1.பாதிரிப்பூ

‘கல்லாரே ஆயினுங் கற்றாரைச் சேர்ந்தொழுகில்/ நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல்சிறப்பின் /ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலாற் புத்தோடு/ தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு’. (139)

நறுமணப் பூவின் தொடர்பால் பானை நறுமணம் பெற்றதுபோல் கல்வியில் சிறந்தவர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் கல்லாதவர்க்கு அறிவு கிடைக்கும் என்பது இப்பாடல் நுவலும் பொருள். இதில் புதுமையான செய்தி ஒன்று காணப்படுகிறது

புதுப் பானைகளில் பாதிரிப் பூவை நிரப்பி வைத்து விடுவார்களாம். அது மலர்ந்ததும், பூக்களை அப்புறப்படுத்தி விட்டாலும் அந்தப் பானையில் அதன் நறுமணம் ஏறியிருக்குமாம். அதில் ஊற்றி வைக்கிற நீரும் நல்ல மணமாக இருக்குமாம். பெரும்பாலான உரையாசிரியர்கள் புத்தோடு புதிய பானை என்பதாகவே கொண்டுள்ளனர்.

ஆனால், வேதகிரி முதலியார் மட்டும், புத்தோடு என்பதற்கு புதிய இதழ் எனப் பொருள் கொண்டு ‘பாதிரிப் பூவின் புதிய இதழ்கள் சேர்தலால் தண்ணீர்க்கு வாசந்தந்தாற் போலும்’ என்று எழுதிச் செல்கிறார். அதோடு மட்டுமின்றி புதியவோடு என உரை கூறுவாருஞ் சிலருளரிவர் நுணுக்கமறியார் போலும்’ என்றும் எழுதுகிறார்.

‘புத்தோடு’ என்பதற்குப் புதுப் பானை என்ற பொருள் இருக்கிறது. தோடு என்பதற்கு பூவிதழ் என்னும் பொருளும் இருக்கிறது. இதன் உண்மையை அறிய இப்பாடலை நுணுகிக் காண வேண்டும். கல்லாதவர் கற்றவரோடு சேர்தல் என்பது பயன் கருதியே. அதுபோல் தண்ணீரில் நறுமணம் ஏற்றுவதும் பயன் கருதியே. ஆக புதுப் பானை எனக் கொள்வதே பொருத்தமாகிறது. இது ஒரு புறமிருக்க, இவர்கள் அனைவருமே தண்ணீரில் வாசம் சேர்வதை மறுக்கவில்லை.

இது குளிக்கவா குடிக்கவா என்பது தெரியவில்லை. குளிக்க என்று உரையாசிரியர்கள் (தருமர், பதுமனார் ஆகியோர்- நாலடியார் உரைவளம் தஞ்சை சரஸ்வதி மகால் வெளியீடு) சிலர் கருதுகின்றனர். இதை அடியொற்றியே , நாலடியார் உரைவளப் பதிப்பாசிரியர்களும், ‘நண்மணம் பொருந்திய நீரில் நீராட விழைவார் புதுப்பானையில் பாதிரிப் பூக்களைப் பெய்து அவை நன்கு மலர்ந்தபின் பானையினின்றும் அவைகளை நீக்கி அப்பானையில் நீர் வார்த்துக் கொள்வர் பூக்களின் மணம் பானையிலேறி தன்கண் ஊற்றப்பட்ட நீரிலும் கலந்து நீரை மணம்பெறச் செய்யும். அதுபோல கற்றாரைச் சார்ந்த கல்லாரும் அறிவு பெற்று, தன்னைச் சார்ந்தாரையும் அறிவு படுத்துவரென்பதாம்’ என்று குறித்தனர்.

இளவழகனார் அவர்கள் இந்நீர் எதற்குப் பயன்பட்டது என்பதைச் சொல்லாமல் விடுத்து, ‘புதிய மட்பாண்டத்தில் முதலில் பாதிரி மலர்களைப் பெய்து வைத்துப் பின்பு அதில் நீரூற்றி நீர்க்கு நறுமணம் கூட்டுதல் மரபாதலின்’ என்று மட்டும் எழுதிச் செல்கிறார். மண் நாற்றம் போக்கிப் புதுப் பானையைப் பழக்குதற்கு இது வழிபோல. எது எப்படி ஆனாலும், நீரில் நறுமணம் ஏற்றப் பட்டிருக்கிறது.

இந்த நீர் நறுமணம் ஊட்டப்பட்ட குடிநீரா என்பது ஆய்விற்குரிய ஒன்று. குடிக்க என்றாலும் குளிக்க என்றாலும் நறுமண நீர் குடித்த / நறுமண நீரில் குளித்த அம்மக்களின் வாழ்க்கை முறை நம்மை வியக்க வைக்கிறது.

2.வேப்பெண்ணெய்

‘ஆன்படு நெய்பெய் கலனுள் அதுகளைந்து வேம்படுநெய் பெய்தனைத்தரோ’ 238 என்னும் குறிப்பில், பசுநெய் வைக்கும் பாத்திரத்தில் மாற்றி வேப்பெண்ணெய் வைத்த செய்தி நமக்குக் கிடைக்கிறது. பசு நெய் நல்ல நட்புக்கும் வேம்புநெய் கூடாநட்புக்கும் கூறப்பட்டுள்ளது. பசுநெய் வைத்த கலனில் வேப்பெண்ணெய் வைக்க முடிகிறது. ஆனால் வேப்பெண்ணெய் வைத்த கலனில் மாற்றி பசுநெய் வைக்க முடியாது என்பது இங்கு இணைத்து நோக்கத்தக்க செய்தி.

3.கோழிவளர்ப்பு

‘கப்பி கடவதாக் காலைத்தன் வாய்ப்பெயினும்/ குப்பை கிளைப்போவாக் கோழிபோல்…’ (341) என்ற பாடலில், காலையில் தவறாமல் நொய்யரிசியைப் போட்டாலும் கோழி அதைத் தின்றுவிட்டு இருக்காமல் குப்பைக்குத்தான் போகிறது என்ற குறிப்பு அக்காலக் கோழி வளர்ப்பை நமக்கு எடுத்தியம்புகிறது.

4.யானை வளர்த்தல்

‘யானை யெருத்தம் பொலியக் குடைநிழற்கீழ்ச் / சேனைத் தலைவராய்ச் சென்றோரு – மேனை/ வினையுலப்ப வேறாகி வீழ்வார் தாங்கொண்ட / மனையாளை மாற்றார் கொள.’ (3)

யானை மீது குடையோடு அமைந்த ஆசனத்தில் சேனைத்தலைவர் செல்வர் என்னும் குறிப்பினைக் கொண்டு யானை அதிகாரம் மிக்கவர்கள் செல்ல பயன்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

‘யானை அனையவர் நண்பொரீஇ நாயனையார்/ கேண்மை தழீஇக் கொளல்வேண்டும் – யானை/ அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல் / மெய்யதா வால்குழைக்கும் நாய்’ (213) எவ்வளவுதான் பழகினாலும் யானை மதம் பிடித்து விட்டால் பாகனையே கொல்லும் என்பதும் யானை வளர்ப்புக்கு வலுசேர்க்கும் கருத்தாகும்.

அதே போல் யானையைக் கட்டிப் போடுதல் குறித்த குறிப்பு , ‘களிறணைக்கும் கந்தாகும்’ (192) என்ற தொடரில் வருகிறது.

‘கோட்டை வயிரஞ் செறிப்பினும் வாட்கண்ணாய் பன்றி செயிர் வேழம் ஆகுதல் இன்று’. 358 - வலிமையான பல் இருந்தாலும்கூட, போர் செய்யும் யானைக்குப் பன்றி ஒப்பாகாது என்ற குறிப்பிலிருந்து யானை போருக்குச் செல்வதும் பாகன்களால் பேணப்பட்டு வந்ததும் சேனைத் தலைவர் வலம் வர பயன்பட்டதும் அறியக் கிடைக்கும் செய்திகளாகும்.

5.ஆடு வெட்டுதல்

‘வெறியயர் வெங்களத்து வேன்மகன் பாணி / முறியார் நறுங்கண்ணி முன்னர்த் தயங்க / மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி / யறிவுடை யாளர்க ணில்’ (16)

மேற்கண்ட பாடல் நாட்டார் வழக்காற்றியல் வழிபாட்டு முறை செய்திகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. தற்காலத்தில் சாமியாடுதல் என்று சொல்லப்படுவதுதான் பழங்காலத்தில் வெறியாடுதல், வெறியயர்தல் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது.

வேலைக் கையிலேந்திய சாமியாடி ஒருவன் ஆடுகளை வெட்டும் இடத்தில் நின்று கொண்டிருக்கிறான். அவன் கையில் பசுமையான தழையினை வைத்திருக்கிறான். பலியிடுவதற்கு இருக்கிற ஆடு (மறி) நிற்கிறது. தன் கையில் உள்ள தழையை ஆட்டின் முன் ஆட்டுகிறான். அது எக்கி அதைத் தின்ன முயலும்போது நீளும் கழுத்தில் வெட்டு விழுகிறது அல்லது வெட்டும்வரை ஆட்டிற்கு உணவாக தழை கொடுக்கப் படுகிறது. அக் கொலைக்களத்தில் ஆட்டின் முன் நீட்டப்படும் தழை அதை வாழ வைக்கப் போகும் உணவல்ல. அதன் உயிரைப் பறிக்கப் போவது என்பது அந்த ஆடு அறியாமல் மகிழ்கிறது. (அதுபோலதான் சாகப் போகும் நாம் காணும் மகிழ்ச்சி நிலையில்லாதது என்பது பாடலின் பொருள்).

இப்பாடல் காட்டும் ரத்தப் பலி நிகழ்வு நாட்டார் வழக்காற்றியல் தொடர்புடையது என்பது இங்கு கூர்ந்து நோக்கத்தக்கது.

துணைநூற்பட்டியல்

  1. முத்துரத்ன முதலியார் எஸ், வித்துவான் கந்தசாமி பிள்ளை எம்.ஆர், ப.ஆ 1990. நாலடியார் உரைவளம் முதல் பாகம். தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு
  2. முத்துரத்ன முதலியார் எஸ், வித்துவான் கந்தசாமி பிள்ளை எம்.ஆர், ப.ஆ 1990. நாலடியார் உரைவளம் இரண்டாம் பாகம். தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு,
  3. இளவழகனார் உரை, திசம்பர் 2007, நாலடியார் , கழக வெளியீடு.
  4. புலவர் குழு , கழகத் தமிழகராதி, , 2005 , தி.தெ.சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் , லிமிடெட்,
  5. நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ் மொழி அகராதி , கெளமாரீஸ்வரி ப.ஆ , 4 ஆம் பதிப்பு 2009, எஸ் , சாரதா பதிப்பகம், சென்னை.
  6. Naaladiyar pdf Book Download , GOOGLE வேதகிரி முதலியாரின் பதவுரையும் கருத்துரையும்).

- பொ.முத்துவேல்

Pin It