தொல்காப்பியத்திற்கு முந்தைய காலம் தொட்டு பல்வேறு உரைகள் எழுதப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு உரை கண்ட இளம்பூரணர் தனித்த அடையாளத்தையும், சொல்லிற்கு மட்டும் சேனாவரையர் என்று தனித்த அடையாளத்தையும் மரபு வழியாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது . சொல்லிற்கு பல உரை வந்திருந்தாலும் அவற்றில் சேனாவரையர் உரை தனித்து பேசப்படுகிறது. அவரது உரையும் எடுத்துகாட்டும் ஆராய்தல் பொருட்டு இக்கட்டுரை அமைகிறது.

சேனாவரையரின் திறன்

ஒருவரின் சிந்தனை கருத்துக்கு சிறந்தது அறிவு என்னும் திறவு கோலாகும். கிளவியாக்கத்திற்கு பொருள் உரைக்கும் இடத்தில் குற்றமற்ற சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்று சேனாவரையர் குறிப்பிடுகிறார் . இதனை,

"வழுக்களைந்து சொற்களை ஆக்கிக் கொண்டமையின், அவ்வோத்து கிளவியாக்கம் பயிற்கு ஆக்கம் அமைத்துக்கோடல்"

சொற்களுக்கு ஏற்ப பொருள் உரைப்பதென்பது சேனாவரையரின் திறன் ஆகிறது.

பன்முகத்திறன்

ஒரு மொழி கற்ற ஆசிரியர்களுக்கு இரு மொழியினுடைய புலமை அவசியமானதாக அமைகிறது. ஒரு துறை சார்ந்த அறிவை பெற்றிருத்தல் மட்டுமில்லாமல் மற்ற துறை சார்ந்த அறிவை பெற்றிருத்தல் சிறந்த வழித்துணையாக அமைகிறது. சேனாவரையர் வடமொழி புலமை பெற்றிருந்தாலும் தமிழ்மொழி பண்பாட்டிற்கு ஏற்பவே பல்வேறு சான்றாதாரங்களை கொண்டு உண்மையை நிறுவுகின்றார்.

மரபு எடுத்துக்காட்டு

ஒரு பொருளுக்குரிய சொல்லை வேறொரு சொல்லால் வழங்குவது மங்கல வழக்கு. பிரிவு கருதி இங்ஙனம் உரைக்கப்படுகிறது.

"தகுதியும் வழக்கும் தழீயின ஒழுகும் பகுதி கிளவி வரை நிலையிலவே" (தொல்,சொல்,17)

எ.கா

செத்தாரை துஞ்சினார் என்றல் சுடுகாட்டை நன்காடு என்றல் ஓலையைத் திருமுகம் என்றல் கெட்டதனை பெருகிற்று என்றல்

உழவு எடுத்துக்காட்டு

விளையும் பயிர் நன்கு செழித்து வளர நீரும் உரமும் முக்கியமானது என்பதனை அந்த கால மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனர் என்பது புலனாகிறது.

எ.கா

எருப்பெய்து இளங்கலை கட்டு நீர்கால்யாத்தமையின் பைங்கூழ் நல்லவாயின.

வேளாண்மை எடுத்துக்காட்டு

இயற்கைப் பொருளை அதன் இயல்பிலேயே எடுத்துரைப்பது சிறப்பாகும்.

"இயற்கைப் பொருளை இற்றெனக் கிளத்தல்" ( தொல்,சொல்,9)

எ.கா.
நிலம் வலிது, தீ வெய்து, உயிர் உணரும்.

செயற்கைக்கு எடுத்துக்காட்டு

இயற்கைப் பொருள் செயற்கை ஓடு இணையும்போது சில மாறுதல்கள் ஏற்படும் அவ்வாறு மாறும்போது அது செயற்கை நிலைக்கு தள்ளப்பட்டு விடும்.

"செயற்கைப் பொருளை ஆக்கமொடு கூறல்" ( தொல்,சொல்,20)

எ.கா

கடுக்கலந்த கைப்பிழியெண்ணெய் பெற்றமையான் மயிர் நல்லாவாயின.

வணிக எடுத்துக்காட்டு

பழங்காலத்தில் வணிகர்கள் விற்கும் முறையில் சில உத்தியை கையாண்டனர் . ஒரு பொருள் இல்லை என்று சொன்னால் இல்லை என்று கூறாமல் இருக்கிற பொருளை வைத்து அதற்கு ஏற்ப பொருள் கூறுவது உயர்ந்த மரபாக கருதப்பட்டது.

"எப்பொருள் ஆயினும் அல்லது இல்லெனின் அப்பொருள் அல்லாப் பிறிது பொருள்கூறல்" ( தொல்,சொல்,25)

எ.கா

பயனுளவோ வணிகா? என்று வினாவிய வழி உளுந்தல்ல கொள்ளு உள்ளதென விடை கூறல்.

வழக்கு எடுத்துக்காட்டு

மக்கள் காலங்காலமாக தங்கள் வாழ்வில் பயன்படுத்தும் சொற்களே வழக்குக் காட்டு என்று அழைக்கப்படுகிறது. அவற்றுள்

"தருசொல் வருசொல் ஆயிரு கிளவியும் தன்மை முன்னிலை ஆயிடத்த" ( தொல்,சொல்,29)

எ.கா.

எனக்கு தந்தான்
நனக்கு தந்தான்.

ஏவல் எடுத்துக்காட்டு

ஒருவரைப் பார்த்து இதை செய் என்று வினவிய வழி அதை நீ செய் என்று மறைமுகமாக கூறுவது ஏவல் என்று சுட்டப்படுகிறது.

"செப்பே வழீஇயினும் வரைநிலை யின்றே அப்பொருள் புணர்ந்த கிளவியான" ( தொல்,சொல்,15)

எ.கா.

சாத்தா உண்டியோ? என்று வினவிய வழி நீ உண் எனல்.
கரூர்க்கு சென்றாயா? என்று வினவிய வழி நீ செல் எனல்

மடல் எடுத்துகாட்டு

சேனாவரையரின் உரை கொண்டு அக்கால மக்கள் கல்வியறிவில் சிறந்து விளங்கினர் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

எ.கா

சாத்தன் கையெழுது மாறு வல்லன் அதனால் தந்தை உவக்கும்

உணவு எடுத்துக்காட்டு

ஒவ்வொரு உயிருக்கும் இன்றியமையாத ஒன்று உணவு. உணவின் தேவையை சொல்வதற்காகவே சில இடங்களில் சேனாவரையர் சில எடுத்துக்காட்டுகளை குறிப்பிடுகிறார்.

"வேறு வினைப் பொதுச்சொல் ஒருவினை கிளவார்" ( தொல், சொல், 46)

எ.கா

சோறுங்கறியும் அயின்றார்
உண்பன, தின்பன, பருகுவன, நக்குவன

பட்டம் எடுத்துக்காட்டு

மன்னர்கள் மற்றும் தளபதிகளின் செயலினை பாராட்டி அவ்வப்போது பல்வேறு பட்டங்களை வழங்குவது மரபாக இருந்து வந்துள்ளது.

"சிறப்பினாகிய பெயர் நிலைக்கிளவிக்கும் இயற்பெயர்க் கிளவிபடக் கிளவார்" ( தொல், சொல், 41)

எ.கா

ஏனாதி நல்லுதடன்
காவிதி கன்னத்தை

எனக் குறிப்பிடப்படுகின்ற பல்வேறு எடுத்துகாட்டுகள் சிறந்தவையாக அமைகின்றன.

இறுதியாக, 

சேனாவரையர் தம்முடைய உரையின் வழியாக பல்துறை எடுத்துகாட்டுகளை கூறி இருப்பதோடு சில இடங்களில் அதற்கான விளக்கத்தையும் குறிப்பிட்டுள்ளார் என்பதை மேற்கண்ட சான்றாதாரங்களின் வாயிலாக உணர்ந்து கொள்ள முடிகின்றது. 

- முனைவர் மு.முத்துமாறன், உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத்துறை,
தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி ( தன்னாட்சி), பெரம்பலூர்

Pin It