ஆப்பிரிக்கா, தனது பஞ்சம், பசி, பட்டினி, இனக்கொலைகள் போன்றவற்றிற்காக இந்திய ஊடகங்களில் இடம் பிடித்தால்தான் உண்டு. மைய நீரோட்ட ஊடகங்களில் வந்த எத்தியோப்பியா, சோமாலியா மக்களின் பட்டினிக் காட்சிகள், ருவாண்டாவின் படுகொலைகள், இடி அமீன் ‘பிள்ளைக்கறி’ உண்ட புராணம் போன்றவற்றின் மூலம்தான் இந்திய தமிழக மக்களுக்கு ஆப்பிரிக்க அறிமுகம். நெல்சன் மண்டேலாவும் சினுவா அச்சுபி, வோல் சோயிங்கா, ங்கூகி வாதிங்கா, சிமெமன்டா அடிச்சி போன்ற இலக்கியகர்த்தாக்களும்தான் ஆப்பிரிக்கா குறித்த நேர்மறையானதும் நம்பிக்கை அளிக்கக் கூடியதுமான சித்திரத்தை அளித்தவர்கள்.

சமீபகாலமாக ஆப்பிரிக்க அரசியல் வானில் மெல்லிய ஒளிக் கீற்றுகள் தெரியத் தொடங்கியுள்ளன. தன்சனியா, ருவாண்டா, கென்யா, உகாண்டா ஆகிய நாடுகளில் (மொத்த மக்கள் தொகை: 17.6 கோடி) அலுவல் மொழி, வேறு சில நாடுகளில் சிறுபான்மையினர் மொழி என்ற அங்கீகாரம் பெற்றது ஸ்வாஹிலி. 2022 ஆம் ஆண்டுதான் ஸ்வாஹிலி மொழியில் மார்க்சின் ‘மூலதனம்' நூலின் முதல் தொகுதி வந்துள்ளது. தமிழில் என்.சி.பி.ஹெச் வெளியீடாக வந்து இந்த மாதத்துடன் 25 ஆண்டுகள் முடிவடைகின்றன.

தென்னாப்பிரிக்காவில் கம்யூனிஸ்ட் கட்சி (SACP) ஆட்சியில் ஒரு இளைய பங்காளி. இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகள் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து உள்ளிருந்து பணியாற்றியது போல தென்னாப்பிரிக்காவிலும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் இருந்து பணியாற்றுவது வழக்கம். நெல்சன் மண்டேலா கைதாகி 27 ஆண்டுகால தண்டனைக்கு சிறைக்குச் சென்றபோது கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் என்பது அவரது மரணத்திற்குப் பின்புதான் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இப்போது கென்யா, தன்சனியா, கானா, ஜாம்பியா, ஜிம்பாப்வே என்று பல நாடுகளில் சிறிய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் இயங்கி வருகின்றன. இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் மார்க்சியம் பரவி வருகின்றது. ஆப்பிரிக்க நாடுகள் காலங்காலமாக ஐரோப்பிய நாடுகளையே வணிகத்திற்கும் உதவிகளுக்கும் நம்பியிருந்தன. ஐரோப்பிய நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளின் நிலையைத் தங்கள் நலன்களுக்காகப் பயன்படுத்திச் சுரண்டி வந்தன. அமெரிக்கா 29 இடங்களிலும் ஃபிரான்ஸ் 10 இடங்களிலும் ராணுவத் தளங்களை வைத்துள்ளன. அப்படி ஏதும் இல்லாமலேயே இன்று சீனா ஆப்பிரிக்க நாடுகளின் முதன்மையான வணிகக் கூட்டாளியாக மாறியுள்ளது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் அதிக அளவில் சீனாவின் பொருளாதார உதவிகளும் கிடைத்து வருகின்றன. சீனா செல்வாக்குள்ள நட்பு நாடாக மாறியுள்ளது. அமெரிக்கா, சீன நட்பை தொடர்ந்து குறை கூறி வருகின்றது. ஆனால் அமெரிக்காவை நிராகரித்து ஆப்பிரிக்க இடதுசாரிகள், மார்க்சிஸ்ட்டுகளின் குரல்கள் சமூக ஊடகங்களும் இடதுசாரி இதழ்களிலும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

முக்கண்ட சமூக ஆய்வுக் கழகம் (Tricontinental : Institute for Social Research) அதன் வெளியீட்டில் (Studies) கானா சோசலிஸ்ட் இயக்கம் (Socialist Movement of Ghana) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர்.கிரேட்வி ஒப்போக்கு (Kyeretive Opoke) எழுதியுள்ள சிறு கட்டுரையின் சுருக்கம் கீழே உள்ளது. (முழுமை பின்னர் சிறுநூலாக வரும்). வாசித்துப் பாருங்கள்:

ஏகாதிபத்திய 'விதிகள் அடிப்படையிலான ஒழுங்கில்' எட்டு முரண்பாடுகள்

நாம் இப்போது உலக வரலாற்றின் பண்புரீதியான புதிய கட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம். 2008-ல் ஏற்பட்ட பெரும் நிதித்துறை நெருக்கடியைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் உலக அளவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. இதனை ஏகாதிபத்தியத்தின் புதிய நிலையிலும், எட்டு முரண்பாடுகளின் குறிப்பான தன்மைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களிலும் காண முடிகிறது.

1.            அந்திமக் கால ஏகாதிபத்தியத்துக்கும் சீனாவின் தலைமையில் உருவெடுத்து வரும் வெற்றிகரமான சோசலிசத்துக்கும் இடையிலான முரண்பாடு

2.            ஏகாதிபத்திய ஜி7 நாடுகள் என்ற குறுகிய வட்டத்தில் உள்ள ஆளும் வர்க்கங்களுக்கும் உலகளாவிய தென்புல முதலாளித்துவ நாடுகளின் அரசியல் மற்றும் பொருளாதார மேல்தட்டினருக்கும் இடையிலான முரண்பாடு

3.            உலகளாவிய தென்புல நாடுகளில் உள்ள பரந்து விரிந்த நகர்ப்புற மற்றும் கிராமப்புற உழைக்கும் வர்க்கம் மற்றும் கீழ்த்தட்டு குட்டி-முதலாளித்துவ வர்க்கம் (ஒன்றாக சேர்ந்து பெருந்திரள் வர்க்கங்கள் என்று அறியப்படுகின்றன) அதிகாரத்தில் உள்ள அமெரிக்க ஐக்கிய நாடுகள் தலைமையிலான ஏகாதிபத்திய மேல் தட்டினருடன் கொண்டிருக்கும் முரண்பாடு

4.            தொழில்துறை, சுற்றுச்சூழல்ரீதியில் நிலைப்புருவான விவசாயம், வேலைவாய்ப்பு, மேம்பாடு ஆகியவற்றில் முதலீட்டுக்கான சமூகங்களின் தேவைகளை ஒழுங்கமைப்பது தொடர்பாக, கப்பம் ஈட்டும் முன்னேறிய நிதித்துறை மூலதனத்துக்கும் சோசலிசம் அல்லாத நாடுகளின் மக்கள்திரள் வர்க்கங்களின் மற்றும் மூலதனத்தின் ஒரு சில பிரிவுகளின் தேவைகளுக்கும் இடையிலான முரண்பாடு.

5. உலகளாவிய தென்புல நாடுகளில் உள்ள வெகுமக்கள் வர்க்கங்களுக்கும் அந்நாடுகளில் அதிகாரத்தில் உள்ள அரசியல் பொருளாதார மேட்டுக்குடியினருக்கும் இடையிலான முரண்பாடு

6.            அமெரிக்க ஐக்கிய நாடுகள் தலைமையிலான ஏகாதிபத்தியத்துக்கும், தமது இறையாண்மையை உறுதியாக பாதுகாக்க முயற்சிக்கும் நாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு

7. உலகளாவிய வடபுல நாடுகளில் ஒதுக்கித் தள்ளப்பட்ட கோடிக்கணக்கான உழைக்கும் வர்க்க ஏழைகளுக்கும், இந்த நாடுகளில் அதிகாரத்தில் உள்ள முதலாளி வர்க்கத்தினருக்கும் இடையிலான முரண்பாடு

8.            மேற்கத்திய முதலாளித்துவத்துக்கும் பூமிக்கோள் மற்றும் மானுட வாழ்வுக்கும் இடையிலான முரண்பாடு.

அமெரிக்க ஐக்கிய நாடுகளின் உலகப் பேரரசின் முடிவை நாம் காணப் போகும் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தில் உலகம் இன்று உள்ளது. பல உள்ளார்ந்த முரண்பாடுகள், வரலாற்றுரீதியான அநீதிகள், பொருளாதாரரீதியாக செயலற்றுப் போவது ஆகியவற்றின் சுமையின் கீழ் நவ-தாராளவாத அமைப்பு சீர்குலைந்து கொண்டிருக்கிறது. ஒரு மேம்பட்ட மாற்று இல்லை என்றால், உலகம் இன்னும் அதிக குழப்பங்களுக்குள் வீழ்ந்து விடும். இத்தகைய சமூகரீதியான துயரம் இல்லாத வேறு ஒரு உலகம் சாத்தியம் என்ற நம்பிக்கையை நமது இயக்கங்கள் புதுப்பித்துள்ளன.

- டிரைகாண்டினெண்டல்

https://thetricontinental.org/eight-contradiction-of-the-imperialist-rules-based-order/

‘சமூகரீதியான துயரம் இல்லாத வேறு ஒரு உலகம் சாத்தியம்’ என்ற ஆப்பிரிக்கத் தோழர்களின் நம்பிக்கையை 100 ஆண்டு கால பொதுவுடைமை இயக்க வரலாறு கொண்ட நாமும் கொள்ளலாம்.

- உங்கள் நூலகம் ஆசிரியர் குழு

Pin It