caste issueஅரசுக்கு களங்கம் விளைவிக்கும் அதிகாரிகள்... அல்லல்படும் கிராம மக்கள்...

ஆதிதிராவிடர் மக்களின் உடனடித் தேவை நல்ல குடிநீர்

விழுப்புரம்  மாவட்டம் திருவெண்ணை நல்லூர் வட்டம் & காவல் சரகத்திற்கு உட்பட்ட ஓட்டனந்தல் வருவாய் கிராமத்தில் சாதி வெறி வன்கொடுமை, பல பல வடிவங்களில் ... மனித உரிமை மீறல்கள் என தொடரும் சட்ட விரோதங்கள்...

மக்களின் அறியாமையை கலைந்து சட்ட அறிவை மேம்படுத்த முன்னணிப் பாத்திரம் வகிக்க வேண்டிய வருவாய் துறை மற்றும்  காவல் துறையில், சிலர் கடமையை மறந்து  குற்றங்களையும்  குற்றவாளிகளையும் உருவாக்குகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாய் தொடரும் சம்பவம்.

அறியாமையாலோ அல்லது அதீத நம்பிக்கையாலோ, மானுட நெறியில் அறம் கெட்ட  வழக்கொழிந்த சிந்தனைகளால், செயல்களால்  வழக்கை சுமந்து நிற்கும் ஒட்டனந்தல் கிராம மக்கள்.

மக்களை சட்டத்திற்கு பண்படுத்த வேண்டிய அரசு அதிகாரிகள் கடமையை மறந்து, அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் அவலம்...

இவர்கள் மீதான நடவடிக்கை என்ன? பொது அமைதியையும், அடிப்படை உரிமைகளையும் மற்றும் கொரோனா கால விதிகளையும் பாதுகாக்க அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என தொடரும் கேள்விகள்? 

சம்பவம் :- ( 1)

13/05/2021 அன்று சமூக வலைதளத்தில் பட்டியல் சாமுகத்தை சேர்ந்த சிலர்,

ஆதிக்க சாதி வெறி கட்டப் பஞ்சாயத்து கும்பலின் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க்க வைக்கப் பட்டனர் என்ற செய்தி அறிந்து உண்மை அறியும் குழு 

விசாரணை களத்தில் இறங்கினோம்...

குழு:-

 1. ஏ ஆர் கே,தமிழ்ச்செல்வன் - தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்
 1. ஆர்,நாராயணன் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
 1. ஆர்,ராமமூர்த்தி - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
 1. நாராயணன் - கூட்ரோடு

16/05/2021 அன்று நேரில் ஒட்டனந்தல் கிராமத்தின் இரு பகுதி மக்களையும் உடன் வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகளையும் சந்தித்து விபரம் அறிந்தோம். 

ஒட்டனந்தல் வருவாய் கிராமம், புதிய ஒட்டனந்தல் பழைய ஒட்டனந்தல் என  இரண்டு வகையாக உள்ள ஒரே கிராமம், விவசாயத்தையும் பெங்களூர் வேலைவாய்ப்பையும் நம்பியுள்ளது. இதில் பழைய, புதிய ஒட்டனந்தல் கிராமத்தில், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் 890 பேரும், பட்டியல் இன மக்கள் 428 பேரும் உள்ளதாக அரசு ஆவணம் கூறுகிறது. 

கொடிய கோரோனா காலம்

பங்குனி மாதத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதி மக்கள் முருகன் கோவில் 13 நாள் திருவிழா நடத்தி விட்டார்கள் எனக் கருதி பட்டியலின மக்கள் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு 07/05/ 2021 வெள்ளிக்கிழமை காப்புக் கட்டியுள்ளனர்,

08/05/2021 வழிபாடும்

09/05/2021 சாகை வார்த்தல் திருவிழா

10/05/2021 வழிபாடு- தெருக்கூத்து

11/05/2021 வழிபாடு –தெருக்கூத்து

12/05/2021 இப்பகுதி மாணவச் சிறுவர்கள் ஆடியோ ஒலிப் பெருக்கிகள் மூலம் ஆடல் பாடல் என நிகழ்வுகள் தொடர்ந்துள்ளனர். (12ஆம் தேதி நிகழ்வுக்கு ஒரு பின்னணி உள்ளதாக தெரிவிக்கின்றனர்).

இதில் இந்நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே திருவெண்ணெய் நல்லூர் காவல் உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு வந்து, கொரோனா காலத்தில் இதையெல்லாம் செய்யக் கூடாது என கூறி, அங்கிருந்த இரண்டு ஆம்ப்ளிபயர், ஒரு டாட்டா ஏசி வண்டி, இரண்டு ஸ்பீக்கர் பாக்ஸ், கலர் லைட் இவைகளை அள்ளிச் சென்றதாக கூறுகின்றனர்.

பின்பு பட்டியலின பகுதியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் காவல் நிலையம் சென்று தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து, நிபந்தனையின் பேரில், ஒலிப் பெருக்கி உள்ளிட்ட பொருட்களை பெற்று வந்ததாகவும், அதில் முன் விரோதம் காரணமாக மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த  பிரமுகர், பட்டியலின மக்களின் மேற்படி திருவிழா உள்ளிட்ட செயல்பாடுகள் குறித்து காவல் நிலையத்துக்குச் தகவல் சொல்லி நடவடிக்கை எடுக்கச் சொன்னதாக காவல் துறையை சேர்ந்த முக்கியஸ்தர் பட்டியலின மக்களிடம் சொல்ல அதன் பொருட்டு பட்டியலின மக்களில் சிலர் மேற்படி ஒட்டனந்தல் பிரமுகரிடம் கிராமத்தில் வாக்குவாதம் செய்த நிலையில் பிரச்சனை முற்றி, தங்களை மதிக்காமல் பட்டியலின மக்கள் திருவிழா நடத்தியதற்காகவும், உளவு சொன்ன பிரமுகரை மிரட்டியதற்காகவும், தங்களை முன் வைக்காமல் காவல் நிலையம் சென்று பிரச்சினையை முடித்து வந்ததற்காகவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்த சிலர் ஊர் பஞ்சாயத்து என்ற முறையில் பட்டியலின மக்களை வரவழைத்து, அவர்களின் முக்கியஸ்தர்களை தங்களின் காலில் விழுந்து ஊர் மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கட்டளையிட்டு உள்ளனர்.

 மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதி, பஞ்சாயத்தில் பங்கெடுத்த நாட்டாமைகள்:-

1, பாலகிருஷ்ணன்( நாட்டார்)

2, புருஷோத்தமன் (மூ,ஊ, ம, த)

3, ராமலிங்கம்

4, கோபாலகிருஷ்ணன்(மு,ஊ, ம, த)க 

5, ஏழுமலை

6, கணேசன் 

ஆகியோர் முன்பு காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் எனவும் காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டதாக  வீடியோ காட்சி, புகைப்படம் உள்ளிட்டு இக்கிராமத்தினரும் தெரிவிக்கின்றனர்.

இவை குறித்த மேற்கண்ட விவரங்களும் வீடியோ புகைப்படக் காட்சிகளும் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மனித உரிமை ஆணையம் விசாரிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர் எனவும் பல தரப்பில் இருந்தும் பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன...

கட்டப்பஞ்சாயத்து கும்பலின் கடுமையாக மிரட்டலுக்கு உள்ளாக்கப்பட்ட பட்டியலின மக்கள், முக்கியஸ்தர்கள், கடவுளுக்கு விழா நடத்தியது தவிர தாங்கள் என்ன தவறு செய்தோம் என வெள்ளந்தியாக விக்கி வெலவெலத்து நின்ற நிலையில், நீங்கள் செய்தது தவறுதான் எனக் ஒத்துகிடுங்கடா, இல்லைனா நடக்குறதே வேறடா என்ற மிரட்டலில், பட்டியலின பகுதியைச் சேர்ந்தவர்கள் மன்னித்துக் கொள்ளுங்கள் எனக் கூறியதாகக் கூறப்படுகிறது.

அப்போது கட்டப் பஞ்சாயத்து கும்பல் வாயால் சொன்னால் போதாது காலில் விழுங்கடா என கூறியுள்ளார்கள்.

அதற்கு பட்டியலின பகுதியைச் சேர்ந்த

 1. முருகன்
 2. அங்காளன்
 3. ராதாகிருஷ்ணன்
 4. குமரன்
 5. ஆதிகேசவன்
 6. லோகநாதன் ஆகிய இளைஞர்கள் காலில் விழ முடியாது எனக் கூறியதால்

 மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த

 1. சீதாராமன்
 2. ராமச்சந்திரன்
 3. முத்துராமன்
 4. கோவிந்தன் 5,ரமேஷ்
 5. கோகுல்ராஜ்
 6. சூர்யா
 7. முத்து

ஆகியோர் மேற்கண்ட 6 பேரை பஞ்சாயத்து நடந்த இடத்திலேயே தாக்கியதாகக் கூறுகின்றனர் 

இதையடுத்து பட்டியலினத்தவர் தரப்பில் இருந்து பெரியவர்கள் 1. திருமால் - வயது 75 தர்மகர்த்தா, 2. சந்தானம் - வயது 70 நாட்டாமை 3. ஆறுமுகம் வயது 70  நாட்டாமை ஆகிய மூவரும் பஞ்சாயத்தின் காலில் விழுந்து இனிமேல் இது போன்ற தவறுகள் நடக்காது என கூற வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அவர்களின் வார்த்தையில் இருந்து அறிய முடிந்தது.

இதன் பின்பு திருவெண்ணை நல்லூர் காவல் நிலையத்தில் 13/05/2021 அன்று மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த ரமேஷ் பட்டியலினப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மீது புகார் கொடுக்கிறார்.

14/05/2021 அன்று பட்டியலை பகுதியைச் சேர்ந்த குமரன் மிகவும் பிற்படுத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள் மீது  புகார் கொடுக்கிறார்.

15/05/2021 அன்று உயர்திரு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள், உயர்திரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆகிய இருவரும் ஒட்டனந்தல் கிராமத்திற்கு வருகை தந்துள்ளனர்.

இதன்பின்பு ஒட்டனந்தல் கிராமத்தில் நடந்த சட்டவிரோதம் சம்பவங்களுக்கு குறிப்பாக பஞ்சாயத்து நடந்த போது பட்டியலின இளைஞர்களை தாக்கிய எட்டு பேர் மீதும், அடுத்ததாக உளவு சொன்னவரை மிரட்டியதாக 5 பேர் மீதும் இருதரப்பிலும் குற்றம் எண்:-375/2021, குற்றம் எண்:- 376/2021sc/st, Act வழக்குப் பதிந்து, இருவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர்

கட்டப்பஞ்சாயத்து நடந்தது குறித்தும் காலில் விழ வைக்கப்பட்டது குறித்தும் வழக்கு பதிவு செய்ததாக  விபரம் அறிய முடியவில்லை. இன்று காலை வரை கிராம நிர்வாக அலுவலர் எந்த புகாரும் காவல் நிலையத்தில் அளிக்கவில்லை எனத் தெரிவிக்கிறார்

இக்கிராமத்தில்  பல்வேறு முரண்பாடுகளும் வஞ்சனைகள் இருந்தாலும் கூட, மாமன் மச்சான் என்று அண்ணன் தம்பி என்றோ நண்பர்கள் என்றோ அனைவரும் காலத்தைக் கடந்துக் கொண்டு தான் இருந்தோம். மேற்கண்ட இந்த நிகழ்வுகளால் நிலைகுலைந்து போய் உள்ளோம் என்றனர் பட்டியலின பகுதியில் உள்ளவர்கள்.

ஜெயமுருகன்:- என்ற இளைஞர் நம்மிடம் கூறியது, வணக்கம் சார் சில ஆண்டுகளாக அம்பேத்கர் பிறந்த நாள் அன்னைக்கு எங்க ஊர்ல இருக்கிற நடுநிலைப் பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் "அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம்" KCC கிரிக்கெட் கிளப்  சார்பில் பேனா நோட்டு புத்தகம் தலைமையாசிரியர் மூலம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளோம்.

இது ஒரு நல்ல பண்பாட்டையும் வளர்த்தது, இந்நிலையில் கடந்த அம்பேத்கர் பிறந்தநாள் அன்று வழக்கம்போல் நாங்கள் நோட்டு புத்தகம் வாங்கி தலைமையாசிரியரிடம் கொடுத்தபோது, அங்கு வந்த சீதாராமன் (சாதி வெறியர்) உள்ளிட்ட மூவர், இவனுகளுக்கெல்லாம் ஒரு பிறந்தநாள் இவனெல்லாம் நோட்டுப்புத்தகம் கொடுப்பாங்க, நீங்க  இதெல்லாம் வாங்கி கொடுப்பீர்களா எனக் கூறி அன்றைக்கு மாணவர்களுக்கு நோட்டுப் புத்தக கொடுக்க விடாமல் தடுத்துவிட்டனர். இதனால் மாணவர்கள் மிகவும் வருத்தத்திற்கு உள்ளாயினர்.

இதனால்தான் மாரியம்மன் கோவிலில் திருவிழாவின் இறுதி நாளில் மாணவர்களையே ஆடிப்பாட வைத்து அவர்களுக்கு கொடுக்க நோட்டுப் புத்தகம் ஏற்பாடு செய்திருந்தோம் இப்படி அநியாயமா செஞ்சுட்டாங்க, போலீஸ்ல கேஸ் கூட கொடுத்தோம் ஒன்னும் ஆகல என்கிறார்,

அங்காளன்:- (என்ற பொறியல் பட்டதாரி இளைஞர்) சார் இது மட்டுமா எங்க ஊர்ல எந்த நல்ல விசேஷமும் நடக்க முடியாது, எங்க குடியிருப்புகளுக்கு மின்சாரம் வரும் டிரான்ஸ்பார்மர் அவங்க ஏரியாவில் தான் உள்ளது. ஆகவே அவர்கள் எங்கள் பகுதியில் ஒரு விசேஷம் நடக்கும்போது அடிக்கடி கரண்ட் ஆப் செய்து வன்மத்துடன் சிரிப்பார்கள் கிண்டல் செய்வார்கள் என்கிறார்

திருவேங்கடம் s/o பிச்சைக்காரன்:- (விவசாயி) சார் எங்களை நல்ல தண்ணீர் குடிக்க விட மாட்ராங்க. ஒட்டு மொத்த ஊருக்கும் ஒரு டேங்க் தான் இருந்துச்சு அதுல எங்க பகுதிக்கு குடிதண்ணீர் வந்த பைப் லைன்ன டேங்க் உள்ளேயே பழைய ஜட்டி துணிய வச்சி அடைச்சு எங்களுக்கு தண்ணீர் வராத பண்ணிட்டாங்க.

நாங்க கேட்டப்ப இதே ரமேஷ், நாங்க தான் அடச்சோம் நாங்க  குடிக்கிற தண்ணி  நீங்களும் குடிச்சா நானும் நீயும் ஒன்னா என கேக்குறான். இது சம்பந்தமாக போலீசில் கேஸ் கூட கொடுத்தோம்.

அதன் பிறகு எங்களுக்கு தனியா டேங்க் போர் எல்லாம் போட்டாங்க, அதுலயும் மேற்படி சாதி வெறியன்கள், அவளுக்கு தண்ணி வர போருக்கு பக்கத்திலேயே எங்களுக்கு தண்ணி வர போரு இருக்க கூடாதுன்னு எங்களுக்கு போடப்பட்ட போர்ல கல்லையும் மண்ணை வாரிக் கொட்டி "அடச்சீ" பெரிய கொடுமை பண்ணிட்டாங்க.

இப்ப வேற இடத்தில மாற்றி போர் போட்டு தண்ணீர் கொடுக்குறாங்க ஆனா அந்த தண்ணீரில் சமைச்சா பால் திரிந்து போயிடுது, சாதம் அளிஞ்சு போயிடுது, குடிக்க சமைக்க அந்த பகுதி பொது குழாயில் தண்ணீர் போய் புடிச்சா அசிங்கமா திட்டுறாங்க. இப்ப சண்டை வேறு ஆகிப்போச்சு, அந்தத் தண்ணீரும் கிடைக்காது. நல்ல தண்ணிக்கு எங்க போறதுன்னு தெரியலை என வருத்தத்தோடு சொன்னார்.

கவியரசன்:-  என்ற இளைஞர் இதே ஊர்ல இருக்கிற முருகர் கோவில் பொது இடத்தில் தான் இருக்குது, அங்கே எங்கள வழிபடுவது செய்வதில் பிரச்சினை பண்றாங்க. அதேபோல பொது ஏரியில மீன் மற்றும் மரம் விழல் இதெல்லாம் அவங்களே  ஏலம் விட்டு அனுபவிக்கிறார்கள். நாங்களும் மனுஷங்கதானே எங்களுக்கு உரிமை இருக்கு என்கிறார்.

நமது கேள்விகள்?

 1. ஒட்டனந்தல் சம்பவத்தில் சட்டத்தை மீறியவர்கள் யார் யார்?
 1. திருவிழா சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் வட்டாட்சியருக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கைகள் மூலம் திருவிழாவுக்கு திட்டமிட்ட மக்களை மேம்படுத்தி தடுத்திருக்க வேண்டும் இவை நடந்திருந்தால் இந்த சம்பவம் நடந்து இருக்காது இதைச் செய்யாத அவர்கள் மீது நடவடிக்கை என்ன?
 1. ஒலிப் பெருக்கி வரலாறுகளை காவல் நிலையத்திற்கு கொண்டுச் சென்று பின் நிபந்தனைகள் பேரில் பட்டியில் உள்ள மக்களிடம் ஒப்படைத்துவிட்டு, கூடவே உளவு சொன்ன நபரையும் காட்டிக் கொடுத்ததன் நோக்கம் என்ன, சாதிய வன்கொடுமைகள் நடைபெறுவதற்கு முத்தாய்ப்பாய் அமைந்தது இச்சம்பவம் தானே இதில் உரியவர்கள் மீது நடவடிக்கை என்ன?
 1. சட்டவிரோதமான முறையில் பஞ்சாயத்தைக் கூட்டி காலில் விழ வைத்த சாதி வெறி வன்கொடுமை, மனித உரிமை மீறல் மீது கிராம நிர்வாக அலுவலர் இதுவரையிலும் புகார் கொடுக்காதது, மேற்படி குற்றங்களை இழைத்தவர்கள் மீது வழக்கு பதிந்து  மேல் நடவடிக்கைக்கு செல்லாததும் சட்டமீறலாய்  உள்ளதின் மீது நடவடிக்கை என்ன? 
 1. ஒட்டனந்தல் பட்டியலின மக்களுக்கு உடனடி தேவையான பாதுகாக்கப்பட்ட நல்ல குடிநீர் வழங்குவது எப்பொழுது?
 1. ஒட்டனந்தல் கிராமத்தில் அரசு சேவை வழங்கும் நிறுவனங்கள் உள்ளிட்டு உணவுப் பொருட்கள் வாங்குவதற்கான கடைகள் அத்துணையும் பிற்படுத்தப்பட்ட பகுதி மக்கள் வசிக்கும் பகுதியிலேயே உள்ள நிலையில், பட்டியலின மக்கள் இயல்பாய் சென்றுவர உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை.
 1. தற்போது அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரண நிதி குடும்பத்திற்கு ரூபாய் 2000 பெறுவதற்கு நியாயவிலைக் கடைக்கு அந்தப் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலையில் அச்சத்துடன் அப்பயனை பெறாமல் உள்ள பட்டியலின மக்களுக்கான வழிகாட்டுதல் என்ன?
 1. கிராமப்புற மக்களின் அனைவருக்குமான உரிமையும் பொது அமைதியை ஏற்படுத்தஅரசு உடனடியாக சரியான முறையில் தலையிட வேண்டும்
 1. திருவெண்ணைநல்லூர் வட்டத்தில் சித்தலிங்கமடம் பிர்காவில்  உள்ள இப்பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாகும் ஏற்கனவே ஒரு சம்பவம் பக்கத்தில் உள்ள "ஆமூர்" கிராமத்தில் பொதுக் குளத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைக் கல்லூரி மாணவரும் சிவ பக்தருமான பட்டியலின இளைஞர் பொது குளத்தில் இறங்கி குளித்ததற்காக பச்சை கரும் பால் படு பாதகமான முறையில் அடித்து குற்றுயிரும் குலையுயிருமாக அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பெரும் பிரச்சினையாக இருந்தது, என்பதை  அரசின் மேலான  கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இப்பகுதியில் பல்வேறு இடங்களில் இப்படிப்பட்ட சம்பவங்களை சொல்ல முடியும்.

ஆகவே, இப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஒரு சட்ட விழிப்புணர்வு, மற்றும்   கொரோனா விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்திட அரசு திட்டமிட வேண்டும் என்று தமிழக முதல்வரின் மேலான கவனத்திற்கு பணிவுடன்  கோருகிறோம்.

 1. சட்டம் குறித்த புரிதலை குடிமக்களுக்கு ஏற்படுத்துவது அரசின் கடமை, அதுவே அரசியலமைப்புச் சட்டத்தில் வழிகாட்டலாகவும் உள்ளது.

தண்டனைகளிலிருந்து மட்டும் சட்டப் புரிதலை ஏற்படுத்துவது குரூரமான தாகவே இருக்கும், என்பதே நாகரீக சமூகத்தின் வளர்ச்சி என்பதை அரசின் கடமடை ஊழியர் வரை கவனத்தில் கொள்வது சிறப்பு என அய்யன் திருவள்ளுவரும் முத்தமிழ் வித்தகர் ஐயா கலைஞர் அவர்களும் நயம்பட உரைக்கின்றனர்.

ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் 
தேர்ந்து செய்வதே முறை (குறள்.541)

குற்றங்களை ஆராய்ந்து எவரிடத்திலும் பாரபட்சம் காட்டாமல், இவர் வேண்டியவர், இவர் வேண்டாதவர் எனப் பாராது நடுநிலையோடு குற்றத்தினை அறிந்து தண்டனை வழங்கச் சொல்லும் மன்னனின் செங்கோன்மையையே சிறந்த அரசு.

- ஏ ஆர் கே.தமிழ்ச்செல்வன் (பத்திரிகையாளர்)

                 

Pin It