வலதுசாரி பத்ரி சேஷாத்ரி யூட்யூபில் பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய தண்டணைச் சட்டம் 153, 153A, 506, 505 (1) (b) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் 153, 153 A ஆகியவை ஜாமீன் பெறக்கூடிய குற்றப் பிரிவுகள். அதாவது கைது செய்யபட்ட உடன் பிணை மனு தாக்கல் செய்தால் உடனடியாக நீதிமன்றத்தால் பிணை வழங்கப்படும்.

குற்றப்பிரிவு 505 கீழ் கைது செய்யப்பட்டால் ஜாமீனில் வர முடியாது. 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் ஒழிய, ஜாமீன் கிடைப்பது உறுதி. இல்லையெனிலும் குற்றத்தின் தன்மையைப் பொறுத்து ஜாமீன் எளிதில் கிடைக்கும்.

எனவே அவரை வாழ்நாள் முழுவதும் முடக்கும் குற்றப்பிரிவுகளில் கைது செய்யவில்லை, வழமையான குற்றப்பிரிவுகளில் தான் கைது செய்யப்பட்டுள்ளார். தனது தரப்பு வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைத்து, வழக்கில் இருந்து ஜாமீன் பெறவோ, முழுமையாக விடுதலை அடையவோ வாய்ப்புக்கள் உண்டு.

ஜனநாயக நாட்டில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, வாதாட உரிமை உண்டு. அந்த உரிமைகளைப் பயன்படுத்தி பத்ரி வெளியே வருவார். அதில் சந்தேகமில்லை.stan swamyஅடுத்த வழக்குக்கு வருவோம். 2017இல் பீமா கொரேகானில் நடைபெற்ற விழாவில் பேசியதற்காக, 2018இல் நாட்டின் முண்ணனி செயற்பாட்டாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களை ஊபா (Unlawful Activities Prevention Act) எனும் ஆள்தூக்கி பிரிவின் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவ்வாறு கைது செய்யப்பட்ட 84 வயது முதியவர் ஸ்டான் சுவாமிகள் சிறையிலேயே கொல்லப்பட்டு விட்டார். அவர் உணவை உறிஞ்சிக் குடிக்க Straw கேட்டார், பாஜக அரசு தர மறுத்து விட்டது. அவர் இறந்து விட்டார்.

82 வயது முதியவரான வரவர ராவுக்கு உடல்நிலை மோசமடைந்ததால் மட்டுமே 4 ஆண்டுகள் கழித்து பிணை கிடைத்தது.

செயல்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லங்கா, அருண் பெரைரா, வெர்னான் கோன்சால்வ்ஸ், ரோனா வில்சன் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர்.

இதில் சுதா பரத்வாஜ் கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னரே பிணை பெற்றார். 70 வயதான கவுதம் நவ்லங்கா 4 ஆண்டுகள் சிறையில் கழித்த பின்னர், கடும் நிபந்தனைகளுடன் கூடிய வீட்டுச் சிறைக்கு மாற்றப்பட்டார்.

நேற்று (July 28) அருண் பெரைரா, வெர்னான் கொன்சாலஸ் ஆகியோருக்கு உச்ச நீதிமன்றம் பிணை தந்திருக்கிறது. 5 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டனர். இன்னும் வழக்கு விசாரணை முடியவில்லை. ஆனால் இவ்வளவு காலம் பிணை தரவில்லை. அவர்கள் செய்ய குற்றமென்ன?

பீமா கொரேகானில் நடந்த விழாவில் பேசியதைக் காரணம் காட்டி, மாவோயிஸ்ட் அமைப்பினரோடு தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.

5 ஆண்டுகள் அவர்களை சிறையில் போட்டு, அவர்களது செயல்பாடுகளை முடக்கி விட்டனர். வழக்கு விசாரணை இன்னும் முழுமை பெறாத நிலையில், செமினார் உள்ளிட்ட விழாக்களில் பேசுவதோ, அல்லது எழுதுவதை காரணம் காட்டியோ, தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டனர் என்று சொல்ல முடியாது. தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை தேசிய பாதுகாப்பு முகமை (NIA) காண்பிக்க வேண்டும். இல்லையேல் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியாது என 5 ஆண்டுகள் கழித்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.

சிறையில் அருண் பெரைரா, வெர்னான் கொன்சாலஸ், சுதா பரஜ்வாஜ் உள்ளிட்ட பலர் கழித்த நாட்களை எப்படி நியாயப்படுத்துவது? சசாகடிக்கபட்ட ஸ்டான் சுவாமிகளின் உயிரை எப்படி திரும்பப் பெறுவது?

இன்று பத்ரியின் கைதைக் கண்டித்து ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கூறும் கருத்துரிமை காவலர்கள் ஊபா சட்டத்தை எதிர்த்தனரா?

அல்லது பத்ரியின் கைதும், சுதா பரத்வாஜின் கைதும் ஒன்றா? இரண்டுமே கருத்துரிமைக்கு எதிரானதா?

153, 153A, 505 ஆகிய IPC பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டதும், ஊபா சட்டத்தின் 13, 16, 17, 18(B), 20, 38, 39, 40 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டதும் ஒன்றா?

இரண்டையும் கருத்துரிமைக்கு எதிரானது என்று சமப்படுத்துவதும், பத்ரி கைது கருத்துரிமைக்கு எதிரான செயல் என்று சொல்லி விட்டு, ஊபா சட்டத்தின் கைது செய்யப்பட்ட செயல்பாட்டாளர்களின் கைதைக் கண்டிக்காமல் மவுனமாக இருப்பதும், அரசை விமர்சிப்பவர்கள் மீது ஊபா சட்டத்தை பயன்படுத்துவதை ஆதரிப்பதும், பாஜகவின் ஜனநாயக விரோத பாசிச ஆட்சியை நேரடியாக ஆதரிப்பதும் வேறுவேறு அல்ல.

- சு.விஜயபாஸ்கர்

Pin It