அன்னா ஸ்விர் போலந்து நாட்டின் பெண் கவிஞர். இவர் பிறந்த போது போலந்து இதற்குமுன்னர் கண்டிராத அரசியல் கொந்தளிப்பையும் வன்முறையையும் சந்தித்துக் கொண்டிருந்தது. இலக்கிய வளமிக்க போலந்து நாட்டில், கடுமையான காலகட்டங்களில், குழப்பமான சூழல்களில் கவிதை மொழி மிகவும் தேவைப்படுகிறது என்று அன்னா நம்பினார்; அந்த நம்பிக்கையின் தேவையினாலேயே அவர் கவிதை மொழியைத் தேர்ந்தெடுத்தார். “மெய்நிலையை வெளிப்படுத்தும்போது, கவிதை அதனை ஆட்கொள்கிறது, வெற்றி கொள்கிறது; இப்பேருலகின் அச்சுறுத்தலிலிருந்து மனிதனைப் பாதுகாக்க அவனைச்சுற்றி மென்மையான தளிர்போன்ற சிறு உலகினை கவிதை படைக்கிறது.”
அன்னா ஸ்விரின் கலை அவர் உயிர் வாழவே தேவைப்படுகிறது. அது மட்டுமல்ல, உலகம் மாறிவருகிறது; அதன் வழிகளும் மாறிக்கொண்டிருக்கின்றன. நிலையாக எதுவும் இல்லை. பெண்களும் கலைஞராக ஆகவேண்டிய சூழல். வேறுபல பணிகளையும் அவர்கள் ஏற்கவேண்டிய இன்றைய மாறிவரும் சூழல். சிற்றின்பக் கிளர்ச்சிகளைத் தூண்டும் உடல்தேடல்களை அவை இவர்களுக்கு அறைக்கூவல்களாக ஆக்கின. இவற்றையெல்லாம் ஸ்விர் தனக்கே உரிய கண்ணோட்டத்தோடு நோக்கினார். அந்நோக்கு படைப்பிலக்கியமாக ஆயிற்று. இன்றைய உலகில் மிகவும் தேவைப்படும் ஒரு வாழ்க்கைத் தத்துவம் நமக்குக் கிடைக்கிறது.
ஸ்விர் 1909 ஆம் ஆண்டு பிறந்தார். தந்தை ஓர் ஏழை ஓவியர்; தாய் ஒரு முன்னாள் பாடகர். இருவரைப்பற்றியும் அப்போதைய வாழ்க்கை பற்றியும் அவர் கவிதைகள் புனைந்திருக்கிறார். அப்போது அனுபவித்த பசி பற்றியும், அவரது தந்தையின் ஓவியக்கூடம் வார்சா குண்டுவீச்சில் தவிடுபொடியான அதிர்ச்சி பற்றியும் அவர் எழுதுகிறார். அவர் கலைத்துறையில் பயிற்சி பெற விரும்புகிறார். ஆனால் வார்சா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இலக்கியம் படிக்கிறார். கவிதைமேல் காதல் பிறக்கிறது. அவரது முதல் கவிதை 1930களில் வெளியாகிறது. 1934 இல் அவரது கவிதை ஒன்று போட்டியில் பரிசுபெறுகிறது. 1936 இல் அவரது முதல் படைப்பு Poems and Prose என்ற நூலாக வெளிவருகிறது.
உலகப்போர், நாசி அடக்குமுறை, வார்சா புரட்சி ஆகியவை நடந்த காலங்களில் அவர் எழுதிய கவிதைகள் புகைப்படம்போல விவரங்களைப் பதிவு செய்கின்றன. அவை பயங்கரம், துயரம், எப்போதாவது கிடைக்கும் ஆறுதல்கள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும். இக்கவிதைகளின் தொகுப்பு Building the Barricade என்ற நூலாக 1977 ஆம் ஆண்டுதான் வெளியாயிற்று.
1944 இல் மறைந்து இயங்கிய எதிர்ப்பு இயக்கம் நாசிகளுக்கு எதிராகப் பெரும் புரட்சியைத் தொடங்கிற்று. அந்த வார்சா எழுச்சியில் ஸ்விர் பங்கு கொண்டார். போருக்குப் பின் ஏற்பட்ட சோவியத் ஆட்சியின் அடக்குமுறையிலும் அவர் பாதிக்கப்பட்டார்.
பல ஆண்டுகள் அவர் சிறையிலேயே கழிக்க வேண்டியிருந்தது. நாசி ஆட்சியின்போது அவர் ஒருமுறை சிறைவைக்கப்பட்டார். ஒரு நாள் அவருக்கு மரணம் உறுதியாகிவிட்டது. அவரும் காத்துக் கொண்டிருந்தார் - கொலைக்களத்துக்கு அழைத்துச் செல்லப்பட. ஆனால் தப்பி விட்டார். விடுதலை செய்யப்பட்ட பிறகு தலைமறைவாகி, அரசியல் கட்டுரைகள் எழுதுவதில் ஈடுபட்டார். அதேசமயம் செவிலியராகவும் பணிபுரிந்தார். "போர் என்னை வேறொரு பெண்ணாக மாற்றியது. அப்போதுதான் எனது வாழ்க்கையும் என் சமகாலத்தவர்கள் வாழ்க்கையும் எனது கவிதையில் நுழைந்தன. போர்தான் எனது அடையாளத்தை உருவாக்கிற்று,” என்று எழுதுகிறார். வார்சாவிலிருந்து கிராகோவிற்கு இடமாற்றம் ஏற்படுகிறது. அங்கே எழுத்தாளர் வீடு என்று அழைக்கப்படும் இடத்தில் தங்கியிருக்கிறார். பிறகு நாடகங்கள் எழுதத் தொடங்குகிறார். 1946 முதல் 1950 வரையில் நாடகங்களும் குழந்தைகளுக்கான நூல்களும் எழுதுகிறார்.
ஸ்விர் தனது 44ஆம் வயதில் திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் செய்துவைத்தவர் பின்னர் இரண்டாம் ஜாண் பால் என்ற புகழ்மிக்க போப்பாண்டவராக ஆன குரு. 13 ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பிறகு மணமுறிவு ஏற்படுகிறது. ஒரு துறவி போல வாழ்கிறார். உடல் கட்டுப்பாடு, தாவர உணவு, யோகப் பயிற்சி, நடை ஓட்டம் என்று காலம் ஓடுகிறது. புற்று நோயால் அவதிப்பட்ட அவர் 1984 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார்.
இவ்வாறு ஸ்விர் அவருடைய குழந்தைப்பருவ அனுபவங்கள், போர்க்கால, சோவியத் ஆட்சிக்கால அனுபவங்கள் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறார். ஸ்விர் என்ற பெண், ஸ்விர் என்ற போலந்து நாட்டுக் கவிஞர் தனது அனுபவங்களை எளிமையாக வெளிப்படுத்துகிறார். அதிக அலங்காரங்கள், உவமைகள் இருக்காது; ஒருவகை மெய்நிலை, யதார்த்தம் இருக்கும். உணர்வுக் கிளர்ச்சிகள் வெளிப்படையான சொற்கள்மூலம் தோன்றாது. ஆனால் வாசகரின் உணர்வுகள் மென்மையாகத் தூண்டப்படும்; அதுதான் அன்னா ஸ்விரின் கலை.
ஸ்விரின் கவிதைகளில் நாம்காணும் கருப்பொருள்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்: அவருடைய குழந்தைப் பருவ நினைவுகள், போரின் பயங்கரம், துயரம், ஆறுதல், வீரம்; உடல்செயல்கள், பெண்மை.
- தந்தையின் ஓவியக்கூடம், தாய் பற்றிய நினைவுகள் பக் 28, 29, 31
- போரின் பயங்கரம். ஸ்விரின் அனுபவங்கள்; ஆற்றாமை. உணர்ச்சிக் கலப்பில்லாத வெளிப்பாடு, பக் 40, 50
- உடலைச் சிற்றின்பக் கிளர்ச்சியின் அனுபவமாகக் காணல் ஒரு புறம் இருக்கும். ஆனால் அன்றாட உடல் செயல்கள் ஆகிய நடத்தல், கொட்டாவி விடுதல், குரட்டை, மூச்சு விடுதல் ஆகியவற்றின் நளினத்தைப் பாடும் உடல் கவிதைகள் அவை. அதே சமயம் உடலின் இறப்பு புரிந்துகொள்ள வேண்டிய ஓர் உண்மை. இங்கே முரண்களின் பயன்பாடு அவருக்குக் கை கொடுக்கின்றது.பக் 86
- பெண்மை - அவர் பெண் கவிஞரா? பெண்ணியக் கவிஞரா?
Mother and Daughter இல் குழந்தை பிறப்பின் சித்தரிப்பு அவரது பெண்மையின் வலிமையான வெளிப்பாடு. ஆனால் ஸ்விரின் கவிதைகள் ஒதுக்கப்பட்ட ஓர் இனமாகப் பெண்ணைப் பார்க்கவில்லை. அவை எல்லா மனிதரும் அனுபவிக்கும் துன்பம் பற்றியவை.
அவருடைய I am a Woman 1972 கவிதைத் தொகுப்பில் பெண்கள் தவறாக நடத்தப்படுவதற்கு சமுதாயத்தையே குற்றம் சாட்டுகிறார். மெய்நிலை விரக்தியுடன் வெளிப்படுகிறது. அநீதியை நேருக்கு நேர் சந்திக்கிறார். அவருடைய கவிதைத் தொகுப்பின் முதற் பகுதியில் பெண்களுக்கு எதிரான கொடூரம் வெளிப்படுத்தப்படும். இரண்டாம் பகுதியில் காதலும் சிற்றின்பக் கிளர்ச்சியின் அழுத்தமும் இருக்கும். ஸ்விர் பண்பாட்டு சமூகத்தடைகளை உடைத்தெறிகிறார். வழக்கமாகக் காதல் பாடல்களில் பெண் ஆணின் பார்வைக்கு உரியவளாகவே இருந்து வந்திருக்கிறார். ஆனால் பெண்ணின் காதல் அகவயம் சார்ந்தது. இவருடைய காதல் கவிதைகளின் நாயகிகள் பேரிளம் பெண்கள்தான். வயதான பெண்கள் ஆசைப்படக்கூடாதா?
அவர் கடைசியாக எழுதிய கவிதை அவர் அறுவைச்சிகிச்சை அறைக்குக் கொண்டு செல்லப்படக் காத்திருப்பது பற்றி எழுதியது.
நாளை என்னை அவர்கள் செதுக்குவார்கள்...
அன்னா ஸ்விர் ஒரு சமூகப்போராளி, மது எதிர்ப்பாளர். நல்ல உலகைச் சமைப்பதே ஒரு கவிஞரின் பணி என்று கருதுபவர். மனித இனத்தைக் கவிதைகளால்தான் காப்பாற்ற முடியும் என்று நம்புபவர்.
அதேபோல உடல் பற்றிப் பேசினாலும் உடலோடு பேசினாலும் உடலின் நிலையாமையை வலியுறுத்துகிறார். கத்தோலிக்கக் கிறித்தவராக வளர்ந்து இடையில் நம்பிக்கை குறைந்து இறுதியில் மன்னிப்பு வேண்டும் அவருடைய கவிதைகளில் கத்தோலிக்கக் கிறித்தவ நம்பிக்கைகள் இடம் பெறுவதைக் காணமுடிகிறது.
ஸ்விரின் கவிதைத்தொகுப்புகள் ஆறிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 70 கவிதைகளைத் தமிழாக்கம் செய்திருக்கிறார், கவிஞர் சமயவேல். அவற்றைச் சுவைத்துப் படித்து அவற்றின் சுவை குன்றாமல் தமிழில் வடித்துத் தந்திருக்கிறார். எளிமையாய் அரிய கருத்துக்களைத் தமிழில் தருவதில் பழகிப்போன கவிஞருக்கு ஸ்விரின் கவிதைகளைத் தமிழாக்கம் செய்வது எளிதாகவே இருந்திருக்கும். இனிமையான மொழிபெயர்ப்பு. கவிஞர் சமயவேல் நேரியல் (linear) அமைப்பில் மொழியாக்கம் செய்திருக்கிறார். அதாவது ஆங்கில மொழி வாக்கியக் கட்டமைப்பை மாற்றாமல் தமிழில் செய்திருக்கிறார். சில கவிதைகளில் மூலத்தில் கடைசி வரி முத்தாய்ப்பாக இருக்கும். அதனை அப்படியே தமிழிலும் கடைசி வரியாக வைத்துக்கொண்டு மற்ற பகுதிகளை தமிழ் மரபுக்குத் தக்கவாறு பொருளும் நயமும் சிதையாமல் மாற்றலாம். அவ்வாறு இல்லாதபோது தமிழ் வாக்கியக் கட்டமைப்பிலேயே முழுவதையும் மொழி பெயர்த்தால் நெருடல் இருக்காது. வாக்கியக் கட்டமைப்பு மூலத்தில் இருப்பதுபோல இலக்கு மொழியில் இருக்க வேண்டிய அவசியமில்லை.
இத்தொகுப்பின் இன்னொரு சிறப்பு கவிஞர் சமயவேல் சீஸ்லாவ் மிலோஸ்ச்சின் முன்னுரையையும், ஜூடித் மூரின் முன்னுரையையும், சீஸ்லாவ் - நேதன் உரையாடலையும் தமிழாக்கம் செய்து இந்நூலில் இணைத்திருப்பது தான்.
அன்னா ஸ்விர் கவிதைகள்
தமிழில்: சமயவேல்
வெளியீடு : தமிழ்வெளி, சென்னை
பக்கங்கள் : 128
விலை : ரூ 100
- ச.வின்சென்ட்