அலுவலகம் முடிந்து களைப்புடன் வீடு திரும்பினேன். பூட்டியிருந்த அறைகதவின் வாசற்படியில் அமர்ந்திருந்தார் தாமோதரன் பெரியவர். என்னைக் கண்டதும் கையிலிருந்த தடிக்கம்பை தரையில் ஊன்றியபடி மெல்ல எழுந்து வாசற்கதவை திறக்க வழி விலகி நின்றார். அவரது முகம், தலை, மார்பு என்று அனைத்து பிரதேசங்களிலும் முடிகள் வெள்ளிகம்பிகள் போல வெளுத்து கிடந்தன. அணிந்திருந்த வெள்ளை ஜிப்பா அழுக்கு படிந்து பழுப்பு நிறமேறி இருந்தது. கட்டியிருந்த வேட்டி சலவைக்குப் போயி வெகுநாட்கள் ஆகியிருக்கக்கூடும். வயது எழுபத்தி ஒன்பது என்று என்றோ ஒருநாள் சொன்னதாய் ஞாபகம்.
நான் தங்கியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளரின் தந்தைதான் இந்த பெரியவர். பெரியவருக்கு அவரது மகன் வீட்டில் தங்க உரிமை இல்லை. ஒரு கிலோமீட்டர் தூரத்தில் யாருமற்றதொரு தோட்டத்தின் நடுவிலிருக்கும் சிறு குடிசையில் தான் ஜீவனம். காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் தன் மகன் வீட்டுக்கு வந்து திண்ணையில் அமர்ந்திருப்பார்.
அவரது நிழல் வீட்டிலுள்ளவர்களின் கண்ணில் பட்டால் தான் அவருக்குரிய ஆகாரத்தை அவருக்கே உரித்தான தட்டில் வைத்து திண்ணையில் வைத்துவிடுவார்கள். பெரியவர் அந்த ஆகாரத்தை தின்று விட்டு திரும்ப காலாற நடந்து தோட்டத்திலிருக்கும் தனது குடிசைக்கு சென்று விடுவார். நான் அந்த வீட்டில் வாடகைக்கு குடியேறி வந்ததிலிருந்து பெரியவர் எனது அறைக்கு வந்து என்னோடு பேசுவது அவருக்கு ஒரு பொழுதுபோக்காக இருந்தது.
'' தம்பி ஏன் இண்ணைக்கு இவ்வளவு நேரம் தாமதம்!'' தனது வாயில் கிடந்த வெற்றிலைச்சாறை துப்பிக்கொண்டே கேட்டார்.
'' என் நண்பன பார்க்கப் போனதுல தாமதமாயிடிச்சு. நீங்க சாப்பிட்டீங்களா பெரியவரே?'' எனக்கேட்டேன். ''ம்'' என்று சொல்லிவிட்டு எனது அறையிலிருந்த வார இதழ்களை புரட்ட ஆரம்பித்தார். நான் உடை மாற்றி விட்டு வந்து டீ போட்டு அவரிடம் நீட்டினேன் பெரியவர் டீயை தேவார்மிதம் பருகுவதைப்போலே மிகவும் ரசித்து குடிக்க ஆரம்பித்தார்.
இரவு பதினொன்று மணிவரை புராணக்கதைகள் தொடங்கி எழுத்தாளர் ஜெயமோகன் கதை வரை சொல்லிக்கொண்டிருந்தார். இருள் மேலும் மேலும் இறுக்கமாகிக்கொண்டே போனது. என்னிடம் பேசிக்கொண்டிருந்தவர் அப்படியே தூங்கிப்போனார். எனது அறையில் ஒருநாள் கூட அவர் தங்கியதில்லை. எவ்வளவு மணி நேரமானாலும் குடிசைக்கு போக வேண்டுமென்று அடம்பிடிப்பார். நானும் எனது இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து அவரது குடிசையில் கொண்டு விட்டு விட்டு வருவேன். அன்று ஏனோ தூக்கத்திலிருந்த அவரை எழுப்ப மனமின்றி தூங்கிப்போனேன்.
சூரியன் ஒழிந்திருந்தது போதுமென்று வெளியில் வர ஆரம்பித்தான். விடியற்காலை ஆறரை மணிக்கு அவருக்கு முழிப்பு வந்து எழுந்த போது ஏதோ செய்யக்கூடாத தவறை செய்துவிட்டவர் போல படபடத்தார். எட்டு மணி வரை என் அறையில் இருந்துவிட்டு பின் வாசல் வழியாக வெளியேறி மறுபடியும் முன்பக்க கேட் வழியாக வந்து காலை டிபனுக்காக அவரது மகன் வீட்டுத் திண்ணையில் காத்திருந்தார்.
பெரியவர் நடந்துகொண்ட விதம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அன்று மாலை என் அறைக்கு வந்த போது ஏன் பெரியவரே அப்படி நடந்துகிட்டீங்க!” என்று கேட்டேன். ”என் மகன் வீட்டுலயோ இங்க வாடகைக்கு குடியிருக்கிறவங்க வீட்டுலயோ தங்கக்கூடாதுன்னு என் மகன் சொல்லீட்டான், மீறி தங்குனா சாப்பாடு போடமாட்டேன்னும் சொன்னான்!" வெளியேறத்துடித்த கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டே சொன்னபோது எனக்கும் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.
" ஏன் பெரியவரே வீட்டுல உங்க மகனோ,மருமகளோ,பேரக்குழந்தைகளோ யாருமே உங்ககிட்ட பேசுறதில்ல, அவ்வளவு பெரிய வீடு இருந்தும் உங்கள மட்டும் வீட்டுல தங்கவைக்காம தோட்டத்துல இருக்கிற குடிசையுல தங்கவைச்சிருக்கிறாங்களே ஏன்?" என்து கேள்வியில் பெரியவரின் முகம் சுருங்கியது.
" இந்த கேள்விய நீ ஒருத்தந்தான் இதுவரைக்கும் கேக்கல, அதனால தான் உங்கிட்ட அன்யோன்யமா பழகினேன், இப்போ நீயும் கேட்டுட், இனிமே உன் அறைக்கு நான் வரமாட்டேன்!" தடிக்கம்பை ஊன்றியபடி தனது குடிசையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். "ச்சே தெரியாம கேட்டுட்டனே!" என்று அவருக்குப்பின்னால் இருசக்கர வாகனத்தை ஓட்டிக்கொண்டு அவருக்கு பின்னால் சென்றேன்.
"என்கூட பேசாதே!" என்று பிடிவாதமாய் நடந்தே தனது குடிசைக்கு சென்றார். எனக்கு தர்ம சங்கடமாகிப்போனது. அன்றிரவு தூக்கம் வராமல் அவரைப்பற்றிய நினைவுகள் திரும்பத் திரும்ப வந்து போயின. மறுநாள் காலையில் டிபன் சாப்பிட வரும்பொழுது அவரை சந்தித்து மன்னிப்பு கேட்கவேண்டுமென்று நினைத்தபடி தூங்கிப்போனேன்.
பொழுது விடிந்து ஒன்பது மணி ஆகியும் பெரியவர் வரவே இல்லை. எனக்கு வேறு அலுவலகம் போக நேரம் ஆகிக்கொண்டிருந்தது. சாயங்காலம் அவரை சந்திக்கலாமென்று தீற்மானித்து அலுவலகம் புறப்பட்டேன். மாலை ஆறு மணிக்கு பெரியவர் தங்கியிருக்கும் தோட்டத்து வீட்டுக்கு சென்றேன் அவர் போர்வைக்குள் தனது உடலை மறைத்து படுத்திருந்தார். " பெரியவரே!" என்று அழைத்தேன் அவரிடமிருந்து பதிலில்லை ,அவர் உடலை மெல்ல தொட்டு அசைத்தேன். உடல் நெருப்பாய் கொதித்தது. அவரை அலக்காக தூக்கி ஒரு ஆட்டோ பிடித்து மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தேன். தொடர்ந்து மூன்று நாள் மருத்துவமனையில் இருந்ததில் பெரியவர் தேறினார்.
கையில் நான்கு ஆப்பிள் பழங்களோடு வந்து பார்த்தார் அவரது மகன். ஐந்து நிமிடம் வரை இருந்துவிட்டு பெரியவரிடம் எதுவும் பேசாமல் வெளியேறினார். அன்று மாலை டிஸ்சார்ஜ் ஆகி ஆட்டோவில் அவரது குடிசைக்கு வந்தோம். அவருக்கு தேவையான மாத்திரைகளை எடுத்து தந்துவிட்டு கிளம்ப தயாராகையில் என் கரம் பற்றினார். அவரது கண்களில் லேசாக கண்ணீர் எட்டிப்பார்த்தது.
" இண்ணைக்கு ஒருநாள் மட்டும் இந்த குடிசையுல என்கூட தங்குவியா?" எனக்கேட்டார் அவரது குரல் யாசகம் கேட்கும் ஒரு மனிதனின் குரலைப்போல இருந்தது. சரியென்று தலையாட்டிவிட்டு அவருக்கு பக்கத்தில் படுத்தபடியே பழைய கதைகள் பேச ஆரம்பித்தேன் அன்று ஏனோ அவருக்கு கதை கேட்பதில் ஆர்வமில்லாமலிருந்தது. காற்று கிளர்ந்து வீசியதில் படுக்கையிலிருந்து ஒரு வாசம் குப்பென்று வீசியது.
"அண்ணைக்கு நீ கேட்ட கேள்விக்கு இப்போ பதில் சொல்லவா!" என் கண்களைப்பார்த்து கேட்டார் பெரியவர். நான் வேண்டாமென்று மறுத்தும் பிடிவாதமாக அந்த கேள்விக்கான பதிலை சொல்ல ஆரம்பித்தார். "என் மனைவியின்னா எனக்கு ரொம்ப உசிரு, ஆனா ஆண்டவன் அதிகநாள் என்கூட வாழ விடல, புற்றுநோய் வந்து என் மனைவி இறந்துட்டா. சொந்தக்காரங்க எனக்கு ரெண்டாந்தாரமா திருமணம் பண்ணி வைக்க முயற்சி பண்ணினாங்க, நான் முடியாதுன்னு மறுத்து என் மகன படிக்க வெச்சு பெரிய ஆளாக்கி கல்யாணமும் பண்ணி வெச்சேன். என் மனைவியே மறுஜென்மம் எடுத்து வந்தது மாதிரி இருந்தா என் மருமக. ஒரு நாள் அவ எனக்கு காபி போட்டு தந்தா, அது என் மனைவி காபி போட்டு கொண்டு வந்தது மாதிரியே இருந்தது. என்ன நெனச்சனோ தெரியல ஒரு நிமிஷத்துல என்னையே மறந்து மருமக கைய புடிச்சுட்டேன், அவ ஆன்னு சத்தம் போட்டதுக்கப்பறம் தான் நான் எவ்வளவு பெரிய தப்பு செஞ்சுட்டேன்னு தெரிஞ்சுது.
அவ என் மகன்கிட்ட நான் தப்பா நடக்க முயற்சி பண்ணினேன்னு சொல்லீட்டா, அண்ணையிலிருந்து இண்ணைக்கு வரைக்கும் என்ன ஒதுக்கியே வெச்சுட்டாங்க, நான் செஞ்ச தப்புக்கான் தண்டனையின்னு நெனச்சு சந்தோஷமா ஏத்துகிட்டு இந்த குடிசையுல வாழ்ந்துகிட்டு இருக்கேன்!" அவரது வார்த்தைகள் என் நெஞ்சை உறைய வைத்தது.
ஒரு சிறு தவறுக்கு நிராகரிப்பு எனும் தண்டனையை அனுபவித்துவரும் பெரியவரைப் பார்க்க சிறைக்கு போகாத ஒரு கைதியைப்போலவே தெரிந்தார். தனது வலிகளை என்னிடம் இறக்கிவிட்டு அவர் தூங்கிப்போனார். அனாதையாக நிற்கும் கருவேல மரத்தைப்போல நிற்கும் அவருக்கு என்னைவிட்டால் வேறு கதி இல்லை. அதிக சம்பளத்துடன் சென்னைக்கு இடமாற்றம் வாங்கிக்கொண்டு செல்லலாம் என நினைத்திருந்த எனக்கு பெரியவரை விட்டுச்செல்ல மனம் மறுத்தது. இங்கேயே இருந்துவிடலாம் என்ற தீர்மானத்தோடு கண்களை மெல்ல மூடிக்கொண்டேன். இரவு என்னை கடந்துகொண்டிருந்தது, பெரியவருக்கு துணையாக நான் இருப்பேன் என்ற நம்பிக்கையோடு.
- ஐரேனிபுரம் பால்ராசய்யா (
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
தோட்டத்தில் ஒரு வீடு
- விவரங்கள்
- ஐரேனிபுரம் பால்ராசய்யா
- பிரிவு: சிறுகதைகள்