வாச்சாத்தி!

கால ஓட்டத்தில் நம்மில் சிலர் இந்தப் பெயரை மறந்திருக்கலாம். அடுத்த தலைமுறையில் மிகப் பலர் இது குறித்து அறியாதிருக்கலாம்! ஆனாலும் வாச்சாத்தியில் நடைபெற்ற வன்கொடுமை நிகழ்வுகளை, வரலாறு மறக்காது - ஒருநாளும் மன்னிக்காது!

1992 ஜூன் 20, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாச்சாத்தி என்னும் கிராமத்தில் அந்த கொடூரங்கள் அரங்கேறின. அப்போது ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தார். வீரப்பனைத் தேடும் படலம் என்னும் பெயரில், கிராமத்து மக்கள், பழங்குடியினர் பலர் மிகக் கொடுமையான சித்திரவதைகளை எதிர் கொண்டார்கள்.tribal womenஅப்படித்தான் அந்த நாளில் அந்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக் கணக்கானவர்கள் காவல், வருவாய் மற்றும் வனத்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அவர்களுள் எண்ணிக்கையில் பெண்களே மிகுதி.

அன்று காவல்துறையினர் வீரப்பனைத் தேடவில்லை. அழைத்து வந்த பெண்களில் அழகானவர்களைத் தேடினார்கள். 18 பெண்களைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கினார்கள்.

ஜெயலலிதா அரசு அந்தக் குற்றவாளிகளைக் கண்டறிவதிலும், தண்டிப்பதிலும் அக்கறை காட்டவில்லை. 1996 ஆம் ஆண்டு அந்த வழக்கு சிபிஐ க்கு மாற்றப்பட்ட போது, 296 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தயாராயிற்று.

வழக்கை விசாரித்த தர்மபுரி செசன்ஸ் நீதிமன்றம், 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 இல் தீர்ப்பு வழங்கியது. 12 பேருக்கு 10 ஆண்டுகளும், 5 பேருக்கு 7 ஆண்டுகளும், பிறருக்கு ஒன்று முதல் மூன்று ஆண்டுகளும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. மொத்தம் 215 பேர் தண்டனை பெற்றனர்.

கூடுதல் தண்டனை பெற்ற 17 அதிகாரிகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அந்த வழக்கு 10 ஆண்டுகள் விசாரணையில் இருந்தது. இப்போது ஒரு நல்ல தீர்ப்பு வந்திருக்கிறது! நீதிபதி வேல்முருகன், மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து, தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அப்படியே உறுதி செய்து இருக்கிறது!

காலம் தாழ்ந்த நீதி, மறுக்கப்பட்ட நீதி (delayed justice is denied justice) என்று சொல்வார்கள். ஆனால் இந்த வழக்கில் காலம் தாழ்ந்தாலும், நேர்மையான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றங்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்திருக்கிறது.

வாச்சாத்தி மக்களின் மீது ஏற்படுத்தப்பட்ட ஆறாத காயங்களுக்கு, இப்போது ஆறுதலாவது கிடைத்திருக்கிறது!

- சுப.வீரபாண்டியன்

Pin It