பொதுவாக போராட்டங்கள் நடத்துவதன் நோக்கம் குறிப்பிட்ட கோரிக்கைகளை வென்றெடுப்பதும், அல்லது குறிப்பிட்ட பிரச்சனைகளில் நமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதுமாக இருக்கும் என்பதும், இது அந்தந்த பிரச்சனைகள் சார்ந்தும், அது வென்றெடுக்கப்படக்கூடிய சாத்தியப்பாடுகள் சார்ந்தும் வெவ்வேறு விதமான வடிவங்களில் வெவ்வேறு விதமான அளவுகளில் வெளிப்படும் என்பதும் கண்கூடு. அதோடு போராட்டம் நடத்துபவர்கள் அதிகாரத்தில் பங்கு பெறாதவர்களாகவும், அதற்கு ஆதரவு தராதவர்களாகவும் அதை ஏற்க மறுப்பவர்களாகவும் அதற்கு எதிர் நிலையில் நின்றே, அல்லது அப்படி இருப்பவர்களே இப் போராட்டங்களை நடத்துவார்கள் என்பதும் தெளிவு.

karunanidhiஆனால் தற்போது அப்படி யெல்லாம் அல்லாமல் அதிகாரத்தில் இருப்பவர்களும், அதற்கு ஆதரவு தரு பவர்களுமே போராட்டங்கள் நடத்தி மக்களுக்குப் பாசாங்கு காட்டி வருவது புதிய நடை முறையாக உருவெடுத்து வருகிறது. அதாவது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியவர்களே, அதை வலியுறுத்தி பெற்றுத் தர வேண்டியவர்களே, அதைச் செய்ய வேண்டியவர் வேறு யாரோ போல் மக்களுக்குப் போக்கு காட்டியோ, அல்லது மக்களை ஏமாற்றியோ இப்படிப்பட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கிராமப் புறங்களில் ஒரு கதை சொல்வார்களே, மக்களெல்லாம் சேர்ந்து களவாணியைத் துரத்திப் பிடிக்க, திருடன், திருடன் என்று கத்திக்கொண்டு ஓடும்போது, அக்களவாளியே மக்களோடு மக்களாகச் சேர்ந்து கொண்டு, ‘அதோ ஓடுறான் பார், பிடி, பிடி’ என்று ஓடினால் எப்படி இருக்கும். அதுபோன்று இருக்கிறது தற்போது நடைபெற்று வரும் சில போராட்டங்கள்.

ஈழத்தமிழர்கள் கடந்த முப்பதாண்டுகளாகச் சந்தித்து வரும் இன்னல்களையும், அவர்கள் மேல் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் வன்தாக்குதல்களையும், இக் கொடுமைகளிலிருந்து மீள விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமையில் அம்மக்கள் போராடி வருவதையும் நாமனைவரும் அறிவோம். இப்படிப் போராடி வரும் மக்களுக்கு இந்திய அரசு, நியாயமாய் உதவி செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டாலும் போராடும் மக்களுக்கு இடையூறு செய்யாமலாவது இருக்க வேண்டும். இரண்டும் இல்லாமல் அம்மக்களைக் கொன்று குவிக்கும் சிங்கள இனவெறி ராணுவத்துக்கு தொடர்ந்து உதவிகள் செய்தும், பயிற்சிகள் தந்தும் வருகிறது இந்திய அரசு.

இந்த அரசுக்கு தமிழக ஆளும் தி.மு.க. ஆதரவு, இடது சாரிகள் ஆதரவு. ஆனால் இவர்கள் இந்திய அரசை வலியுறுத்தி நிர்ப்பந்தம் தந்து இந்திய அரசின் நிலையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முயலவில்லை. இதில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை தமிழீழ விடுதலைக்கு எதிரானது. தனி ஈழம் கூடாது என்பவர்கள் அவர்கள். போகட்டும், தி.மு.க.வின் நிலை என்ன? ஈழப் பிரச்சனையில் தில்லி அரசு நிலைதான் என் நிலை. ஆனால் தமிழீழம் கிடைத்தால் மகிழ்வேன் என்பவர் கருணாநிதி. இப்படி இருக்க, இப்படிப்பட்ட அமைப்பு சார்ந்தவர்களை அழைத்து வைத்துத்தான் ‘ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க இந்திய அரசை வலியுறுத்தி’ எனக் கூறி, கடந்த 19-05-08 அன்று சென்னை விருந்தினர் மாளிகை முன் ஒரு பட்டினிப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள் சிலர். அனைத்துத் தமிழ் அமைப்புகள் சார்பில் என அறிவிக்கப்பட்ட இந்தப் போராட்டம் உண்மையில் ஆளும் கட்சியான தி.மு.க. சார்பு தமிழ் அமைப்புகளின் சார்பில் நடத்தப்பெற்ற போராட்டம்.

தி.மு.க.வைப் பொறுத்தவரை ஈழப் பிரச்சனையில் அது இரட்டை நிலையில் உள்ளது. ஒன்று குடும்ப ஆட்சிக்குக் குந்தகம் வராமல் தில்லி அரசு ஆதரவு நிலையில் ஈழப் பிரச்சனையில் தில்லியின் நிலைப்பாட்டுக்குத் துணை நிற்பது, மற்றொன்று தமிழக மக்களைத் திருப்திபடுத்த ஈழப் பிரச்சனையில் தாங்களும் அக்கறையோடு இருப்பது போல் காட்டிக் கொள்ள பினாமிகளை விட்டுப் போராட்டம் நடத்துவது. இப்படித் தி.மு.க. ஆதரவுப் போராட்டம் நடத்த தமிழகத்தில் சில பினாமிகள் எப்போதும் தயாராகவே இருக்கிறார்கள். இவர்களே இதற்கு முன் சில ஈழ ஆதரவு போராட்டங்களும் நடத்தியிருக்கிறார்கள். தற்போதும் நடத்துகிறார்கள். ஆனால் இவர்கள் நோக்கம் உண்மையில் ஈழ விடுதலைக்காக ஆதரவுக் களம் காண்பதல்ல. நாளை ஈழம் மலர்ந்தால், வரலாற்றில் பின்தங்கி விடாமல் தாங்களும் ஈழத்துக்காகப் போராடினோம் என்று காட்டிக் கொள்வதற்காகவே.

அப்படிப்பட்ட ஒரு போராட்டமே தற்போது நடைபெற்றுள்ள போராட்டமும். பாருங்கள். 19-05-08 போராட்டம் என்று துண்டறிக்கை போடுகிறார்கள். 15-05-08 அன்று தில்லி அரசு வழக்கம்போல் ‘புலிகள் மீதான தடையை மேலும் இரண்டாண்டுகள் நீட்டிக்கிறது’. தமிழ்நாட்டில் தி.மு.க. வின், கூட்டணிக் கட்சிகளின் ஒப்புதல் இல்லாமல் தில்லி எப்படி தடையை மேலும் இரண்டாண்டுகள் நீடிக்க வைக்கும். தி.மு.க. முயன்றால் இதைத் தடுத்து நிறுத்த முடியாதா. 123 ஒப்பந்தத்துக்கு அடிக்கடி பூச்சாண்டி காட்டி மன்மோகன் சிங்கை நிம்மதியாய்த் தூங்க விடாமல் செய்யும் இடதுசாரிகள் நினைத்தால் இதைத் தடுத்திருக்க முடியாதா. முடியும். ஆனால் செய்யத் தயாரில்லை. காரணம் இதில் இவர்களுக்கு போதுமான, உரிய அக்கறையில்லை. போராட்டமும் நடத்த வேண்டும். தடை நீட்டிக்கப்படவும் தலையாட்ட வேண்டும். இதுவே தி.மு.க., இடது சாரிகளின் நிலை. இந்த நிலைக்கு ஆதரவு அளிப்பவர்கள், துணை போகிறவர்கள்தான் இப்போராட்டத்தின் ஏற்பாட்டாளர்கள். சரி, இது மக்கள் மத்தியிலே என்ன தாக்கத்தை ஏற்படுத்தும். பரவாயில்லை இவர்களும் ஈழத்துக்காகப் போராடுகிறார்கள் என்கிற மனநிறைவை உருவாக்கும் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றவேண்டியவர்களும், அதை வலியுறுத்த வேண்டியவர்களும் வேறு யாரோ போல் ஒரு மயக்கத்தை ஏற்படுத்தும்.

இயல்பான வெள்ளையுள்ளம் கொண்ட தமிழ் இன உணர்வாளர்கள், தமிழ் ஈழ விடுதலை ஆதரவாளர்கள், இப்பிரச்சனைக்காக எது எங்கே நடந்தாலும், யார் நடத்தினாலும் போய்ப் பங்கேற்பவர்கள் ஆகியவர்களுக்கு, என்ன ஈழத்துக்காக சமீப காலமாய் எதுவும் நடக்கவில்லையே என ஏங்கிக் கிடப்பவர்களுக்கு ஒரு மனரீதியில் ஒரு வடிகாலைத் தரும். ஆனால் கோரிக்கையைப் பொறுத்தவரை அது எந்த மாற்றமுமில்லாமல் அப்படியே நீடிக்கும்.

போராட்டம் என்பது இவர்களைப் பொறுத்தவரை, மக்களது உணர்வுகளுக்குத் தீனி. ஒரு பராக்கு. அவ்வளவே. ஆக, நீ பாட்டுக்கு நீ சிங்கள அரசுக்கு உதவு. மக்களின் எதிர்ப்பை சமாளிக்கவோ அல்லது அது உருவாகாமல் தடுக்கவோ நான் பாட்டுக்கு நான் போராட்டம் நடத்துகிறேன் என்கிற ஆதிக்க சூழ்ச்சிதானே இது.

இப்படி யோசித்துப் பாருங்கள். தில்லி அரசு சிங்கள அரசுக்கு ஆயுத உதவிகள், பிற உதவிகள் செய்யக் கூடாது என்று தமிழகத் தலைவர்கள் பலர் கடிதங்களுக்கு மேல் கடிதங்கள் எழுதினார்கள். ஈழப் பிரச்சனையில் இந்திய அரசு தலையிட்டு ஒரு சமரச தீர்வு காணவேண்டும் என்று தேதி அன்று.... தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக தீர்மானமே நிறைவேற்றி அனுப்பி னார்கள். இந்தத் தாள்கள் எல்லாம் என்ன ஆயின. எல்லாவற்றையும் மன்மோகன் சிங் கழிவறையில் துடைத்துப் போடப் பயன்படுத்திக் கொண்டாரா. இதன்மேல் எந்த நடவடிக்கையும் இல்லை என்றால் இந்த கடிதங்களுக்கும், தீர்மானங்களுக்கும் என்ன பொருள்.

அடுத்து, ஆதிக்க சக்திகள் இப்படி சில சூழ்ச்சிகளைக் கையாளும் அதே வேளை, மக்களின் கோபத்தைத் தணிக்க வேறு சில உத்திகளையும் கையாண்டு வருகின்றன. அதாவது நான் செய்வதைச் செய்கிறேன். நீ போராடுகிற மாதிரி போராடு. உன் போராட்டத்துக்கு ஒரு விளைவு ஏற்பட்டது போல் நானும் சில சலுகைகள் வழங்குகிறேன் என்பதான உத்தியே அது. சமீபத்தில் தில்லி அரசு நீண்ட விவாதங்கள், ஆழ்ந்த பரிசீலனைகள், அமைச்சரவை ஆலோசனைகளுக்குப் பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை முறையே ரூ. 5, ரூ. 3, ரூ. 50 என உயர்த்தியது. ஒற்றை எரிவாயு உருளை இணைப்பு பெற்றவர்களுக்கு மட்டும் தமிழக அரசு தற்போது ரூ.30 மானியமாக வழங்கி, விலைக் குறைப்பு செய்துள்ளது தனி.

இதில் இந்த விலை உயர்வை எதிர்த்து இடது சாரிகள், நாடு தழுவிய போராட்டம் நடத்தினார்கள். ஆரம்ப முதலே இவ்விலை உயர்வை ஏற்காமல் தில்லி அரசைக் கண்டித்ததாகவும், மீறி தில்லி அரசு இந்த விலை உயர்வை அறிவித்ததாகவும், ஆகவே இதைக் கண்டித்துப் போராட்டம் நடத்துவதாகவும் சொன்னார்கள். ஆனால் இது திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு நாடகம் என்றே அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதாவது தில்லி அரசு விலையை உயர்த்துவது, இடதுசாரிகள் போராட்டம் நடத்துவது, அதன்பிறகு உயர்ந்த விலையை சற்றுக் குறைத்து இடது சாரிகள் போராட்டத்துக்கும் ஒரு பலன் இருப்பது போல் காட்டுவது. அதாவது உயர்ந்த விலை பற்றி முனகிக் கொண்டே மக்கள் அதை வாங்கப் பழகும் தருணத்தில் அதில் ஒரு சொற்ப அளவில் குறைத்து சலுகை காட்டுவது போல் மயக்குவது.

இடதுசாரிகளே சொல்லித் தரும் உத்தி. இது எழுபதுகளில் விலை வாசி உயர்வை பற்றியும், மக்கள் எதிர்ப்பால் அந்த உயர்வில் அரசு சற்று குறைப்பது பற்றியும் கூட்டங்களில் பேசும் போது அவர்கள் சொல்வார்கள், ஒருவன் பாக்கெட்டிலிருந்து பத்து ரூபாயை எடுத்துக் கொள்வது, ஐயோ ரூபாய் பத்து போச்சே என்று அவன் அலறும்போது, இரண்டு ரூபாயை திருப்பி மீண்டும் அவனுடைய பையிலேயே வைத்துவிட்டு, இரண்டு ரூபாயைத் திருப்பித் தந்ததைப் பற்றியே பிரமாதமாய்ப் பேசுவது. பணம் பறி கொடுத்தவனும் எட்டு ரூபாய் இழப்பைப் பற்றிக் கவலைப்படாமல், ரெண்டு ரூபாய் திரும்பி வந்த மகிழ்ச்சியிலேயே வீடு திரும்ப வைப்பது என்கிற உத்தி.

அப்படி ஒரு உத்தியைத்தான் பெட்ரோல், டீசல், எரிவாயு விலையேற்றத்திலும் கையாளத் திட்டமிட்டிருந்தார்கள் ஆட்சியாளர்கள். ஆனால் இவர்கள் எதிர்பாராத விதமாக அப்படிச் செய்ய இயலாமல் இடையில் அனைத்து நாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் மீண்டும் விலை உயர்ந்ததில் இந்த உத்தி நெருக்கடியில் சிக்க இப்போது செய்வதறியாது திகைத்து உயர்வை அப்படியே ஆறப்போட்டு விட்டார்கள். என்ன இப்படி ஆட்சிக்கும் ஆதரவு தந்து கொண்டு, போராட்டமும் நடத்துகிறீர்களே என்று இடதுசாரிகளைக் கேட்டால், அது அதற்கு ஒரு காரணம் சொல்வது போல், இதற்கும் ஒரு காரணத்தைக் கற்பித்து, ‘மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக கையாளும் உத்தி’ என்பதற்காகவே ஆளும் காங்கிரசுக்கு ஆதரவு தருவதாக விளக்கம் அளிப்பார்கள்.

சரி. மதவாத சக்தி ஆட்சிக்கு வராமல் இப்போது மட்டும் என்ன கிழிந்தது. நாளை மதவாதக் கட்சி ஆட்சிக்கு வந்துதான் என்ன கிழிபடாமல் இருந்துவிடப் போகிறது. அப்படியே ஏதாவது நேர்ந்தாலும், அதை வைத்து இயக்கத்தை வளர்க்க வலுப்படுத்த, இது ஒரு நல்ல வாய்ப்பு தானே. அதை விட்டு ஏன் இப்படி ஆதிக்கத்திற்குத் துணை போகவேண்டும் என்பதே நடுநிலையாளர்கள் கேள்வி. ஆனால் இதுதான் இடது சாரிகள் நடத்தும் பிழைப்பு வாதம். அதாவது நாவிலே புரட்சி முழக்கம். நெஞ்சிலே பிழைப்பு நோக்கம். இப்படியிருக்கிறது இடது சாரிகள் நிலை. இது மக்கள் மத்தியிலே என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆட்சியாளர்களின் மேல் இயல்பாக எழும் எதிர்ப்பை ஆவேசத்தைத் தடுத்து தணித்து, மக்களின் புரட்சி உணர்வுகளை மழுங்கடிக்கும். தற்போதைய இடதுசாரிகளுக்கு, அவர்களின் பாராளுமன்ற சந்தர்ப்பவாத நாற்காலி அரசியலுக்கு மக்களைப் பதப்படுத்தும், தங்களின் பிழைப்புவாத அரசியலின் தேவையும் இதுதான்.

உண்மையில் இவர்கள் என்ன செய்ய வேண்டும். தில்லியில் மதவாத கட்சி ஆட்சி, அது அல்லாத ஆட்சி என்கிற புனைவுவாத மயக்கங்களை முன் வைக்காமல், காங்கிரஸ், பா.ஜ.க. அணிகளுக்கு அப்பால் குறைந்த பட்ச செயல் திட்டத்தை முன் வைத்து ஒரு மூன்றாவது அணியையாவது உருவாக்க முயல வேண்டும். தொடக்கத்தில் அது குறைந்த பலத்தோடு இருப்பதானாலும் பொறுமையோடும், உறுதியோடும் அதை வளர்த்தெடுக்க வேண்டும். அப்படி வளர்த்தெடுப்பது தான் மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்குமேயல்லாது, அதை விடுத்து சாக்கு போக்குகள் சொல்லி காங்கிரஸ் ஆதரவு நிலை எடுப்பதும், அவ்வப்போது ஆதரவு வாபஸ் பூச்சாண்டி காட்டுவதும் மக்கள் மத்தியில் அவநம் பிக்கையையும் அலுப்பையுமே ஏற்படுத்தும்.

அதேபோல தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாக ஒரு மூன்றாவது அணி உருவாக வேண்டும். தமிழீழ ஆதரவு அமைப்புகளான, பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து இப்படிப்பட்ட ஓர் அணியை உருவாக்க வேண்டும். இக்கட்சிகள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வொரு கட்சியுடனும் மாற்றி மாற்றி கூட்டணி வைத்துக் கொண்டிருக்கும் வரை இப்படி ஓர் அணி உருவாகாது. உருவாக்கவும் முடியாது. தமிழீழத்துக்காக அவ்வப்போது எதிரிகள் சிலர் கண்துடைப்பாய் நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவு தந்து அதில் போய் கலந்துகொண்டு பேசுவதன் மூலம் தமிழீழப் பிரச்சனைகளும் தீராது. இதை இக்கட்சிகளும் தமிழக மக்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இறுதியாக ஒன்று, குறிப்பிட்ட சில பிரச்சனைகளில் எந்த நடவடிக்கையுமே இல்லாத நிலையில் இப்படி ஏதாவது சில அமைப்புகள் முன்னெடுப்பில் இதுபோன்ற ஒரு சில போராட்டங்களாவது நடைபெறுவது நல்லதுதானே என்று சிலர் நினைக்கலாம். நல்லதல்ல. அதாவது கோரிக்கைகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்க வேண்டியவர்களே, அதற்கான வாய்ப்புள்ள அதிகாரத்தில் உள்ளவர்களே இதுபோன்ற போராட்டங்களை நடத்துவது மக்களின் இயல்பான ஆவேச உணர்வைத் தணித்து அதை மடை மாற்றம் செய்யவும், சாந்தப்படுத்தவும் தான் பயன்படுமே தவிர, மக்களை வீறுகொண்டு எழ வைக்காது.

தவிரவும் இப்படிப்பட்ட போராட்டங்கள் எதிரி யார், நண்பர்கள் யார், யாரை எதிர்த்துப் போராட வேண்டும், யாரோடு சேர்ந்து நிற்க வேண்டும் என அடையாளம் காட்டாது, இரண்டையும் போட்டுக் குழப்பி எதிரிகளே, நண்பர்கள் போல் நாடகமாடி மக்களை மயக்கும் நிலையை ஏற்படுத்துவதால், இது மக்களை விழிப்படைய வாய்ப்பளிக்காமல் மேலும் மேலும் அறியாமையிலும் மூடத்தனத்திலுமே ஆழ்த்தும். எனவே இப்படிப்பட்ட போராட்டங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஈழம் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளிலும் உண்மையான அக்கறையுள்ளவர்கள் இப்படிப்பட்ட போலிப் போராட்டங்கள், பராக்குகளுக்கு பலியாகாமலும், அதில் பங்கேற்று பாராட்டு வழங்காமலும், அதிலிருந்து விலகி நின்று உண்மையான எதிரிகளை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும். அவர்களை எதிர்த்துப் போராட மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டும்.

- மண்மொழி 23, 2008, ஜூலை - ஆகஸ்டு

Pin It