உளவு பார்க்கப்பட்ட தோழர் திருமுருகன் காந்தியின் தொலைபேசி! ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க முயலும் மோடி அரசை வன்மையாக கண்டிக்கின்றோம்!
பெகாசஸ் ஸ்பைவேர் (Pegasus Spyware) என்ற உளவுச் செயலியின் மூலம் உலகின் பல நாடுகளை சேர்ந்த முக்கிய நபர்களின் தொலைபேசிகள் அரசுகளால் உளவு பார்க்கப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. அவ்வாறு உளவு பார்க்கப்பட்டிருக்கக்கூடும் என்ற பட்டியலில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசியும் இருக்கிறது என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.
தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தரவுகளை சேகரித்து அவரை முடக்கிவிடலாம் என்ற எண்ணத்தில் இந்திய ஒன்றிய மோடி அரசு ஈடுபட்டுள்ளது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. தோழர் திருமுருகன் காந்தி உட்பட முற்போக்கு செயற்பாட்டாளர்களை, பத்திரிக்கையாளர்களை முடக்கி, ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்க முயலும் பாஜக மோடி அரசை மே பதினேழு இயக்கம் மிக வன்மையாக கண்டிக்கிறது.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்.எஸ்.ஓ. (NSO) என்ற நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் என்ற உளவு செயலியின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசுகள் அந்நாட்டின் செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோரின் தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டு, வாட்சப் தகவல்கள் உட்பட மொபைல் தரவுகள் அனைத்தையும் சேகரித்துள்ளன என இந்தியாவின் தி வயர் (The Wire), தி பிரிண்ட், இங்கிலாந்தின் கார்டியன், அமெரிக்காவின் தி வாசிங்டன் போஸ்ட், தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உட்பட உலகின் முன்னணி பத்திரிக்கைகள் பல நேற்று (18-07-2021) இரவு செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மட்டும் 40 பத்திரிக்கையாளர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோரின் தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்டிருக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்று தான் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசியும் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
தமிழீழ விடுதலை மற்றும் தமிழ்நாட்டின் வாழ்வுரிமை சிக்கல்களை முன்வைத்து போராடி வரும் தமிழ்த்தேசிய அமைப்பான மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள், ஒன்றிய பாஜக அரசின் தமிழின விரோத போக்கை தமிழர்களிடையே அம்பலப்படுத்துவதும், தமிழர்களை எளிமையாக அரசியல்படுத்தும் வேலையை செய்வதும் மோடி அரசை சினம்கொள்ள செய்துள்ளது.
பாஜக அரசியலுக்கு தடையாக இருக்கும் தோழர் திருமுருகன் காந்தி அவர்களை முடக்கிவிட்டால், தமிழ்நாட்டு அரசியலை மாற்றிட முடியும், தமிழ்நாட்டு அரசியலில் இலகுவாக செயல்பட முடியும் என்ற நோக்கத்திலேயே தான், அவரது தொலைபேசியை உளவு பார்த்து அவரது தனிப்பட்ட தரவுகளை சேகரிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. இச்செயலியின் மூலம் பல்வேறு நாடுகளை சேர்ந்த அரசுகளால் உளவு பார்க்கப்பட்டுள்ள நபர்கள் யாரென்று உற்று நோக்குகையில் இதனை அறிந்துகொள்ள முடிகிறது.
பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, தற்போது தொலைபேசி உளவு பார்க்கப்பட்டவருள் ஒருவரான ரோனா வில்சன் என்பவது மடிக்கணினி ஹேக் (Hack) செய்யப்பட்டு போலியான மின்னஞ்சல்கள் அவர் அனுப்பியது போல் நிறுவப்பட்டது. அதனை அமெரிக்காவின் டிஜிட்டல் தடயவியல் நிறுவனம் ஒன்றும் உறுதிபடுத்தியது.
இப்படியாக போலியான தரவுகள் மூலம் பீமா கோரேகான் வழக்கில் சிக்க வைக்கப்பட்ட ரோனா வில்சன் உட்பட பலர் பிணை கூட வழங்கப்படாமல் மூன்று ஆண்டுகளாக விசாரணையின்றி சிறையில் உள்ளனர். அதேபோல், தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசியிலும் போலியான தகவல்களை நிறுவி, தோழர் திருமுருகன் காந்தி அவர்களை சதியின் மூலம் ஏதேனும் ஒரு வழக்கில் சிக்க வைக்கும் பாஜக அரசின் கீழ்த்தரமான முயற்சி என்று மே பதினேழு இயக்கம் இதனை கருதுகிறது.
உளவு பார்க்கப்பட்டதாக கருதப்படும் 2018 காலகட்டத்தில், தோழர் திருமுருகன் காந்தி மீது அரசு சட்டவிரோத நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டதை “ஆபரேசன் டிஎம்ஜி” என்று நக்கீரன், விகடன் போன்ற பத்திரிக்கைகள் அம்பலப்படுத்தி எழுதின என்பதையும் நினைவுகூர வேண்டும்.
2019 நாடாளுமன்ற தேர்தலின் போது மே பதினேழு இயக்கத்தின் செயல்பாட்டை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் பாஜகவிடம் இருந்தது. இதற்காக, தோழர் திருமுருகன் காந்தி உட்பட மே பதினேழு இயக்கத் தோழர்கள் மீது 2017 முதல் கடுமையான நெருக்கடிகள் திணிக்கப்பட்டது.
2017-ல் தமிழீழ இனப்படுகொலைக்காக நினைவேந்தல் நடத்தியதற்காக தோழர் திருமுருகன் காந்தி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். குண்டர் சட்டம் உடைக்கப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்து, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்ததற்காக தேச துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
2018ம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை படுகொலையை ஐநா மனித உரிமை மன்றத்தில் பதிவு செய்ததற்காக, உபா (UAPA) என்னும் கருப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அன்று முதல் அவரது கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் 40 வழக்குகளுக்கு மேல் பதிவு செய்யப்பட்டதோடு, அனைத்து வழக்குகளும் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குகளை சந்திக்க இன்றளவும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களுக்கு சென்று வருகிறார்.
தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் மீதான அடக்குமுறைகள் என்பது மே பதினேழு இயக்கத்தை முடக்குவதற்கான முயற்சிகள். அதனை பாஜக தலைவர்களின் பேச்சும் உறுதி செய்துள்ளது. அரசின் நெருக்கடியை சந்தித்ததால், தோழர் திருமுருகன் காந்தி உட்பட மே பதினேழு இயக்கத் தோழர்களை ஊடகங்கள் புறக்கணிப்பும் செய்தன.
மே பதினேழு இயக்கம் தொடர்பான செய்திகளை வெளியிடாமல் இருப்பது, இரட்டடிப்பு செய்வது போன்றவையும் நடந்தேறின. அதே போல், மே பதினேழு இயக்கத்தோடு இணைந்து செயல்பட்ட பல அமைப்புகள் காவல்துறையின் நெருக்கடியை சந்தித்தன.
இதனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்கள் தலைமையில் 2019 டிசம்பரில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டு, மே பதினேழு இயக்கத்தின் மீதான அடக்குமுறைகளை கண்டித்தும், தோழர் திருமுருகன் காந்தி மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இச்சூழலில், தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தொலைபேசி மோடி அரசினால் உளவு பார்க்கப்பட்டிருக்கக் கூடும் என்ற செய்தி மே பதினேழு இயக்கத்தை முடக்க பாஜக அரசு முயல்கிறது என்பதையே உறுதிபடுத்துகிறது. இவ்வாறு, தோழர் திருமுருகன் அவர்களை முடக்க முயலும் முயற்சிகளை மே பதினேழு இயக்கம் ஜனநாயக ரீதியில் எதிர்கொள்ளும்.
பாஜக அரசின் இது போன்ற செயல்கள் மூலம் மே பதினேழு இயக்கத் தோழர்களை அச்சமடைய செய்திட முடியும், அதன் மூலம் மே பதினேழு இயக்கத்தை முடக்கிவிட முடியும் என்ற எண்ணத்தை மே பதினேழு இயக்கம் உடைத்தெறியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
பெகாசஸ் உளவு வேலையை இந்திய ஒன்றிய பாஜக அரசு மறுத்தாலும், பெகாசஸ் செயலியின் நிறுவனமான என்.எஸ்.ஓ., அரசு மற்றும் அரசு நிறுவனங்களுடன் மட்டுமே வணிக தொடர்பு வைத்திருப்பதாக உறுதிபட கூறியிருக்கிறது. இதன் மூலம், மோடி அரசு இச்செயலில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
மேலும், மோடி அரசை விமர்சிக்கும் செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், எதிர்க்கட்சியினர் உட்பட நூற்றுக்கணக்கான நபர்களின் தொலைபேசி பெகாசஸ் செயலியின் மூலம் மோடி அரசினால் உளவு பார்க்கப்பட்டிருக்கக் கூடும் என்ற செய்தி, ஜனநாயகத்தை முடக்கும் முயற்சியாகும். இது, மோடி அரசு பாசிசத்தை நோக்கி செல்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது.
மோடி அரசின் இத்தகைய ஜனநாயக விரோத, பாசிச போக்கு மிக வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவை. நாட்டின் ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து மோடி அரசின் இந்த பாசிச போக்கை கண்டிக்க முன்வர வேண்டுமென மே பதினேழு இயக்கம் அறைகூவல் விடுக்கிறது.
இந்த உளவு செயலில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பத்திரிக்கையாளர்களை காக்க, அனைத்து ஊடகங்களும் முன்வர வேண்டும். அரசின் ஜனநாயக விரோத செயல்களை அம்பலப்படுத்தி, அரசின் அடக்குமுறையை அறத்துடன் எதிர்கொள்வதன் மூலம் மட்டுமே பாசிசத்தை வேரறுக்க முடியும் என்பதை ஊடகங்கள் உணர வேண்டும். அப்படியான முன்னெடுப்புகளுக்கு மே பதினேழு இயக்கம் உறுதுணையாக இருக்கும் என்பதை கூறிக் கொள்கிறோம்.
- மே பதினேழு இயக்கம்