காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சார்ந்த முர்தஷா ஷேக் என்பவர் 11.10.2021 அன்று காவல் துறையால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மக்கள் கண்காணிப்பகத்தின் உண்மை அறியும் குழு, சம்பவ இடத்திற்குச் சென்று கள ஆய்வு மேற்கொண்டது.

Encounter at sriperumbudurசம்பவ சுருக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா, பென்னலூர் ஊராட்சி, விநாயகர் கோவில் தெருவைச் சார்ந்த ரெங்கநாதன் என்பவரின் மனைவி இந்திரா (58) என்பவர் கடந்த 10.10.2021 அன்று காலை சுமார் 8.30 மணியளவில் தனது தங்கையின் வீட்டிற்குச் செல்வதற்காக ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி (கூடிடட ழுயவந) அடுத்து சென்னை செல்லும், நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள EB பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் இந்திரா என்பவருக்கு அருகாமையில் வந்து இந்தி மொழியில் பேசி உள்ளனர். அப்போது இந்திரா என்பவர் எனக்கு நீங்கள் பேசக்கூடிய இந்தி மொழி தெரியாது என்று கூறியுள்ளார். அப்போது இளைஞர்கள் இருவரில் ஒருவர், இந்திராவின் பின்பக்கமாகச் சென்று, அவர் அணிந்திருந்த சுமார் 5 சவரன் அளவுள்ள தங்க நகையைத் திடீரென பிடித்து இழுத்து அறுத்துள்ளார். இதனால் இந்திரா, திருடன் திருடன் என கத்தியுள்ளார்.

நகையைக் கைப்பற்றிய இருவரும் EB பேருந்து நிறுத்தத்திலிருந்து சென்னை செல்லும் சாலையை நோக்கி சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் ஓடி, அதன்பின் இடது பக்கம் திரும்பி, வெங்கடேஸ்வரா கல்லூரி பக்கமாக ஓடி உள்ளனர். நகையைப் பறி கொடுதுத இந்திரா உடனடியாக தனது மகன் மதி (46) த/பெ. ரெங்கநாதன் என்பவருக்கு செல்போன் வாயிலாக தகவல் கொடுத்துள்ளார். தகவல் கிடைத்த மதி (46) த/பெ. ரெங்கநாதன் மற்றும் அவரது உறவினர்கள் சுமார் 15 பேர், பென்னலூர் கிராமத்திலிருந்து EB பேருந்து நிலையத்திற்கு சுமார் 15 நிமிடத்தில் வந்துள்ளனர். அப்போது EB பேருந்து நிலையத்தில் பொது மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட இந்திரா ஆகியோர் இருந்துள்ளனர்.

தனது அம்மாவிடம் நடந்த விவரத்தை தெரிந்து கொண்ட மதி (46) த/பெ.ரெங்கநாதன், தன்னோடு வந்த உறவினர்களை கூட்டிக் கொண்டு, ஏற்கெனவே நகையைப் பறித்தவர்கள் சென்ற வழியாகச் சென்று, இருங்காட்டுக்கோட்டை ஏரிக்குச் சென்றுள்ளனர். சுமார் 700 ஏக்கர் அளவில் அமைந்துள்ள இருங்காட்டுக்கோட்டை ஏரி, முள் மரங்கள் நிறைந்த அடர்த்தியான பகுதியாகும். ஏரிக்குள் இருப்பவர்கள் யார் என்று வெளியில் இருந்து பார்த்தால் தெரியாத நிலையில் அப்பகுதி இருந்ததால், மதி த/பெ. ரெங்கநாதன் குழுவினர் ஏரிக்கரையில் இருந்தே நகை திருடியவர்களைத் தேடியுள்ளனர். இதனால் நகை திருடியவர்கள் கிடைக்காமல் அனைவரும் திரும்பியுள்ளனர்.

EB பேருந்து நிறுத்தத்தினை நோக்கி மதி த/பெ. ரெங்கநாதன் குழுவினர் வரும்போது எதிரே, மதி த/பெ. ரெங்கநாதன் என்பவரின் உடன் பிறந்த தம்பி சத்தியா (40) த/பெ. ரெங்கநாதன் என்பவரும், அவரது நண்பர் கலைச்செல்வம் இருவரும் இரு சக்கர வாகனத்தில் எதிரே எந்த அண்ணனிடம் தகவலைக் கேட்டுவிட்டு, நகை திருடியவர்களைப் பிடிப்பதற்காக, இருவரும் கிங்ஸ் கல்லூரிக்குப் பின் பக்கம் அமைந்துள்ள இருங்காட்டுக்கோட்டை ஏரிப் பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்போது இரு நபர்கள் ஏரிக்குள் தங்களது சட்டையை மாற்றிக்கொண்டு இருந்துள்ளனர். இதனைப் பார்த்த சத்தியா (40) த/பெ. ரெங்கநாதன் அவரது நண்பர் கலைச்செல்வம் இருவரும் சந்தேகமடைந்து இருவரையும் பிடிப்பதற்காக ஓடியுள்ளனர். அப்போது சுமார் 50 அடிக்கு அருகாமையில் செல்லும் போது மாற்றுச் சட்டையை மாட்டிக் கொண்டிருந்த இருவரில் ஒருவர், கைத் துப்பாக்கியை எடுத்து சத்தியா (40) த/பெ. ரெங்கநாதன் மற்றும் அவரது நண்பர் கலைச்செல்வத்தை நோக்கிச் சுடுவது போல் காட்டியுள்ளனர். இதனால் சத்தியா (40) த/பெ. ரெங்கநாதன், அவரது நண்பர் கலைச்செல்வமும் அப்படியே தரையில் படுத்துள்ளனர்.

இதனைப் பார்த்த கைத்துப்பாக்கியைக் காட்டிய இருவரும் அவ்விடத்திலிருந்து ஓடத் தொடங்கியுள்ளனர். இருவரும் ஓடிய பின்பு, தரையில் படுத்திருந்து சத்தியாவும் அவரது நண்பர் கலைச்செல்வமும் எழுந்து பார்த்துள்ளனர். அப்போது துப்பாக்கியைக் காட்டியிருந்தவர்கள் நின்றிருந்த இடத்தில் தோட்டாக்களோடு கைப்பிடி இல்லாமல் கைத்துப்பாக்கியின் முன் பகுதி மட்டும் கிடந்துள்ளது. இதனை எடுத்த சத்தியா த/பெ. ரெங்கநாதன் உடனடியாக தனது அண்ணன் மதி த/பெ. ரெங்கநாதன் அவரது உறவினர்கள் மற்றும் ஒரு போலீசாரை கூப்பிட்டுக் கொண்டு, மீண்டும் இருங்காட்டுக்கோட்டை ஏரிக்கு வருகின்றனர்.

சத்தியா த/பெ. ரெங்கநாதன் என்பவரை கைத்துப்பாக்கி தோட்டாக்களோடு பார்த்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆகியோர் சுமார் ஙூ மணி நேரத்தில், அதாவது 10.10.2021 அன்று காலை சுமார் 9.30 மணிக்கு வந்துள்ளனர். மேலும் அருகாமையில் வெங்கடேஸ்வரா கல்லூரியில் தேர்தல் வாக்குப்பெட்டி காவலுக்கு இருந்த போலீசாரில் சிலரும் இருங்காட்டுக்கோட்டை ஏரிக்கு வந்துள்ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசாரும், பென்னலூர் கிராமத்து மக்கள் சுமார் 50 நபர்களும் இவர்களோடு, மதி த/பெ. ரெங்கநாதன், நண்பர் மூலமாக இருங்காட்டுக்கோட்டை ஏரிக்கு மற்றொரு புறமாக அமைந்துள்ள காரந்தாங்கல் கிராமத்திற்கும் தகவல் சொல்லப்பட்டு அங்கிருந்து சுமார் 100 நபர்கள் என சுமார் 250 நபர்கள் இருங்காட்டுக்கோட்டை ஏரியைச் சுற்றியுள்ள கரையில் நின்று, நகையைப் பறித்துச் சென்ற இருவரையும் தேடியுள்ளனர்.

காலை சுமார் 11.00 மணியளவில் காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. சுதாகர், ஐஞளு அவர்கள் இருங்காட்டுக்கோட்டை ஏரிக்கு வந்துள்ளார். அதன்பின் 4 ட்ரோன் (Drone Camera) பயன்படுத்தி ஏரி முழுவதும் தேடியுள்ளனர். அப்போது காரந்தாங்கல் பகுதியில் அடையாளம் தெரியாத இறந்துபோன உடல் கிடைத்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ட்ரோன் மூலமாக சுமார் மூன்று மணி நேரம் இருங்காட்டுக்கோட்டை ஏரியில் தேடி உள்ளனர். தங்க நகையைப் பறித்துச் சென்ற இருவரும் கிடைக்கவில்லை.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நைம் அக்தர் என்பவர் தனியார் கம்பெனியில் இரவுப் பணியை முடித்துவிட்டு 11.10.2021 அன்று அதிகாலை சுமார் 7.00 மணியளவில், தான் வாடகைக்கு குடியிருந்து வரும் இருங்காட்டுக்கோட்டை அம்பேத்கர் தெருவிற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு போலீசார் அதிகமாக இருந்ததைப் பார்த்தவுடன் தன்னைத்தான் பிடிக்க வந்துள்ளார்கள் என நினைத்து நைம் அக்தர் ஓடத் தொடங்கியுள்ளார். இதனைப் பார்த்த போலீசார் சந்தேகமடைந்து நைம் அக்தரை பிடித்துள்ளனர். இதன்பின் நைம் அக்தரை போலீசார் விசாரித்துள்ளனர். மேலும் நைம் அக்தர் செல்போனில் இருந்து அவனது கூட்டாளி ஜார்கண்ட் மாநிலம் பாதூர் மாவட்டத்தைச் சேர்ந்த முர்தஷா ஷேக் என்பவரிடம் பேச வைத்துள்ளனர். செல்போன் டவர் அடையாளம் மூலமாக முர்தஷா ஷேக் இருக்கும் இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இருங்காட்டுக்கோட்டை ஏரியிலிருந்து சுமார் 1 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் இருந்த முர்தஷா ஷேக், போலீசாரால் காலை சுமார் 8.00 மணியளவில் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். இதற்குப் பின்புதான் போலீசார் கைது செய்த முர்தஷா ஷேக் என்பரை என்கௌன்டரில் கொலை செய்ததாக காவல் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கண்டறிந்தவைகள்

1.) இருங்காட்டுக்கோட்டை அம்பேத்கர் பகுதியில் எம்.ஜி.ஆர் தெருவில் அமைந்துள்ள (கண்ணன், சுமதி - பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவர்களுக்குச் சொந்தமான குடிசை வீட்டில் கடந்த ஒரு வருட காலமாக ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முர்தஷா ஷேக், நைம் அக்தர் மற்றும் ஒரு நபர் என மூன்று நபர்கள் மாதம் ரூ. 1,500/- வாடகை கொடுத்து தங்கி இருந்தனர் என்பதனை வீட்டின் உரிமையாளர்கள் மூலம் அறிய முடிகின்றது.

2.) ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முர்தஷதா ஷேக், நைம் அக்தர், மேலும் ஒருவர் என மூன்று நபர்களும் கடந்த ஒரு வருடங்களாக இருங்காட்டுக்கோட்டை எம்.ஜி.ஆர் தெருவில் வாடகைக்கு தங்கிருந்தனர் என்பதை, அருகாமையில் குடியிருக்கும் நபர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். மேலும் இந்த மூன்று நபர்களால் இதுவரை எந்தப் பிரச்சனையும் வரவில்லை என்றும் இதே பகுதியில் ஜார்கண்ட், ஒரிசா, பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வாடகைக்கு தங்கி இருப்பதாகவும் உறுதிப்படுத்தினர்.

 3.) இருங்காட்டுக்கோட்டை ஏரிக்குள் துப்பாக்கியை காட்டி மிரட்டியது நைம் அக்தர் என்பதனையும், அவனுக்கு அருகாமையில் இருந்தது முர்தஷா ஷேக் என்பதனையும், செய்தித்தாள்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் காட்டப்பட்டது இவர்கள்தான் என்பதனை சத்தியா த/பெ. ரெங்கநாதன் உறுதிப்படுத்துகிறார்.

 4.) 10.10.2021 அன்று காலை சுமார் 8.30 மணியளவில் பென்னலூரைச் சேர்ந்த இந்திரா (50) க/பெ. ரெங்கநாதன் என்பவர் EB பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தபோது, தங்க நகையைப் பறித்தவர்கள், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட முர்தஷா ஷேக், நைம் அக்தர் ஆகிய இருவரும்தான் என்பதனை செய்தித் தாள்களில் வந்த புகைப்படங்கள் மூலமாகவும், தொலைக்காட்சி செய்தியைப் பார்த்ததன் வாயிலாகவும் உறுப்படுத்துகிறார்.

 5.) இருங்காட்டுக்கோட்டை ஏரியில் நைம் அக்தர் மற்றும் முர்தஷா ஷேக் ஆகியோர் விட்டுச் சென்ற கைத்துப்பாக்கியின் முன் பகுதியை எடுத்த சத்தியா த/பெ. ரெங்கநாதன், அதில் இருந்த தோட்டா சுமார் 1 இன்ச் அளவுள்ளது என்றும், ஆனால் போலீசார் கைப்பற்றியதாக தொலைக்காட்சியில் காட்டிய தோட்டா சுமார் 2 இன்ச் அளவுள்ளதாக இருந்தது என்று இதனைப் பார்த்த சத்தியா த/பெ. ரெங்கநாதன் மற்றும் மதி த/பெ. ரெங்கநாதன் ஆகியோர் உறுதிப்படுத்துகிறார்கள்.

 6.) 11.10.2021 அன்று இருங்காட்டுக்கோட்டை அம்பேத்கர் தெருவில் காலை சுமார் 7.00 மணியளவில் போலீசைப் பார்த்து ஓடிய ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நைம் அக்தரை போலீசார் விரட்டிப் பிடித்துள்ளனர் என்பதனை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் உறுதிப்படுத்துகிறார்கள். ஆகவே அவர்கள், காவலர்களைத் தாக்கியதால் தற்காப்புக்காக சுட்டபோது காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் சாகவில்லை. கைது செய்யப்பட்ட பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பதனை அறிய முடிகிறது.

7.) காவல் துறையினருடன் ஏற்பட்ட மோதலில் இறந்ததாகக் கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது என்று நிரூபனமாகிறது. இது மோதல் சாவு அல்ல. கைது செய்யப்பட்ட இருவரில் முர்தாஷா ஷேக் என்பவரை அதே காட்டிற்குள் கொண்டு சென்று, சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற பெருத்த சந்தேகம் எழுகிறது.

8.) மக்கள் கண்காணிப்பகத்தின் கள ஆய்வுக் குழுவினர் 10.2021 அன்று கள ஆய்வுப்பணியில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் ஈடுபட்டிருந்தபோது, நம்பத்தகுந்த நபர்கள் (பாதுகாப்புக் கருதி இவர்களின் பெயரை வெளியிட விரும்பவில்லை) 11.10.2021 அன்று காலை சுமார் 07.00 மணியளவில் குடியிருப்பு அருகாமையில் நைம் அக்தர் போலீசாரால் கைது செய்யப்பட்டபின், நைம் அக்தர் மூலமாகவே முர்தஷாவிற்கு செல்போனில் பேசவைத்து அதன் மூலம் முர்தாஷா எந்த செல்போன் டவர் எல்லையில் இருக்கிறார் என்பதனைக் கண்டறிந்து முதர்தஷாவை பிடித்தார்கள் என்ற தகவல் நமக்கு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் முர்தஷா உயிரோடு போலீசாரால் பிடிக்கப்பட்டார் என்பதனை உறுதி செய்யப்படுகிறது.

9.) இருங்காட்டுக்கோட்டை ஏரிக்குள் பிடிப்பதற்காக விரட்டிச் சென்ற மதி த/பெ. ரெங்கநாதன் அவரது நண்பர் கலைச்செல்வம் ஆகியோரை கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டியது நைம் அக்தர் என்பதனை மதி த/பெ. ரெங்கநாதன் உறுதிப்படுத்துகிறார். ஆனால் நைம் அக்தர் என்பவர் உயிரோடு இருக்கிறார். ஆனால் முர்தஷாவை எதற்காக போலீசார் சுட்டனர் என்பதில் சந்தேகம் இருப்பதாக கள ஆய்வுக் குழுவினர் சந்தித்த பொதுமக்கள் தங்களது சந்தேகத்தை தெரிவித்தார்கள்.

10.) எமது குழுவினர் 12.10.2021 அன்று ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்திற்குச் சென்றபோது, இரண்டாவது நபர் நைம் அக்தர் என்பவரை, IG, DIG, SP ஆகியோர் விசாரணை செய்வதாக காவல் நிலையத்தில் கூறப்பட்டது. எமது குழு காவல் நிலையத்தில் மாலை 4.30 மணி வரை இருந்தபோது, நைம் அக்தர் வெளியே வரவில்லை என்பதைக் கண்டறிய முடிகிறது.

11.) 10.10.2021 அன்று காலையில் இருங்காட்டுக்கோட்டை ஏரிக்குள் சென்ற ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த நைம் அக்தர் மற்றும் முர்தஷா ஷேக் ஆகியோரைப் பிடிப்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய ஆய்வாளர், காவல் துணைக் கண்காணிப்பாளர் மற்றும் காஞ்சிபுரம் காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு. சுதாகார் ஆகியோர் தலைமையிலான போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர் என்றும் மேலும் ஐந்து ட்ரோன் பயன்படுத்தி தேடினார்கள் என்றும் ஆனால் இருவரையும் போலீசார் 10.10.2021 அன்று கண்டுபிடிக்கவில்லை என்பதனை போலீசாரோடு தேடுதல் பணியில் ஈடுபட்ட அருகாமை கிராமத்து மக்கள் உறுதிப்படுத்துகிறார்கள். இதன் மூலம் நைம் அக்தர், முர்தஷா ஷேக் ஆகிய இருவரையும் 10.10.2021 அன்று போலீசார் பிடிக்கவில்லை என்பதனை அறிய முடிகிறது.

12.) 11.10.2021 அன்று வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் திரு.சந்தோஷ்குமார், நடந்து முடிந்த மோதல் சாவு குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்கும் போது, குற்றவாளிகளிடம் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை காட்டியபோது, நைம் அக்தர் விட்டுச் சென்ற கைத்துப்பாக்கியின் முன்பகுதியைக் காட்டவில்லை என்பதனை பல்வேறு செய்தித் தாள்கள், தொலைக்காட்சிகளில் வந்த செய்திகளைப் பார்த்த சத்தியா த/பெ. ரெங்கநாதன் என்பவர் மூலம் உறுதிப்படுத்த முடிகின்றது.

பரிந்துரைகள்

1. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இச்சம்பவத்தில், இதுவரை கண்டறிந்தவைகளைப் பார்த்து, மாநில மனித உரிமை ஆணையத்திடம், இந்த விசாரணையை முழுமையாக ஒப்படைத்து, அவர்கள் விரும்பும் காவல் அதிகாரிகளுடன் விசாரணையை மேற்கொண்டு, சி.பி.சி.ஐ.டி-க்கு பரிந்துரை செய்து, 30 நாட்களுக்குள் அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்க, மாநில மனித உரிமை ஆணையத்தை அரசு கேட்டுக் கொள்ள வேண்டும்.

2. மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள், இந்த அரசின் ஆட்சிக் காலத்தில் இதுபோன்ற இன்னொரு போலி மோதல் சாவு ஏற்படாது என்பதற்கான உத்தரவாதத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

3. காவல்து றையினரால் கொலை செய்யப்பட்ட முர்தஷா ஷேக் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 10 இலட்சம், இழப்பீடு வழங்க வேண்டும்.

- மக்கள் கண்காணிப்பகம்

Pin It