பாரசீகக் கவிஞர் ரூமி அவர்கள் ஆப்கானிஸ்தானில் பிறந்தவர். மௌலானா ஜலாலுத்தீன் முகமது ரூபி என்று அழைக்கப்பட்டவர். பாரசீக இலக்கியத்தை எண்ணக் கருவாகக் கொண்டவர். பாரசீக இஸ்லாமிய கவிஞர். நீதிமான். சூபி ஞானியென ஞானத்தின் உயர்ந்த பீடத்தில் பன்முகத் தன்மையோடு வாழ்ந்தவர். இவர் வாழ்ந்த காலம் 1207 முதல் 1273 -AD.

poet rumiசுமார் 800 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த இந்த மனிதரால். எப்படி இவ்வளவு பெரிய தாக்கத்தை. அவரை வாசிப்பவர் மீது ஏற்படுத்த முடிகிறது எனத் தோன்றும்பொழுது ஆச்சரியம் ஏற்படவே செய்கிறது.

நம்ம ஊர் A. R. ரஹ்மான் முதல் புகழ்பெற்ற மேற்கத்திய இசைக்குழுவான அமெரிக்கன் ப்ளூஸ் வரை எல்லா இசையமைப்பாளர்களும் ஏன் இவரைக் கொண்டாடுகிறார்கள் என நினைக்கும் கணத்தில் அவர் வரிகள் சட்டென்று நம் கண்முன் வந்து நிற்கிறது.

“காதலைவிட முக்கியமானது உலகில் எதுவுமில்லை
காதல் காற்றைப் போன்றது”

இந்த வரிகள் இறைவனைப் பற்றியும் இருக்கலாம். மானுடம் சார்ந்தும் இருக்கலாம். வாசகர்களின் நிலையைப் பொருத்து அலையை எழுப்புகிறது.
ஒருவேளை நம்மைச் சூழ்ந்திருக்கும் காற்றில், தான் வெளிப்படுத்திய அளவற்ற காதல் மூலம் இன்னும் நிறைந்திருக்கிறாரோ என எண்ணத் தோன்றுகிறது. இவர் மிகப் பிரமாண்ட தீர்க்கதரிசி ஆவார்.

கடந்த ஏழு நூற்றாண்டுகளாக ஈரானியர்கள், துருக்கியர்கள், ஆப்கானியர்கள், தஜக்கியர்கள் மற்றும் மத்திய ஆசியாவின் இஸ்லாமியர்கள் இவருடைய ஆன்மீக வழிமுறையைப் போற்றி வருகிறார்கள். ரூமியின் முக்கியத்துவம் தேச மற்றும் இனங்களைக் கடந்து பரவியிருக்கிறது. இவரது கவிதைகள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல்வேறு வடிவ மாற்றங்களை அடைந்துள்ளன.

2007 ஆம் ஆண்டு இவர் அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற கவிஞர் என்று "ரூமி நாள் விழா" கொண்டாட்டத்தில் அறிவிக்கப்பட்டார். மேலும் ஐ.நா.வால் ரூமியின் 800−வது பிறந்தநாளை அவர் உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டு கொண்டப்பட்டது. ஆனால் அவர் வாழ்ந்த காலமோ நவீன நாடுகளும், நவீன மனிதர்களும் உருவாவதற்கு முன்பு.

இந்தக் கனவுலக வாழ்வைப் பற்றி ரூமி அழகாக,

"மரியாதைக்குரிய விருந்தாளி நீ
இந்த உலகின் அற்ப நிலத்துண்டொன்றை
ஒரு பிச்சைக்காரனைப் போல
யாசித்துக் கொண்டிருக்காதே."

இந்த வரிகளில் நம் கனவுலக எளிய வாழ்விலிருந்து விடுபட்டு, இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் நம்முடையதாக உணரச் செய்யும் சூஃபியின் ஆன்மீக தாக்கத்தை ஒரு கவிதை வடிவில் ஒளியேற்றி எரியச் செய்கிறார்.

அடுத்த இந்த வரிகள் ஒரு தத்துவ ஞானியின் தரிசன வாசலைத் திறக்கிறது.

"நீ கடலின் ஒரு துளியல்ல
ஒரு துளிக்குள் நிறைந்திருக்கும் கடல்"

என்கிறார் ரூமி.

மௌலவி என்ற துருக்கிய வார்த்தை "இறைவனுடன் பணியாற்றுபவர்" என்பதைக் குறிக்கிறது. ஒரு கட்டத்தில் அவரின் ஆத்மஞான போதனைகள் உச்சகட்டத்தை அடைந்தது. அவரின் பிரதான சீடர் ஹூஸாமுதீன் அவர்கள் உதவியுடன் 25600 பாடல்களை எழுதி முடித்தபோது மௌலனா ரூமி அவர்கள் 68 வது வயதில் கி. பி. 1273 டிசம்பர் 16ல் காலமானார். பாரசீகத்தின் மெய்நிலை ஞானத்தைக் கண்ட உன்னதமானவர் ரூமி.

ரூமியிடம் எனக்குப் பிடித்ததே அவரின் முன்னோடிகளை தன் எழுத்துகளில் குறிப்பிட்டது ஆகும். அட்டார் மற்றும் சாணை என்கிற பெர்சிய கவிஞர்களின் தாக்கம் ரூமியிடம் அதிகம் இருந்ததாகக் கூறுகின்றனர். தன் கவிதைகளில் அட்டாரை ஆன்மாகவும், சானை இரு கண்களாகவும் கொண்டு அவர்கள் வழி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளது இந்தக் கால தலைமுறைக்கு நெஞ்சில் பதிக்க வேண்டிய சொல்லாகும்.

சூஃபி கொள்கைகளில் ஆர்வம் கொண்ட ரூமி, ஷம்சுதீன் தப்ரேஸ் என்கிற சூஃபி பெரியவரைச் சந்தித்தார். அவருடன் தங்கி இரண்டு வருடம் சூஃபி ஞானங்களைப் பெற்றார். சக மாணவர்கள் கொண்ட பொறாமையால் ரூமியை விட்டு ஷம்சுதீன் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னாளில் 2500 பாடல்கள் கொண்ட "திவானே ஷம்சே தப்ரேஜ்" என்ற நூலை சூஃபி பெரியவர் ஷம்சுதீனுக்காக இயற்றினார் என்றால் அவர் மெய்ஞானத்தை இதை விடக் கூறிவிட முடியாது.

ரூமியின் கவிதை அனைத்தும் காதல், ஆன்மீகம், ஏக்கம், புதிர் மற்றும் தவிப்பு என மனித வாழ்வின் நுண் உணர்வுகளை அதிகமாகப் பேசும். இவர் சூஃபி நிலத்திலும் மனிதர்களின் இதய நிலத்திலும் பயணித்த சுவடுகள் அற்புதமான ஆவணங்கள்.

அவருடைய கவிதைகள் சில:

இந்தச் சொற்களை என் உதடுகளிலிருந்து உதிர்ப்பவர் யார்?
என் கண்களில் மூலம் காண்பது யார்?
எது ஆன்மா?
என்னால் கேள்விகளை நிறுத்த முடியவில்லை.

எனத் தொடரும் சூஃபி தத்துவங்களுடன் பயணிக்கிறது.

கற்பனை செய். ஒரு குன்றின்
உச்சியிலிருந்து ஒரு கழுகைப் போல
நீ மிதந்திறங்குவதாக நினைத்துப்பார்
ஒரு புலியைப் போல
நீ தன்னிச்சையாகத் திரிவதாக
இரை தேடி திரிகையில்தான் நீ மிகவும் அழகு.

இந்த வாழ்வின் தேடுதலை ஆன்மீக நெறியோடும், இயற்கை சூழலோடும் ஒப்பிட்டுக் கூறும் அழகு அற்புதமானது.

*வானில் தெரியும் நிலவைப் பார்
ஏரியில் தென்படும் ஒன்றை அல்ல

*வேர்களுக்கிடையே தேட வேண்டியதை
சிலபோது கிளைக்களுக்கிடையில்
நீ தேடிக் கொண்டிருப்பாய்

*சிறகுடன் பிறந்த நீ
வாழ்க்கையில் தவழ விரும்புவதேனோ

*நீ எதைத் தேடிக் கொண்டிருக்கிறாயோ
அது உன்னைத் தேடிக்
கொண்டிருக்கிறது

இப்படி வாழ்வின் தத்துவங்கள் நிரம்பிய வரிகளை விட்டுச் சென்ற மகாக் கவிஞனின் சுவடுகளில் இளைப்பாறும் சுகம் அதி உன்னதமானது. ரூமியைப் பற்றித் தெரிந்து கொண்டு அவர் கவிதையைப் பற்றிப் பேசுவதுதான் மிக அழகான பார்வையாக இருக்கிறது.

- ப.தனஞ்ஜெயன்

Pin It