judge sureshதூய மெய் வழி நெஞ்சங் கொண்ட நீதியரசர் சுரேஷ் ஒரு மாமனிதர். அவரை இந்தியா இழந்து விட்டது. மானிட உரிமைகளைச் சட்ட வரம்பிற்குள் நிறுத்தி விடாமல், இந்திய அரசமைப்பைத் தாண்டி நிலைபெறச் செய்த மனித உரிமைக் காப்பாளர் என்றால் மிகையன்று.

அரச பயங்கரவாதத்தால் பாதிப்புற்றோரின் மனித உரிமைகளுக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் உளச் சான்றுடன் உரத்த குரல் கொடுத்தவர்.

இந்திய நிலப்பரப்பிலும், குறிப்பாகத் தமிழ் மண்ணிலும் சுவடு பதித்த அவருடைய பணிகளை நினைவு கூர்ந்து அம்மாமனிதர்க்குப் புகழ் வணக்கம் செலுத்துவது சமூகக்கடனே.

கர்நாடகத்தில் தமிழர் மீது தாக்குதல்

1991 டிசம்பர் 12, 13 இல் காவிரி நடுவர் மன்றத்தின் ஆணையை எதிர்த்து தென் கர்நாடகப் பகுதிகளில் கலவரம் பெரிதாக வெடித்தது. குறிப்பாகத் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியான பெங்களூர் நகர்ப்புறம், பெங்களூர் கிராமப்புறம், இராமநகரம், மைசூர், மாண்டியா போன்ற பகுதிகளில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதலில் அப்பாவித் தமிழ் மக்கள் பலர் உயிரிழந்தனர்.

இக்கலவரத்தை விசாரிக்க நீதியரசர் சுரேஷ், நீதியரசர் திவாத்தியா ஆகிய இருவரும் நியமிக்கப்பட்டனர். நீதியரசர் சுரேஷ் கர்நாடக மண்ணின் மைந்தராக இருந்த போதிலும் விசாரணை முடிவில் வெளியிட்ட அறிக்கையில் "கர்நாடக அரசு பந்த் அறிவித்தது தவறு" என்று உண்மை நிலவரத்தை நேர்மையாகக் குறிப்பிட்டார்.

பாபர் மசூதி இடிப்புக்கு எதிரான "மக்கள் தீர்ப்பு"

காலம் கடக்கும் வரை மனிதகுலம் மறக்க முடியாத நாள் டிசம்பர் 6, 1992. இந்த நாளில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மும்பையில் வரலாறு காணாத மதக் கலவரம் மூண்டது. சுமார் இரண்டு மாதங்கள் 1993 சனவரி வரை இந்தக் கலவரம் தொடர்ந்தது. இதில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான சொத்துகள் நாசமானது. கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க இந்திய மக்கள் மனித உரிமைகள் ஆணையத்தால் நீதியரசர் சுரேஷ், நீதியரசர் சிராஜ் மெஹ்புஸ் நியமிக்கப்பட்டனர், 1993 ஆம் ஆண்டு "மக்கள் தீர்ப்பு" என்ற தலைப்பில் தாங்கள் கண்டறிந்த உண்மைகளை வெளியிட்டனர். இந்த அறிக்கைக் காவல்துறை, அரசாங்கம், அரசியல் தலைவர்கள் ஆகியோர் கலவர பூமியில் கடமையாற்றத் தவறியதை நேர்மையுடன் சுட்டிக் காட்டுகிறது.

இறால் பண்ணைகளுக்கு எதிரான தீர்ப்பு

1994 இல் தமிழகத்தில் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் இறால் பண்ணைகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டக் களத்தில் சமூகச் செயற்பாட்டாளர்களோடு நேரில் சென்று இறால் பண்ணைகளைப் பார்வையிட்டார். கடலோர நிலப்பரப்பின் உயிரியல் ரீதியான பன்முகத் தன்மையையும், சுற்றுச்சூழலையும், நிலத்தடி நீரையும், விவசாய நிலப்பரப் பையும் இறால் பண்ணைகள் மாசுபடுத்துவதை அவர் வெளியிட்ட "மக்கள் அறிக்கையில்" குறிப்பிட்டார். இறால் பண்ணைகளுக்கு எதிராக நடந்த ஜெகன்னாதன் எதிர் உச்ச நீதிமன்றம் வழக்கில் இந்த அறிக்கை சான்றாக எடுத்துக் கொள்ளப்பப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் இறால் பண்ணைகளுக்குத் தடை விதித்தது என்பது இங்கே நினைவு கூரத்தக்கது.

மும்பையில் குடிசைப் பகுதிகளை அகற்றிய அரச பயங்கரவாதம்

1995 இல் மும்பையில் நடைபாதைவாசிகளின் இருப்பிடத்தையும், குடிசைவாசிகளின் வீடுகளையும் அரசதிகாரத்தின் புல்டோசர் இடித்துத் தரை மட்டமாக்கியது. இந்திய அரசியல் சட்டப் பிரிவு 21 வழங்கும் உயிர் வாழும் உரிமை என்பதில் வாழ்விடத்துக்கான உரிமையும் அடங்கியுள்ளதால் வீடு என்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை'' ஆகும். இதனடிப்படையில் இந்திய மக்கள் தீர்ப்பாயம் விசாரணை மேற்கொண்டது.

நீதியரசர் சுரேஷ் தலைமையில் கண்டறிந்த உண்மைகள் "கட்டாய வெளியேற்றங்கள்" - என்ற தலைப்பில் ஆகஸ்ட் 1995 இல் அறிக்கையாக வெளியிடப்பட்டது. நடைபாதைவாசிகளின் இருப்பிடத்தையும், குடிசைவாசிகளின் வீடுகளையும் இடித்தது அரசதிகாரத்தின் முறையற்ற, நியாயமற்ற செயல். அரசதிகாரிகள் மனிதாபிமானமின்றி மிகவும் கொடூரமாக நடந்துள்ளனர் என்பதை அவ்வறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது.

தாமிரபரணிப் படுகொலை

1999 இல் மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர் போராட்டத்தில் காவல்துறை தாமிரபரணி ஆற்றங்கரையில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தடியடியில் 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் நடத்திய பொது விசாரணையில் நீதியரசர் சுரேஷ் பங்கேற்று வெளியிட்ட அறிக்கை உண்மை நிகழ்வுகளை ஆவணப்படுத்தியது. தார்மீக ரீதியில் அரசதிகாரத்தின் அத்துமீறலைக் குற்றப்படுத்தியது.

குஜராத் கலவரம்

2002 இல் நடைபெற்ற குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து நீதியரசர் வி.ஆர் கிருஷ்ண ஐயர் தலைமையில் இந்திய மக்கள் தீர்ப்பாயம் சார்பாக உயர் மட்ட உண்மையறியும் குழு கள ஆய்வு செய்தது. இதில் நீதியரசர் சுரேஷ் இடம் பெற்றிருந்தார். இக்குழு 2,094 வாய்வழி, எழுத்துப்பூர்வ சாட்சியங்களைப் பெற்றது. உயர் போலீஸ் அதிகாரிகள், பிற அரசாங்க அதிகாரிகள் ஆகியோரை சந்தித்தது. கண்டறிந்தவைகளை "மனிதகுலத்திற்கு எதிரான குற்றம்" என்ற தலைப்பில் இத்தீர்ப்பாயம் அறிக்கையாக வெளியிட்டது. இதற்கு எதிர்வினையாக, "இனப்படுகொலை தடுப்பு மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் சட்டம் 2004" என்ற சட்ட வரைவு முன்மொழியப்பட்டது. இதில் நீதியரசர் சுரேஷ் அவர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும்.

காஷ்மீர் பிரச்னை

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இராணுவத்தின் அத்துமீறல்களைக் கள ஆய்வு செய்து கண்டறிந்தவைகளை 2010 செப்டம்பர் 8 அன்று புது தில்லியில் விரிவான அறிக்கையாக வெளியிட்டார்.

காஷ்மீரில் ஒவ்வொரு இருபது பேர்க்கும் ஒரு சிப்பாய் என்ற விகிதத்தில் அப்பகுதி இராணுவமயமாக்கப்பட்டுள்ளது. அப்பாவி மக்களுக்கு எதிராக இராணுவத்தினர் தண்டனையின்றி வன்முறைச் செயல்களைச் செய்கிறார்கள். கருப்புச் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன என்று இவர் அளித்த அறிக்கை காஷ்மீர் நிலவரத்தை ஆவணப்படுத்தி இருந்தது.

பரமக்குடி துப்பாக்கிச் சூடு

ஈகியர் இம்மானுவேல் சேகரன் நினைவேந்தல் நாளில் (செப்டம்பர் 11, 2011) தேவேந்திர குல வேளாளர் சமூகத் தலைவர் ஜான் பாண்டியன் கைதைக் கண்டித்து அறிவழியில் சாலை மறியலில் ஈடுபட்டோர் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக மக்கள் கண்காணிப்பகம் நடத்திய பொது விசாரணையில் நீதியரசர் சுரேஷ் பங்கேற்று அளித்த அறிக்கையில் காவல்துறையின் அத்துமீறலை ஆவணப்படுத்தி தார்மீக ரீதியில் குற்றப்படுத்தினார்.

ஆந்திராவில் 20 தமிழர் சுட்டுக் கொலை

2015 இல் ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதை நேரில் பார்வையிடச் சென்ற போது வனத்துறையினர் கொளுத்தும் வெயிலில் நீதியரசர் சுரேஷ் தலைமையிலான உண்மை கண்டறியும் குழுவைத் தடுத்து நிறுத்தினர். கள ஆய்வில் கண்டறிந்த உண்மைகள் அறிக்கையாய் வெளியிடப்பட்டது.

புகழ் வணக்கம்

மனித உரிமை மீறல்கள் மீதான பொது விசாரணைகள், தேசிய மாநாடுகள், அகில உலக மாநாடுகள் அல்லது அய்க்கிய நாட்டவை கூட்டங்கள் இவை எதுவும் அவருக்கு ஒரு போதும் ஆறுதல் அளிக்கவில்லை. மனித உரிமை மீறல்களால் பாதிப்புற்றோர்க்கு ஆதரவாக எதுவும் எங்கும் நடந்தேறவில்லை என்று நம்பினார். ஆனால் கடை நிலை மக்களின் பிரச்சனைகளுக்கு உதவும் கரமாகத் திகழ்வதில் மிகவும் ஆறுதல் அடைந்தார். மனித உரிமைகளுக்காகக் களமாடிய அவருடைய இறுதி மூச்சு 11.6.2020 அன்று காற்றோடு கலந்தது. அவர் நிலைபெறச் செய்த மானிட விழுமியங்களை நெஞ்சிலேந்துவோம். அவருடைய நேரிய வாழ்வின் சீரிய செயற்பாட்டைக் கூட்டாகக் கொண்டாட வேண்டியது சமூகக் கடமையும், பொறுப்பும் ஆகும். ஏனெனில் அவர் பாதிப்புற்றோர்க்கான ஆதரவைத் தோழமையுடன், கூட்டுச் செயற்பாட்டில் வெளிப்படுத்தும் கூட்டியக்கத் தத்துவத்தில் பெருத்த நம்பிக்கை கொண்டவர்.

ச.மோகன், மக்கள் கண்காணிப்பகம்

Pin It