மனித உரிமை மீறல் குறித்து உலகமே பேசிக்கொண்டிருக்கிறது.

உரிமை மீறல் என்பது மனிதர்களுக்கு மட்டுமன்று. சாதி

என்ற பெயரில் சமூகங்களிடத்திலும் அது இருக்கத்தான் செய்கிறது.

மனிதனை வண்டியில் வைத்து, இன்னொரு மனிதன் இழுப்பது மனித உரிமை மீறல் சார்ந்த இழிவு.

இந்த இழிவைத் தமிழகத்தில் திமுக ஆட்சியின்போது தலைவர் கலைஞர் நீக்கினார்.

ஆனால் நீக்கமுடியாத ஒரு சமூக உரிமை மீறல் எந்த நாட்டிலும் இல்லாமல் இந்தியாவில் மட்டும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.

இந்தியா முழுவதிலும், அந்தந்த மாநிலத்தில் வெவ்வேறு பெயர்களில் சாதிகள் இருந்தாலும், ‘மாதிகா’ என்ற பெயரில் வாழும் சமூக மக்கள் கையால் மலம் அள்ளும் இழிவான வேலையைச் செய்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் வாழும் அருந்ததியர் சமூக மக்களில் 70 சதவீதம் இந்த இழிதொழிலைச் செய்கிறார்கள்.

அதனால் அந்த மக்களின் உடல் நலம் பாதிப்படைகிறது. அவர்கள் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. மொத்தத்தில் அந்தச் சமூகத்தின் எதிர்காலமே கேள்விக்குறியில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் இந்த மக்களின் கையால் மலம் அள்ளும் வேலைகுறித்து எந்த ஒரு புள்ளி விவர ஆவணமும் அரசாங்கத்தில் பராமரிக்கப்படவில்லை.

காரணம் தமிழ்நாட்டில் கையால் மலம் அள்ளும் வேலை தடை செய்யப்பட்டிருக்கிறது, அப்படி ஒரு வேலை இங்கே நடக்கவில்லை என்பதைச் சொல்வதற்குத்தான்.

உண்மையில் தடைசெய்து இந்த வேலையை நீக்க முடியாது.

சமூக அக்கறையுடன் சொல்வதானால், அந்த மக்களுக்கு

மாற்று வேலை கொடுத்துவிட்டு அந்த வேலையிலிருந்து அவர்களை அப்புறப்படுத்தவேண்டும்.

பாதாளச் சாக்கடைகளில் இறங்கிச் சுத்தப்படுத்துவோருக்கும் இது பொருந்தும்.

நவீன இயந்திர மைய காலத்தில் இது ஒன்றும் முடியாததன்று.

மனித உரிமை மீறல் என்பது ஒருவரை பாதிக்கும். சமூக உரிமை மீறல் என்பது மக்களை பாதிக்கும்.

Pin It