கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

விழிப்புணர்வில் வெளிவந்த ‘ஹாஜி சேரமான் பெருமான்’ என்ற கட்டுரைக்கு ஜெயமோகன் தனது இணையதளத்தில் ஒரு விரிவான மறுப்பு எழுதியிருக்கிறார். “முட்டாள்தனம்”, “அபத்தம்” போன்ற பட்டங்களையும் வாரி வழங்கியிருந்தார்.

ஜெயமோகனின் கட்டுரையைக் கீழ்கண்டவாறு சுருக்கலாம்.

1. சேரமான் பெருமாள் என்ற பெயர் கொண்ட பல மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். இரண்டாவது சேரப் பேரரசு அல்லது பெருமாள் வம்சம் என்று கூறப்படும் காலகட்டத்தில் ஆண்ட எல்லா மன்னர்களும் சேரமான் பெருமாள் என்ற பெயர் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் இஸ்லாமியராகவும் இன்னொருவர் சைவ நாயனராகவும் இருந்திருக்கலாம்.

2. பெருமாள் வம்சம் சோழர்களால் அழிக்கப்பட்டது. அந்த அழிவிலிருந்தே குறுநில மன்னர்கள் தோன்றினர். எனவே சேரமான் தனது அரசைப் பிரித்துக் கொடுத்ததாகக் கூற முடியாது என்கிறார். இதன்மூலம் கொல்லம் ஆண்டு, ஓணம் பண்டிகை ஆகியவற்றிற்கும் மெக்கா சென்ற சேரமான் பெருமாளுக்கும் உள்ள தொடர்பை மறுக்கிறார்.

***

பெருமாள் வம்சம் போன்ற கேரள வரலாற்றுச் செய்திகளுக்குள் போகும்முன் பெரிய புராணத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் விதத்தில் ஏதாவது சேர மன்னர் இருந்திருப்பது சாத்தியமா என்பதைப் பார்க்கலாம். பெரிய புராணத்தில் சேரமான் பற்றிக் கூறப்பட்டுள்ளவை ஏற்கனவே கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளன. மிகச்சிறந்த சிவபக்தரான சேரமான் பெருமான் சுந்தரமூர்த்தி நாயனாருடன் நட்பு கொண்டு இருவரும் ஒன்றாகவே கைலாயம் சென்றார்கள் என்று பெரியபுராணம் கூறுகிறது.

பெரிய புராணம் இரண்டு நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. ஒன்று சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய திரு தொண்டத் தொகை. இப்பதிகத்தில் சுந்தரர் தன்னையும் தனது பெற்றோர்களையும் தவிர்த்து அறுபது சிவனடியார்களின் பெயர்களையும் அவர்களின் சிறப்பையும் ஓரிரு சொற்களில் கூறி அவர்களின் அடியார்க்கும் அடியேன் என்று பாடுகிறார்.

மற்றொரு நூல் நம்பியாண்டார் நம்பி தொகுத்த திருத் தொண்டர் திருவந்தாதி. இவரே பெரும்பாலான தேவாரப் பதிகங்களைத் தொகுத்தவர். அடியார்களின் பெயர்கள் சுந்தரர் கூறிய வரிசையிலேயே பின் வந்த இரண்டு நூல்களிலும் இடம்பெற்றுள்ளன. எனவே முதல் முதலில் சிவனடியார்களின் பெயர்களை தொகுத்து வரிசைப்படுத்தியவர் சுந்தரரே ஆவார். திருத்தொண்டத் தொகையில் மேகம் போன்ற கொடைத்திறம் கொண்ட கழறிற்றறிவார் தம் அடியார்க்கும் அடியேன் என்று ஒரு வரி வருகிறது. கழறிற்றறிவார் குறித்து சுந்தரர் கூறுவதெல்லாம் இவ்வளவே.

சுந்தரமூர்த்தி நாயனார் தேவாரம் ஏழாம் திருமுறை என்றழைக்கப்படுகிறது. இதில் எந்த இடத்திலும் சேரமான் பெருமாள் அல்லது கழறிற்றறிவார் பற்றி ஒரு சொல்கூட இடம்பெறவில்லை. சேரமானின் தலைநகரான கொடுங்கலூரிலுள்ள திருவஞ்சிக்குளம் ஆலய பதிகம் உட்பட. இத்தனைக்கும் ஏறத்தாழ பாதிக் கோவில்களுக்கு சுந்தரர் சேரமான் பெருமான் நாயனாருடனே சென்றதாகக் கூறப்படுகிறது. அதேபோல சேரமான் பெருமான் நாயனார் இயற்றியதாகச் சொல்லப்படும் பொன்வண்ணத்தந்தாதி, திருமும்மணிக் கோவை, திருக்கைலாய உலா ஆகிய மூன்று நூல்களிலும் எந்த இடத்திலும் சுந்தரர் இடம்பெறவேயில்லை. இன்னொரு விசித்திரம் இம்மூன்று நூல்களிலும் சேரமான் தன் உயிரோடு கலந்துவிட்ட திருவஞ்சிக்குளம் குறித்தும், மலைநாடு மாகோதையார்புரம் குறித்தும் எதுவும் கூறுவதேயில்லை. சுந்தரர் மனிதர்களைப் பாடாதவரும் அல்ல.

‘சேரமான் பெருமாள் சுந்தரர் காலத்தில் அவருக்கு இனிய நண்பராக வாழ்ந்த அரச அடியார் என்று பெரிய புராணம் கூறும். ஆயின் இவ்வுண்மையை சுந்தரர் தேவாரமோ சேரமான் பெருமாள் பாடிய இலக்கியங்களோ நமக்குணர்த்தவில்லை. (ப.அருணாசலம். பக்தி இலக்கியம்).

சுந்தரருக்கு சுமார் 100 ஆண்டுகளுக்குப் பின்வந்த நம்பியாண்டார் நம்பிதான் கழறிற்றறிவாரின் இடத்தில் சேரனைப் பொருத்துகிறார். உடலெல்லாம் மண் அப்பியபடி வரும்சலவைத் தொழிலாளி சேரனுக்கு சிவனடியார் போலக் காட்சி தந்தார். சுந்தரர் யானையில் கைலாயம் சென்றபோது தன் குதிரையில் சேரர் அவரைத் தொடர்ந்து சென்றார் என்று இரண்டு செய்திகளைக் கூறுகிறார் நம்பியாண்டார் நம்பி (திருத்தொண்டர் திருவந்தாதி). கழறிற்றறிவாரின் பிம்பம் நம்பியால் சற்றே வளர்த்தெடுக்கப் பட்டிருந்தாலும் அவரும் சேரன் என்றே பொதுவாகக் கூறுகிறார்.

நம்பியாண்டார் நம்பியால் சேரனாக்கப்பட்ட கழறிற்றறிவாரை சேரமான் பெருமாளாக்கியவர் சேக்கிழார்தான். திருவஞ்சிக்குளம், மகோதயபுரம் சுந்தரருடன் தெய்வீகத்தன்மையுள்ள நட்பு ஆகியவை அனைத்தும் பெரிய புராணத்திலேயே முதல்முதலாக இடம்பெறுகின்றன. அறுபது நாயன்மார்களையும் தொகுத்துக் கூறியதிலிருந்தே சுந்தரர் அவர்களுக்குச் சற்றேனும் காலத்தால் பிற்பட்டவர் என்று தெரிகிறது. அப்பர் மகேந்திரவர்மனைச் சைவனாக்கினார். சம்பந்தர், கூன் பாண்டியன், சமணர் கழுவேற்றம் கதை அனைவரும் அறிந்ததே. சோழர்கள் பரம்பரைச் சைவர்கள். ஒரு அரசியல் பிரிவாகக் கருதப்பட்டு வந்த தீபகற்பத்தின் தென்பகுதியில் சேர நாட்டில் மட்டுமே சைவ சமணப் போராட்டம் உக்கிரமாக நடந்ததாகத் தெரியவில்லை.

சுந்தரர் சேரநாட்டில் சைவத்தை நிலைநிறுத்த சில முயற்சிகள் மேற்கொண்டிருக்கக்கூடும் என்று திருவஞ்சிக்குளம் பதிகத்திலிருந்து தெரிகிறது. அப்பதிகத்தில் தொண்டர்களே எம்பிரானை வெறுத்துப் பேசாதீர்கள், பிரிவோம் என்று பேசுதலை ஒழியுங்கள் என்றெல்லாம் சுந்தரர் பாடுவது தற்செயலானது அல்ல. திருஅஞ்சைக் களத்திலிருந்து திருவாரூர் இறைவனை எண்ணி அவர் ஏங்கிப் பாடுவதும் அவரது பணி அவ்வளவு எளிதாக முடிந்திருக்காது என்பதையே காட்டுகிறது. ஒவ்வொரு முறையும் சுந்தரர் சேரமானால் ஆர்ப்பாட்டமாக வரவேற்கப்பட்டார். சேரநாட்டில் ஆலயத்தில் மட்டுமல்லாமல் அரச சபையிலும் சைவமே வீற்றிருந்தது என்ற பிம்பத்தை உருவாக்கவே கழறிற்றரிவார் சேரமான் பெருமாளாக்கப்பட்டார்.

* * *

பெரிய புராணத்தில் சேரமான் பெருமாள் நாயனார் என்று குறிப்பிடப்படுபவரும், மெக்கா சென்ற சேரமான் பெருமாளும் ஒருவரே என்று கருதுவதற்கான அடிப்படைகள் உள்ளன.

1. இந்த இரண்டு இடங்களில் மட்டுமே ஒரு சேர மன்னர், சேரமான் பெருமாள் என்ற பெயரில் மட்டும் குறிப்பிடப்படுகிறார்.
2. சுந்தரரின் காலமும் சேரமானின் மெக்கா பயண காலமும் ஏறக்குறைய ஒன்றாகவே இருப்பது.
3. சேரமானின் விசித்திரமான மறைவு.

இந்தக் காரணங்களால்தான் ஒளவை துரைசாமிப் பிள்ளை போன்ற தமிழறிஞர்களும், ஸ்ரீதர மேனன்போன்ற கேரள அறிஞர்களும் சேரமானின் மெக்கா பயணத்தை மறுக்க அவர் நாயனார்தான் என்று நிலைநாட்ட சிரமம் எடுத்துக்கொண்டார்கள். தோப்பில் முகமது மீரான் கூட அண்மையில் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் சுந்தரமூர்த்தி நாயனாரின் நண்பரான சேரமான் பெருமாள் மெக்கா சென்றார் என்று கூறியுள்ளார்.

* * *

கி.பி. 800 முதல் 1102 வரை சேர நாட்டை குலசேகரப் பேரரசு அல்லது இரண்டாவது சேரப் பேரரசு என்ற அரசைச் சேர்ந்த 13 மன்னர்கள் அரசாண்டதாக இளங்குளம் குஞ்சன் பிள்ளை கூறுகிறார். இம்மன்னர்கள் பெருமாள் வம்சம் என்றும் குறிப்பிடப்படுகிறார்கள். ஜெயமோகன் சொல்வதுபோல சேரமான் பெருமாள் வம்சம் அல்ல. இவர்களில் மூன்று நான்கு மன்னர்கள் குறித்தே தெளிவான விவரங்கள் உள்ளன. இவர்கள் தங்கள் பெயரோடு சேரமான் பெருமாள் என்பதையும் சேர்த்துக் குறிப்பிடும் வழக்கம் கொண்டிருந்தார்கள். உதாரணமாக கி.பி.1000 ல் வழங்கப்பட்ட யூத செப்புப் பட்டயத்தில் குறிப்பிடப்படும் சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மன். 15 ஆம் நூற்றாண்டில் கூட சகலகலாவல்ல சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மன் என்று ஒரு குறுநில மன்னன் இருந்ததாக சேரநாடும் செந்தமிழும் என்ற நூல் கூறுகிறது.

சேரமான் பெருமாள் என்ற பெயர் கொண்டிருந்த ஒரு மன்னர் பெரும் புகழ் அடைந்திருந்ததன் காரணமாகவே மற்ற மன்னர்களும் தங்கள் பெயரோடு சேரமான் பெயரை இணைத்துக் கொண்டிருக்கலாம் என்று சங்குண்ணி மேனன் கருதுகிறார். ஆனால், இயற்பெயர் பட்டப்பெயர் எதுவுமில்லாமல் சேரமான் பெருமாள் என்று மட்டுமே அழைக்கப்படுபவர் ஒரே ஒருவர் மட்டுமே. அவர் சைவரா அல்லது இஸ்லாமியராக மாறியவரா என்பதுதான் கேள்வியே.

இராஜசேகர பெருமாள் அல்லது ஸ்தாணு ரவி பெருமாள் என்கிற இரண்டு மன்னர்களில் ஒருவர் மெக்கா சென்ற சேரமான் பெருமாளாக இருக்கலாம் என ஜெயமோகன் குறிப்பிடுகிறார். இவர்களில் ஸ்தாணு ரவி சிரியன் கிருஸ்துவர்களுக்கு உரிமைகள் வழங்கியதாக தரிசப்பள்ளி செப்புப் பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது. திரு பூணித்துறைக்கு அருகிலுள்ள திருகர்கரா கோவிலுக்கு பல உதவிகள் இவர் செய்ததாகவும், திருவோணம் விழா கொண்டாடும் வழக்கத்தை இவரே (ஒருவேளை மீண்டும்) தொடங்கி வைத்ததாகவும் கூறப்படுகிறது. வானியலில் ஆர்வம் கொண்டிருந்தவர் என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன. வில்லியம் லோகானும் இவர் குறித்த விவரங்கள் சேரமான் பெருமாளோடு ஒத்துப் போகின்றன என்கிறார்.

ஸ்தாணு ரவி பௌத்தராக மாறிவிட்டார் என்றும் கிருஸ்துவராகிவிட்டார் என்றும்கூடக் கதைகள் உண்டு. இவருக்குப் பிறகு ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு சேரநாட்டை யார் ஆண்டார்கள் என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.

பெரும்புகழ் பெற்றவர்; பெருமாள் வம்சத்தின் கடைசி மன்னர்; ஓணம் பண்டிகையைத் தொடங்கி வைத்தவர்; மதரீதியான தேடல் கொண்டவர் என்றெல்லாம் சேரமான் பெருமாள் பற்றி கூறப்படும் பல தகவல்கள் ஸ்தாணு ரவிக்கும் பொருந்துகின்றன. எனவே மெக்கா சென்றவரும் சேரமான் பெருமாள் பொதுப்பெயரால் அழைக்கப்படுபவரும் இவராகவே இருக்கக்கூடுமென்று பல ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

பல சேரமான் பெருமாள்கள் இருந்திருக்கலாம் என்று கூறும் ஜெயமோகன் நாயனாரின் இயற்பெயர் என்னவென்று கூறவேயில்லை. ஆனால் ஸ்ரீதர மேனன் என்ற வரலாற்றாசிரியர் ஸ்தாணு ரவிக்கு முன்பு ஆட்சிபுரிந்த ராஜசேகர பெருமாள் என்பவர்தான் சேரமான் பெருமாள் நாயனார் என்கிறார். மெக்கா சென்றவராக இருக்க வாய்ப்புள்ளது என்று ஜெயமோகன் கூறும் அதே ராஜசேகர பெருமாள்தான். ஆனால், ஸ்ரீதர மேனன் சேரமான் பெருமாள் மெக்கா சென்ற கதையை உறுதியாக மறுக்கும் கட்சியைச் சேர்ந்தவர். எனவே இரண்டு மதத்தவர்களும் ஒருவரையே குறிப்பிடுகிறார்கள் என்பதற்கு இதைவிட சிறந்த ஆதாரம் வேறென்ன இருக்க முடியும்.

வழிப்பிள்ளி கல்வெட்டு உண்மையில் ராஜசேகர பெருமாளுடையது. பரமேசுவர பட்டாரகா என்று அதில் இவரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அதில் ஒரு சிவன் கோவிலுக்கு இவர் தானம் அளித்தார் என்பதற்கு மேல் எந்த விவரமும் இல்லை. இவரைப் பற்றி தொன்மமாகவோ, திட்டவட்டமாகவோ எந்த ஆதாரமும் இல்லை. பெரிய புராணம் கூறும் மாபெரும் சைவ அடியார் இவர்தான் என்றுகொள்ள இதுவரை வேறெந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

திருவஞ்சிக்குளம் ஆலயத்தில் சேரமான் பெருமாளின் கல்வெட்டு அல்ல திரு உருவச்சிலைதான் உள்ளது. எது எப்போது வேணடுமானாலும் யாரால் வேண்டுமானாலும் வைக்கப்பட்டிருக்கலாம். ‘சேரமான் பெருமாள்’ என்ற பெயரில் எந்தக் கல்வெட்டும் கிடையாது.

ஸ்தாணு ரவிக்கு 90 ஆண்டுகளுக்குப் பிறகே மகோத்யபுரம் சோழர்களால் தாக்கப்படுகிறது. அப்போதைய மன்னர் பாஸ்கர ரவிவர்மன் அதில் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இடையிலுள்ள 90 ஆண்டுகள் யார் ஆண்டார்கள் என்பது குறித்து உறுதியான ஆதாரங்களும் இல்லை. எனவே ஸ்தாணு ரவிக்குப் பிறகு சேரநாடு பலவீனமடைந்துவிட்டது என்றுதான் கொள்ள வேண்டும்.எனவே பெருமாள் வம்சம் சோழர்களால் அழிக்கப்பட்டது என்று ஜெயமோகன் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது. சேரமான் பெருமாள் நாட்டைப் பிரித்துக் கொடுத்தார் என்பதை மறுக்கவே செயமோகன் இவ்வாறு கூறுகிறார்.

* * *

சேரமான் பெருமாளின் புகழுக்கு உரிமை கொண்டாட எல்லா மதங்களும் முயன்றதைப் போலவே சைவமும் முயற்சி செய்துள்ளது. பெரிய புராணத்தில் கூறப்படும் கழறிற்றறிவார், தமிழில் புலமை பெற்ற சேரமன்னர், செங்கோற் பொறையான் என்பவருக்குப் பின்பு ஆண்டவர் என்ற அடையாளங்கள் எல்லாம் கொண்ட ஒருவரை கேரள வரலாற்றில் காணமுடியாமலிருப்பது இக்கதை முற்றிலும் அரசியல் நோக்கத்துடன் செய்யப்பட்ட புனைவு என்ற முடிவிற்கே வரத் தூண்டுகிறது.

சேரமான் பெருமாள் மெக்கா சென்றாரா அல்லது கைலாயம் சென்றாரா என்ற விவாதம் கடந்த எழுபது எண்பது ஆண்டுகளாக நடந்து வருவதுதான். அதில் அவர் மெக்கா சென்றதற்கான ஆதாரங்கள்தான் அதிகம் உள்ளன. தமிழகத்தில் சைவத்தை அடிப்படையாகக் கொண்ட தமிழறிஞர்களால் அவை இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன என்று விழிப்புணர்வு கட்டுரை கூறுகிறது. இதில் அபத்தம் எங்கே வந்தது? ஜூலியஸ் சீசர் பழனியில் பிறந்தார் என்று ஒன்றும் எழுதப்படவில்லையே.

ஜெயமோகன் முட்டாள்தனம், அபத்தம் என்றெல்லாம் பட்டங்களை வாரி வழங்கிவிட்டு பின்பு செய்வதென்னவோ பஞ்சாயத்துதான். ஆளுக்கு ஒரு சேரமான் பெருமாளை வைத்துக்கொள்வோம் என்று பஞ்சாயத்து செய்துவிட்டு இறுதியில் கவனமாக எழுத வேண்டும் என்ற உத்தரவு அல்லது அறிவுரை அல்லது ஆலோசனையுடன் முடிக்கிறார். அது எதுவாக இருந்தாலும் மேற்கண்ட காரணங்களுக்காக அதை முற்றிலும் நிராகரிக்க வேண்டியிருக்கிறது.