எங்கு அடக்குமுறை இருக்கிறதோ அங்கு எதிர்ப்பும் இருக்கும் – மைக்கேல் ஃபூகால்ட்

காஷ்மீரில் மூர்க்கத்தனமான இராணுவ ஒடுக்குமுறையும் வன்கொடுமைகளும் காலங்காலமாக நீடித்து வருவது அனைவருக்கும் தெரியும். ஒடுக்குமுறை, போலி மோதல்கள், குனான் பாஸ்ஃபோரா போன்ற பெருந்திரள் வன்புணர்வுகள், அதிரடித் தாக்குதல்கள் மற்றும் வலுக்கட்டாயமாகக் காணாமற்போகச் செய்தல் போன்ற வடிவங்களில் காஷ்மீர் கண்டுவருகிறது. கடந்த பல ஆண்டுகளாக, இந்த ஒடுக்குமுறை, மிர்சா வாஹீத், ஷானாஸ் பஷிர், பஷ்ரத் பீர், நிதாஷா கவுல் மற்றும் பிறர் போன்ற அச்சமற்ற, துணிச்சல்மிக்க, அதன் சொந்த முத்திரை கொண்ட, எதிர்ப்புப் புதின எழுத்தாளர்களை உருவாக்கியுள்ளது

மக்கள் மீதான இராணுவ ஒடுக்குமுறை, காஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியம் தோன்றுவதற்கான கட்டாயத்தை ஏற்படுத்தியது. எதிர்ப்பு இலக்கியம் இந்திய மேலாதிக்கத்தையும் அதன் மேலாதிக்க உரையாடலையும் எதிர்ப்பதற்குச் சேவை செய்கிறது. அது சட்டவிரோதமாகவும் கொடூரமானமுறையிலும் காஷ்மீர் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதற்குப் பொருத்தமான பதிலளிப்பைக் கொடுக்கிறது. காஷ்மீரிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள வன்கொடுமைகள் இதழியலாளர்கள், புதின எழுத்தாளர்கள், மற்றும் ஊடகச் செய்தியாளர்களால் குரல், காட்சி, மற்றும் எழுத்து ஊடகங்கள் மூலம் காலவரன்முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளன. புதினம் மற்றும் கவிதை வடிவங்கள் இதுவரையிலும் எதிர்ப்பின் மிகவும் செயலூக்கமிக்க, அதிர்வூட்டும் வடிவங்களாக இருந்துவருகின்றன.

எதிர்ப்பு முனையிலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் இலக்கியவாதிகளின் ஒரு நீண்ட பட்டியல் இருக்கிறது. காஷ்மீர் உருவாக்கிய மிகவும் உணர்ச்சிமிக்க எழுத்தாளராக காஷ்மீரி அமெரிக்கக் கவிஞர் ஆகா சாஹித் அலி இருந்துவருகிறார். அவர் அஞ்சல் நிலையம் இல்லாத ஒரு நாடு (The Country without a Post Office) மற்றும் திரைமூடிய அறைகள் (The Veiled Suite) போன்ற மனதை ஈர்க்கும் வேதனைமிக்க அவரது கவிதைத் தொகுப்புக்களில் இந்த வன்கொடுமைகளை ஆவணப்படுத்தியுள்ளார். மிர்சா வாஹீத் அதேவிடயத்தை கூட்டாளி (The Collaborator) (2011) என்ற புதின ஊடகத்தில் சித்தரித்துள்ளார். அழுத்தமான, அச்சமற்ற புதின எழுத்தாளரான ஷானாஸ் பஷிர் அதே விடயத்தை புதினம் மற்றும் சிறுகதை ஊடகத்தின் மூலமாக விவரித்துள்ளார்.

ஷானாஸ் பஷிரின் மாற்றாந்தாய் (The Half-Mother) (2014) மற்றும் சிறுகதைத் தொகுதி சிதறிய ஆன்மாக்கள் (2016) (The Scattered Souls) ஆகியவை சிந்திக்கத்தக்க இலக்கியப் படைப்புக்கள் ஆகும். காஷ்மீரிகளின் மீதான இராணுவ ஒடுக்குமுறை தான் மாற்றாந்தாய் புதினத்தின் சாராம்சமான, வெளிப்படையான மையக்கருத்தாகும். அந்தப் புதினத்தின் கதையில், ஹலீமா என்பவரின் மகன் இம்ரான் படைகளால் அழைத்துச்செல்லப்படுகிறான், திரும்பக் கொண்டுவந்து சேர்க்கப்படுவதில்லை. அவள் மகனைத் தேடி ஒவ்வொரு இடமாக அலைகிறாள், எங்குமே அவனைக் கண்டுபிடிக்க முடிவதில்லை, அவள் உதடுகளில் இம்ரானின் பெயரை உச்சரித்தவாறே இறந்துபோகிறாள். ஹலீமா ஒடுக்குமுறையின் காயங்களாலும் துயரங்களாலும் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு காஷ்மீரப் பெண்ணின் அடையாளமாகும். இம்ரானின் தலைவிதி காஷ்மீரின் ஒவ்வொரு இளைஞனின் தலைவிதியுமாகும்.

பஷ்ரத் பீர் காஷ்மீரின் முன்னணி புதின எழுத்தாளர்களில் ஒருவராவார், அவர் இந்த ஒடுக்குமுறையை அவரது மிகவும் புகழ்பெற்ற ஊரடங்கு இரவு (The Curfiewd Night) (2010) என்ற நினைவுப் படைப்பில் ஆவணப்படுத்தியுள்ளார். பீர் அண்மையில் ஆணை பற்றிய ஒரு கேள்வி: பலவான்களும் தாராளவாத ஜனநாயகங்களும் A Question of Order: Strongmen and Illiberal Democracies (2017) என்ற அபுனைவு படைப்பை வெளியிட்டார். இந்த நூலில், மோடி மற்றும் எர்டோகன் ஆகியோரின் சர்வாதிகார ஆட்சியில் உள்ள உலகின் மிகப்பெரிய இரண்டு ஜனநாயகங்களான இந்தியா மற்றும் இத்தாலி குறித்து விரித்துரைக்கிறார். ஊரடங்கு இரவு அதன் சச்சரவுக்கு இடமான உள்ளடக்கத்துக்காகப் பாராட்டப்பட்டது. வில்லியம் டார்லிம்பில் அந்தப் புதினம் குறித்துப் பின்வருமாறு எழுதுகிறார்:

…. ஏற்கெனவே இந்தியாவில் உயர்வாகப் போற்றப்பட்ட ஊரடங்கு இரவு என்பது ஓர் அசாதாரண நூலாகும், இது ஒரு சிறிய மிகச்சிறந்த தன் வரலாற்று நூலாகும், அது உறுதியாக காஷ்மீர் மோதலின் செவ்வியல் வரலாறாக ஆகும்… காஷ்மிரின் ஒரு மக்கள்தொகை தெளிவற்ற வகையில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்துவந்தது, ஆனால் அந்த ஆதரவு இதற்கு முன்பு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உற்சாமூட்டியதற்கு மேல் ஒருபோதும் சென்றதில்லை. ஆனால் இந்தியப் படைகளின் தொடர்ச்சியான பயங்கரமான வன்புணர்வுகளும் வன்கொடுமைகளும் எவ்வாறு அந்த மக்களைப் புரட்சிகரமாக்கியது என்று பீர் இந்த நூலில் சொல்கிறார்.

காஷ்மீரில் மோதல், ஒடுக்குமுறை, மற்றும் எதிர்ப்புக் குறித்து ஒருவர் தெரிந்துகொள்ள விரும்பினால், அவர் ஊரடங்கு இரவு நூலின் துயரார்ந்த பக்கங்களைப் புரட்டிப் பார்க்க வேண்டும். ஊரடங்கு இரவு காஷ்மீரில் ஒடுக்குமுறை மற்றும் குற்றங்களின் மிகவும் அதிர்வூட்டும் கலைடாஸ்கோப் வரலாறாகும். நியூயார்க் டைம்ஸ் புத்தக மதிப்புரை, மனித இறப்புக்கள் குறித்த இலக்கியப் பதிவுடன் கூடிய மோதல் பற்றிய ஒரு தொடக்கப் பாடமாகும் என்று வரையறுத்துள்ளது. ஊரடங்கு இரவு காஷ்மீரில் இராணுவ ஒடுக்குமுறை குறித்த ஒரு தெளிவான மற்றும் நேர்மையான அறிக்கை ஆகும். இந்தப் புதினம் ஒரு தனிப்பட்ட குறிப்புடன் தொடங்குகிறது. தொடக்கப் பக்கங்களில், பீர் அவரது குழந்தைப்பருவ ஓய்வுநேர விருப்பத் தொழில், பொழுதுபோக்குகள், மற்றும் நினைவுகள் பற்றிப் பேசுகிறார். இத்துடன் கூடவே, அவர் காஷ்மீரின் அமைதியைக் கொந்தளிப்பாகவும் கொடுங்கனவாகவும் மாற்றிய நிகழ்வுகளை விவரிக்கிறார்.

மிர்சா வாஹீதின் கூட்டாளி (2011) தங்க இலைகளின் புத்தகம் (The Book of Gold Leaves) (2014) ஆகியவை காஷ்மீரிகள் மீதான மோதல் மற்றும் ஒடுக்குமுறை குறித்த ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்கும் இரண்டு முக்கியமான புதினங்களாகும். வாஹீதின் கூட்டாளி 2011 இல் வெளியிடப்பட்டது. அந்தப் புதினத்தின் உலகியல் பின்னணி 1990 ஆம் ஆண்டாகும், அப்போது காஷ்மீரில் இந்திய ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு ஆயுதப்போராட்ட இயக்கம் தோன்றியது. நிகழ்வை விவரிக்கும் நவ்கம் கிராமத்தியச் சேர்ந்த 19 வயதான பெயர் தெரியாத இளைஞன் கேப்டன் கடியன் என்ற இந்தியப் படை அதிகாரியிடம் பனியாற்றுகிறான். இந்தியப் படைக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த போராளிகளின் சடலங்களிலிருந்து அடையாள அட்டைகளைச் சேகரிப்பதே அவனது பணியாகும். அவனது நான்கு குழந்தைப்பருவ நண்பர்கள் ஹுசேன், குல், அஷ்ஃபக், மற்றும் மொஹம்மது ஆகிய அனைவரும் ஆயுதப் பயிற்சிக்காக எல்லைதாண்டிப் பாகிஸ்தான் செல்கின்றனர். இந்தப் புதினம் காஷ்மீர் மோதல், ஒடுக்குமுறை, மற்றும் எதிர்ப்பின் உருவகப் பிரதிநிதித்துவமாகும். வாஹீதின் கூட்டாளியைப் போல தங்க இலைகளின் புத்தகம் அதேபோன்றே காதல், மோதல், ஒடுக்குமுறை மற்றும் இழப்பு ஆகியவற்றின் கதையாகும். அது ஃபயஸ் மற்றும் ரூஹி ஆகிய இரு காதலர்களின் கதையாகும். அந்தப் புதினம் 1990 ஆம் ஆண்டில் தொடங்குகிறது. அவர்களுடைய கிராமத்து மனிதர்களுக்கு படைகள் ஆத்திரமூட்டத் தொடங்கியபோது, இந்தக் காதலர்களின் வாழ்க்கை கொந்தளிப்பாக மாறுகிறது. இந்த ஆத்திரமூட்டலும் சித்திரவதையும் ஃபயஸை ஆயுதப் பயிற்சிக்காக பாகிஸ்தான் செல்ல நிர்ப்பந்திக்கின்றன. இந்தப் புதினத்தின் மூலம், இந்தியப் படைகளால் ஃபயஸ் போன்ற பையன்கள் எவ்வாறு ஆயுதந்தாங்கிய எதிர்ப்பில் சேர்ந்துகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்று உண்மையிலேயே வாஹீத் சொல்ல விரும்புகிறார்.

நிடாஷா கவுல் காஷ்மீர் வமிசாவழி பண்டிட் புதின எழுத்தாளர் ஆவார். அவரும் ஒடுக்குமுறைக்கு எதிராக மிகவும் அதிர்வூட்டும் வகையிலும் துணிவுடனும் எழுதிய புதின எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார், அவர் தனது உரைகள் மூலமும் புதினங்கள் மூலமும் ஒடுக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். அவர் எஞ்சியவை Residue (2014) எதிர்கால வினை (Future Tense) (2020) ஆகிய இரண்டு புதினங்களை எழுதியுள்ளார். இந்த இரண்டு புதினங்களும் இராணுவ ஆட்சியின் கீழ் காஷ்மீர் மோதலையும் காஷ்மிரிகளின் துயரங்களையும் சித்தரிக்கின்றன. ஒரு காஷ்மிரியை எதிர்ப்பை நோக்கியும் அடிப்படைவாதத்தை நோக்கியும் எது விரட்டுகிறது என்பதுதான் எதிர்கால வினையின் சாராம்சமான உட்பொருள் ஆகும். இந்தப் புதினம் முன்னாள் போராளி ஒருவரின் மகன் ஃபயஸ் மற்றும் ஷைரீன் என்ற பெண் ஆகியோரின் கதையாகும். இந்தப் புதினத்தில், ஃபயஸின் உடன்பிறந்தவர் மகனான இம்ரான் ஓர் இளம் மாணவன். அவன் ஒடுக்குமுறையாளர்களால் புரட்சிக்காரன் ஆகிறான். இந்த ஒடுக்குமுறை அவனை ஒரு புதிய வகையான பரபரப்பான எதிர்ப்பில் சேர்ந்துகொள்ள நிர்ப்பந்தித்தது. இது எதிர்ப்புப் புதினத்திற்கு ஒரு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். எதிர்கால வினை காதல், எதிர்ப்பு, போர்க்குணம், மற்றும் துரோகம் ஆகியவற்றின் கட்டுக்கோப்புடன் எழுதப்பட்ட வரலாறாகும் என்று ஆண்ட்ரூ ஒயிட்ஹெட் எழுதுகிறார்.

இந்த எழுத்தாளர்களுடன் கூடுதலாக, பலர் தங்களுடைய கவலையையும் சலிப்பையும் வெளிப்படுத்துவதற்கு இசை, ஓவியம், சுவரோவியம் மற்றும் பிற வரைகலைகளைப் பயன்படுத்துகின்றனர். இந்தக் காஷ்மீர் புதின எழுத்தாளர்கள் காஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியத்தின் தோற்றத்தில் மிகப்பெரிய அளவுக்கு பங்களிப்புச் செய்துள்ளனர். அவர்களுடைய எழுத்துக்கள் மூலமாக அவர்கள் காஷ்மீரில் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் இராணுவ ஆட்சி குறித்து சர்வதேச வாசகர்களுக்கு உணர்வூட்டியுள்ளனர். இந்தப் புதின எழுத்தாளர்கள் 1990 இலிருந்து நிகழ்வுகளின் ஒரு தெளிவான வரலாற்றை அளித்துள்ளனர். கஷ்மிரிகள் எவ்வாறு ஒடுக்குமுறை இராணுவ ஆட்சிக்கு எதிராக ஆயுதங்களை ஏந்தினர் என்பதற்கான ஓர் இலக்கியப் பிரதிநிதித்துவத்தை இந்தப் புதின எழுத்தாளர்கள் அளித்துள்ளனர்.

இந்தப் புதின எழுத்தாளர்களுக்கு முன்னதாக, காஷ்மிரி இலக்கியம் இருண்மைவாதம், காதல், மற்றும் காஷ்மீரியம் என்ற கருத்து ஆகிய மையக் கருத்துக்களைக் கொண்டதாக இருந்தது. ஒடுக்குமுறை இராணுவ ஆட்சி அதிகரித்ததும், இந்த மையப் பொருள்களுக்கும் உட்பொருள்களுக்கும் பதிலாக ஆக்கிரமிப்பு, கொலைகள், எதிர்ப்பு, அநீதி, இழப்பு, அடையாளம், இன்னபிற இடம்பெறலாயின. அடக்கப்பட்ட உணர்வுகள், நசுக்கப்பட்ட விருப்பங்கள், வன்முறையின் கூட்டு நினைவுகள், இழப்பு, மற்றும் அழிவு ஆகியவற்றை இந்தப் புதின எழுத்தாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தப் புதின எழுத்தாளர்களின் வர்ணனைகள் கவனமாகவும் துல்லியமாகவும் காஷ்மீர் மோதல் மற்றும் விடுதலைக்கான போராட்டத்தின் பல அறியப்படாத மற்றும் வெளிப்படுத்தப்படாத பன்முகங்களைக் காட்டும் வரலாற்று விவரிப்புக்கள் போல இருக்கின்றன.

இந்தப் புதின எழுத்தாளர்கள் காஷ்மீருக்கு அதன் சொந்த முத்திரை கொண்ட எதிர்ப்பு இலக்கியத்தைக் கொடையளித்துள்ளனர். இந்தக் காஷ்மீர் எதிர்ப்பு இலக்கியம் ஒடுக்குமுறை, அநீதி, மற்றும் சிறைபிடித்தல் ஆகிய்வற்றிலிருந்து மக்களை விடுவிக்கும் குறிக்கோளாகக் கொண்ட ஓர் ஆற்றலாகும். இதோடு கூட, இந்தப் புதிய வகை காஷ்மீர் எதிர்ப்பு இலக்கியம் மோதல் நிகழ்வுகளின் உண்மையான பிரதிநிதித்துவத்தை அளிக்க முயற்சி செய்கிறது. மேலும் அதிகாரக் கட்டமைப்புக்களையும், உருக்குலைக்கப்பட்ட உண்மைகளையும், ஒடுக்குவோரின் ஒடுக்குமுறைச் சொல்லாடலையும் கேள்விக்குள்ளாக்குகிறது. அதனால்தான் இந்தக் ‘காஷ்மீரில் எதிர்ப்பு இலக்கியம்.’

பின்குறிப்பு: ‘குரலற்றவர்’ என்று எவருமில்லை. வேண்டுமேன்றே மௌனிக்கச் செய்யப்படவர்கள், அல்லது வேண்டுமென்றே கேட்கப்படாதவர்கள் மட்டுமே இருக்கின்றனர். – அருந்ததி ராய்

கட்டுரை ஆசிரியர் பிலால் அஹ்மத் தார் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் ஓர் ஆராய்ச்சியாளராக இருக்கிறார். 

நன்றி: countercurrents.org -May 12, 2020

தமிழில்: நிழல்வண்ணன்

Pin It