற்றுக் கொள்ள என்ன பிரச்சினை இருந்தது என்று உறுதியாகத் தெரியவியல்லை.

 ஆனால் பெரும்பாலான திரைப் பிரபலங்களோ அல்லது பணக்காரர்களோ வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதற்குப் பின்னால் உள்ள முக்கியமான காரணம் தங்களின் அழகு குறைந்து விடக்கூடாது என்பதுதான்.

அவர்கள் எந்த வலியையையும் சுமக்கத் தயாராக இல்லை. பணம் கொடுத்தால் அந்த வலியை சுமக்க, விற்பதற்கு தன்னுடைய உடலைத் தவிர ஏதுமற்ற ஒரு கூட்டம் இங்கே இருக்கின்றது என்ற நம்பிக்கைதான் அவர்களை வாடகைத் தாய் முறையை நோக்கித் தள்ளுகின்றது.

 இதில் ஏதாவது முற்போக்கு இருக்கின்றதா என தேடிப் பார்த்தால் பணக்காரத் திமிரும், ஆணவமும் தவிர வேறு ஒன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டவர்கள் அனைவரும் அது சம்மந்தமான முழு விவரங்களையும் பொதுவெளியில் வெளியிட்டாலே இதில் தெரிந்துவிடும்.

முதலாளித்துவ உலகில் குழந்தைகளை பெற்றுக் கொள்ள விந்தணுவோ, கருமுட்டையோ, கருப்பையோ எதுவுமோ தேவையில்லை. பணம்… பணம் மட்டும் போதும். பணமே குழந்தைகளையும் பிரசவித்து விடுகின்றது.

- செ.கார்கி

Pin It