அரசமைப்புச்சட்டம் பிரிவு 348(2)ன்படி மாநில சட்ட மன்றங்கள் தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றால் அந்த மாநிலத்தின் மொழியை உயர்நீதி மன்றத்தின் வழக்கு மொழியாகப் பயன்படுத்தலாம்.
இதன்படி தமிழக சட்டமன்றத்தில் 2006 - ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்கு மொழியாகத் தமிழைப் பயன்படுத்த அனுமதி கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதை நிராகரித்து 2007 பிப்ரவரி 27 -இல் மத்திய அரசு கடிதம் எழுதியது.
அரசமைப்புச்சட்டம் மட்டுமின்றி 1963 -ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழிச்சட்டத்தின் 7வது பிரிவும் மாநில மொழிகளை நீதிமன்ற மொழியாகப் பயன்படுத்தும் உரிமையை வழங்கியுள்ளது.
உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களில் கடந்த பல ஆண்டுகளாகவே இந்தி மொழி வழக்கு மொழியாக இருந்து வருகிறது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைப் போன்று, இடது முன்னணி அரசின் முன்முயற்சி யால் மேற்குவங்க சட்டப்பேரவையில் வங்க மொழியை கொல்கத்தா உயர்நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவரின் ஒப்பு தலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதுவும் கிடப்பில் போடப் பட்டுள்ளது.
இந்திய குடிமக்கள் அனைவரும் சமம் என்று அரசமைப்புச் சட்டம் கம்பீரமாக பிரகடனம் செய்கிறது. ஆனால் அந்த மக்களால் பேசப்படும் மொழிகள் சமம் இல்லையா என்ற கேள்வி எழுகிறது.
வழக்கறிஞர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் அமர்வு நடத்திய விசாரணையில் தமிழில் வழக்கறிஞர்கள் வாதாடலாம், தடையில்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். இது அப்போதைய அமர்வில் உள்ள நீதிபதிகளின் பெருந்தன்மையைக் காட்டுகிறதே தவிர சட்டப்பூர்வ உரிமையை நிலை நாட்டவில்லை. இது குறித்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுங்கள் என்று வழக்கறிஞர்கள் கேட்டதற்கு நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
சட்டம் ஒரு இருட்டறை; வழக்கறிஞர்களின் வாதம் அகல் விளக்கு என்றார் அண்ணா. தாய் மொழியில் வழக்காடும் உரிமை மறுக்கப்படுவதால் வழக்கறிஞர்களே இருட்டில் தள்ளப் பட்டுள்ள னர் என்பதுதான் உண்மை.