அ.தி.மு.கவுக்கு யார் தலைவரானால் என்ன, யார் பொதுச்செயலாளர் ஆனால்தான் நமக்கென்ன? அது அ.தி.மு.கவின் உட்கட்சி விவகாரம். அதில் நாம் கருத்துச் சொல்ல எதுவும் இல்லை. ஆனால் எந்தத் தொடர்பும் இன்றி எடப்பாடி பழனிச்சாமி அ.தி.மு.கவின் குளறுபடிகளுக்கும் சிக்கல்களுக்கும் சண்டை சச்சரவுகளுக்கும், தி.மு.கதான் பின்னணியில் இருக்கிறது என்கின்ற தேவையற்ற, தொடர்பற்ற, உண்மையற்ற செய்திகளைக் கூறும்போது அதற்கு நாம் பதில் சொல்ல வேண்டிய கடமையும், நடப்பு உண்மைகளைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது.

இன்றைக்கு அரசியல் உலகில் நகைப்புக்கு ஆளாகி இருக்கும் அ.இ.அ.தி.மு.க கட்சி தொடங்கிய காலத்திலேயே கொள்கை கோட்பாடுகளுக்காக, லட்சிய உணர்வோடு, நல்ல நோக்கத்தோடு தொடங்கப்பட்ட கட்சி அல்ல என்பது தெரிந்ததுதான். இந்திய அரசியல் அரங்கில் தனிப்பெரும் கட்சியாக ஒரு மாநிலக் கட்சி வளர்ந்து விடக்கூடாது என்று மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சி நினைத்ததால் வருமானவரித்துறை அன்னிய செலாவணி சட்டங்களைக் காட்டி மிரட்டி தி.மு.கழகத்தின் பொருளாளரைப் பிரித்தெடுத்துத் தொடங்கப்பட்ட கட்சிதான் அ.தி.மு.க.

ops and eps 335மிசா நெருக்கடி காலத்தில் மாநிலக் கட்சிகளை இந்திரா காந்தி அம்மையார் முடக்கி விடுவார் என்கிற எண்ணம் ஏற்பட்டபோது, கட்சியின் பெயரையே எம்ஜிஆர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று மாற்றிக் கொண்டார்.

அ.தி.மு.க ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள கட்சி என்று சொல்லிக் கொண்டாலும் அது எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்களின் சர்வாதிகாரச் சிந்தனைகளால் நடத்தப்பட்டது.

 ஆனால் இப்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையே ஏற்பட்டுள்ள போட்டி அதிமுகவை பல்வேறு சிக்கல்களில் சிக்க வைத்துள்ளது. நடைமுறையில் தொண்டர்களிடம் வாக்குப் பெறுவது இயலாத செயலாக உள்ளது. “சித்தன் போக்கு சிவன் போக்கு” என்று பொத்தாம் பொதுவாக கட்சியின் விதிகளை ஏற்படுத்தியதன் விளைவு இது .

 அதிமுகவில் திடீரென ஜெயலலிதாதான் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்றார்கள். அந்த ஜெயலலிதாவே நிரந்தரமின்றிப் போன பின் முதலில் சசிகலாவை பொதுச் செயலாளர் என்றார்கள். பொதுச் செயலாளர் ஆன கையோடு ஊழலுக்காக அவர் சிறை சென்றதால் அந்த இடத்திற்கு ஒருங்கிணைப்பாளர் துணை ஒருங்கிணைப்பாளர் என இருவரை நியமித்தனர் .

அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு நாளில் பொதுக்குழுவைக் கூட்டி அந்தப் பொதுக்குழுவில் இயற்றப்பட வேண்டியத் தீர்மானங்களைத் தீர்மானக்குழு வடித்தெடுத்துத் தந்தது. தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டிய பொதுக்குழு, தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப் படுகின்றன என்று முடிவு எடுத்தது.

 பொதுக்குழுவைக் கூட்டுகின்ற நேரத்திலேயே துணை ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழு நடக்க வேண்டும் என்கிறார். ஒருங்கிணைப்பாளர் பொதுக்குழுவே நடக்கக்கூடாது என்று தடை வாங்க முயற்சி செய்கிறார்.

 பொதுக்குழு நடத்த ஒப்புதல் தந்த உயர் நீதிமன்றம் வடித்தெடுக்கப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர வேறு எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றக்கூடாது என்று ஆணை பிறப்பிக்கிறது.

ஆனால் அந்தப் பொதுக்குழுவில் வடித்தெடுக்கப்பட்டத் தீர்மானங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுக் கழகத்தின் அவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப் படுகிறார். இது உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டலுக்குப் புறம்பானது.

ஆக “அவைத் தலைவர் தேர்வு கூட செல்லுமா?” என்கின்ற கேள்வி எழுகிறது. அப்படி முழுமையாக அங்கீகரிக்கப்படாத அவைத்தலைவர் ஜூலை 11ஆம் தேதி புதிய பொதுக்குழு கூடும் என்கிறார். அப்படி ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூடுகின்ற நேரத்தில் முன்னாள் ஒருங்கிணைப்பாளரும், பொருளாளரும், எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் அ.தி.மு.கவின் தொண்டர்கள் எனப்படும் குண்டர்களுடன் நுழைந்து அங்குள்ள அரைக்கதவுகளின் பூட்டுகளை உடைத்து அலுவலகத்தில் இருந்த முக்கியக் கோப்புகளை அள்ளிச் சென்று விடுகிறார். “இது ஒரு கண்ணியமான தலைவனின் செயலா?” என்ற கேள்வி எழும்போது அப்படி ஒரு கண்ணியமான கட்சிக்கு இப்படி ஒரு கண்ணியமான தலைவர்தான் கிடைப்பார் என்கின்ற பதில்தான் கிடைக்கிறது .

 அதிமுகவில் உட்கட்சித் தேர்தல் என்றைக்காவது முறையாக நடந்தது உண்டா?

 ஆனால் அடிப்படைத் தேர்தலே நடைபெறாமல் தலைமையால் நியமிக்கப்படுகிற பொதுக்குழு உறுப்பினர்கள் யார் என்கின்ற வரையறை அதிமுகவில் கிடையாது. பொதுக்குழு உறுப்பினர்கள் நிலையே இது என்றால் அடிப்படை உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும் என்பது கேலிக்கூத்தான ஒன்று.

இபிஎஸ் வகையறாவைக் கட்சியிலிருந்து நீக்குகிறார் ஓபிஎஸ். ஓபிஎஸ் வகையறாவைக் கட்சியிலிருந்து நீக்குகிறார் இபிஎஸ். ஓபிஎஸ், இபிஎஸ் இரண்டு வகையறாக்களையும் சசிகலா கட்சியிலிருந்து நீக்குகிறார்.

நல்ல கட்சி, நல்ல தலைமை, நல்ல பொதுக்குழுக் கூத்துகள்.

ஒரு பொதுக்குழுவை முறையாகக் கூட்டி, கட்சியை வழிநடத்தத் தெரியாத எடப்பாடி, ஒ.பி.எஸ் வகையறாக்கள் பா.ஜ.க வின் அடிமைகளாக இருந்து விட்டுப் போகட்டும்.

அதற்காக எதெற்கெடுத்தாலும் தி.மு.க.... தி.மு.க என்று ஏன் அலற வேண்டும். அவர்களின் கட்சி அலுவலகம் ஓ.பி.எஸ். கூட்டத்தால் உடைக்கப்பட்டால், இதற்குப் (ஓ.பி.எஸ்) பின்னணியில் தி.மு.க இருக்கிறது, ஸ்டாலின் இருக்கிறார் என்ற எடப்பாடியின் கூச்சல் அர்த்தமற்றது.

இன்று உலகமே பார்த்து வியப்படைகிறது தமிழக முதல்வர், தளபதி ஸ்டாலின் அவர்களின் நிர்வாகத் திறமையைக் கண்டு. இதில் அ.தி.மு.கவை நினைக்க, தி.மு.கழகத்திற்கு நேரம் ஏது?

தி.மு.கழகத்தின் மீது பழிதூற்றும் எடப்பாடி உள்ளிட்டோர், இரட்டை இலையைக் காப்பாற்றப் பார்க்கட்டும்.

 சூரியனைப் பார்த்து வாய் பிளக்க வேண்டாம்.

- பொள்ளாச்சி மா.உமாபதி

Pin It