புரட்சிக்கு முன்:

cuba women revolutionடெட்டே என செல்லமாக அழைக்கப்படும் பியூப்லாவின் முழுப்பெயர் டெல்சா எஸ்தர் பியூப்லா வில்ட்ரே. டெட்டே 1940 டிசம்பர் 9ஆம் நாள் கியூபாவின் சியரா மேஸ்ட்ரா மலைகளின் அடிவாரத்தில் உள்ள யாராவில் ஒரு ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் ஒன்பது குழந்தைகளில் ஒருவராய்ப் பிறந்தார், அவருக்கு மொத்தம் எட்டு சகோதரர்கள்.

அவரின் தந்தை ஒரு சிறு நிலத்தில் விவசாயம் செய்து வந்தார். தாயார் வீட்டு வேலைகளைச் செய்து வந்தார். பியூப்லாவை அவரின் தாத்தா பாட்டி வளர்த்தனர். சுறுசுறுப்பான டெட்டே குதிரைச் சவாரி, நீச்சல், நடனம் என அனைத்திலும் படுசுட்டி. அவர் மன்ஸானில்லோவில் உள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்து வந்தார். அவரது குடும்பத்தினர் அனைவருமே பாத்திஸ்டாவின் ஆட்சியைக் கவிழ்க்கப் போராடும் ஜூலை 26 இயக்கத்தில் இணைந்திருந்தனர், டெட்டே சின்னப் பெண்ணாக இருந்த போதிலும், இயக்கத்தின் நடவடிக்கைகளில் அவர்களுக்கு உதவினார். யாராவில் உள்ள அவர்களது வீடு அப்பொழுது நகர்ப்புறத்தில் புரட்சியாளர்களின் தலைமையகமாக இருந்தது.

புரட்சியில்:

1956ஆம் ஆண்டில், ஜூலை 26 இயக்கத்தில் சேர்ந்தார். இயக்கத்தில் சேர்ந்த போது அவருக்கு வயது 15தான். அவர் இயக்கத்தின் தலைமறைவு வேலைகளில் ஈடுபட்டார். டெட்டே பாத்திஸ்டா அரசுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மின் இணைப்புகளைத் துண்டித்தார், காவல்துறையினரின் கார் டயர்களின் காற்றை பிடுங்கினார். போராளிகளுக்குத் தேவையான ஆயுதங்கள், மருந்துகள் ஆகியவற்றை அரசுக் காவல் படைக்குத் தெரியாதவாறு கடத்தினார், ஆயுதங்களையும், தோழர்களையும் சியராவுக்கு அனுப்புவதிலும், போருக்கான நிதிப்பத்திரங்களை விற்று நிதி திரட்டினார்.

சியரா மேஸ்ட்ராவில்:

டெட்டேவுக்கு நீண்ட நாட்களாகவே சியரா மேஸ்ட்ரா மலைகளில் உள்ள கெரில்லாப் படையில் இணைய வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. இயக்கத்துக்குப் பயனுள்ள முறையில் பாத்திஸ்டா படைகளுக்குத் தெரியாதவாறு ஒருவரால் சமவெளியில் வேலைசெய்ய முடியும் வரை இயக்கம் அவரை சியரா மேஸ்ட்ராவின் கெரில்லாப் படைகளில் இணைய அனுமதிப்பதில்லை.

ஜூலை 26 இயக்கத்தின் உறுப்பினர் ஒருவரை அரசுப் படையினர் பிடித்துச் சித்திரவதை செய்த போது, அவர் டெட்டே ஜூலை 26 இயக்க வேலைகளில் ஈடுபடுவதை பாத்திஸ்டாவின் காவல் படையினரிடம் கூறி விட்டார். அதற்குப் பிறகு அவர் நகரில் இருப்பது ஆபத்துதானே” அவர் 1957இல் கெரில்லாப் போராளிகளின் படையில் சேர்வதற்காக சியரா மேஸ்ட்ரா மலைகளுக்குச் சென்றார். போராளிகளின் முகாமுக்குச் சென்ற போது அங்கிருந்த ஒருவர் டெட்டேவைப் பார்த்து இந்தச் சளிமூக்குக் குழந்தை இங்கு என்ன செய்கிறது என்று கேட்டுள்ளார்.

ஆனால் ஃபிடல் காஸ்ட்ரோ ஆதரவாக டெட்டேயை நிமிர்த்தி பிடித்தவாறே உற்சாக மிகுதியால் நாம் போரில் நிச்சயமாக வென்று விடுவோம் என்று கூறி டெட்டேவுக்கு என்ன வயது எனக் கேட்டுள்ளார். எங்கே தன்னை சிறியவளாகக் கருதி படையில் சேர்க்க மறுத்து விடுவாரோ என்று டெட்டே ஒரு வயதைக் கூட்டி தனக்கு 17 வயதென ஃபிடலிடம் கூறியுள்ளார். ஃபிடல் டெட்டேவை அங்கேயே தங்க அனுமதித்துள்ளார். டெட்டே ஆரம்பத்தில் சிலியாவின் உதவியாளராகச் செயல்பட்டுள்ளார். சமையல் செய்தல், கழுவுதல், தையல், செய்தி அனுப்புதல்.

காயமடைந்தவர்களைப் பராமரித்தல் என அனைத்து வேலைகளிலும் உதவியுள்ளார். கெரில்லா ஆயுதப் படையில் விவசாயிகளே பெருமளவு இருந்தார்கள். டெட்டே படிக்க இயலாத தோழர்களுக்கு அவர்களின் உறவினர்கள் அனுப்பிய கடிதங்களைப் படித்துக் காட்டினார், அவர்களுக்காகக் கடிதம் எழுதிக் கொடுத்தார். அவர்களுக்குப் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுத்தார், இவை அனைத்தையும் செய்த போதும் டெட்டே முதன்மையாக விரும்பியது துப்பாக்கி ஏந்தி சண்டை போடவே. போர்க்களத்திற்குத் தன்னை அழைத்து செல்லுமாறு அவர்களிடம் கெஞ்சியுள்ளார்.

ராவுல் காஸ்ட்ரோ அவரை ஒரொ டெ குய்சா விற்கு அழைத்துச் சென்றுள்ளார், ஆனால் அங்கு ஃபிடல் அவரைச் சண்டையிட அனுமதிக்கவில்லை. 1958 கோடைக் காலத்தில் சியரா மேஸ்ட்ராவில் உள்ள கெரில்லாப் படைகளை முற்றிலுமாக அழிப்பதற்கென பாத்திஸ்டா படையினர் தாக்குதல்கள் தொடுத்ததால் போராட்டம் தீவிரமடைந்தது. பியூப்லா தொலைதூரத்தில் இருந்த போராளிகளுக்கு உணவுப் பொருட்களைக் கழுதைகளில் கொண்டுசென்றுள்ளார்.

கெரில்லாப் போராளிகள் நூற்றுக் கணக்கான பாத்திஸ்டா இராணுவத்தினரைப் பிடித்திருந்தனர். அவர்களுள் சிலர் மோசமாகக் காயமடைந்திருந்தனர். போர்க் கைதிகளை ஜூலை 26 இயக்கமும், பாத்திஸ்டா இராணுவத்தினரும் நடத்தும் முறை முற்றிலும் வேறுபட்டிருந்தது. பாத்திஸ்டா படையினர் பிடிபட்டவர்களை சித்திரவதை செய்து கொன்றனர்.

ஆனால் ஜூலை 26 இயக்கத்தின் கெரில்லா படையினர் போர்க் கைதிகளின் காயங்களுக்கு மருந்தளித்தனர். அவர்கள் தங்களுக்குப் பகையான பாத்திஸ்டா படையைச் சேர்ந்திருந்த போதும் அவர்களை நேயத்துடன் நடத்தினர். எந்த அளவுக்கு என்று பார்த்தால் அதில் யார் கைதிகள், யார் போராளிகள் என்று பிரித்துப் பார்க்க முடியாதவாறு, அவர்களுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டனர். இதில் சகோதரர்கள், உறவினர்கள் சந்தித்து கொண்ட தருணங்களும் இருந்ததாம்.

போர்க்கைதிகள் அனைவரையும் கெரில்லாப் படைகளால் பராமரிக்க முடியாததால், செஞ்சிலுவை சங்கத்திடம் அவர்களை ஒப்படைக்க வேண்டியிருந்தது. தற்காலிகப் போர்நிறுத்தத்தை ஏற்படுத்தியபிறகுதான் அதைச் செய்ய முடியும், ஆனால் அதற்கு பாத்திஸ்டா அரசின் இராணுவம் மறுத்தது.

இந்தத் தடங்கலைச் சரிசெய்ய சே குவேரா தற்காலிகப் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த ஒரு பெண்ணைத் தூதுவராக அனுப்பலாம் என்று ஒரு திட்டத்தை முன்மொழிந்தார். ஒரு ஆணைத் தூதுவராக அனுப்பினால் அவர்கள் கொன்று விடுவார்கள் டெட்டே சின்னப் பெண் என்பதால் அவரை அவ்வாறு செய்ய மாட்டார்கள் என எண்ணி அவரையே தூதுவராக அனுப்ப முடிவு செய்தனர். டெட்டேயும் அதில் இருக்கும் ஆபத்து தெரிந்திருந்தும் செல்வதற்கு ஒப்புக் கொண்டார்.

அது எவ்வளவு கடினமான பணி என்பதையும், ஒரு பெண் அந்த செய்தியை எடுத்துச் செல்வதன் முக்கியத்துவம் பற்றியும் சே குவேரா டெட்டேவுக்கு விளக்கியுள்ளார். ”டெட்டே, மூன்று விசயங்கள் நேரிடலாம், ஒன்று அவர்கள் போர் நிறுத்தத்தை ஒப்புக் கொள்ளலாம், அப்படி இருந்தால் நல்லது.

ஒரு வேளை அவர்கள் உங்களைக் கொன்று விடலாம். இல்லையென்றால் உங்களை போர்க்கைதியாக்கி சிறைப்படுத்த பயமாவுக்கு அனுப்பலாம், அதனால் பயாமாவுக்குச் செல்ல உங்களை அவர்கள் அழைத்தார்கள் என்றால் நீங்கள் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது, இல்லையென்றால் போர்நிறுத்த உடன்பாடு மேற்கொள்ள முடியாது. ஆனால் எப்படியாவது போர்நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் சே குவேரா கூறியுள்ளார்.

cuba Women Soldiersடெட்டே போர்நிறுத்தத் தூதுவராக ஒரு வெள்ளைக் கொடியுடன் கழுதையில் அமர்ந்து புறப்பட்டுள்ளார். இராணுவ விமானங்கள் குண்டு மழை பொழிந்ததில், கழுதை டெட்டேவைக் கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டது பிறகு கால்நடையாகவே பாத்திஸ்டா படையின் முகாமிற்குச் சென்றுள்ளார். அங்குள்ள காவலாளியிடம் சே குவேராவிடமிருந்து செய்தியுடன் வந்திருக்கிறேன், தளபதியைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுள்ளார். செய்தியைத் தன்னிடம் காட்டுமாறு காவலாளி கேட்டுள்ளார்.

தளபதியிடம் மட்டுமே அதை அளிக்க முடியும் என டெட்டே மறுத்துள்ளார். பின்னர் சே கையெழுத்திட்ட கடிதத்தை டெட்டே தளபதியிடம் கொடுத்துள்ளார். படைத் தளபதி ஒரு கொடிய வன்முறையாளர். அவர் முதலில் போர்நிறுத்தத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. தோற்றுப் போன போர்க் கைதிகளை ஏற்றுக் கொள்வது தங்களது இராணுவப் படையினரின் ஒழுங்கைக் குலைக்கும் என்று மறுப்பு தெரிவித்துள்ளார். அங்கிருந்த மற்றவர்களிடம் அவர்களது ஆட்களைத்தான் நம்மிடம் அனுப்பப் போகிறார்கள் என்றும் கூறியுள்ளார். டெட்டே அதை மறுத்தவாறு உங்கள் தோழர்களைத்தான் ஒப்படைக்கப் போகிறோம் எனக் கூறியுள்ளார். டெட்டேவை பயாமாவிற்கு அனுப்புவதாக அச்சுறுத்தியுள்ளார்.

டெட்டே உறுதியாக இருந்ததால் இறுதியாகத் தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கு சம்மதித்துள்ளார். டெட்டேயின் வருகைக்காக காத்திருந்த தோழர்கள் அவர் எந்த ஆபத்தும் நேரிடாமல் வெற்றியுடன் திரும்பி வருவதைப் பார்த்தவுடன் நிம்மதியடைந்தவர்களாக, டெட்டேயை ஒருவர் பின் ஒருவராகத் தோள்களில் தூக்கியுள்ளனர். பிறகு டெட்டே ஃபிடல் அளித்த பதிலுடன் மீண்டும் பாத்திஸ்டா இராணுவ முகாமிற்குச் சென்றுள்ளார். இவ்வாறு தற்காலிகப் போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டு 253 போர்க் கைதிகள் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். போர் நிறுத்தம் 48 மணி நேரம் நீடித்தது.

டெட்டேவின் துணிவுமிக்க இச்செயல்பாடு பெண்களுக்கான ஆயுதப் படையை உருவாக்குவதில் ஓரடி முன்வைக்கக் காரணமானது. செப்டம்பரில் பெண்களுக்கான ஆயுதப்படையை உருவாக்குவதற்காக ஃபிடல் லா பிளாட்டா மருத்துவமனையில் ஒரு சந்திப்பை ஏற்படுத்தினார். அந்த யோசனை பிடிக்காத சில தோழர்கள் கோபமடைந்தனர், அவர்களில் முக்கிய எதிர்ப்பாளர்களாக எடி சுனோலும், மருத்துவர் பெர்னாபே ஓர்டாஸும் இருந்ததாக டெட்டே கூறுகிறார். ஆயுதமில்லாமல் ஆண் போராளிகள் இருக்கும் போது ஒரு பெண்ணுக்கு எப்படி ஆயுதம் கொடுக்கலாம் என்றும், பெண்கள் தவளை அல்லது பல்லியைப் பார்த்தால் துப்பாக்கியைக் கைவிட்டு எதிரிகளிடம் சரணடைவார்கள் என்றும் அவர்கள் அவநம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். ஆண்கள் சம்மதிக்காததால் பெண்கள் சார்பில் அவர்களுடன் ஃபிடல் 7 மணி நேரம் போராட வேண்டியிருந்தது. பெண்கள் உங்களை விட சிறந்த வீரர்கள் என்றும், பெண்களின் ஆயுதப்படை தனது மெய்க்காப்பாளர் பிரிவாக இருக்கும் என்றும் ஃபிடல் அறிவித்தார்

ஃபிடல் பெண் போராளிகளுக்குத் துப்பாக்கி சுடவும் ஆயுதங்களைக் கையாளவும் பயிற்சி அளித்தார். அவர்கள் 20-30 மீட்டர் தொலைவிலுள்ள 20 செண்ட் நாணயத்தை துப்பாக்கியால் துளைக்க வேண்டும் என்றும், இலக்கைச் சிறப்பாகச் சுடுபவரே அணியின் தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் பிடல் தெரிவித்தார்.. இசபெல் ரியோலோ ஒரு சிறிய வித்தியாசத்தால் பியூப்லாவை வென்றுள்ளார்.

முதன்மைத் தலைமை இசபெல் ரியோலோவுக்கும், இரண்டாம் தலைமை டெட்டேவுக்கும் அளிக்கப்பட்டது. 1958 செப்டம்பர் 4 அன்று ஃபிடல் மற்றும் சிலியாவின் பெருமுயற்சியால் மகளிர் ஆயுதப் படை உருவாக்கப்பட்டது. கியூப சுதந்திரப் போரின் கதாநாயகியான மரியானா கிராஜெல்ஸுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது பெயரே மகளிர் ஆயுதப் படைக்குச் சூட்டப்பட்டது.

ஆரம்பத்தில் மரியானா கிராஜெல்ஸ் படையினருக்குக் கனமான ஆயுதங்களே பயிற்சிக்காகத் தரப்பட்டன. எடை குறைவாகவும் சுமந்து செல்ல எளிதாகவும் இருக்கும் எம்-1 கார்பைன் துப்பாக்கிகள் மகளிர் படைக்குழுவிற்கு வழங்கப்பட்டன. மகளிர் ஆயுதப் படையில் முதலில் எட்டுப் பெண்கள் இருந்தனர். பின்னர் பதினைந்து பேராயினர். இருவர் நோய்வாய்ப்பட்டதால் போர் முடிவுறும் போது அதில் பதின்மூன்று பேர் இருந்தனர்.

1958 அக்டோபர் 9, முதன்முதலாக நான்கு பெண்கள் சமவெளியில் போராடப் போகும் போது அவர்களின் தளபதியாக கேப்டன் எடி சுனோலை ஃபிடல் நியமித்துள்ளார். ஆனால் அவர் பெண்களுடன் செல்ல ஒத்துக் கொள்ளவில்லை. அப்படியென்றால் உங்களை சமவெளிக்கு அனுப்பப் போவதில்லை என ஃபிடல் எச்சரித்துள்ளார்.

மரியானா கிராஜெல்ஸ் படையினர் முதல் போரிலே நன்மதிப்பைப் பெற்றனர். இரண்டாம் போரில் சுற்றி வளைக்கப்பட்ட போதும், சரணடையாமல் எதிரிகளின் 11 துப்பாக்கிகளைக் கைப்பற்றினர். ஹொல்குயின் அணை, செர்ரோ பெலடோ, லொஸ் குய்ரொஸ், வெலஸ்கோ, லா செடெனா, கிபரா, உனஸ், புயிர்டோ பட்ரே, குய்சா, மஃபோ ஆகிய பல்வேறு இடங்களில் ஆயுதமேந்திச் சண்டையிட்டனர். புரட்சிப் படையின் செய்தித் தூதுவர்களாகவும் செயல்பட்டனர்.

போர் முடிவடைவதற்கு முன்னர், ஃபிடலுக்கு சுனோல் ஒரு கடிதம் எழுதினார், அதில் அவர் தான் முன்னர் கருதியது தவறு என்றும், போரில் பெண்களின் வீரத்தை அங்கீகரித்தும், தனக்கு ஏற்பட்ட மனமாற்றத்தைத் தெரிவித்துள்ளார். “பெண்களை ஒருங்கிணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்த முதன்மையான எதிர்ப்பாளராக நான் இருந்த போதும் இப்பொழுது எனக்கு முற்றிலும் மனநிறைவு ஏற்பட்டுள்ளது என்பதை உங்களிடம் கூற வேண்டும்.

பெண் போராளிகள், குறிப்பாக டெட்டே சிறப்பாகச் செயல்பட்டனர். முன்னேறுங்கள் என ஆணை பிறப்பிக்கும் போது, சில ஆண்கள் பின் தங்கினர். ஆனால் பெண்கள்தான் முன்னணியாக சென்றனர், அவர்களது துணிவும், அமைதியும்,போராளிகள் மற்றும் எல்லோருடைய நன்மதிப்பையும், பாராட்டுதலையும் பெற்றுள்ளது.”

ஃபிடல் இன்னொரு ஆயுதப்படையை உருவாக்க தீர்மானித்திருந்ததாகவும், ஆனால் அதைச் செய்வதற்குள் போர் முடிவடைந்தது எனவும் டெட்டே குறிப்பிட்டுள்ளார்.

சியராவில் தங்கள் வாழ்க்கை குறித்து டெட்டே பின்வருமாறு கூறுகிறார்.

சியராவில் நாங்கள் ஒரு நாடோடிப் படையாக இருந்தோம். அங்கு வாழ்க்கை மிகவும் கடினமாகவும் மிகுந்த தியாகங்களைக் கோருவதாகவுமாக இருந்தது அங்கே போதுமான உணவு, மருந்து, உடைகள், காலணிகள் இல்லை, நாங்கள் லியானா கொடியின் நீரைக் குடித்தோம். உடுத்திய ஆடையைத் தவிர மாற்றுடை இல்லை. பிடலுக்கும் ஒரே சீருடை மட்டுமே இருந்தது.

அந்தச் சீருடையைத் துவைத்துக் காயவைக்கும் போது விமான சத்தம் கேட்டால் ஈர உடையை அணிந்தவாறே ஃபிடல் ஓடுவார். ஃபிடல், ராவுலின் காலணிகள் பிய்ந்து கம்பிகளால் தைக்கப்பட்டிருந்தன. தலைவர்களாக இருப்பதால் எந்தவிதமான சலுகையும் அவர்கள் பெறவில்லை. ஃ பிடல், ராவுல், சே, காமிலோ மற்றும் அல்மேடா ஒருபோதும் தங்களை உயர்ந்தவராகக் கருதவில்லை.

நாங்கள் அனைவரும் ஒரே மாதிரிதான் இருந்தோம். மக்களுக்குக் கொடுக்க எங்களிடம் பணம் இல்லாத போது, கையெழுத்திட்ட பணத்திற்கான உறுதிச் சீட்டுகளை கொடுத்தோம், புரட்சியின் வெற்றியின் பின்னர், சிலியா அவர்கள் அனைவருக்கும் அதற்கான பணத்தைக் கொடுத்தார்.

புரட்சிக்குப் பின்:

புரட்சியின் வெற்றிக்குப் பின் நம்மிடம் எவ்வளவு பணம் உள்ளது என சிலியாவிடம் ஃபிடல் கேட்டுள்ளார். சிலியா 1,700 பெசோக்கள் என்று பதிலளித்தார். அதில் 700 பெசோக்களை டெட்டேவிடம் கொடுக்கச் சொன்ன ஃபிடல், போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்த, கைது செய்யப்பட்ட பாத்திஸ்டா படையினரின் உறவினருக்கும் அதைக் கொண்டு உதவ கிழக்கு நோக்கிச் செல்லும் படி டெட்டேயிடம் கூறியுள்ளார். ஃபிடலும் செலியாவும் போரில் பாதிக்கப்பட்ட அனைவரையும் அக்கறையுடன் பராமரிக்க வேண்டும்.

அவர்கள் எந்தத் தரப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பெற்றோர் செய்த தவறுகளைக் குழந்தைகள் மீது சுமத்தக் கூடாது என்று அறிவுறுத்தினர், துயரம் என்று வரும் போது தாய்நாடு பாகுபாடு காட்டாது. ஏனென்றால் இது ஒரு புரட்சி. ஒரு குழந்தையைக் காப்பாற்றுவது தாயகத்தைக் காப்பாற்றுவதாகும் என்று தனக்கு அவர்கள் கற்றுத் தந்து தன்னை ஒரு சிறந்த மனிதராக மாற்றியதற்காக அவர்களுக்கு எப்போதும் நன்றி செலுத்துவதாகவும் டெட்டே கூறியுள்ளார்.

பொறுப்புகள்:

டெட்டே போரால் பாதிக்கப்பட்டவர்களையும், அவர்களது குடும்பங்களையும் பராமரிப்பதற்கான துறையின் இயக்குநராக 1959 பிப்ரவரி முதல் பொறுப்பேற்றார். 1960 களில், பாத்திஸ்டாவின் ஆட்சியாலும், எஸ்காம்ப்ரே போரினாலும் (புதிய புரட்சிகர அரசிற்கும், சி.ஐஏ ஆதரவுடனான எதிர்ப் புரட்சிக் குழுக்களுக்கும் இடையிலான 6 வருடப் போர்), மற்றும் அமெரிக்காவின் பன்றிகள் விரிகுடா படையெடுப்பினாலும் பாதிக்கப்பட்டவர்களையும் அவர் பராமரித்தார்.

எரிக்கப்பட்ட வீடுகளை மறு நிர்மாணம் செய்வது, அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ய்ப்பைப் பெற உதவுவது, பள்ளிகள் கட்டுவது, ஆதரவற்ற குழந்தைகளைப் பராமரிப்பதற்கான காப்பகம் அமைப்பது எனப் பல்வேறு திட்டங்களை அவர் செயல்படுத்தினார்.

பிப்ரவரி 1963இல், கிழக்கு இராணுவத்தின் பொதுப் பணியாளர்களுக்கான கல்வித் துறைக்கு அவர் பொறுப்பேற்றார், 1964 ஆகஸ்ட் முதல் மேற்கு இராணுவத்தில் போரில் அனாதைகளாக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகளின் சமூகப் பாதுகாப்புக்கான குழந்தைகள் பண்ணைகளுக்கு அவர் பொறுப்பேற்றார்

1985ஆம் ஆண்டில் அவர் படைவீரர்கள் மற்றும் புரட்சியின் தியாகிகளைப் பராமரிப்பதற்கான துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். போராளிகளின் குடும்பங்களுக்குப் பாதுகாப்பு வழங்கினார்

1966 ஏப்ரல் முதல் சர்வதேசத் தொண்டுகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் கியூபர்களின் குடும்பங்களுக்கு உதவும் சிறப்புப் பிரிவில் பணியாற்றினார். 1969 மார்ச்சில் ஜாரூகோவில் குயிகனமர் கால்நடைத் திட்டத்திற்கு இயக்குனராகவும் செயல்பட்டார். அதே மாகாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவப் பிரிவிற்கும் அவர் தலைமை வகித்தார். 1978இல், ஹவானாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவப் பிரிவின் தலைவரானார்.

1980ஆம் ஆண்டில் ஹவானாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் மாகாணக் குழுவிற்கும் அதன் கருத்தியல் ஆணையத்திற்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 -1986 வரை கியூப கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு உறுப்பினராக செயல்பட்டார் .

கியூபா நாடாளுமன்றத்தின் மக்கள் அதிகார தேசிய சட்டமன்றத்தில் உறுப்பினராகவும் டெட்டே செயல்பட்டர். 2001 டிசம்பர் 2ஆம் நாளில் கியூபாவின் மிக உயர்ந்த கவுரவமான கியூபா குடியரசின் நாயகி விருது பிடல் காஸ்ட்ரோவால் டெட்டேவுக்கு வழங்கப்பட்டது

டெட்டே ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக புரட்சிகர ஆயுதப் படையில் உறுப்பினராக இருந்து வருகிறார். கியூபாவின் படைவீரர் விவகார அலுவலகத்தின் தலைவராகவும் உள்ளார். 1994ஆம் ஆண்டில் அவர் கர்னலாகப் பதவி உயர்வு பெற்றார், மேலும் 1996 ஜூலை 24 அன்று அவர் படைப்பிரிவின் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றார், கியூபாவின் வரலாற்றில் முதல் பெண் ஜெனரலாகப் பொறுப்பேற்ற பெருமைக்குரியவர் டெட்டே பியூப்லா.

டெட்டேவை ஜெனரலாக பதவி உயர்வு செய்வதற்காக ஃபிடல் காஸ்ட்ரோவால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பின்வருமாறு அவரைப் போற்றுகிறது.

"மக்களுக்காக முதல் கிளர்ச்சி இராணுவம் மற்றும் புரட்சிகர ஆயுதப் படைகளின் அணிகளில் பங்குபெற்று முன்மாதிரியாகச் செயல்பட்ட பியூப்லா எல்லா காலத்திலும் நம் வீரப் பெண்களின் புகழ்மிக்க அடையாளமாகத் திகழ்வார்."

1960 முதல் கியூபா பெண்கள் கூட்டமைப்பின் உறுப்பினராக உள்ளார். அனா பெட்டான்கோர்ட் பள்ளியில் விவசாயப் பெண்களை இணைப்பதில் அவர் பங்களித்தார், அங்கு ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் தொழிற் பயிற்சியும், வழிகாட்டலும் பெற்றனர். 1980 முதல் 1989 வரை அவர் எஃப்.எம்.சி தேசியக் குழுவிலும் ஹவானா மாகாணக் குழுவிலும் பணியாற்றினார்.

குடும்ப வாழ்வு:

பியூப்லா 1960இல், கியூப புரட்சிகர ஆயுதப் படைகளின் அதிகாரியான ரவுல் காஸ்ட்ரோ மெர்கேடரை மணந்தார். அவர்கள் பிடல், ரவுல், லாரா என மூன்று ஆண் குழந்தைகள் பெற்றனர்.

குடும்ப வாழ்வு குறித்து டெட்டேயின் கருத்து:

ஒரு தலைவன், ஆணோ பெண்ணோ, தன் குடும்பத்தை விட்டு வெளியேறி, அவர்களைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை என்றால், அவரால் சிறந்தவராக இருக்க முடியாது. புரட்சி புனிதமானது, குடும்பமும் கூட. பொதுவாக, வீட்டிலும், வெளியிலும் வேலை செய்வது கடினம். குழந்தைகள் வந்தால், கூடுதல் தேவைகள் ஏற்படுவதால், வேலைகள் அதிகரிக்கும், மற்றவர்களிடமிருந்து உதவியும் தேவைப்படும்.

“என் குழந்தைகள் சிறு வயதாக இருக்கும் போது என் குடும்பத்தினரிடமிருந்தும், என் சகோதரர்களிடமிருந்தும் எனக்கு நிறைய ஆதரவு இருந்தது… நான் எங்கு சென்றாலும் அவர்கள் என்னுடன் வருவார்கள், அது ஒரு கூடாரமாக இருந்தாலும் கூட. அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது, அது சிக்கலாக இல்லாத வரை, நான் அவர்களை என்னுடன் அழைத்துச் செல்வேன்.”

"தற்போது என் குழந்தைகள் கட்சி உறுப்பினர்கள், அவர்கள் என்னை நிறைய ஊக்குவித்துள்ளனர், ஏனென்றால் நான் போராளிகளுக்குச் சேவை செய்வது மட்டுமல்லாமல், அறுவடைப் பணிகளிலும் இருந்தேன், நான் தேசிய சட்டமன்றத்தின் உறுப்பினர், நான் பாதுகாப்பு ஆணையங்களில் பணிபுரிகிறேன், நான் புரட்சிகர ஆயுதப்படையின் அதிகாரி, ஆனால் இவை எல்லாம் இருப்பினும் எதுவும் என் குடும்பத்திற்குச் செய்ய வேண்டியதிலிருந்து என்னைத் தடுக்கவில்லை. "

சியராவில் நாங்கள் அனைவரும் ஒரு பெரிய குடும்பமாக வாழ்ந்தோம், காலம் கடந்து விட்டாலும், நாங்கள் இன்னும் ஒருவருக்கொருவர் அப்படித்தான் நடந்து கொள்கிறோம். நான் பல தோழர்களின் சகோதரி. அவர்கள் என்னை வேலையின் போதும், வீட்டிலும் அவ்வாறே அழைக்கிறார்கள்“ என்று கூறும் டெட்டேவுக்கு வீட்டிற்கும் அலுவல் வேலைகளுக்கும் இடையில் வரம்புகள் இல்லை.

“என் வாழ்நாள் முழுவதையும் புரட்சிக்கு அர்ப்பணித்தேன். நான் மீண்டும் பிறந்தால் அதையே செய்வேன். முதல் கியூபனாக இவ்வளவு உயர்ந்த இராணுவப் பதவியை வகிப்பது ஒரு பொறுப்பும், சிறப்பிற்குரிய மரியாதையும் ஆகும். நான் என் மக்களின் நம்பிக்கைக்கு மாறாக ஒருபோதும் செயல்பட மாட்டேன்.” என்று டெட்டே குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் டெட்டே திறம்பட செய்தார். சக தோழர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட டெட்டே அவர்களது இக்கட்டான தருணங்களில் அணுகத் தக்கவராகவும், உதவக் கூடியவராகவும் இருந்தார். கியூபாவில் பலருக்குத் தாயாகவும், சகோதரியாகவும் இருக்கிறார்.

புரட்சிக்காகவே பிறந்து, வாழ்ந்து, அர்ப்பணித்த வீரமிக்க டெட்டே பியூப்லா இன்னும் நெடுங்காலம் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து, தன் புரட்சிகர பணிகளைத் தொடர வேண்டும் என்று அவரை வாழ்த்தி வணங்குவோம். நம் செயல்பாடுகளால் அவரைப் போற்றிடுவோம்.

(தொடரும்)

- சமந்தா