கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காக நாடடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் அரசின் செயல்பாடுகளை உற்று நோக்கும்போது, குடிமக்களின் மீதும், பொருளாதாரத்தின் மீதும் இந்த அரசு எடுக்கக்கூடிய தன்னிச்சையான எதேச்சதிகாரப் போக்கு முடிவுகளையும் நடவடிக்கைகளையும் ஆராய்ந்தால், நடப்பு மோடி அரசானது, ஓர் ஈவு, இரக்கமற்ற அரசா? அல்லது முட்டாள்தனமான அரசா? என்று என்னை வியக்க வைக்கின்றது.
நாடு அடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு இந்தியாவில் வாழும் ஏழைக் குடிமக்களின் வறுமை, அவர்களது துன்பம், துயரம், ஆதரவின்மை இவற்றை தணிப்பதற்காகவும், மட்டுப்படுத்துவதற்காகவும் ஆளுகின்ற அரசு துரும்பளவுக்குக்கூட முறையான நடவடிக்கையை எடுக்காத நிலையை கவனிக்கும்போது, ஆளுகின்ற இந்த ஒன்றிய அரசிற்கு உண்மையிலேயே ஈவு இரக்கமேயில்லை என்ற முடிவிற்கு நான் மிகுந்த கலக்கத்துடன் வந்தடைந்து இருக்கின்றேன்.
இதுபோன்றதொரு நாடு தழுவிய நெருக்கடி காலகட்டத்தில் ஓர் அரசு சிந்திக்க வேண்டிய முதல் அம்சம் என்ன? இந்தியாவில் 100 மில்லியனுக்கும் அதிகமான தினக்கூலிகள் இருக்கின்றார்கள்; நாடடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் அவர்கள் எந்த வேலைக்கும் செல்ல முடியாதபொழுது, அவர்களால் எந்த வருமானமும் ஈட்ட முடியாத பொழுது அவர்களது வாழ்வாதாரத்தை எவ்வாறு காப்பாற்றுவது என்பது தான் ஓர் அரசு சிந்திக்க வேண்டிய முதல் அம்சம் ஆகும்.
இரண்டாவதாக, இந்தக் கொரோனாத் தொற்றை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் முடங்கிப் போயுள்ள இந்தியப் பொருளாதாரம், அந்த இந்தியப் பொருளாதாரத்திற்கு பக்க பலமாய் நின்ற தொழிற்சாலைகள், வாகனப் போக்குவரத்துகள், தரைவழிப் போக்குவரத்துகள், வணிக நிறுவனங்கள் இவை எல்லாம் முடங்கிப் போயிருக்கும் பொழுது அவற்றை மீண்டும் தங்களுடைய பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு என்ன மாதிரியான பொருளாதார நடவடிக்கைகளை எல்லாம் மேற்கொள்ள வேண்டும் என்பது ஓர் அரசு சிந்திக்க வேண்டிய அடுத்த முக்கியமான அம்சமாகும்.
நாட்டின் கொள்கைகளையும் திட்டங்களையும் வகுப்பவர்களின் சிந்தனைகளில் மேற்கண்ட இந்த இரண்டு கேள்விகளும், அதனால் ஏற்படப் போகின்ற விளைவுகளையும் சிக்கல்களையும் பற்றி தொடர்ந்து அக்கறையோடு பேசியும் சிந்தித்தும் வருகின்றனர். ஆனால், நாட்டின் மீதும், நாட்டு மக்களின் நலன்களின் மீதும் அக்கறை கொண்டவர்களின் இத்தகைய சிந்தனைகளை எல்லாம் மோடி ஒருவரே அப்புறப்படுத்தி விட்டார். அந்த அக்கறை மிகுந்த சிந்தனைக்குப் பதிலாக, இந்தியாவைத் தொடர்ந்து நாடடங்கு நிலையிலேயே வைப்பதற்கு, மோடி அந்த உத்தரவைப் பற்றி நான்கு மணிநேரம் விளக்குகின்றார்.
இந்நிலையில் இந்தக் கொரோனோவை மோடி முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவார் என்று முடிவுக்கு, இந்த மிக மோசமான, கையாலாகாத மத்திய அரசிடம் எந்த வகையிலும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் நாட்கள் தொடர்ந்து கழிந்து கொண்டே இருக்கின்றன, ஏழைகளின் துன்பமும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. தங்களுக்கு நிதி உதவி தேவையென ஒவ்வொரு மாநில அரசும் தொடர்ந்து தொண்டை கிழியக் கத்துவது அதிகரித்துள்ளது. இவற்றையெல்லாம் கடந்து நாள்தோறும் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. ஆனால், இவற்றையெல்லாம் மிக எளிமையாக தனது இறுகிய உள்ளத்தால் கடந்து செல்லும் மோடி, கைகளைத் தட்டச் சொல்லியும், தாம்பூலத்தை தட்டச் சொல்லியும், வானூர்தியிலிருந்து மலர்தூவியும் நமக்கு வேடிக்கை காட்டுவதைப் பார்க்கும் பொழுது, இந்தத் தொற்றுநோய் குறித்தும் அதனைத் தடுப்பது குறித்தும் இவருக்கு கிஞ்சித்தும் அக்கறை இல்லையோ என்ற ஐயம் மேலும் வலுவடைகிறது.
நாடடங்கினால் முடங்கிப் போய் இருக்கக் கூடிய புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட ரயில்வே சேவைகளுக்கு இந்த அரசு அவர்களிடமிருந்தோ அல்லது அவர்கள் சார்ந்துள்ள மாநில அரசுகளிடமிருந்தோ பணம் வசூலிப்பதும், வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் மீண்டும் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட விமான சேவைகளுக்குப் பணம் வசூலிப்பதையும் பார்க்கும்பொழுது எனது ஐயம் இன்னும் வலுவடைகின்றது.
இன்னாளில் இந்த அரசு மேற்கொள்ளும் இரக்கமற்ற நடவடிக்கைகளைக் காணும்பொழுது எனக்கு பழைய வரலாறு ஒன்று நினைவுக்கு வருகின்றது. அது,1990 ஆம் ஆண்டு. ஈராக் நாடானது குவைத் நாட்டின் மீது போர் தொடுத்திருந்த காலம். குவைத் நாட்டில் வேலை செய்து கொண்டிருந்த 111,000 இந்தியர்களை அங்கிருந்து மீட்டு இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்காக அன்றைய ஆட்சியில் இருந்த மதிப்பிற்குரிய தலைமை அமைச்சர் திரு வி.பி.சிங் அவர்கள் எடுத்த நடவடிக்கையை இன்று கருணையோடு நினைத்துப் பார்க்கின்றேன்.
1990-ஆம் ஆண்டு ஏற்பட்ட அந்த நெருக்கடி நிலையிலிருந்து இந்தியர்களை மீட்க எவ்வளவு துரிதமாக அரசு முடிவெடுத்தது என்பதனை அன்னாளின் தலைமை அமைச்சகத்தின் ஊடக ஆலோசகராக இருந்த என்னால் உணர முடிகிறது.
ஈராக்கின் படையெடுப்பினால் நம்முடைய அன்னிய நாட்டுச் செலவாணி எந்த அளவிற்கு பாதிக்கப்படும் என்பதைக் காட்டிலும், குவைத்தில் இருக்கின்ற 1,10,000 இந்தியர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதை அன்னாளின் இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சராக இருந்த திரு.வி.பி.சிங் அவர்கள் முக்கியமாகக் கருதினார்கள். குவைத்தில் பணிபுரிகின்ற இந்தியர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் நாங்கள் அவர்களைப் பாதுகாப்போமென, அன்றைய ஈராக்கின் அதிபர் சதாம் உசேன் (Saddam Hussein) வாக்குறுதி தந்தபோதும்கூட, பெரும்பாலான இந்தியர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என விருப்பம் கொண்டிருந்தார்கள்.
போர் நடந்து கொண்டிருந்ததால் குவைத்தில் இருந்து நேரடியாக அவர்களை மீட்டுக் கொணர்வது என்பது மிக சிக்கலாக இருந்தது. எனவே, குவைத்தில் சிக்கிக் கொண்ட அத்தனை இந்தியர்களையும் பாசுரா (Basra) என்ற நகரிலிருந்து அம்மான் (Amman) என்ற நகருக்கு 1120 கிலோமீட்டர் தொலைவிற்கு தரை வழியாகவே பயணித்து, அங்கிருந்து அவர்களை வான்வழி விமானச் சேவையின் மூலம் சொந்த நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு உரிய ஏற்பாடுகளை சதாம் உசேன் அரசிடம் பேசி திரு.வி.பி சிங் அவர்கள் அதற்கான அனுமதியைப் பெற்றார்.
ஏர் இந்தியாவின் அனைத்து போயிங் 747 (Boeing 747s) ரக விமானங்களையும் வணிகச் சேவை பயன்பாட்டைத் தவிர, வேறு தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாத சூழலில், அவரது கவனம் இந்தியன் ஏர்லைன்சு (Indian Airlines) பக்கம் திரும்பியது. ஆனால் இந்தியன் ஏர்லைன்சின் A-320 ரக விமானங்கள் அந்நேரத்தில் புதிதாகப் வாங்கப் பெற்றவை என்றாலும், ஐந்து மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் நடந்த சோதனை ஓட்டத்தின்போது விமானியின் தவறால் ஏற்பட்ட தரை மோதலினைத் தொடர்ந்து, அவ்விமானமும் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. இன்னொரு விமானமும் அதே போன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வி.பி.சிங் அவர்களோ, விமானப் போக்குவரத்தின் அத்தனை விதிகளையும் கட்டுடைத்து, அவை அனைத்தையும் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டுக் கொணர்வதற்காக பயன்படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து அவற்றை களத்தில் இறக்கினார்.
இந்த விமானங்கள், அடுத்த இரண்டு மாதங்களுக்கு குவைத்தில் சிக்கித் தவித்த 1,11,000 இந்தியர்களோடு மேலும் பலரையும் சொந்த நாட்டுக்குக் கொண்டு வருவதற்கு, நாளொன்றுக்கு 16 முதல் 18 மணி நேரம் இந்தியாவிற்கும் குவைத்தின் அம்மானுக்கும் இடையே பறந்தன. இந்தியன் ஏர்லைன்சு மற்றும் ஏர் இந்தியாவின் அனைத்து விமானங்களும் கிட்டத்தட்ட 488 முறை இந்தியாவிற்கும் குவைத்திருக்கும் இடையே பறந்தன. இன்று வரை, இதுதான் விமானப் போக்குவரத்தின் மூலம் மீட்கப்பட்ட மிகப் பெரிய வரலாற்று நிகழ்வு ஆகும்.
இந்த விமானச் சேவைக்காக கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகை செலவு பிடித்தது என்ற போதிலும், அன்னாளில் இந்தியாவின் அன்னியச் செலவாணி கையிருப்பு தொடர்ந்து வீழ்ந்து கொண்டிருந்தது என்ற நிலையிலும் கூட, மீட்கப்பட்டவர்களிடமிருந்து பணம் வசூலிப்பது என்பது குறித்தப் பேச்சு, அன்றைய இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்த வி.பி. சிங்குக்கும் அன்னாளின் வெளியுறவுத் துறை அமைச்சராக வீற்றிருந்த இந்தர் குமார் குசரால் (Inder Kumar Kujaral) அவர்களுக்குமிடையே அரசாங்க ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட முறையிலோ ஒரேயொரு விவாதம்கூட நடைபெற்றதாக என்னால் நினைவுகூர முடியவில்லை.
அன்றைய வி.பி.சிங்கின் அணுகுமுறைக்கும், இன்றைய மோடியின் அணுகுமுறைக்கும் இடையேயான வேறுபாடு வெறும் பணம் வசூலிப்பதில் மட்டுமில்லை, மாறாக அவர்களது பொருளாதார மற்றும் அரசியல் பார்வைகளும் முற்றிலும் வேறுபட்டவைகளாக உள்ளன. இந்தியாவின் தற்போதைய அன்னியச் செலவாணியின் மதிப்பு மிக ஆபத்தான நிலையில் உள்ளது; பின்னாளில் அது இன்னும் மிகத் தாறுமாறான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனால் வி.பி.சிங்கின் காலத்தில் அன்னியச் செலவாணியின் மதிப்பு, இன்றைய நிலையை விட மிக மோசமானதாக இருந்தது. அந்நாட்களில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் திவாலாவதைத் தவிர்ப்பதற்காக, வங்கிகள் குறுகிய காலக் கடன்களை வழங்குவதை ரிசர்வ் வங்கி உறுதிப்படுத்துவதற்காக, அதன் கையிருப்பிலிருந்த 55 டன் தங்கத்தை அடமானம் வைக்க வேண்டிய முடிவை, வேறு வழியின்றி மிகுந்த மனக்கசப்புடன் வி.பி.சிங் எடுத்திருந்தார். எனவே, அந்நாளில் கையிருப்பிலிருந்த ஒவ்வொரு அந்நியச் செலவாணியும் மிகுந்த எச்சரிக்கையோடு கணக்கிடப்பட்டது.
1990-ஆம் ஆண்டு ஆகஸ்ட் இரண்டாம் நாள், ஈராக் குவைத் நாட்டின் மீது போர் தொடுத்த பொழுது, இங்கே இந்தியாவில் வி.பி. சிங்கின் அரசு ஒரு சிறுபான்மை அரசாக இருந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில், அக்டோபர் 30-ஆம் நாளில், அயோத்தியில் முடிவடையவிருந்த அத்வானியின் ரத யாத்திரைக்குப் பிறகு, வி.பி.சிங்கின் அரசைக் கவிழ்ப்பது என்று, அன்றைய பாரதிய ஜனதா கட்சி, தங்களுக்குள் ரகசிய ஆலோசனை செய்திருந்ததை உளவுத் துறையின் அறிக்கையின் மூலம் வி.பி.சிங் அறிந்திருந்தார். ஆனால், அவ்வாறு தன்னுடைய ஆட்சி கலைக்கப்படுவதைத் தடுப்பதற்கு அவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை, அதுகுறித்து அவர் கவலைப் பட்டதாகவே தெரியவில்லை.
போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும்பொழுது, அந்தப் போருக்கு சற்றும் தொடர்பில்லாத அங்கே வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியர்கள் அதில் சிக்கித் தவிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை; அவ்வாறு சிக்கிக் கொண்டவர்களுக்கு அதில் எந்தப் பங்குமில்லை. அவர்கள் சூழ்நிலைக் கைதிகளாக அங்கே மாட்டிக் கொண்டுள்ளார்கள். எனவே, போர்ச் சூழலில் மாட்டிக் கொண்ட அந்த இந்தியர்களை அங்கிருந்து மீட்டு, சொந்த நாட்டிற்குக் கொண்டு வருவது என்பது இந்தியாவின் கடமையென வி.பி.சிங் அவர்கள் கருதினார்கள். அன்னாளில் இங்கே உள்நாட்டில் வாழும் ஏழை மக்களோடு ஒப்பிடுகையில் அங்கே குவைத்தில் பணிபுரிபவர்களின் பொருளாதார நிலை அவ்வளவு மோசமானதாக இருக்கவில்லை என்ற போதிலும்கூட, அவர்களை அங்கிருந்து மீட்பதற்காக ஏதேனும் கட்டணம் வசூலிக்கலாமா என்ற கேள்விகூட எழவில்லை என்பதைத்தான் நாம் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
மோடி அரசின் நாடடங்கு உத்தரவினால் சொந்த நாட்டிலேயே அகதிகளைப் போல, தங்கள் சொந்த கிராமங்களுக்கு நடந்தே செல்லும் ஏழ்மை மிகுந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உரிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து, அவர்தம் இருப்பிடங்களுக்கு இட்டுச் செல்ல வேண்டியது மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் கடமை. ஏனென்றால், அவரது அரசு எடுத்த முடிவினால்தான் அவர்களுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டிருக்கின்றது. எனவே, அவரது முடிவால் ஏற்பட்டுள்ள சிக்கலை தீர்ப்பதற்குரிய முழுப் பொறுப்பும் அவரையே சாரும். ஆனால், மோடியோ அவரது அரசாங்கமோ அல்லது அவரை வழிநடத்தும் சங் பரிவாரக் கூட்டமோ இந்தப் பொறுப்பை உணர்ந்திருப்பதாகத் தெரியவில்லை.
அரசு முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அந்த மக்களைக் காப்பதற்குப் பதிலாக, ஏழை மக்கள் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள வேண்டும் என்று மோடி ஏக வாய்ப் பேசுகிறார், மேடைகளில் வாய்நுரைக்கப் பேசுகிறார். ஆனால், இதுதான் இந்து ராச்சியத்தின் உண்மையான முகம் என்பதனை அவர்களை ஆதரித்தவர்கள் கூட இதுநாள் வரை உணர்ந்ததாகத் தெரியவில்லை என்பதுதான் அவலத்திலும் அவலம்.
கட்டுரையாளர் : பிரேம் சங்கர் சா (Prem Shankar Jha) – இந்திய ஒன்றியத் தலைமை அமைச்சகத்தின் முன்னாள் ஆலோசகர்.
தமிழில் : ப.பிரபாகரன்.