இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஜெயமோகன் மற்றும் வெற்றிமாறன் வசனத்தில், துணைவன் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டு வெளியாகியிருக்கிறது 'விடுதலை' திரைப்படம். 1987-ல் அருமபுரி என்ற மலைக்கிராமத்தில் சுரங்கம் அமைக்கும் அரசின் திட்டத்தை பெருமாள் வாத்தியார் என்ற நக்சல்பாரி தோழரை தலைமையாகக் கொண்ட தமிழ்நாடு விடுதலைப் படை எதிர்க்கிறது. பெருமாள் வாத்தியாரையும் புரட்சிகரக் குழுவையும் ஒடுக்க அமைக்கப்பட்ட நக்சலைட் எதிர்ப்பு காவல் படைப்பிரிவு, மலைக்கிராம மக்களையும், போராளிகளையும் கொடும் சித்திரவதைக்குள்ளாக்கி, அரசின் திட்டங்களை செயல்படுத்த முற்படுகிறது. இதில் பெருமாள் வாத்தியார் கைதாவதோடு திரைப்படம் பாகம்- 1 முடிவடைகிறது. பெருமாள் வாத்தியார் சிறையில் சித்ரவதைகளை அஞ்சாநெஞ்சினராய் எதிர்கொள்வதாகவும், தங்கள் இயக்கத்தின் நியாயங்களை காவல் துறையினருக்குப் புரிய வைத்து சிறையிலிருந்து தப்புவதாகவும் அடுத்து வெளியாகவுள்ள பாகம்- 2ன் காட்சிகள் இறுதியில் காட்டப்படுகின்றன.

பெருமாள் வாத்தியாராக போராளியின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு ஈர்ப்புடையதாகவே இருக்கிறது. இதை அவரின் ரசிகர்கள் கொண்டாடுவதைக் கொண்டு, பொதுவாக 'விடுதலை' திரைப்படத்தையும், அதில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளவாறு (தவறாக) போராளிகளையும் மக்கள் ஏற்றுக் கொண்டாடுவதாக பிம்பங்கள் உருவாக்கப்படுகின்றன. அதற்கப்பால் வெற்றிமாறன் என்ற இயக்குநரின் திரைப்படங்களின் மீதான ரசிகர்களின் ஆர்வமும் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்க முடிகிறது.

மலைவாழ் மக்கள் மீது ஆளும் வர்க்க அரசு இயந்திரத்தின் அடக்குமுறைகளை மிகத் துல்லியமாக படம்பிடித்திருக்கிறார் என்றும், நக்சல்பாரி போராட்டம் உள்ளிட்ட விடுபட்ட வரலாற்றை திரைக்கதையாக்குவதே மக்களுக்கு வெற்றிமாறன் செய்யும் பெரும்பணி என்றும், “சினிமாவில் சிறிதளவு வரலாற்றை வெளிக் கொண்டு வந்திருக்கிறோம் எனத் தேற்றிக் கொள்ளுங்கள்!” என்ற அதிகார ஆணவக் குரல்களும், “வரலாற்றுப் புனைவு நாவல்களை புனைந்து திரைப்படைமாக்கும் படைப்புச் சுதந்திரத்தை ஒடுக்காதீர்கள்!” என்ற மிரட்டல்களும், “கையில் தீ பட்டு விட்டதைப் போல் பதறி விடுதலை படத்துக்கு எதிராக வெறுப்பரசியல் செய்யாதீர்!” என ஏளனத் தாக்குதல்களும் படக்குழு மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து வந்தவண்ணமிருக்கின்றன.

viduthalai movieஆளும் அதிகார வர்க்கத்தின் வரலாற்று நிகழ்ச்சி நிரலாக்கும் முயற்சி

ஒருபுறம், திரைப்படத்தில் 70-80களின் நக்சல்பாரி இயக்கம் என்ற சிபிஐஎம்எல் கட்சியின் ஆயுதம் தாங்கிய வர்க்கப் போராட்டத்தை மாநில அரசு ஒடுக்கிய காலகட்டம், 1990களின் வீரப்பன் தேடுதல் வேட்டையில் பழங்குடி மக்கள் மீது காவல்துறை அடக்குமுறை ஏவிய காலகட்டம், 90களுக்குப் பிறகான ஆந்திர, ஜார்கண்ட், சட்டீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்ற சுரங்க கனிமவள கொள்ளைகளுக்கு எதிரான மாவோயிஸ்ட் அமைப்பின் போராட்டங்கள் என்ற மூன்று காலகட்டத்தையும் இணைத்து 1987-ன் கதைக்களமாக்கியதன் மூலம் மக்களின் வாழ்நிலைப் பிரச்சினைகளையும், போராளிகளின் தீரமிக்க தியாக வரலாற்று நிகழ்வுகளையும் அரசியல் போராட்டங்களின் முக்கியத்துவத்தின் உண்மைத் தன்மையை மாற்றி, அனைத்தையும் ஆளும் அதிகார வர்க்கத்தின் வரலாற்று நிகழ்ச்சி நிரலாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மறுபுறம் எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் நாவலைத் தழுவியது என்று குறிப்பிட்டு விட்டு, “சோளகர் தொட்டி” நாவலிலிருந்து மலைவாழ் மக்கள் சித்திரவதை செய்யப்பட்டவை உள்ளிட்ட தகவல்களோடு பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இதை மறுத்துள்ள ஜெயமோகன் வாச்சாத்தி விசாரணை கமிஷன் அறிக்கைகளிலிருந்துதான் படமாக்கியுள்ளோம் எனப் பொய் கூறியுள்ளார். ஆனால் 'சோளகர் தொட்டி' நாவலின் கதாபாத்திரங்கள் உட்பட இதில் இடம் பெற்றிருக்கிறது என அதன் எழுத்தாளர் பாலமுருகன் இத்திரைப்படத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். கம்யூனிசத்தையும், கம்யூனிஸ்டுகளின் வரலாறுகளையும் தவறாக சித்தரித்து எழுத ஆளும் வர்க்கத்தால் 'ஆபரேசன்' திட்டங்கள் வழங்கப்பட்டவர் ஜெயமோகன். அவர் தர்மபுரி, பெண்ணாடம், பொன்பரப்பி நிலங்களின் மண்ணிலிருந்து மக்கள் மனங்களில் வீசும் போராளிகளின் வாசத்தை துரோகிகளின் எழுத்துக்கள் நெருங்கக்கூட முடியாது என அறியாதவர்.

நக்சல்பாரிகளின் உண்மை வரலாறு என்ன?

1967-ல் மேற்கு வங்கத்தில் நக்சல்பாரி கிராமத்தில் புரட்சியாளர்கள் தலைமையில் உழவர்கள் புரட்சி வெடித்தது. சோவியத் குருஷேவின் நவீன திரிபுவாதத்தையும், சிபிஐ மற்றும் சிபிஐஎம் கட்சியின் திருத்தல்வாதத்தையும், பாராளுமன்றப் பாதையையும் எதிர்த்து தோழர் மாவோவின் சிந்தனைகளை ஏற்று ஆயுதம் தாங்கிய மக்கள் யுத்தப் பாதையை அறிவித்தனர். 1969, ஏப்ரல் 22ல் தோழர் சாருமஜூம்தார் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)ஐ உருவாக்கினர். தமிழகத்தில் தோழர் அப்பு பொதுச் செயலாளராகக் கொண்ட சிபிஐஎம்எல் மாநிலக் கமிட்டி அமைந்தது. அதில் தோழர் ஏ.எம்.கோதண்டராமன், தோழர் கலியப்பெருமாள், தோழர் பி.வி.சீனிவாசன், தோழர் கோவை ஈஸ்வரன், தோழர் விளாத்திகுளம் குருசாமி, தோழர் லிங்கசாமி ஆகியோர் இடம் பெற்றனர். . கிராமங்களில் தலைமறைவாகி தோழர்கள் ஆயுதம் தாங்கிய விவசாயப் புரட்சியை மேற்கொண்டனர்.

உழுபவர்க்கு நிலம் சொந்தம், அறுவடையைக் கைப்பற்றுவோம் இயக்கம், பண்ணையடிமை மற்றும் கந்துவட்டிக் கொடுமைகள் நிகழ்த்தும் பண்ணையார்களைக் கொன்றழிப்பது, சாதி தீண்டாமைகளை எதிர்த்த இரட்டைக் குவளை எதிர்ப்பு போன்ற போராட்டங்கள் விவசாயிகள் எழுச்சியோடு மேற்கொள்ளப்பட்டன. தோழர் ஏஎம்கே கிராமப்புறங்களில் தலைமறைவாகி ரகசிய தலைமைப் பொறுப்பை ஏற்றார். பெண்ணாடத்தில் புலவரும் அரியலூர் மாவட்டத்தின் பொன்பரப்பியைச் சேர்ந்த தோழர் தமிழரசனும் சிபிஐஎம்எல் கட்சித் தலைமையின் ஆயுதப் போராட்டப் பாதையை சிரமேற்கொண்டு நடைமுறைப்படுத்தினர்.

மக்களிடம் இயக்கப் போராளிகளுக்கு பெரும் ஆதரவு இருந்தது. மக்கள் எந்த நிலையிலும் இயக்கத்தவரை காட்டிக் கொடுக்கவில்லை. காவல் துறையினர் மக்களை மீறி நக்சல்பாரி இயக்கத்தவரை நெருங்க முடியாத அச்சவுணர்விலேயே ஆட்பட்டிருந்தனர். ஆனால் சிபிஐஎம்எல் இயக்கத்தின் வெறும் இடது தீவிர வழியும், ஆயுத போராட்டம் மட்டுமே ஒரே வழியாக மேற்கொண்டதும், மக்களைத் திரட்டி அரசியல் போராட்டத்திற்கு தலைமை தாங்காததால் இயக்கம் வெகு விரைவிலேயே தோல்வியைச் சந்தித்தது. அவர்கள் வெகுஜன இயக்கத்தைக் கைவிட்டதும், காவல்துறை ஒடுக்குமுறையும் ஒரே காலத்தில் தொடங்கியது. 1971-ல் புலவர் குடும்பமே கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர்.

1973-ல் ஏஎம்கே, பின்னர் தோழர் தமிழரசன், தோழர் தியாகு போன்றோர் அழித்தொழிப்பு வழக்கில் கைதாகினர். 1972ல் தோழர் சாரு மஜூம்தார் காவல் நிலைய லாக்அப்பிலேயே மரணமடைந்தார். அதன் பிறகு சிபிஐஎம்எல் கட்சி பிளவுக்குள்ளாகத் தொடங்கியது. சிறைக்குள் தோழர்கள் கைதிகளின் உரிமைக்காகப் போராடினர். தமிழீழ விடுதலைப் போராட்டம் தமிழ்நாட்டில் தேசிய இனப் பிரச்சினைகளை இயக்கங்களை தீவிரமாக ஆலோசிக்க வைத்தது. சிறைக்குள் புலவரும், தமிழரசனும் தமிழ்த் தேசிய விடுதலையை மார்க்சிய லெனினியக் கொள்கையின் அடிப்படையிலான வர்க்கப் போராட்டத்தில் அடைவது என்ற நிலை எடுத்தனர். தோழர் தமிழரசன் சிறையிலிருந்து தப்பித்த வீரதீர சாகசங்களின் வரலாற்றுக்குச் சொந்தக்காரர்.

தேசிய இனப் பிரச்சினையின் கருத்து மாறுபாடு காரணமாக புலவரும், தோழர் தமிழரசனும் விடுதலைக்குப் பின் தமிழ்த் தேசிய இன மாநாடுக்குப் பின் இககமாலெவிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 1984-ல் தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி (மாலெ) உருவாக்கினர். தோழர் தமிழரசன் மட்டும் தமிழ்நாடு விடுதலைப் படை என்ற ஆயுதம் தாங்கிய இயக்கத்தைத் தொடர்ந்து எந்த விமர்சனமின்றி தொடர்ந்தார். 1980-ல் தமிழ்நாடு மற்றும் ஆந்திர கூட்டக்குழு இணைந்து இகக மாலெ (மக்கள் யுத்தம்) உருவாக்கி வெகுஜன மக்கள் இயக்கத்தோடு ஆயுதப் போராட்டத்தை இணைத்து தீவிரமாகப் புரட்சியை முன்னெடுத்தனர். காவல்துறை அதிகாரி தேவாரம் தலைமையில் நக்சல்பாரிகளை ஒடுக்க சிறப்புப்படை அமைக்கப்பட்டது. தோழர் பாலன், கண்ணாமணி, சீராளன் உட்பட 30க்கும் மேற்பட்ட தோழர்கள் தருமபுரி, வடஆற்காடு மாவட்டங்களில் காவல்துறை அடக்குமுறையால் கொல்லப்பட்டனர்.

1987-ல் தமிழக விடுதலை படை அரியலூரில் சரக்கு ரயிலுக்கு வைத்த குண்டு, காவல் துறையின் சதியின் காரணமாக மக்கள் பிரயாணித்த ரயிலை வெடிக்கச் செய்தது. இது தமிழரசன் இயக்கத்தைப் பின்னடையச் செய்தது. பின் இயக்கத்தின் பணத்தேவைக்காக தன் சொந்த ஊரில் வங்கிக் கொள்ளை செய்யும் போது மக்கள் பிடித்த போது, அவர்களோடு காவல்துறை கலந்து தோழர் தமிழரசனை அடித்தே கொலை செய்தது. சிபிஐஎம்எல் இயக்கம் அதிதீவிர இடது வழியால் பின்னடைந்தது. பின்னர் வெகு மக்கள் திரள் வழியே சரியானது என்று செயல்தந்திரங்களை மாற்றி செயல்பட்டு வருகின்றனர். மாவோயிஸ்ட் இயக்கத்தினர் இன்றும் மாவோவின் ஆயுதப் போராட்டப் பாதையை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வரலாறு விடுதலைப் போராட்ட வரலாறே என அழுத்தமாகப் பதிய வேண்டியுள்ளது.

திரைப்படத்தின் ஆபத்தான புனைவுகள்

முதன்மையான ஆபத்தான புனைவு நக்சல்பாரி இயக்கத்தின் விவசாயப் புரட்சியையும், வர்க்கப் போராட்டத்தையும் வெறும் திட்டங்களை எதிர்த்து வளர்ச்சியைத் தடுக்கும் தீவிரவாத இயக்கமாக குறுக்கியது. ஏகாதிபத்தியத்தையும், பெருமுதலாளிகளையும், நிலபிரபுக்களையும் எதிர்த்த விடுதலைப் போராட்டத்தையும், விடுதலைப் போராளிகளையும் தீவிரவாதமாகவும், தீவிரவாதிகளாகவும் உட்பொருளில் சித்தரிக்கும் ஆளும் வர்க்கத்தின் அதே பழைய பார்வையை திறமையாக வெற்றிமாறன் உட்புகுத்தியது.

1980-களில் நக்சல்பாரிகளின் போராட்டம் முதன்மையாக நிலபிரபுக்களை எதிர்த்து விவசாயப் புரட்சியாக நடைபெற்றது. கனிம வளக் கொள்ளையிடலுக்கு எதிரான போராட்டம் ஆந்திரா, ஜார்கண்ட், சட்டீஸ்கரில் 90களுக்குப் பிறகு மாவோயிஸ்ட் இயக்கத்தால் மேற்கொள்ளப்பட்டது. மேலும் தீவிரவாத இயக்கங்களால்தான் திட்டங்களை மேற்கொள்ள முடியாமல் வறுமை தொடர்கிறது என்ற வெற்றிமாறன் வாதம் அப்பட்டமான ஆளும் வர்க்க மொழி.

இரண்டாவது வெற்றிமாறனுக்கு எப்போதும் தனிநபர் சாகசவாத தீவிரவாத ஹீரோக்கள் தேவைப்படுகிறார்கள், விடுதலைப் போராளிகளின் வரலாறு தேவையில்லை. அதனால்தான் நக்சல்பாரி இயக்க வரலாற்றின் எந்த ஒரு குறிப்பிட்ட கதையையும் அவர் தேர்ந்தெடுக்கவில்லை. புலவர் கலியபெருமாளின் வரலாற்றைக் காட்டுவது போல் முழுவதும் தோழர் தமிழரசனின் செயல்பாடுகளை பெருமாள் வாத்தியார் கதாபாத்திரமாகப் புனைந்துள்ளார். கலியபெருமாள், தமிழரசன் தோழர்களின் வர்க்கப் போராட்ட அரசியலை நீக்கிவிட்டு, பிரபாகரன் போல் வெறும் தனிநாடு கோரி நடத்தும் ஆயுதப் போராட்ட சாகசவாதமாக தவறான முகத்தைப் புனைந்துள்ளார். அசுரனிலும் இதே போல் வெண்மணி பண்ணையடிமைக் கொடுமை வரலாற்றை சாதிக் கொடுமையாக மட்டும் சுருக்கி, பண்ணையாரை ஒரு தலித் மட்டும் கொல்லுவதாக காட்சிப்படுத்தியிருப்பார். உண்மையில் கொடுங்கோலனான பண்ணையார் கோபாலகிருஷ்ண நாயுடுவை வினோத் மிஸ்ரா தலைமையிலான இ.க.க மாலெ இயக்கத்தினர் படுகொலை செய்த வரலாற்றை மறைக்க வேண்டிய தேவை வெற்றிமாறனுக்கு இருக்கிறது.

மூன்றாவது உழைக்கும் வர்க்க எதிரிகளுக்கும் மக்களுக்குமான பகைமைகளை காவல்துறை போன்ற அரசு எந்திரத்திற்கும் மக்களுக்கான பகைமையாக மட்டும் குறுக்குவது. காவல்துறையின் ஒடுக்குமுறைகளை மிதமிஞ்சி காட்சிப்படுத்துவதின் மூலம் மக்களின் ஒன்றுபட்ட அரசியல் போராட்டத்தின் வலிமையான வரலாறுகளை குறைத்துக் காட்சிப்படுத்தி அதிகார வர்க்கத்தின் மீது அச்சவுணர்வை மிகைப்படுத்துவது. நக்சல்பாரிகளின் 70-80 போராட்ட காலகட்டம் மக்களிடமும் போராளிகளிடமும் காவல்துறையினர் எளிதில் நெருங்க முடியா காலகட்டம். துரோகிகளை வைத்து மிகக் கடினமாக தேடித்தான் ஒவ்வொரு தோழரும் பிடிக்கப்பட்டனர். மக்கள் அவர்களைப் பாதுகாத்தனர். ஜெயமோகனின் புரட்டுக் கதைகளில் வருவதுபோல் பெரும்பான்மையான தோழர்கள் சரணடையவில்லை.

மக்களும், போராளிகளும் இயக்கமும் வலுவாக இருந்த நக்சல்பாரி போராட்டக் காலகட்டம் வெற்றிமாறனுக்குத் தேவையில்லை. இயக்கங்கள் வலுவிழந்த 90களுக்குப் பிறகான வாச்சாத்தி காவல்துறை சித்திரவதை முகாம் வரலாறே மக்களை அச்சுறுத்த அவருக்குத் தேவைப்படுகிறது. வாச்சாத்தியில் நடந்தது போல் கும்பலாக பெண்களை நிர்வாணப்படுத்துதல், கூட்டு பாலியல் வன்புணர்வுகள் நக்சல்பாரி போராட்டக் காலகட்டத்தில் நடைபெறவில்லை. மக்களிடமும், பெண்களிடமும் நெருங்கினால் காவலர்களுக்கு ஆபத்து என்ற அச்சவுணர்வு முதன்மையாக காவல்துறையினருக்கு இருந்தது. நக்சல் தேடுதல் வேட்டையில் 30 மேற்பட்ட நக்சல்பாரிகள் கொல்லப்பட்டார்கள் என்றால், 25க்கும் மேற்பட்ட நிலபிரபுக்களும் கொல்லப்பட்டார்கள் என்ற உண்மை வரலாறு வெற்றிமாறனுக்குத் தேவையில்லை. இதே வகையில்தான் விசாரணை, ஆடுகளம் போன்ற திரைப்படங்களில் காவல்துறை, அதிகார வர்க்கத்தினர் மீதான அச்சத்தைப் பதிய வைத்ததே தவிர பெரும்பான்மை உழைக்கும் மக்களின் சக்தியின் பலத்தை உணர வைக்கவில்லை. வெற்றிமாறனுக்கு எப்போதும் மென்மையான கதாநாயகி கதாபாத்திரமே தேவைப்படுகிறது. ஆனால் நக்சல்பாரிப் போராட்டத்தின் போதான வீரமிகு பெண்களின் வரலாறு தெரியாது போலும். இதே தோழர் கலியபெருமாள் குடும்பத்தின் பெண்களையே எடுத்திருந்தால்கூட துணிவான கதாநாயகிகள் 'விடுதலை'க்குக் கிடைத்திருப்பர்.

நான்காவது மலைவாழ் மக்களின் பொருளாதார வாழ்வியல் பிரச்சினைகளைப் பற்றியோ, பொதுவாக ஆளும் வர்க்கங்கள் பன்னாட்டு, உள்நாட்டு தரகு முதலாளிகளுக்காக மக்களைச் சுரண்டி, சொந்த மண்ணில் மக்களை அகதிகளாக்கியது பற்றியோ, அந்த மக்களின் வாழ்வியலைப் பற்றியோ 'விடுதலை” பேசவில்லை. நக்சல்பாரி உண்மை போராட்ட வரலாற்றை எடுத்தாலோ அல்லது வாச்சாத்தி பழங்குடியின மக்களின் ஒடுக்குமுறை வரலாற்றை எடுத்தாலோ மக்களின் வாழ்நிலைப் பிரச்சினைகளை, ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறைகளைப் பேச வேண்டும். ஆனல், எந்த வரலாற்றுக்கும் நியாயம் சேர்ப்பது வெற்றிமாறனுக்குத் தேவையில்லை. மக்களின் வாழ்விற்கு நியாயம் சேர்க்காத புனைவு வரலாறும், சாகச தீவிரவாத கதாநாயகர்களும் கமர்ஷியல் திரைப்பட லாபத்திற்காகவும், ஆளும் வர்க்கத்தின் ஆசிக்காகவும் வெற்றிமாறனுக்குத் தேவைப்படுகிறது. இதே வகையில்தான் வடசென்னை திரைப்படத்தில் மீனவ மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளைப் பேசாமல் மீனவர்களை வெறும் ரௌடிகளாக சித்தரிக்கும் அரசியலை பூடகமாகக் கையாண்டிருப்பார்.

சினிமாவின் வரலாற்றுத் திரிபுகள்

இந்திய சினிமாவில் இரண்டு விதமான வரலாற்றுத் திரிபுகள் திரைப்படங்களின் மைய நோக்கமாகியுள்ளன. ஒன்று நேரடியாக ஆளும் வர்க்க இந்துத்துவ கருத்தியலின்படி புராணங்களை உண்மை வரலாறாகவும், வரலாற்றின் தேச விடுதலைப் போராளிகளை, வீர மன்னர்களை புராண வேத கதாபாத்திரங்களின் தொடர்ச்சியாகவும், இஸ்லாமியர்களை முழுவதும் வில்லன்களாக வரலாற்றில் புனைந்து பதியும் திரைப்படங்கள். எ.கா, மணிகர்ணிகா (ஜான்சிராணி), தனாஜி, ஆர்ஆர்ஆர்., போன்றவை. மற்றொன்று முற்போக்கு படங்களாக காட்டிக் கொண்டு, மறைமுகமாக தொழிலாளர் விவசாய புரட்சிகரப் போராட்டங்களை, நிகழ்வுகளை, இயக்கங்களின் தத்துவங்களை, கொள்கைகளை ஒரு குறிப்பிட்ட சாதியின், மதத்தின் அடையாளமாக மட்டும் குறுக்குவது மற்றும் மக்களின் ஒன்றுபட்ட போராட்ட வரலாற்றைத் திரிக்கும் அடையாள அரசியல் அடிப்படையிலான திரைப்படங்கள். எ.கா., கபாலி, அசுரன், கர்ணன், நட்சத்திரம் நகர்கிறது போன்றவை. இதில் இரண்டாவது வகையைச் சார்ந்ததே வெற்றிமாறன் திரைப்படங்கள். ஆனால் அதை மறைமுகமாக வரலாற்றுத் திரிபுகள் புரிவதில் வெற்றிமாறன் வெற்றியாளரே.

இறுதியாக தமிழ் சினிமாவில் இதுவரை நக்சல்பாரிகளை எவ்வாறு தீவிரவாதிகளாக சித்தரித்தார்களோ, அதைத் தாண்டி வெற்றிமாறன் புதிதாக எதையும் படைக்கவில்லை. இந்தப் புரட்டு வரலாறுகளுக்கு இரண்டு பாகங்கள் எதற்கு? ரயிலில் குண்டு வைத்து 50 அப்பாவி மக்களைக் கொன்ற தமிழக விடுதலைப் படை என்ற அறிமுகக் காட்சியோடு துவங்கும் 'விடுதலை' திரைப்படம், காடுகளில் துப்பாக்கியோடு மக்களை சுட்டுத் தள்ளுவது போல் நக்சல்பாரிகளை தொடர்ந்து தலைகீழாக காட்சிப்படுத்தும் ஆளும் வர்க்க சார்பு சினிமாவின் தொடர்ச்சியே. நக்சல்பாரிகளை தீவிரவாதிகளாகத் தொடர்ந்து சித்தரிப்பதும், காவல்துறை அடக்குமுறைகளை மிகக் கொடூரமாக சித்தரிப்பதும் மக்களை போராட்டங்களுக்கு எதிராக அச்சுறுத்துவதும் அப்பட்டமான ஆளும் வர்க்க மொழியே. நக்சல்களை அதி தீவிரமாக காட்டுவதன் மூலம் மறைமுகமாக காவல்துறையின் அடக்குமுறையின் நியாயத்தை ஏற்பதற்கு மக்களின் மனங்களை தயார் செய்வதாகும்.

இரண்டு பாகங்கள் கொண்ட 'விடுதலை' திரைப்படம் என்ற அறிவிப்பு முற்போக்கு ஜனநாயக சக்திகளை உண்மை வரலாற்றின் சாயலையும், போராளிகளின் நியாயங்களையும் வெற்றிமாறனிடம் எதிர்பார்க்க வைத்தது. மேலும் ரத்தத்தில் தோய்ந்த தியாகங்கள் நிறைந்த மக்களின் உண்மையான கதாநாயகர்களான விடுதலைப் போராளிகளின் வாழ்க்கை வரலாற்றை தவறாகப் புரட்டும்போது ஜனநாயக முற்போக்கு சக்திகளும் போராளிகளும் அப்படைப்பை எதிர்க்கவே செய்வர். தமிழ் இந்துவில் ஆர்.சி. ஜெயந்தன் என்பவர் “கையில் தீ சுட்டுவிட்டதைப் போல் பதறி விடுதலை படத்துக்கு எதிராக வெறுப்பரசியல்” செய்வதாக கட்டுரை எழுதுகிறார். மக்களுக்கும், விடுதலைப் போராளிகளுக்கும் எதிரான துரோக வரலாறுகளும் ஆளும்வர்க்க இலக்கியங்களும் சுடுகின்றன. ஆனால் அத்தீ உண்மையான வரலாற்று ஏடை பொசுக்கவும் முடியாது... தியாகிகளின் விதையிலிருந்து எழுந்த முளைகளை கருக்கவும் முடியாது.

இலக்கியத்திற்கும், கலைக்கும் மூலப்பொருள் மக்களின் வாழ்க்கையாகும்

“நேரடி யதார்த்தம், நேரடி வரலாறு ஆகியவை கலைக்கு ஒருவகையில் எதிரானதும் கூட. அதற்கு ஆவண மதிப்பு மட்டுமே உண்டு. கலை மதிப்பு இல்லை.” என்கிறார் ஜெயமோகன். மாவோ கூறுகிறார், “கலை, கலைக்காக மட்டும்தான் என்பதோ, அல்லது வர்க்க வித்தியாசங்களுக்கு அப்பாற்பட்டது என்பதோ, அல்லது ஒரு குறிப்பிட்ட கொள்கையை ஆதரித்துப் போராடுபவர்களின் நலன்களுக்கு மேற்பட்டதென்பதோ கிடையாது. வர்க்கமும், கட்சி வித்தியாசங்களும் நிறைந்த ஒரு சமுதாயத்தில், இலக்கியமும் கலையும், ஒரு வர்க்கத்தையோ, ஒரு கட்சியையோ சார்ந்துதான் நிற்கிறது. இலக்கியத்திற்கும், கலைக்கும் மூலப்பொருள் மக்களின் வாழ்க்கையாகும். அவை இயற்கை ரூபத்தில், பட்டை போடாத நிலையில் ஜீவாதார மாணிக்கம் போல் இருக்கிறது. பொய்யும் புனைசுருட்டும் நிறைந்த இலக்கியத்தையும், கலையையும் அவைகள் சந்தி சிரிக்க வைத்து விடும். மக்களின் வாழ்க்கை என்ற பொக்கிஷமேயன்றி வேறு மூலப்பொருள் உள்ள சுரங்கம் எதுவும் இருக்க முடியாது.” ஆதலால் புனைவு கலைப்படைப்பை பற்றி ஆளும்வர்க்க தத்துவங்களைப் பிதற்றும் ஜெயமோகன் அவர்களே! மாவோவின் சொற்களில் உங்கள் இலக்கியங்கள் சந்தி சிரிக்கின்றன. கலை என்றும் வர்க்க வேறுபாடுகளைக் கடந்த சுயம்பாக என்றுமே இருந்ததில்லை. அதன் ஜீவாதாரமே மக்களின் வாழ்வாகும்.

உழைக்கும் மக்களின் வாழ்வு என்ற மாணிக்கங்கள் மின்னும் எண்ணிலடங்கா மக்கள் இலக்கியங்களையும் கலைப்படைப்புகளையும் படைத்தது கம்யூனிஸ்டு இயக்கங்களே. இன்று இயக்கங்கள் சற்று பின்னடைந்திருக்கலாம். ஆனால் வரலாற்றுச் சக்கரம் என்றும் பின்னோக்கி சுற்றாது.

ஆதலால்... சினிமா என்ற கலைப்படைப்பின் யாசகத்திற்காக 'விடுதலைப் போராளிகள்' ஏங்கவில்லை, வெற்றிமாறன் அவர்களே!

துணை நின்றவை

1.            மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன் - புலவர் கு. கலியபெருமாள் தன் வரலாறு

2.            சுவருக்குள் சித்திரங்கள்- தோழர் தியாகு

3.            ஏ.எம்.கே, இந்திய பாட்டாளி வர்க்கப் புரட்சியின் விடிவெள்ளி

4.            'அறிவு நாணம் இருக்கா வெற்றி' கொந்தளித்த சோளகர் தொட்டி ஆசிரியர்! - எழுத்தாளர் பாலமுருகன் விடுதலை படத்திற்கு மறுப்பு https://tamil.hindustantimes.com/entertainment/viduthalai-do-you-have-knowledge-vetrimaaran-131680609891353.html.

5.            எழுத்தாளர் பாரதிநாதன் நேர்காணல், Viduthalai Part 1 real history - bharathinathan expose jeyamohan & vetrimaaran | perumal vathiyar, https://www.youtube.com/watch?v=FoMNHU2wSGU

கவின்மொழி

Pin It