george ponnaiyaகடந்த 18-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் கிறிஸ்தவ இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து நடத்திய சிறுபான்மைச் சமூகத்தின் உரிமை மீட்புப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியதற்காக, ஜனநாயக கிறிஸ்தவ பேரவை அமைப்பின் ஆலோசகரும், பனவிளை சர்ச் பங்குத் தந்தையுமான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா திமுக அரசால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் நிலையங்களில் மட்டும் அவர்மீது இந்து அமைப்புகள் மூலம் 30க்கும் மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் பேச்சைக் கேட்ட குறைந்த பட்ச முற்போக்கு சிந்தனை உள்ள யாருமே அதைத் தவறானது என்று சொல்ல மாட்டார்கள்.

உண்மையில் ஜார்ஜ் பொன்னையாவின் பேச்சுக்குக் காரணம் தான் அதிகமாக நம்பிய திமுக தன்னையும் தன் மக்களையும் கைவிட்டு விட்டதே என்பதுதான். அதை மனதில் வைத்துதான் அவரின் முழு பேச்சையும் நாம் மதிப்பிட வேண்டும்.

'இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு எத்தனை கோவிலுக்கு சென்று கும்பாபிஷேகம் செய்தாலும், எத்தனை கோவிலுக்குச் சென்று துணி உடுத்தாமல் சாமி கும்பிட்டாலும், இந்துக்கள் ஒருவர் கூட ஓட்டு போட மாட்டார்கள். மண்டைக்காட்டு அம்மன் பக்தர்களும், இந்துக்களும் உங்களை ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கவில்லை. திமுக ஜெயித்தது கிறிஸ்தவ மக்களும், முஸ்லீம் மக்களும் உங்களுக்குப் போட்ட பிச்சை. இதை மறந்து விடாதீர்கள்…'

'உங்கள் திறமையை வைத்து நீங்கள் ஓட்டு வாங்கவில்லை. உங்களுக்கு ஓட்டு போடச் சொன்னது யார்? எங்கள் ஆயர்கள் எங்களுக்கு கண் அசைப்பார்கள். கிறிஸ்தவ ஊழியர்கள், பெந்தகோஸ்தே ஊழியர்கள் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பார்கள். நாகர்கோவிலில் நடந்த கூட்டத்தில், திமுக மாவட்டச் செயலாளரான சுரேஷ்ராஜனிடம் கிறிஸ்தவர்களின் வீடுகளுக்குச் சென்று, சந்தித்து நாங்கள் ஓட்டு கேட்கிறோம் என்று கூறினோம். அவரோ, வேண்டாம். இதனால் இந்துக்களின் ஓட்டு கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்று மறுத்து விட்டார். இதனால் எம்.ஆர்.காந்தி நாகர்கோவிலில் ஜெயித்து விட்டார்.'

'அவர் பூமாதேவியை செருப்பு போட்டு மிதிக்க மாட்டாராம். பாரத மாதா மீது செருப்பு பட்டுவிடக் கூடாதாம். ஆனால் நாம் ஷூ போட்ருக்கோம் எதற்கு? பாரத மாதாவிடம் இருக்கும் அசிங்கம் நம்மிடம் தொற்றிக் கொள்ளக்கூடாது என்பதற்காக நாம் ஷூ போட்டு மிதிக்கிறோம். நமக்கு சொறி, செரங்கு வந்திடக் கூடாது என தமிழக அரசு இலவச செருப்பு கொடுத்தது. இந்த பூமா தேவி, ரொம்ப டேஞ்சரான ஆள். சொறி பிடிக்கும். சிரங்கு பிடிக்கும். அதனால செருப்பு போட்டுக்கங்கனு கொடுக்கிறாங்க. அழகாகச் சொன்னார்கள் இஸ்லாமியர்கள். 'எங்க மயிரைக் கூட நீங்க பிடுங்க முடியாது என்று. அதான் அர்த்தம்.. பைபிள்ளயே இருக்கு.. ஒரு மயிரைக் கூட நீ பிடுங்க முடியாது”

“பழங்குடி இனமக்களின் உரிமைக்காக உழைத்த ஸ்டேன் சாமியின் மரணத்திற்குக் காரணமான பிரதமர் மோடியின் கடைசி காலம் மிகவும் பரிதாபமாக இருக்கும். எழுதி வைத்துக் கொள்ளுங்கள். நாம் நம்புகின்ற கடவுள் உயிரோடு இருக்கிறார் என்றால், அமித்ஷா, மோடியை நாயும், புழுக்களும் சாப்பிடும் நிலையை வரலாறு காண வேண்டும். வரலாறு காணும். எங்களது சாபம் உங்களை அழிக்கும். நிர்மூலமாக்கும்’’

இதுதான் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் பேச்சின் சாரம். இதில் எங்கே தவறாக திமுகவையும், மோடியையும், அமித்ஷாவையும், இல்லை பாரத மாதாவையும் அவர் பேசி இருக்கின்றார்?

இது முழுக்க முழுக்க அரசியல் ரீதியான பேச்சுதானே ஒழிய, யாரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் அவர் பேசவில்லை.

“தலித் மக்கள் இன்று நீதிபதியாக முடியும் என்றால் அது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ். பாரதி சொல்ல உரிமை உள்ளபோது திமுகவிற்காக தேர்தலில் ஓட்டு கேட்ட ஜார்ஜ் பொன்னையா “திமுக ஜெயித்தது கிறிஸ்தவ மக்களும், முஸ்லீம் மக்களும் போட்ட பிச்சை” என்று சொல்ல உரிமையில்லையா?

சிறுபாண்மையின மக்கள் என்றால் வாயை மூடி சலுகைகளுக்காக மட்டுமே கையேந்தி நிற்க வேண்டும், மற்றபடி அரசை விமர்சனமெல்லாம் செய்யக் கூடாதா?

சேகர்பாபுவும், மனோ தங்கராஜும் சுசீந்திரம் கோயிலுக்கு சட்டையைக் கழற்றி வைத்துவிட்டு செல்வது வெட்கக்கேடான, இழிவான, தன்மானமும் சுயமரியாதையும் அற்ற செயல் அல்லவா? பெரியாரை பேசிக்கொண்டே அனைத்து மத மக்களும் ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் அருவருக்கத்தக்க பார்ப்பனியத்தை பொதுவெளியில் கடைபிடிப்பது அதையே சமூக கருத்தாக நிலைபெற உதவுவது அயோக்கியத்தனம் இல்லையா?

இஸ்லாமிய மக்களை சுதந்திரப் போராட்டத்தில் இருந்து தனிமைப்படுத்த பார்ப்பன பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் உருவாக்கப்பட்ட கற்பனையான பார்ப்பன பாரத மாதாவைப் பற்றியும் ,1982 ஆண்டு மண்டைக்காடு கலவரத்துக்கு மூளையாக செயல்பட்ட எம். ஆர் காந்தி பற்றியும், ஸ்டேன் சுவாமியின் மரணத்திற்குக் காரணமான மோடி, அமித்ஷா பற்றியும் அவர் பேசியதில் என்ன தவறு இருக்கின்றது?

ஜார்ஜ் பொன்னையாவின் பேச்சை நீதி மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தின் மனக் குமுறலாக மட்டுமே நாம் பார்க்க முடியும். அரசியல் கட்சிகள் சிறுபான்மையின மக்களை ஓட்டுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டு தேர்தல் முடிந்தவுடன் அவர்களை குப்பைத் தொட்டியில் வீசி விடுகின்றன என்ற ஆதங்கம்தான் பாதிரியாரின் பேச்சுக்குக் காரணம்.

நிச்சயமாக இது கைது செய்யும் அளவிற்கு மிக மோசமான, வன்முறையைத் தூண்டும் பேச்சு என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவின் தலையை வெட்டுபவர்களுக்குப் பரிசு என்றும், நாக்கை வெட்டுபவர்களுக்குப் பரிசு என்றும் இன்று ஜார்ஜ் பொன்னையாவின் மீது 30க்கும் மேற்பட்ட புகார்களை அளித்திருக்கும் சங்கிகள் (எம்எல்ஏ வாக இருக்கும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட) அன்று பேசவில்லையா? வைரமுத்துவின் அம்மாவை தாசி என்று எச்.ராஜா தரக்குறைவாக பேசவில்லையா? “வேலைக்கு போகும் பெண்கள் எல்லாம் படுத்துதான் பதவி உயர்வு பெறுகின்றார்கள்” என்று எஸ்வி. சேகர் சொல்லிவிட்டு காவல்துறையின் பாதுகாப்புடன் வலம் வரவில்லையா? அப்போதெல்லாம் இந்த சங்கிகள் எங்கே போனார்கள்?

இவர்கள் எல்லாம் பேசியதை விடவா ஜார்ஜ் பொன்னையா மோசமாகப் பேசிவிட்டார்? ஆனால் ஜார்ஜ் பொன்னையாவிடம் பூணூல் இல்லாததால் அவர் உடனே கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுக அரசாங்கம் பகிரங்கமாக பாசிசத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஒரு பக்கம் சிறுபான்மையின மக்களின் ஓட்டுக்களை வாங்க ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு அஞ்சலி செலுத்துவதும், மற்றொரு பக்கம் ஸ்டேன் சுவாமியின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த அனுமதி கேட்டால் அதை மறுப்பதும், தங்களை விமர்சனம் செய்ததால் கைது செய்வதும் இந்த ஆட்சியின் ஜனநாயக கேலிக்கூத்தை அம்பலப்படுத்தி இருக்கின்றது.

அதைவிட பல முற்போக்கு சங்கிகளின் யோக்கியதையும் அம்பலப்பட்டு இருக்கின்றது. இதே கைது அதிமுக ஆட்சியில் நடந்திருந்தால் முச்சந்திக்கு முச்சந்தி கையில் கொடியுடன் ஆடியிருப்பார்கள். ஆனால் இதில் திமுக சம்மந்தப்பட்டிருப்பதால் கல்லூளி மங்கன்கள் போன்று கமுக்கமாக இருக்கின்றார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் செயல்பட்டு வந்த பல முற்போக்கு இயக்கங்கள் என்று தங்களை சொல்லிக் கொண்டிருந்த இயக்கங்களின் பணி முடிவடைந்துவிட்டது விட்டது என்றே தோன்றுகின்றது. அப்படிப்பட்ட இயக்கங்களைச் சேர்ந்த பல பேர் முழு நேர திமுக சொம்பு தூக்கிகளாகவும், தங்களுக்கும் கட்சியில் பொறுக்கித் தின்ன ஒரு வாய்ப்பு கிடைக்காதா என்று நாக்கில் எச்சில் ஒழுக வாலாட்டியும் நின்று கொண்டு இருக்கின்றார்கள்.

அவர்கள்தான் இன்று ஜார்ஜ் பொன்னையாவின் கைதைக் கண்டிக்காமல் கள்ள மெளனம் காத்து வருகின்றார்கள். இவர்கள் மட்டுமில்லை சுதந்திர ஊடகம் என்று ஆரம்பித்து திமுக ஆட்சிக்கு வர நெருப்பு போன்று வேலை செய்த பலரும் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒன்றிய அரசையும், அதிமுகவையும், இரண்டும் கிடைக்காத போது நேராக உலக அரசியலைப் பேசி உருட்டும் நேர்த்தியான கைக்கூலிகளாக செயல்பட்டு வருகின்றார்கள்.

ஒட்டுமொத்தமாக ஜார்ஜ் பொன்னையாவின் கைது திமுகவை அம்பலப்படுத்தி இருப்பதோடு முற்போக்கு வேடம் போட்டு வந்த பல இயக்கங்களையும், அதன் தலைவர்களையும், அல்லக்கை தொண்டர்களையும் அம்பலப்படுத்தி இருக்கின்றது.

- செ.கார்கி

Pin It