“இயற்கையின் மீது நாம் பெற்ற வெற்றியைப் பற்றி அதிகம் தம்பட்டம் அடித்துக் கொள்ளக் கூடாது. அத்தகைய ஒவ்வொரு வெற்றிக்கும் இயற்கை நம்மைப் பலி வாங்கியுள்ளது. ஒவ்வொரு வெற்றியும் ஆரம்பத்தில் நாம் எதிர்பார்த்த பலனைக் கொடுக்கக் கூடியதாகவே உள்ளது. ஆனால் அடுத்தடுத்து நாம் எதிர்பாராத நிகழ்ச்சிகளினால் முதலில் கிடைத்த பலன் கிடைக்காமல் போய் விடுகிறது.... நாம் அந்நிய நாட்டு மக்களை வென்றவரைப் போலவோ, இயற்கைக்கு வெளியே நிற்கும் ஒருவரைப் போலவோ நாம் இயற்கையை ஆள முடியாது. நாம் சதையாலும் இரத்தத்தாலும் மூளையாலும் இயற்கையைச் சார்ந்தவர்கள்.” – என்று மார்க்சிய ஆசான்களில் ஒருவரான ஏங்கல்ஸ் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான பிரிக்க முடியாத உறவினை வலியுறுத்தினார்.

covid19 289ஆனால் இலாபத்தையே நோக்கமாகக் கொண்ட முதலாளிய சமூகம் மண்ணையும் நீரையும் காற்றையும் வனங்களையும் காத்துப் பேணாமல் அனைத்தையும் தனது இலாபத்திற்காகக் கண்மூடித்தனமாக வேகமாக அழித்து வருகிறது. அதற்குப் பலி வாங்கும் விதமாகவே கொரானா வைரஸ் வடிவத்தில் இயற்கை தனது தாக்குதலை இன்று மனித சமூகத்தின் மீது தொடுத்துள்ளது எனக் கூறலாம்.

இயற்கை மனிதன் மீது தாக்குதலைத் தொடுக்கிறது என்று கூறும்போது அது மனிதனைப் போல உணர்வு கொண்டுள்ளது; தன்னை அழித்து வரும் மனிதனைப் பலி வாங்க வேண்டும்; அவனைத் துன்புறுத்த வேண்டும்; அவனை வாழ விடாமல் செய்ய வேண்டும் என்று இயற்கை மனிதனைப் போலச் சிந்தித்து மனிதன் மீது தாக்குதலைத் தொடுத்துள்ளது என்ற பொருளில் நான் கூறவில்லை. ஆனால் மனிதன் இயற்கையின் விதிகளைப் புரிந்து கொள்ளாமல் செயல்படும்போது, தனது உயிர் வாழ்க்கைக்கு முழுமையாகச் சார்ந்துள்ள இயற்கையை அழிக்கும்போது தானும் அதன் பாதிப்புக்கு ஆளாகிறான், அழிவுக்கு உள்ளாகிறான் என்ற பொருளிலேயே கூறுகிறேன்.

முதலாளியம் தனது இலாபப் பசியைத் தீர்த்துக் கொள்ள உலகின் வளங்களை எல்லாம் வேக வேகமாக அழித்து வருகிறது. நீர் நிலைகளை மாசுபடுத்தி வருகிறது. நதிகளைக் கொன்று வருகிறது. காற்றை சுவாசிக்க இயலாமல் போகும் அளவுக்கு மாசுபடுத்தி வருகிறது.

இத்தகைய மாசுபடுத்தும் செயல்களால் முதலாளியம் ஆண்டு தோறும் கோடிக்கணக்கான மக்களை சுவாச நோய்கள், புற்று நோய்கள், தோல் நோய்கள் போன்ற தீராத நோய்களுக்கு இரையாக்கி வருகிறது. இந்த நோய்களுக்குக் காரணமான மாசுகளைத் தடுப்பதற்குப் பதிலாக முதலாளியம் அவற்றின் விளைவுகளான நோய்களுக்கு மருந்துகளைக் கண்டு பிடிப்பதன் மூலம் அவற்றிற்குத் தீர்வு காண முயற்சி செய்கிறது; அதன் மூலம் மருத்துவத்துறையை இலாபம் கொழிக்கும் ஒன்றாக மாற்றி வருகிறதே தவிர நோய்கள் உருவாக்கும் காரணங்களைக் களையத் தயாராயில்லை. ‘நோய் நாடி நோய் முதல் நாடி’ என்னும் கொள்கை அதற்கு எதிரானது. ஏனென்றால் அதன் நோக்கம் இலாபம் சம்பாதிப்பதுதானே தவிர, நோய்களுக்குக் காரணமானவற்றைக் களைந்து நோய்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதல்ல. அவ்வாறு அது தீர்வு காண நினைத்தால் அது தன்னுடைய இலாப அடிப்படையிலான உற்பத்திமுறையைக் கை விட வேண்டும். மக்களுடைய நலனைக் கருத்தில் கொண்டு, மக்களின் தேவைக்காக உற்பத்தி செய்யும் முறைக்கு மாற வேண்டும். மண்ணையும் நதிகளையும் வனங்களையும் காற்றையும் தனது இலாப நோக்கத்திற்காக அழிக்காமல் அவற்றைக் காத்துப் பேணும் உற்பத்தி முறைக்கு மாற வேண்டும். ஆனால் குளிர்ச்சி இல்லாத பனிக்கட்டியோ, வெப்பம் இல்லாத நெருப்போ சாத்தியம் இல்லை என்பது போல இலாபம் இல்லாத முதலாளியமும் சாத்தியமில்லை.

முதலாளியத்தின் இலாப வெறிதான் இன்று கொரானா வடிவில் உலகத்தையே முடக்கியுள்ளது என்று கூறினால் அது வியப்பை அளிக்கலாம். ஆனால் அது மறுக்க முடியாத உண்மை. முதலாளியம் தனது இலாபத்திற்காக அனைத்தையும் வணிகப் பொருளாக மாற்றி வருகிறது. கனிமப் பொருள்களுக்காகவும் மரங்களுக்காகவும் உலகின் நுரையீரல்களாக விளங்கும் காடுகளை அழித்து வருகிறது.

காடுகளில் வாழும் அரிய விலங்குகளையும் முதலாளியம் விட்டு வைக்கவில்லை. அவற்றையும் பண்டப் பொருளாக மாற்றி உலகெங்கும் விற்பனை செய்து கொள்ளை இலாபம் அடித்து வருகிறது. மருத்துவ குணம் கொண்டது என்று கூறி ஆயிரக்கணக்கான அரிய விலங்குகளும் இவ்வாறு விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்டுள்ளன. அத்தகைய விலங்குகளே பெரும் தொற்று நோய்களுக்கும் காரணமாக அமைந்துள்ளதை ஆய்வுகள் கூறுகின்றன.

2002 ல் தோன்றிய சார்ஸ் என்னும் தொற்று நோய் வௌவாலில் இருந்து புனுகுப் பூனைக்குத் தோற்றி, அதன் மூலம் மனிதனுக்குத் தொற்றியதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதே போல இப்பொழுது உலகை ஆட்டிப் படைத்து வரும் கொரானா வைரசும் சார்ஸ் குடும்பத்தைச் சேர்ந்ததுதான். அது சீனாவில் உள்ள ஊகானில் வௌவாலில் இருந்து எறும்புதின்னி என்னும் விலங்கின் மூலம் மனிதனுக்குத் தொற்றி இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எறும்புதின்னி அரிய இன விலங்கு. அதை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆயினும் மருத்துவ குணம் கொண்டது என்று கூறி அவை சட்ட விரோதமாக வேட்டையாடப்பட்டு பெரும் இலாபத்திற்கு விற்பனை செய்யப்படுகின்றன.

தனது இலாபத்திற்காக நதிகளையும் வனங்களையும் காற்றையும் அழித்து வரும் முதலாளியம் காட்டில் உள்ள விலங்குகளையும் விட்டு வைப்பதில்லை. அவற்றையும் வேட்டையாடிப் பண்டமாக்கி விற்பனை செய்து கொள்ளை இலாபம் அடித்து வருகிறது. அதன் மூலம் காட்டு விலங்குகள் மத்தியில் உறக்க நிலையில் இருந்த வைரஸ் கிருமிகள் மனிதனைத் தொற்றி, தம்மைத் தகவமைத்துக் கொண்டு பெரும் உயிர்க் கொல்லிகளாக உருவெடுத்து வருகின்றன. 2002ல் வந்த சார்ஸ் வைரஸ் கிருமியும் இவ்வாறு உருவானதுதான். இன்று உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரானா வைரசும் இவ்வாறு உருவானதுதான்.

முதலாளியத்தின் பேராசைக்கு முடிவு கட்டி, மக்களின் தேவை அடிப்படையில் அமைந்த, மண்ணையும் காற்றையும் நீரையும் வனங்களையும் காத்துப் பேணும் ஒரு சோசலிச சமூக அமைப்பு உருவாகவில்லை என்றால் வருங்காலத்தில் இது போன்ற பல கொடிய உயிர்க் கொல்லிகளுக்கு மனித குலம் தொடர்ந்து இரையாக வேண்டியிருக்கும்.

- மு.வசந்தகுமார்

Pin It