moon 350கூட்டாஞ்சோறு என்றொரு பதம் எப்படி பால்யத்திற்கு நம்மை அழைத்து செல்கிறதோ... அதே போல... நிலாச் சோறு என்றொரு பதமும் நம்மை நெகிழ்த்தி நினைவுகளோடு ஏங்க வைக்கிறது.

நிலாச்சோறு என்ற சொல் பசி ஏற்படுத்தும் ஆதி வடிவத்தின் கூட்டு... எனலாம். 

நிலவில் தட்டு காண தட்டில் நிலவு வேண்டும்.

எங்களூரில் மேகம் இல்லாத வானம் காண்பதே அரிது. அதிலும் மழை இல்லாத மேகம் சூழாத தெளிந்த வானத்தில் நிலவு காணுதல் நேரம் காலம் கூடி வரும் நிகழ்வு.

மாலை விளையாடும் வரை நிலாச் சோறுக்கான சிந்தனை எதுவும் பெரிதாக இருக்காது. ஆனால் சில இரவுகள் அப்படி வாய்க்கும். அவ்விரவுகளில் இன்னதென புரியாத சந்தோஷங்கள் வாசலில் அள்ளி அள்ளி விசிறப் பட்டிருக்கும்.

படபடவென நானும் அண்ணியும் முடிவெடுப்போம். 7 மணிக்கு தட்டில் சோறு போட போடவே பக்கத்து வீட்டு வெள்ளைப் பாண்டி.... குட்டிம்மாக்கு செய்தி சொல்லி அடுத்த வீட்டு சாவித்ரி அக்காவுக்கும் செய்தி சேர்க்கப் பட்டிருக்கும்.

அடுத்த பத்து நிமிடங்களில் வாசலில் தட்டோடு அமர்ந்திருப்போம். பிறகு மச்சான்களும்... அடுத்தடுத்த வீடுகளில்... பிரான்சிஸ் அண்ணனும்... அலி அண்ணனும்... குல்ஸம்மாக்காவும் சுபைதாக்காவும் மெல்ல எட்டி பார்த்து சேர்ந்து கொள்வார்கள்.

கூடி அமர்ந்து நிலாச்சோறு உண்கையில் உலவும் நிலா வெளிச்சம் பளீரென வெள்ளையுமல்லாத பழுப்புமல்லாத பொழிவில் நம்மில் கவிழ்ந்து கிடக்கும். ஒவ்வொருவர் முகத்திலும்.. பல்பெரிவது போல... இரவில் பிரகாசிப்பது இனிதினும் இனிது.

மறு சோறு கூட இன்னும் கொஞ்சம் அதிகமாக போகும். மெல்ல மெல்ல ஒருவர் முடிக்க... ஒருவர் காத்திருந்து... ரசத்தில் காரமென்றாலும்... உஸ் உஸ்ஸென்றே மூக்கு விடைக்க சாப்பிட்டு…. இடையே கதை பேசி... கலகலவென எங்கே ஆரம்பித்தது என்று தெரியாத சிரிப்பில்... வட்டமாய் நிலவில் அமர்ந்திருப்போம்.

ஆம் நிலவில் தான் அமர்ந்திருப்போம். நினைப்பில் நீந்தும் நிலவுக்கும் அது தான் ஏக்கம். சில நாட்களில்... பெரியவர்களும் கையில் தட்டேந்தி கொண்டு வந்து வாசலில் நின்று விடுவார்கள்.

"யக்கா அது அப்டி.... அண்ணே இது இப்டி" என்று பேச்சு நிலவில் கொழுந்து விட்டெரியும். பக்கத்து வீட்டுக்காரர்களிடம் பேசத்தான் அத்தனை ரகசியங்களும் என்பது போல... கேட்க கேட்க சுவாரஷ்யம் கூடும்.

யாரும் பேய் கதை சொல்லி விட்டால்... ஆங்காங்கே அமர்ந்திருக்கும் நாங்கள் அனிச்சையாக நெருக்கிக் கொண்டு ஒருவரோடு ஒருவர் ஒட்டி அமர்ந்து விடுவோம். கடைசியாக அமர்பவன் பெரும்பாலும் நானாகத்தான் இருப்பேன்.

ஒரு பக்கம் கதை கேட்டாலும்.. மறுபக்கம்... திரும்பி திரும்பி நிலா வெளிச்சத்துக்கு காவல் இருப்பேன். அவ்வப்போது அணைத்து ஈஸி கொண்டு போகும் குளிர் காற்றில் கூட நிலா வெளிச்சம் அப்பிக் கொண்டிருக்கும்.

நிலா வெளிச்சம் பழக பழக நல்லாவே முகம் தெரியும். வீட்டிலிருந்து பார்த்தால் தெரியும் பாலத்தில் நிலவொளி வளைந்து நெளிந்திருக்கும். கொய்யா மரத்தில் எல்லாம் கொய்யாக்காயோடு நிலா வெளிச்சம் தான் காய்த்து தொங்குகிறதோ என்று தோன்றும்.

பிறகு நிலா கூட மேல் வீதியில் இருந்து தான் வருகிறதோ என்று கூட தோன்றும். என்ன பேசுவோம் என்றே தெரியாது. ஆனால் பேச அத்தனை இருக்கும். சாப்பிட்டு முடித்த பின்னும் ஆங்காங்கே உட்கார்ந்தபடி பேசிக்கொண்டிருப்போம்.

யாராவது நிலவில் கயிறு கட்டினால் ஏறி விடலாம் என்று நம்பிய காலத்தில் நிலவு மிக அருகில் இருந்தது. நிலவில் நீரில்லை காற்றில்லை என்று தெரிந்த போது வெகு தூரம் சென்று விட்டது நிலவொளி.

ஒளிகளில் மென்மை வாய்க்க... மேன்மை வளர்க்க நிலவொளிக்கு பழக்கம் இருக்கிறது. ஒரு நாள் நிலாச்சோறில் சமகால ஈகோ களைப்போம். சம கால உள்ளொளியில் உலகை நிறைப்போம். 

மொட்டை மாடியோ... உங்கள் பிளாட் வாசலோ... வீதியோ... வராண்டாவோ... நிலவுக்கு காத்திருந்து தட்டேந்துவதில்... வாழ வந்த வாழ்வில் ஒரு பகுதி நிறைக்கலாம்.

- கவிஜி

Pin It